Site icon Her Stories

அதிர்ச்சியுற்றாள் அமுதா

பிள்ளைகளுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள் அஞ்சலி. அருகில் அமர்ந்து கைப்பேசியில் ரீல்களாகப் பார்த்துத் தள்ளிக் கொண்டிருந்தான் ராஜா.

“நீயும் வந்து உக்காரு, சாப்பாடு சூடு ஆறிப்போயிரும். மறுபடி சூடு செய்ய சொல்லுவ” என அவனை அழைத்தாள் அஞ்சலி.

“இரு, இந்த அம்மு பொண்ணும் வந்துரட்டும். நாம ஒண்ணா ஒக்காந்து சாப்பிடலாம்” என்றான் ராஜா.

“அது எப்ப வருமோ என்னவோ, நீ வா” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள் அமுதா.

“ஐ… பிரிஞ்சி செஞ்சிருக்காளாடா உங்க அம்மா” என்றபடி பிள்ளைகளுக்கு அருகில் வந்து அவள் அமர, “ஐய, நீ என்னக்கா பிரிஞ்சிக்கே ஓவர் எக்ஸைட் ஆகுற. இது குஸ்கா மாதிரிகூட இல்ல. சிக்கன், மட்டன் செய்யக் கூடாதான்னு கேட்டா, அப்பா முருகர் சாமிக்கு மால போட்டிருக்குன்னு சொல்லுது. சாமி கும்புட்டு வந்துதான் இனிமேல் கறிய கண்ணாலேயே பாக்க முடியும்” என மூக்கால் அழுதான் அஞ்சலியின் மூத்த மகன். “முட்டகூட கிடையாதாம்” என முனகினான் சின்னவன்.

அமுதா மட்டும் சாதாரணச் சூழ்நிலையில் இருந்தால், பிள்ளைகளை ஹோட்டலுக்கு அழைத்துப் போய் அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருப்பாள். அது முடியாமல் போகவே மனம் சற்றுச் சுணங்கியது. ஆனாலும் பிள்ளைகள் பேசிய விதத்தில் பக்கெனச் சிரித்துவைத்தாள்.

“இந்த நெலமயிலயும் இது எப்புடிச் சிரிக்குது பாரு, ராஜா ” என இரக்கத்துடன் மொழிந்தாள் அஞ்சலி. 

“பின்ன, என்ன அழச் சொல்றியா? இதவிட மோசமான சூழ்நிலையெல்லாம் பார்த்துட்டேன். மிஞ்சிப் போனா என்ன நடக்கப் போகுது” எனப் பேசிக்கொண்டே போன அமுதா, அருகில் இருந்த பிள்ளைகளை எண்ணி அப்படியே நிறுத்தினாள்.

“இவ இந்தளவுக்கு பாஸிட்டிவா இருக்கறது நல்லதுதான, ஃப்ரீயா   விடு, அஞ்சு” என்ற ராஜா, “நீ போயி கை கால் கழுவிட்டுச் சாப்பிட வா, அம்மு” என்றான்.

“அடிக்கற வெய்யிலுக்கு இப்படிப் போத்தி மூடிட்டு இருக்க. மொதல்ல போய் இந்த மொகமூடியக் கழட்டிட்டு வாடி” என்றாள் அஞ்சலி.

“என்ன செய்யறது அஞ்சுக்கா, இது இல்லாம வீட்ட விட்டு வெளிய கால் வெக்கவே பயமா இருக்கு. அந்த லாயர் ஆபிஸ்ல இருக்கற அண்ணா வேற, ஒரு வாரமா தெனமும் இந்த முட்டாக்கு துணிய பத்தியே கேள்வி கேக்கறாங்க. என் மொகரைய பாக்க அவங்களுக்கு எவ்வளவு ஆர்வம் தெரியுமாக்கா, எதையெதையோ சொல்லிச் சமாளிச்சிட்டு இருக்கேன். மாட்டிக்காம இப்படியே தப்பிசிட்டா போதும்” என்றபடி முகம் கழுவச் சென்றாள், ஏற்கெனவேதான் மாட்டிக்கொண்டுவிட்டோம் என்பதை அறியாமல்.

பிள்ளைகள் இருவரும் சாப்பிட்டு முடித்து படுக்கையறைக்குள் சென்றுவிட, அன்று நடந்த அனைத்தையும், யாமினியைச் சந்தித்ததையும் சொல்லி, மாதினி, யாமினி இருவரின் உருவ ஒற்றுமையைப் பற்றி வியந்தபடி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டாள்.

ராஜா பிள்ளைகளுடன் சென்றுவிட, இருவருமாகச் சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு வந்தனர். ஹாலிலேயே பாய் விரித்து அமுதா படுக்க, அவளுக்குத் துணையாகத் தானும் அருகிலேயே படுத்துக்கொண்டாள் அஞ்சலி. வெளிப்பார்வைக்குச் சிரித்தாலும், அமுதா இருக்கும் நிலைக்கு எதையாவது செய்துகொள்வாளோ என்கிற பயம் அவளுக்கு. அது அமுதாவுக்கும் புரியவே, அமைதியாக இருந்துவிட்டாள். பயத்தால் இருவருக்குமே உறக்கம் வரவில்லை. கண் மூடி உறங்குவதுபோல பாவலா செய்து ஒருவரை இன்னொருவர் ஏமாற்றிக்கொண்டனர். அந்த இரவும் நீண்டுகொண்டே போனது.

*

ஓட்டி வந்த புல்லட்டை அங்கிருந்த ஒரு பால் விற்பனை நிலையத்தின் அருகில் நிறுத்திவிட்டு, அதன் எதிரில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பைப் பார்வையால் அளந்தான் மனோகர்.

கட்டி குறைந்தது  முப்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கலாம் எனும் ஒரு நடுத்தட்டு வர்க்கக் குடியிருப்புப் பகுதி அது. தரைத்தளத்தின் முன்பகுதியில் ஒரு பெரிய காய்கறிக் கடையும் ஒரு மருந்தகமும் இருந்தன. இரண்டுக்கும் இடையே ஒரு பெரியரக கார் செல்லும் அளவிற்கான நுழைவாயில் அமைந்திருந்தது.

அவன் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த பேனா வடிவிலிருந்த கண்காணிப்பு கேமரா அந்த இடத்தைப் பதிவு செய்துகொண்டிருந்தது. சில நிமிடங்கள் நின்று சுற்றி உள்ளவற்றை உள்வாங்கிக் கொண்டவனாக அந்தப் பால் பூத்தின் உள்ளே சென்றான்.

காலை பால் பட்டுவாடா எல்லாம் முடிந்து கடையை அடைக்கும் பரபரப்பில் இருந்தார் அதன் உரிமையாளர்.

“என்ன சார், என்ன வேணும்” என்று அவனிடம் வினவினார்.

உள்ளே குளிர்ப் பதனப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுவையூட்டப்பட்ட நறுமணப் பால் பாட்டில்கள் அவனுடைய பார்வையில் பட, “ கோல்ட் காபி இருந்தா குடுங்க…ணா?” என்று கேட்டு வாங்கிக் கொண்டான். அதற்கான தொகையைக் கொடுத்துவிட்டு அதைத் திறந்து பருகியபடியே, “உங்களுக்கு இந்தத் தெருவுல அமுதான்னு யாரையாவது தெரியுமா” என்று பேச்சுக் கொடுத்தான்.

“யாரு அமுதவாணின்னு ஒரு காலேஜ் ப்ரொபஸர் இருக்காங்களே அவங்களா?” என்று சந்தேகமாக இழுத்தார்.

“இல்லங்க, இவங்க பேரு வெறும் அமுதாதான். கொஞ்சம் இருங்க” என்று சொல்லிவிட்டுத் தன் கைப்பேசியில் இருந்த அவளுடைய ஒளிப்படத்தை அவரிடம் காண்பித்தான்.

“அட இது அந்த  யூடியூப் பொண்ணு அமுதால்ல? அதுதான் நெருப்பு வெச்சுட்டுச் செத்துப் போச்சே” என அந்தக் கடைக்காரர் தெளிவாகப் பதில் சொன்னார்.

“கரெக்டா சொல்றீங்கண்ணா. அதே பொண்ண பத்திதான் கேட்டேன். அவங்க இந்த ஏரியா ஆளா?” என்று வினவினான்.

“என்ன தம்பி போலீஸா நீங்க?” எனக் கலவரமானார் அந்த நபர்.

“அய்யய்யோ இல்லண்ணா, நான் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில இருந்து வரேன். அவங்களப் பத்தி விசாரிச்சு ரிப்போர்ட் கொடுக்கணும். அவங்க ரெசிடென்ஸ்னு இந்த ஃபிளாட் அட்ரஸ்தான் போட்டிருக்கு” எனப் பொறுமையாகப் பதில் உரைத்தான்.

“வாய்ப்பே இல்ல தம்பி, அந்தப் பொண்ண நான் ஒரு தடவகூட இங்க பார்த்ததே இல்ல” என்றார்.

“அப்படின்னா இந்த அட்ரஸ்ல யார் இருக்காங்க தெரியுமா?” என்று தன் கைப்பேசியைக் காண்பித்துக் கேட்டான்.

‘எஃப்-4, ஏ பிளாக், ஜெய் சாய் அப்பார்ட்மெண்ட்ஸ், கிருஷ்ணா ரோடு, ராம் நகர்’ என்றிருந்தது.

“ஆமா, அட்ரஸ் கரெக்ட்தான். ஆனா அங்க வேற  ஒரு குடும்பம்தான இருக்காங்க” ஏன்றார்.

“அவங்க யார் என்னன்னு தெரியுமா?”

“ம்ம்… ஓனரு வெளியூர்ல இருக்காரு. ராஜான்னு ஒரு தம்பி, அவரோட சம்சாரம் குழந்தைங்களோட வாடகைக்குக் குடி இருக்காரு.”

“அவங்கள பர்சனலா உங்களுக்கு தெரியுமா?”

“ஏன் தெரியாம, அவங்க வீட்டுக்கு நாமதான பால் போடுறோம்?”

“என்ன வேலை செய்யறாரு? ஆளு எப்படி?”

“சொந்தமா சின்ன யானை வண்டி வச்சு லோடு அடிக்கறாரு. நான் பார்த்த வரைக்கும் ரொம்ப நல்ல மாதிரிதான். எந்த வம்பு தும்புக்கும் போற ஆள் இல்ல.”

“மூஞ்சி எல்லாம் ஃபுல்லா மூடிட்டு, கை முழுக்க கவர் ஆகுற மாதிரி கிளவுஸ் போட்டுக்கிட்டு, டூ வீலர் ஓட்டிக்கிட்டு யாராவது பொண்ணு இந்த பிளாட்டுக்குள்ள போறத பார்த்திருக்கீங்களா?” என்று அவன் கேட்கவும் அவனைச் சந்தேகமாகப் பார்த்தவாறே, “என் கண்ணுல அப்படி யாரும் படல தம்பி” என்றவர், இதற்கு மேல் என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்காதே என்கிற அலுப்பான பாவனையை வெளிப்படுத்த, “தேங்க்ஸ்ணா” என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியேறி அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்தான்.

பலரும் பள்ளிக்கூடம் அலுவலகம் என்று

வெளியேறியிருக்கும் முன்காலை நேரமாதலால் அதிக ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது அந்தப் பகுதி. மின்தூக்கியெல்லாம் கிடையாது. பெயருக்கென்று ஒரு கண்காணிப்பு கேமராவோ ஏதோ ஒன்றுமோகூட அங்கே இல்லை. 

மாடிப்படியின் லேன்டிங் பகுதியில் நின்று, அணிந்திருந்த சட்டையைக் கழற்றி கையில் வைத்திருந்த காகிதப்பைக்குள் போட்டான். ஓர் உணவு நிறுவன சீருடையான டி-ஷர்டுடன் முதல் தளத்தை அடைந்து எண்ணைச் சரிபார்த்து, வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.

கதவைத் திறந்தாள் அஞ்சலி.

“ஃபுட் டெலிவரி மேடம்” என்றான் மனோகர் கையில் வைத்திருந்த பையை நீட்டியபடி.

“நாங்க ஃபுட் எதுவும் ஆர்டர் பண்ணலையே” என்றாள்.

“இல்லையே அமுதாங்கறவங்க பேர்ல ஆர்டர் புக் ஆகியிருக்கு” என்றான்.

அவளின் முகம் கலவரமாகிப் போனது. அவசரமாக உள்பக்கம் திரும்பி  மறுபடி அவனை ஏறிட்டாள். மனதில் உண்டான சிறு குழப்பத்தை நிவர்த்தி செய்த பாவத்தில், “இல்லைங்க, இங்க அமுதான்னு யாரும் இல்ல” என அழுத்தமாக மறுத்தபடி வேகமாகக் கதவை அடைக்க எத்தனித்தாள். ஒரு நொடிக்குள் அவளைத் தடுத்து, அடாவடியாக வீட்டிற்குள் நுழைந்தான் மனோகர். 

ஒரு நெகிழி இருக்கையில் அமர்ந்திருந்த அமுதா உடல் அதிர எழுந்து நின்றாள்.

அவளைப் பார்த்ததும் ஒரு வெற்றிப் பெருமிதத்துடன், “என்ன சுப்ரியா மேடம், எப்படி இருக்கீங்க?” என்று அவன் எள்ளலாகக் கேட்டதும், அவளின் சப்த நாடியும் ஒடுங்கிப்போய் மீண்டும் அந்த நாற்காலியிலேயே தொப்பென அமர்ந்தாள். 

(தொடரும்)

படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.

Exit mobile version