ஓர் இடத்தைக் கண்டுபிடித்துப் போவது என்பது பல பெண்களுக்குச் சிரமமாக இருக்கிறது. பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே ஓரிரு முறை வந்திருந்தாலும், அந்தத் தெருவில் நின்றுகொண்டு குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடிப்பது எனக்கும் கஷ்டம்தான். “எந்தத் திசையில போகணுமோ அதற்கு எதிர்திசையில் போவியே… அது எப்படிச் சரியா எதிர்வழியில போறே?” என்று என் இணையர் கேலி செய்வார். ஆரம்பத்தில் எனக்கு மட்டும்தான் திசை அறிவதிலும் வழியைக் கண்டுபிடிப்பதிலும் சிக்கல் இருக்கிறது என்று நினைத்தேன். அப்புறம்தான், பல தோழிகளுக்கும் இந்தச் சிரமம் இருப்பது தெரிந்தது.
தோழியொருவர் பேசும் போது, முன்புறம் இருக்கும் கட்டிடத்தைச் சுட்டிக்காட்ட, பின்புறம் கையைக் காட்டுவார். மற்றொருவர், பேருந்தில் போனால் தவறாக இறங்கிவிடுவோமோ என்ற பயத்தில், அரைமணி நேரம் நடந்தே புது ஊரில் முதல்நாள் அலுவலகம் போன கதையைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்வார். இன்னொரு தோழியோ, யாராவது துணைக்குகூட வந்தால்தான், வீட்டைவிட்டு வெளியே காலடி எடுத்து வைப்பார்.
எல்லாப் பெண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறதா என்றால் இல்லை. கிராமத்துப் பெண்களுக்கும் அடித்தட்டுப் பெண்களுக்கும் நான்கு திசைகள் பற்றியும், செல்லும் பாதைகள் குறித்தும் நல்ல அறிவு இருக்கிறது. புது ஊருக்குச் சென்றாலும் கொஞ்சம்கூட தடுமாறாமல் செல்ல வேண்டிய இடத்தை அநாயசமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். இவர்களுக்கு ஏன் பிரச்னை இல்லை? சிறுமிகளாக இருக்கும் போதே வயல்காட்டுக்கும் தோட்டத்துக்கும் பெற்றோர் வேலை செய்யும் இடங்களுக்கும் போய்வந்த அனுபவம் இவர்களுக்கு இருக்கிறது. ‘நீ பெண் என்பதால் வீட்டைவிட்டு தனியே போகக் கூடாது’ என்ற கட்டுப்பாடுகள் இந்தப் பெண்களுக்கு இல்லை. இவர்கள் பொத்திப்பொத்தி வளர்க்கப்படவில்லை. இவர்களின் வாழ்க்கைச் சூழலில் அது சாத்தியமும் இல்லை. பெரும்பாலான கிராமத்துப் பெண்களின் வாழ்க்கை, வயல்காட்டுடனும் விவசாய வேலைகளுடனும் இணைந்தது. ஆடு, மாடு மேய்க்கப் போவது, களத்துமேட்டுக்குப் போவது என்று தனியாகப் போய்ப் பழகியவர்கள். சிறுநகரங்களிலும் நகரங்களிலும் வாழும் அடித்தட்டுப் பெண் குழந்தைகளின் பெற்றோர் அன்றாடக் கூலி வேலைக்கும் வீட்டு வேலைக்கும் போவதால், இந்தக் குழந்தைகளும் தனியாகப் பள்ளிக்கூடத்திற்கும் கடைகளுக்கும் பெற்றோர் வேலை செய்யும் இடங்களுக்கும் போய்வருவது இயல்பான ஒன்று. தனியாகச் சென்று வருவதால் இந்தப் பெண் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர்கிறார்கள். சாலைகளும் புதிய இடங்களும் இவர்களைப் பயமுறுத்துவதில்லை.
திசையறிவதில் யாருக்கெல்லாம் பிரச்னை இருக்கிறது? சின்ன வயதில், வீட்டைவிட்டுத் தனியாக வெளியே போக அனுமதிக்கப்படாத பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. குறிப்பாக, நடுத்தர, மேல்தட்டு குடும்பங்களிலும், ‘பெண்ணைத் தனியாக வெளியே அனுப்புவது கேவலம்’ என்று ஜாதிப் பெருமையும் மதப் பெருமையும் பேசும் குடும்பங்களிலும் வளரும் பெண்குழந்தைகள் இந்தச் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் சிறுமிகளாக இருக்கும்போது, குறைந்தபட்சம் வெளியே போய், தெருவில் விளையாட சுதந்திரம் இருக்கும். வயதுக்கு வந்துவிட்டால் அந்தச் சுதந்திரமும் பறிபோய்விடும். எங்கேயாவது வெளியே போக வேண்டுமென்றால், அம்மாவோ அப்பாவோ அண்ணனோ சித்தப்பாவோ மாமாவோ துணைக்கு வருவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், பெண்ணைவிட வயது குறைந்த தம்பி துணைக்கு வருவான். அவனுக்கு ஏழெட்டு வயதுதான் இருக்கும். வளர்ந்த அக்காவுக்கு இவனெல்லாம் துணையா என்று சிரிப்பு வரலாம். ஆனால், இதிலுள்ள பெண்ணைக் கட்டுப்படுத்தும் நுட்பமான ஆதிக்கத்தைக் கூர்ந்து நோக்க வேண்டும்.
முதலில் வயதுக்கு வந்த பெண்ணை ஏன் தனியாக அனுப்புவதில்லை? அவளுக்குப் பாதுகாப்பு வேண்டுமாம். எதற்குப் பாதுகாப்பு? வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் அவளுடைய so called ‘கற்பு’க்குப் பாதுகாப்பு அளிக்கிறார்களாம். அதாவது அவளுக்குக் கல்யாணமாகும் வரை, அவள் யாருடனும் ‘உறவு’ வைத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் இதன் பொருள். குடும்பம் பார்த்து, தன் ஜாதியில், மதத்தில், முடித்துவைக்கும் கணவனுடன்தான் அவள் ‘உறவு’ கொள்ள வேண்டும். அதற்கு முன்பு அவளுக்கு விருப்பமே இருந்தாலும், யாருடனும் ‘உறவாடக்’ கூடாது என்பதுதான் ‘பெண்ணுக்குப் பாதுகாப்பு’ என்று இந்த ஆணாதிக்கச் சமுதாயம் குறிப்பிடுவதன் உள்ளர்த்தம். அவள் எங்கே போகிறாள், என்ன செய்கிறாள் என்று கண்காணித்துக் கொண்டே இருக்கத்தான், அவளுடைய குடும்ப உறவுகள் உடன் போகிறார்கள். ‘அவளுக்குப் பாலியல் பலாத்காரம் நடந்துவிடக் கூடாது; அதிலிருந்து பாதுகாக்கத்தான் உடன் செல்கிறோம்’ என்று துணைக்குப் போவதை நியாயப்படுத்தி சப்பைக்கட்டு கட்டுகிறது பொதுப்புத்தி. அப்படியென்றால், வயதில் சிறிய தம்பியை வளர்ந்த அக்காவுடன் எதற்கு அனுப்புகிறார்கள்? அவனால் அவளைப் பாதுகாக்க முடியுமா? நிச்சயம் முடியாது. அவன் வேலை, அக்கா எங்கு செல்கிறாள், என்ன செய்கிறாள், யாருடன் பேசுகிறாள் என்று வேவு பார்ப்பதன்றி வேறு என்னவாக இருக்க முடியும் ?
இப்படி வீட்டிலேயே பொத்திப்பொத்தி வளர்க்கப்படும், வெளியே துணையுடன் மட்டுமே செல்லும் பெண்ணுக்கு, வளர்ந்த பிறகும் தனியாகச் செல்லும் போது மனத்தடை ஏற்படுகிறது. சுதந்திரமாகத் தனியே வெளியே செல்வதைப் பெண்கள் விரும்பினாலும், சரியாகத் திசையைக் கணித்து, ஓரிடத்திற்குச் செல்ல சிரமப்படுகிறார்கள். தன்னம்பிக்கை இல்லை. இனந்தெரியாத பயமும் பதற்றமும் அவர்களை ஆட்கொள்கிறது. தவறாகப் போய், தேவையில்லாத பிரச்னைகள் வருமோ என்றெல்லாம் அநாவசியமாகக் கவலைப்படுகிறார்கள். சிலர் தட்டுத்தடுமாறி செல்லப் பழகிவிடுகிறார்கள். என்றாலும், பலருக்கும் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட பலகாலம் ஆகிறது. இதன் விளைவாகப் பெண்களின் ‘மொபிலிட்டி’ எனப்படும் பல இடங்களுக்குச் சென்று வரும் தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது.
வண்டி ஓட்டாதவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை; டூவீலர், கார் ஓட்டும் பெண்களுக்குத் திசை பற்றிய தெளிவு இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், அவர்களும் சிக்கலை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள் என்பதைத் தோழிகளின் அனுபவங்களிலிருந்து அறிந்துகொண்டேன்.
இன்று வந்திருக்கும் ஜிபிஎஸ் வசதியும் மேப் வசதியும் இடத்தைக் கண்டுபிடிக்க பெண்களுக்கு மிக உதவியாக இருக்கிறது. என்றாலும் எல்லோரிடமும் இந்த நவீன வசதி இல்லை தோழர்களே. மேலும், இணையவசதியும் நெட்வொர்க்கும் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை.
வெளியே போகும் வளரிளம் பெண் குழந்தைகளுக்குத் துணை எதற்கு என்ற கேள்வியுடன் இந்தப் பிரச்னையை அணுக வேண்டியுள்ளது. பெற்றோருக்கு வரும் முதல் பயம், தன் குழந்தையை யாரும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திவிடுவார்களோ என்பதுதான். இந்தப் பயம் நியாயமானது. ஆனால், அதற்குத் தீர்வு, அவளுக்கு எப்போதும் எங்கும் பக்கத்துணையாகச் செல்வது அல்ல தோழர்களே. அது யதார்த்தத்தில் சாத்தியமும் அல்ல. அவள் இந்த உலகைத் தனியாக எதிர்கொள்ளப் பழக்குவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுத்து, யாராவது தவறாக அணுகினால் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும், யாருக்கு போன் செய்ய வேண்டும் போன்ற அனைத்தையும் சொல்லிக் கொடுங்கள். துணிவைக் கற்றுக் கொடுங்கள். எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளலாம், அவர்கள் தான் சொல்வதை முன்முடிவில்லாமல் காது கொடுத்துக் கேட்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதும் முக்கியம். எப்போதும் துணையாகச் செல்வதல்ல, எது நடந்தாலும் அம்மாவும் அப்பாவும் குடும்பத்தினரும் தனக்குத் துணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் பெண் குழந்தைகளுக்கான மிகப் பெரிய பாதுகாப்பு தோழிகளே.
வீட்டுக்குள்ளே பொத்திப்பொத்தி வளர்க்கப்படும் பெண், தான் தாயாகி, தனது குழந்தையை வளர்க்கும் போதும் பொத்திப்பொத்திதான் வளர்க்கிறார். கேட்டால், இந்தக் காலத்தில் குற்றங்கள் கூடிவிட்டன, பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை என்கிறார். தலைமுறைகள் கடந்தும் இந்த விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை.
தோழிகளே, தோழர்களே, பெண் குழந்தைகளைத் தனியாகப் போய்வரும் துணிச்சலுடன் வளர்ப்போம். அவர்கள் வளர்ந்து, தன்னம்பிக்கையுடன் உலகைச் சுற்றுவார்கள். திக்குத்திசை தெரியாதவளல்ல பெண். ஒரு காலத்தில் திசையெங்கும் சுற்றி, காடுமேடெல்லாம் அலைந்து, தன் மக்களுக்கு உணவு தேடி அவர்களைக் காப்பாற்றியவள்தான் நமது ஆதித்தாய். அவளின் வழித்தோன்றலான நமது பெண் குழந்தைகளின் இயல்பான அறிவுத்திறனை வெளிப்படுத்தவிடாமல், அவர்களைக் கட்டுப்படுத்தி, வீட்டுக்குள் முடக்கிவைப்பதும், சுதந்திரமாகத் தனியே செல்லவிடாமல், எப்போதும் ஒட்டிக்கொண்டு துணையாகச் செல்வதும் மனித உரிமை மீறல். இதற்கு முற்றுப் புள்ளி வைப்போம்.
(தொடரும்)
படைப்பாளர்:
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்த தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.
ஹெர் ஸ்டோரீஸ் இணையதளத்தில் ‘கீதா பக்கங்கள்’ பகுதியில் இவர் எழுதிய காத்திரமான கட்டுரைகள், ‘துப்பட்டா போடுங்க தோழி’ என்ற பெயரில் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீட்டில் புத்தகமாக வந்து, மிக முக்கியமான பெண்ணிய நூல் என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது!