Site icon Her Stories

கொழும்பு நகரின் முப்பரிமாணக் காட்சிகள்: அந்தோனியார் ஆலயம், தாமரைக் கோபுரம், காலி முகத்திடல்

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம் 

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்கு நெடிய வரலாறு உள்ளது. டச்சுக்காரர்கள் காலத்தில் அருள்தந்தை அன்டோனியோ ஒரு வணிகராக மாறுவேடமிட்டு, மீன்பிடி மக்களுடன் வாழ்ந்தார். டச்சுக்காரர்கள் கத்தோலிக்கரைத் தீவிரமாக எதிர்த்தவர்கள். அருள்தந்தை, ஒரு சிலுவையை நட்டு செய்த வழிபாட்டால் கடல் உள்வாங்கிச் சென்றதாக நம்பிய மக்கள் கத்தோலிக்கராக மாறினர். அருள்தந்தை ஆலயத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். 

1806 ஆம் ஆண்டில், ஆலயம் பெரிதாக்கப்பட்டுள்ளது. 1822 ஆம் ஆண்டில் ஒருவர் கோவாவிலிருந்து அந்தோனியாரின் திருவுருவத்தைக் கொண்டு வந்துள்ளார். அந்தத் திருவுருவம், தற்போது ஆலயத்தின் இடது பக்கத்தில் உள்ள பக்கவாட்டுப் பீடத்தில் (Side Altar) அமைந்துள்ளது.  பிரதான பீடத்திற்கு இடதுபுறமாக உள்ள இந்தப் பீடமே, அருள்தந்தை அந்தோனியோ அமைத்த பழைய ஆலயத்தின் பீடம் இருந்த இடம். அருள்தந்தை சிலுவையை நட்டு, அலைகளை அடக்கிய அதே இடத்தில்தான் இந்தத் திருவுருவம் நிறுவப்பட்டுள்ளது என்கிறார்கள். 

1828 ஆம் ஆண்டில் ஒரு புதிய ஆலயத்தின் கட்டுமானப் பணி தொடங்கி, 1834 ஜூன் முதல் நாள் திறக்கப்பட்டது. ஆலயம் காலை ஐந்து முதல் எட்டு, மாலை ஐந்து முதல் ஒன்பது மணிவரைத் திறந்திருக்கும். இது இலங்கையின் தேசிய ஆலயம். 

ஏப்ரல் 21, 2019 அன்று, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, இலங்கை முழுவதும் நடந்த குண்டுவெடிப்புகளில் இந்த ஆலயமும் சிக்கிக் கொண்டது. குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர் என்பது பெரும் சோகம். 

இனி எங்கள் அனுபவத்திற்கு வருவோம். நாங்கள் சென்ற மாலை நேரம் கூட்டம் அவ்வளவு பெரிதாக இல்லை. ஆலயம் பரபரப்பான சாலையோரம் உள்ளது. பொதுவாகவே இலங்கையில், கூட்டம் என்பது எந்த இடத்திலும் குறைவுதான் என்பது பிறகு தெரிந்தது. ஆலயத்தின் வெளியில் மெழுகுவர்த்தி ஏற்றும் இடத்தில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறார்கள். உடனே உடனே எரியும் மெழுகுகளை அகற்ற ஆள்கள் நிற்கிறார்கள். நல்ல ஏற்பாடு. 

நுழையும்போது மும்பை ஆலயங்களுக்குள் நுழையும் எண்ணம் வந்தது. காரணம், பெண்கள் அனைவரும் நமது கோவாப் பெண்கள் போன்றே ஆடை அணிந்திருக்கிறார்கள். இதுவும் பிறகு தான் தெரிந்தது. பெரும்பாலானோர் இவ்வகை ஆடை தான் அணிகிறார்கள் என்று! இளம்பெண்கள் ஜீன்ஸ் என மாறியிருக்கிறார்கள். மற்றபடி பெரும்பாலானோர், முட்டிக்குக் கீழேவரை கவுன் போன்றுதான் அணிகிறார்கள். கையில்லாத ஆடை எல்லாம் மிகவும் இயல்பாக உள்ளது. சேலை, சிங்களர் உடையெல்லாம் எங்காவது தான் தென்படுகிறது. இந்து கோவில்களுக்கு வரும் பெண்கள் பலர் சேலை கட்டி வருகிறார்கள். பேச்சுவழக்கில் கிறிஸ்தவரை வேதக்காரர் என்றும், இந்துக்களைச் சைவர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இலங்கை முழுவதும் இது தான் நடைமுறையா என்பதை எனது 12 நாள் அனுபவத்தை மட்டும் வைத்துச் சொல்ல இயலாது. 

வரிசையாகத் தூண்கள், இருபக்கமும் இருக்கும் தூண்களை இணைக்கும் விதமாக கம்பிகள், அதன் மேலே கூரை என பழமை கொஞ்சம் தெரிகிறது. தூண்களினிடையில் மேலே அந்தோனியாரின் அருளடையாளங்களை புடைப்புச் சிற்பமாக வைத்திருக்கிறார்கள். அவற்றிற்குக் கீழே சிலுவைப்பாதை திருவுருவங்கள் உள்ளன. அவையும் புடைப்புச் சிற்பங்கள் தான் என்றாலும் பலவண்ணத்தில் உருவங்களைத் தனித்தனியே செதுக்கியது போன்று மிகவும் நேர்த்தியான, நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்டவையாக அவை உள்ளன. 

ஆலயத்தில் பீடத்தின் பின்பக்க சுவரில் தந்தை மகன் தூய ஆவி, மரியன்னை அந்தோனியாரின் அருளடையாளங்கள் என நேர்த்தியான ஓவியம் உள்ளது.  மரியன்னையின் கையிலிருக்கும் இயேசு பெரிய குழந்தையாக முன்னே திரும்பி உட்கார்ந்திருப்பது போன்று இருக்கிறார். இதே போன்று திருவுருவம் கலிபோர்னியா சோல்வாங் நகரில் (Solvang) இருக்கும் சான்டா ஐனெஸ் மிஷன் (பதினெட்டாம் நூற்றாண்டு) ஆலயத்தில் உள்ளது. வேறு எங்கெல்லாம் இருக்கின்றன என்று தெரியவில்லை. 

பாலூட்டும் மரியன்னை, ஒரு தூணின் மேலிருக்கும் மரியன்னை குழந்தையுடன் இருக்கும் மரத்தாலான திருவுருவம் (சூசையப்பர் என நினைக்கிறேன்) இப்படிப் பல மாறுபட்ட திருவுருவங்கள் உள்ளன. John Mary Vianney போன்ற பெயர் தெரியாத புனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள். பல திருவுருவங்கள் 18ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதாகத் தெரிகின்றன. 

ஆலயத்தின் 175வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 2010 மார்ச் ஏழாம் நாள் இலங்கைக்கு அந்தோனியாரின் நாக்கின் சிறிய பகுதி கொண்டுவரப்பட்டது. அது 2010 ஆம் ஆண்டு மார்ச் 7 முதல் 9 வரையிலும், மார்ச் 19 முதல் 20 வரையிலும் புனித அந்தோணியார் திருத்தலத்தில் வைக்கப்பட்டது. அதே சமயத்தில் அது இலங்கையிலுள்ள மற்ற மறைமாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது என்கிறது ஆலயத்தில் உள்ள கல்வெட்டு. ஒரு பேழையில் அந்தோனியாரின் நாக்கின் அந்த சிறிய பகுதி உள்ளது. 

ஆலயத்தின் 175வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதே ஆண்டு ஜூன் 13 (அந்தோனியார் இறந்த நாள்) அன்று, இலங்கை அரசாங்கம் ஐந்து ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. 

மாறுபட்ட வடிவத்தில் குத்துவிளக்கு. புடைப்பு ஓவியங்கள் எனப் பல கலைப்பொருள்கள் ஆலயத்தில் உள்ளன. 

ஆகாயத்தாமரை (தாமரைக் கோபுரம் Lotus Tower) 

356 மீட்டர் உயரம் கொண்ட இக்கோபுரம் தொலைத்தொடர்பு கோபுரம். காலை ஒன்பது முதல் இரவு ஒன்பது வரைத் திறந்திருக்கிறது. கட்டணம் இலங்கை மக்களுக்கு இலங்கை ரூபாய் 500 மட்டுமே! வெளிநாட்டவருக்கு இருபது டாலர். இன்றைய மதிப்பில் 6,019.55 இலங்கை ரூபாய்.  நீண்ட வரிசை! கட்டணம் செலுத்தி உள் நுழையும்போது, கூடுதல் பணம் கொடுத்து வரும் வெளிநாட்டவரை வரிசையில் நிற்காமல் உள்ளே விடுகிறார்கள். 

இங்கு ஒரு சிந்தனை. ஆட்டோ ஓட்டுநரோ, பழம்/ இளநீர் விற்பவரோ இவ்வாறு வெளியூரிலிருந்து வருபவர்களிடம் கூடுதல் காசு கேட்டால் பொங்கும் நாம், இதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். இங்கு எங்களுக்கென தனி வசதி செய்து தரப்பட்டது. எல்லா இடங்களிலும் இவ்வாறு கிடைப்பதில்லை. அப்படியே நாம் ஏற்றுக் கொள்கிறோம். முறைப்படுத்தப்பட்டு நம்மிடம் வாங்குவதால் கோபம் நமக்கு வருவதில்லையா? வணிகர்கள் இவ்வாறு வெளிநாட்டவரிடம் இவ்வளவு கூடுதல் கட்டணம் வைக்கலாம் என்று முறைப்படுத்தப் பட்டிருந்தால் ஏற்றுக் கொள்வோமா? தெரியவில்லை. 

உள்ளே நுழையும்போதே புத்த பிக்குகள் சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அனைவரும் இணைந்து படமெடுக்க உதவினோம். எங்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். குழந்தைகள் போன்று தங்களையும் படங்களெடுத்து மகிழ்ந்தார்கள். சமயத் தலைவர் அனைவருக்கும் இங்கு முன்னுரிமை. ஆதலால் அவர்களும் எங்களுடன் இணைந்தே வந்தார்கள். வழக்கமான கோபுரமும், பின்னணியில் தெரியும் ஊரும் தான். பெரிதாகச் சொல்ல எதுவுமில்லை. 

காலி முகத்திடல் Galle Face Green

தாமரை கோபுரத்திலிருந்து காலி முகத்திடல் சென்றோம். இது நமது மெரினா போன்ற கடற்கரை. ஆனால் மணலுக்குப் பதில் புல்வெளி. 1859 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆளுநரான சர் ஹென்றி வார்ட் என்பவரால் இந்த இடம் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக முறையாக வடிவமைக்கப்பட்டது. குதிரைப் பந்தயம், போலோ தவிர, இலங்கையின் முதல் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் இந்த வளாகத்தில்தான் விளையாடப்பட்டன. அன்று “The Ladies’ Mile” என்று அழைக்கப்பட்ட இந்த இடம், இன்று மக்கள் குடும்பத்தோடு வந்து இளைப்பாறும் இடமாக மாறியிருக்கிறது.

2021 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படை பிப்ரவரி 4 ஆம் நாள் மதியம் 12:00 மணிக்கு, 25 பீரங்கி வேட்டுகள், காலி ஃபேஸ் கிரீன் (Galle Face Green) கடற்கரைக்கு அப்பால் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ‘SLNS Sayura’ என்ற கடற்படைக் கப்பலில் இருந்தே முழங்கப்படுகின்றன. 

மக்கள் நடமாட்டம் இருக்குமிடம் என்பதால் புல்வெளி சீராக இல்லை. அதனால் மக்கள் பாய் போன்றவை கொண்டு வந்து அமர்ந்து இரவு உணவு உண்கிறார்கள். பட்டம் விடுகிறார்கள். நாங்கள் சென்ற நேரம் இருட்டிவிட்டது. இருட்டில் கேட்ட அலையோசை கூட ஒரு இனிமை தான். 

காலி முகத்திடலில் வரிசையாக இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் உணவுகள் குறிப்பாக ‘இஸ்ஸோ வடை’ (Isso Vade – இறால் வடை) மிகவும் பிரபலம். இலங்கை முழுவதுமே இந்த இறால் வடை எங்கும் நீக்கமற நிறைந்த உணவாக இருக்கிறது. 

பாம்பாட்டி ஒருவர் வித்தை காட்டிக்கொண்டிருந்தார். கடற்கரை சாலையை ஒட்டியே பெரிய பெரிய கட்டிடங்கள் உள்ளன. கடலுக்குள் ஒரு பாலம் உள்ளது. அது ‘கொழும்பு போர்ட் சிட்டி’ (Port City) திட்டத்தின் ஒரு பகுதி. உட்கார்ந்து இளைப்பாற அருமையான ஒரு இடம். கொழும்பு நகரின் நெரிசல் குறைந்த மெரினா பீச் என இதைச் சொல்லலாம். 

ஒருபுறம் பழமையான ‘காலி முகத்திடல் ஹோட்டல்’, மறுபுறம் நவீன வானளாவிய கட்டிடங்கள் மற்றும் கடல் பாலம் என பழமையும் புதுமையும் கலந்த இடமாக இது காட்சியளிக்கிறது.

தொடரும்

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார். 

Exit mobile version