Site icon Her Stories

தொட்டால் குற்றமா?

குழந்தைகள் என்றும் அனைவரின் பிரியத்திற்கு உரியவர்கள் (சிலர் விதிவிலக்குகளாக இருக்கலாம்), அவர்களைக் காணும் போது அனைவருக்கும் செல்லம் கொஞ்ச தோன்றுவது இயல்புதான். அந்த அன்பின் வெளிப்பாடாகக் குழந்தைகளை அள்ளி எடுத்து முத்தம் கொடுப்பதும், செல்லமாகக் கன்னத்தில் கிள்ளுவதும், லேசாக ஸ்பரிசிப்பதும் இயல்பான ஒன்றுதான் நமக்கு. ஆனால், என்றாவது ஒரு நாள் குழந்தைகளின் மனநிலையில் இருந்து நாம் இந்தச் செயல்களைச் சிந்தித்திருக்கிறோமா? உண்மையில் நம் தொடுதல் அந்தக் குழந்தைக்குப் பிடித்திருக்கிறதா? குறைந்தபட்சம் அந்தக் குழந்தைக்கு அசௌகரியத்தையாவது ஏற்படுத்தாமல் இருக்கிறதா?

குழந்தைகள் அனைவரிடமும் சௌகரியமாகத்தான் உணருகிறார்கள் எனும் மாயையில் நாம் குழந்தைகளை அணுகுவது முதலில் தவறு என்பதை நாம் உணர வேண்டும். ஒரு சிறு தொடுதல்கூட ஒரு குழந்தையை அசௌகரியப் படுத்த வாய்ப்புள்ளது. அதை நம் குழந்தைகள் நம்மிடம் சொல்வார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது, ஏனெனில் நாம் அவர்களைக் கோபித்துக்கொள்வோமோ என்கிற அச்ச உணர்வோ, அல்லது இதை எப்படிப் பெற்றோரிடம் சொல்ல முடியும் என்கிற தயக்கமோகூடக் காரணமாக இருக்கலாம்.

சரி அதற்காக யாரும் குழந்தையைத் தொடக் கூடாது எனச் சொல்வது சரியா என்கிற கேள்வி எழும். அதற்கு ‘ஆம்’, ‘இல்லை’ என இரு பதில்களைச் சொல்ல முடியும். குழந்தைகளின் அனுமதியுடன் அவர்களுக்கு நம் தொடுதல் அசௌகாரியத்தை ஏற்படுத்தாது எனும் உத்திரவாதம் இருக்கும் பட்சத்தில் ஆம் குழந்தைகளைத் தொட்டு கொஞ்சுவது சரி, ஆனால் குழந்தைக்கு விருப்பம் இல்லாமல் நாம் அவர்களைத் தொடுவதென்பது குழந்தைகளின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும். அந்த இடத்தில், இல்லை நாம் குழந்தைகளைத் தொடக்கூடாது எனும் புரிதல் நமக்கு ஏற்பட வேண்டும்.

சில நேரம் வீட்டிற்கு விருந்தினர் வரும் பட்சத்தில் ஒரு குழந்தை அங்கு இருக்க விரும்பவில்லை, அவர்களுடன் சரியாகப் பழக முடியவில்லை என்பதை வெவ்வேறு விதமான உடல் மொழிகளில் வெளிப்படுத்துவார்கள். ஆனால், நாம் அதைப் புரிந்துகொள்ளாமல், அத்தை மாமா/சித்தி சித்தப்பா/ என ஏதோ ஓர் உறவு முறையைச் சொல்லி, இவர்களிடம் பேசு, இவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொள் என வற்புறுத்தி நாம் சொல்வதைச் செய்ய வைப்போம். இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களுக்கு ஒரு முத்தம் கொடு எனச் சொல்வதோ அல்லது அவர்களே குழந்தைக்கு முத்தம் கொடுப்பதோகூட நடக்கும். இது நம் பார்வையில் அதீத அன்பின் வெளிப்பாடு, ஆனால் குழந்தையின் பார்வையில் இது ஓர் அத்துமீறல், தனக்கு விருப்பமில்லாததைச் செய்யச் சொல்லி வற்புறுத்துவது, இப்படிச் செய்யும் போது குழந்தைகள் பெருமளவில் மனச்சோர்வு அடைவார்கள். காலப்போக்கில் இவற்றை வெளிப்படுத்தவும் முடியாமல் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவித்து மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

இது எல்லாருக்கும் பொருந்துமா எனக் கேட்டால், ஆம் பொருந்தும், பெற்றோருக்கும் சேர்த்தேதான் இந்த விதிகள் பொருந்தும், நம் குழந்தைதானே நாம் முத்தம் கொடுத்தால் என்ன எனும் மனநிலை நம் அனைவருக்கும் ஏற்படும். அது இயல்புதான், ஆனால் நம் குழந்தையாக இருந்தாலும் சில நேரம் நம் தொடுதல்கூட அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். நாம் பெற்ற குழந்தையாக இருந்தாலும் அவர்கள் தனி மனிதர்கள்தாம். நாம் அவர்கள் மீது அதீத அன்பு வைத்துள்ளோம் என்பதால் நாம் எதிர்பார்ப்பதைத்தான் அவர்களும் எதிர்பார்ப்பார்கள், நாம் செய்வது அனைத்தும் அவர்களுக்குப் பிடிக்கும் என நினைக்க கூடாது. நாம் செய்வது அவர்களுக்கு விருப்பம் உள்ளதா, இல்லையா என ஒரு முறைக்கு இரு முறை நாம் கேட்டறிவது மிக அவசியம்.

கலீல் ஜிப்ரான் அவர்கள் ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்,

“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல;

அவர்கள் இயற்கையின் குழந்தைகள்.

உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களேயன்றி, உங்களிடமிருந்து அல்ல.

உங்கள் குழந்தைகள் உங்களுடன் இருந்தாலும்

உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்லர்,

உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்குத் தரலாம்

உங்கள் எண்ணங்களை அல்ல.

அவர்களுக்கென்று தனி சிந்தனைகள் உண்டு

அவர்களின் உடல்களுக்குத்தான் நீங்கள் பாதுகாப்பு தரமுடியும் ஆன்மாக்களுக்கு அல்ல.

அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை

அங்கே நீங்கள் செல்ல முடியாது

உங்கள் கனவுகளிலும் கூட.

அவர்களைப்போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களை உங்களைப்போல் ஆக்கிவிடாதீர்கள்.

வாழ்க்கை பின் திரும்பிச்செல்லாது; நேற்றுடன் ஒத்துப்போகாது.

நீங்கள் வில்கள். உங்களிடமிருந்து எய்யப்படும் உயிருள்ள அம்புகளே குழந்தைகள்.

அம்பு எதை அடையவேண்டும் என்கிற இலக்கை வில் தீர்மானிக்காது

அம்பை எய்துபவன்தான் தீர்மானிப்பான்,

அம்பை எய்துபவன் இயற்கையே, நீங்கள் அல்ல,

நீங்கள் வெறும் வில்தான் !”

இந்தக் கவிதையில் சொல்லப்படுவது போல, குழந்தைகளை நாம் பெற்றுவிட்டோம் என்பதற்காக முழுமையாக உரிமை கொண்டாடுவதே குழந்தைகளுக்கு எதிரான போக்குதான் என நாம் உணர வேண்டும். நாம் பெற்ற குழந்தை வேறு ஒரு தனித்த உயிர், அதற்கான ஆசா பாசங்கள் உண்டு, விருப்பு வெறுப்புகள் உண்டு. அப்படியிருக்க வேறு ஒரு குழந்தையை அவர்களின் அனுமதியின்றி நாம் தொடுவது சரியா என நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

இப்போது தோன்றலாம் ஒரு சிறு தொடுதலால் இத்தனையும் நடக்கும் என எப்படிச் சொல்ல முடியும் என, இவை நடக்கிறது நடக்கவில்லை என்பதெல்லாம் இரண்டாம் பட்சமானதுதான். ஒரு குழந்தையின் அனுமதியின்றி அவர்களைத் தொடுவது தவறு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்பதுதான் இங்கு முதன்மையாக வலியுறுத்தப்படுகிறது. யார் வேண்டுமானாலும் அன்பை வெளிப்படுத்துகிறேன் எனக் குழந்தையைத் தொட முடியும் அதில் தவறு இல்லை, அப்படித் தொடுவது உனக்கு அசௌகாரியத்தை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை, இதெல்லாம் சாதாரணமான விஷயம்தான் என ஒரு குழந்தைக்குக் கற்பிப்பதே (தெரிந்தோ/தெரியாமலோ) ஆபத்தானதுதான். காரணம் இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்.

ஒரு குழந்தைக்கு நல்ல தொடுதல் (Good touch) கெட்ட தொடுதல் (Bad touch) சொல்லிக் கொடுக்க வேண்டும் எனப் பேசுகிறோம், குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப அவர்களின் உடலைக் குறித்த புரிதலை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறோம், அப்படியிருக்க அவர்களின் உடலைத் தொடுவதற்கு அவர்களின் அனுமதி வேண்டும் எனப் பேசுவதும் மிக முக்கியமானது என உணருவது மிகவும் அவசியம்.

ஒரு குழந்தை தன்னுடைய உள் உணர்வுகளையும் விருப்பு வெறுப்புகளையும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நம்மிடம் சொல்ல வேண்டுமானால், முதலில் அவர்களுக்கும் நமக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும், நட்பு ரீதியிலான அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும், மிக முக்கியமாக அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நம்மை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் எண்ணங்களை அவர்கள் சொல்வது போலவே நாம் புரிந்து உள்வாங்கிக்கொள்வோம், எந்த நேரத்திலும் அவர்களுக்கு எதிராக நாம் செயல்பட மாட்டோம் என்கிற நம்பிக்கையை விதைக்க வேண்டும். ஒருவர் (எவ்வளவு நெருங்கிய உறவினர்கள் என்றாலும்) தன்னைத் தொடுவது பிடிக்கவில்லை அல்லது அவர்களின் அருகாமை அசௌகரியமாக உள்ளது என்று ஒரு குழந்தை சொல்வது நமக்கு மிகவும் சிறிய விஷயமாக இருக்கலாம், ஆனால் குழந்தைகள் அதை நம்மிடம் சொல்கிறார்களெனில், இனி இப்படியான சூழல் உருவாகாமல் நாம் அவர்களைப் பாதுகாப்போம் எனும் எதிர்பார்ப்புடன்தான். குழந்தைகள் இதைச் சொல்லும் போது அலட்சியப்படுத்தாமல் உள்வாங்கிக் கொண்டு, அதற்கு தக்கதான செயலில் ஈடுபடுவது என்பது குழந்தைகளுக்கு மேலும் நம் மீதுள்ள நம்பிக்கையை அதிகரிக்கும், ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். இப்படியிருந்தால் குழந்தைகள் பெற்றோரிடம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள்.

இவை அனைத்தையும் மீறி அவர்களுக்கு விருப்பமில்லாமல் ஒருவர் அவர்களைத் தொடும் சூழல் ஏற்பட்டுவிட்டது எனில், அந்தச் சூழல் உருவானதற்கோ அந்த நபர் தொட்டதற்கோ குழந்தைகள் பொறுப்பல்ல, அது குழந்தைகளின் குற்றம் இல்லை எனும் புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். எந்த நேரத்திலும் இப்படியான சூழல்கள் நடந்தால் அது தன்னுடைய குற்றம்தான் என ஒரு குழந்தை குற்ற உணர்வு அடையாமல் பார்த்துக்கொள்வது அவசியம், அதற்கு நாம் அவர்களின் உடல் குறித்தும் அவர்கள் உடல் அவர்களின் உரிமை என்பது குறித்தும், அவர்களின் கட்டுப்பாட்டை மீறி அவர்களுக்கு விருப்பமில்லாத ஏதோ ஒன்று நடப்பதற்கு அவர்கள் காரணம் அல்ல எனும் புரிதலையும் ஏற்படுத்த வேண்டும். மேலும் பெற்றோரின் கண்காணிப்பில் இல்லாத நேரத்தில் ஒரு குழந்தையை ஒருவர் தொட முயற்சித்தால், உடனடியாக அவர்களிடம் தன்னுடைய எதிர்ப்பைக் காட்டும் மனநிலையுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு, “இல்லை வேண்டாம் இது எனக்கு பிடிக்கவில்லை” எனச் சொல்லும் தைரியத்தை ஊட்டி வளர்க்க வேண்டும்.

ஒருவர் தன்னை எந்த நோக்கத்தோடு தொடுகிறார் எனப் பகுத்தறிந்து புரிந்துகொள்ளும் பக்குவம் ஏற்படும் வரை குழந்தைகளிடம் நாம் கடைபிடிக்க வேண்டியது அவர்களின் அனுமதியின்றி அவர்களைத் தொடாமல் இருப்பதைத்தான். அன்பின் வெளிப்படை குழந்தைகள் ஏன் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்பதை விடுத்து, தொடாமலும் அன்பை வெளிப்படுத்த பல வழிமுறைகள் உள்ளது எனும் உண்மையை நாம் உணர்ந்து, குழந்தைகள் உலகில் எந்தவித அசௌகரியத்தையும் உருவாக்காமல் வெளியில் இருந்து பார்த்து ரசிப்போம், குழந்தைகளே அவர்களின் உலகிற்குள் நம்மை அனுமதிக்கும் வரை.

படைப்பாளர்:

நாகஜோதி

Doctor of pharmacy (Pharm.D) படித்திருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார். நாத்திகவாதி. பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் சார்ந்து இயங்குகிறார். டிவிட்டரில் இயங்கும் முச்சந்துமன்றம் என்கிற புத்தக வாசிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.

Exit mobile version