01-02-2011இல் சென்னை மருத்துவமனையில் Cadaver சிறுநீரகத்துக்குப் பதிவு செய்த பிறகு PRA Screening சோதனைக்காகவும், மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உடல் தொடர்ந்து தகுதியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும் மருத்துவச் சோதனைக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை சென்று வந்தோம்.
சிறுநீரகத்தைப் பொருத்திய உடனே இவர் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் அதை ‘அந்நியன்’ என்று நினைத்துத் தாக்குமா, எந்தளவுக்கு இவர் உடலில் எதிர்ப்புப் புரதங்கள் (Antibodies) உள்ளன என்பதைக் கணிக்க உதவும் ரத்தச் சோதனையே PRA Screening test.
புதுவை மருத்துவமனையில் ஏவி ஃபிஸ்டுலா மூலம் டயலிசிஸ் தொடர்ந்து கொண்டிருந்தது. ஃபிஸ்டுலா தொடர்ந்து வெற்றிகரமாக வேலை செய்ய மருத்துவர் சொல்லியிருந்த வழிமுறைகளைக் கவனமாகக் கடைப்பிடித்தோம். அவை:
- ஃபிஸ்டுலா உள்ள கையில் மெஷினை வைத்து ரத்த அழுத்தம் பார்க்கக் கூடாது.
- அந்தக் கையில் டயலிசிஸ் தவிர, மற்றவற்றுக்கு ஊசி குத்துவதோ ரத்தம் எடுப்பதோ கூடாது.
- அந்தக் கையால் அதிக கனமுள்ள பையையோ, பொருளையோ தூக்கக் கூடாது.
- அந்தக் கையைத் தலைக்கு அடியில் வைத்துத் தூங்கக் கூடாது.
- ரத்த ஓட்டத்தைத் தடை செய்யுமளவுக்குக் கையை இறுக்கிப் பிடிக்கும் உடை, கைக்கடிகாரம், வளையல் போன்றவற்றை அணியக் கூடாது.
- உள்ளங்கையில் ரப்பர் பந்தை வைத்து அமுக்கித் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
- கையில் அடிபடாமலோ, கீறல் ஏற்படாமலோ கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்,
- ஃபிஸ்டுலா உள்ள இடம் சிவந்து இருந்தாலோ, வீங்கி இருந்தாலோ, ரத்தம் கசிந்தாலோ உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
- பிஸ்டுலா உள்ள இடத்தில் நம் விரலை வைத்தால், தமனியிலிருந்து சிரைக்கு வேகமாக ரத்தம் பாயும் துடிப்பை நாம் நன்றாக உணர முடியும். அதை ‘த்ரில்’ (Thrill) என்பர். அந்தத் துடிப்பு இல்லையென்றால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
எல்லா விதிகளையும் கவனமாகக் கடைப்பிடித்தும் மே மாதத்தில் ஒரு நாள் காலை இவர் பதற்றத்துடன் வந்து, ’ஃபிஸ்டுலாவில் துடிப்பு கேட்கவில்லை’ என்றார்.
நானும் பதறிப்போய் அந்த இடத்தில் கை வைத்துப் பார்த்தேன். துடிப்பு சிறிதுமின்றி அந்த இடம் அமைதியாக இருந்தது. உடனே புதுவை மருத்துவரிடம் ஓடினோம். அவரும் சோதனை செய்து பார்த்துவிட்டு, ஃபிஸ்டுலா வேலை செய்யவில்லை என்பதை உறுதிசெய்தார்.
‘இவருக்குத் திடீரென்று ரத்த அழுத்தம் குறைந்திருக்கலாம்; அல்லது ரத்தத்தில் அடைப்பு ஏற்பட்டு அது செயலிழந்திருக்கலாம்’ என்றார் மருத்துவர்.
டயலிசிஸ் செய்த நாள்களில் இவருக்கு அடிக்கடி ரத்த அழுத்தம் வெகுவாகக் குறைவதும் சரியாவதுமாக இருந்தது. ஒரு வேளை அதனால் ஃபிஸ்டுலா செயலிழந்திருக்குமோ? என்ன காரணம் என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
“இதைச் சரிசெய்ய முடியாதா டாக்டர்? இனிமே டயலிசிஸ் செய்ய என்ன வழி?” என்று பதறினோம்.
“இதை மீண்டும் சரிசெய்ய முடியாது. இன்னொரு கையில் ஃபிஸ்டுலா அறுவை சிகிச்சை செய்யலாம்” என்றார் மருத்துவர்.
மருத்துவமனையில் நாங்கள் ஏற்கெனவே சந்தித்த நோயாளிகள் சிலர், பத்தாண்டுகளுக்கு மேலாக ஃபிஸ்டுலா மூலம், டயலிசிஸ் செய்து வருவதாகச் சொல்லியிருந்தார்கள். எனவே மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கும் வரை வேறு ஏதும் பிரச்னையில்லை என்று நினைத்திருந்த நேரத்தில், இப்படியோர் எதிர்பாரா அதிர்ச்சி. எவ்வளவோ கவனமாக இருந்தும்கூட ஃபிஸ்டுலா வழியாக டயலிசிஸ் செய்யத் தொடங்கிய ஆறே மாதத்தில் அது வேலை செய்யாமல் போனது வருத்தமானது.
அன்றே கிளம்பி நாங்கள் வழக்கமாகப் பார்க்கும் சென்னை மருத்துவரிடம் சென்றோம். வலது கையில் புது ஃபிஸ்டுலா அறுவை சிகிச்சை செய்யப் பொருத்தமான நரம்பு கிடைக்கவில்லை. அந்தக் கையிலிருந்த சிரைகள் (veins) அறுவை சிகிச்சை செய்யுமளவுக்குத் தடிமனாகவும் வலுவாகவும் இல்லை. அடுத்த வழியும் அடைபட்டுப் போயிற்று.
“ஏற்கெனவே ஃபிஸ்டுலா செய்திருந்த வலது கையிலேயே ஏவி கிராப்ட் (AV Graft) செய்யலாம்” என்று நம்பிக்கை கொடுத்தார் மருத்துவர்.
ஏவி கிராப்ட் ஃபிஸ்டுலா செய்ய முடியாத நோயாளிகளுக்கு டயலிசிஸ் செய்ய உதவும் ஒரு மாற்று வழி. ஃபிஸ்டுலாவில் தமனியும் சிரையும் சேர்த்து இணைக்கப்படுகிறது. ஆனால் ஏவி கிராப்ட்டில் தமனிக்கும் சிரைக்கும் இடையில் ஒரு செயற்கைக் குழாயைப் (Synthetic Tube) பொருத்துகிறார்கள். இந்தச் செயற்கைக் குழாய் வழியாக ரத்தம் வேகமாகப் பாயும். இந்தக் குழாயில் ஊசியைக் குத்தி ரத்தத்தை இயந்திரத்துக்கு அனுப்பி டயலிசிஸ் செய்கிறார்கள்.
“பிஸ்டுலாவைவிட இதற்கு ஆயுள் குறைவுதான். செயற்கைக் குழாய் வைத்திருப்பதால் தொற்று ஏற்படும் ஆபத்தும் அதிகம். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த ஒரு மாதத்துக்குள் இதன் வழியே டயலிசிஸ் செய்யலாம்” என்று ஏவி கிராப்ட் அறுவை சிகிச்சை குறித்து விளக்கினார் மருத்துவர்.
ஃபிஸ்டுலாவைவிட இதற்கு ஆயுள் குறைவு என்பதைக் கேட்டுக் கவலையாக இருந்தது. இதைவிட்டால் எங்களுக்கும் வேறு வழியில்லை என்பதால் அறுவை சிகிச்சைக்குச் சம்மதம் தெரிவித்தோம்.
அதன் பிறகு இவரின் வலது கையின் மேல் பாகத்தில் தோள்பட்டைக்கும் முழங்கைக்கும் இடையே ஏவி கிராப்ட் அறுவை சிகிச்சை நடந்தது. அது தயாராகும் வரை இவரது கழுத்து, தொடை பகுதிகளில் கதீட்டர் வைத்து டயலிசிஸ் செய்தார்கள்.
ஒரு மாதம் கழித்து மருத்துவமனையில் ஏவி கிராப்ட் வழியே இரண்டு முறை டயலிசிஸ் செய்து பார்த்தார்கள். அது நன்றாகச் செயல்படத் தொடங்கியவுடன் ‘இதுவாவது மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கும் வரை வேலை செய்ய வேண்டும்’ என்கிற யோசனையுடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்
படைப்பாளர்:
ஞா.கலையரசி
புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.


