’வாட் வில் பீபுள் சே’ (What Will People Say) என்ற நார்வீஜியன் மொழிப் படத்தைப் பார்த்தேன். மனதைத் தொந்தரவு செய்த ஒரு படம். கதை நிஷா என்ற 16 வயதுப் பெண்ணைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியரான மிர்ஸா, தனது மனைவி, கல்லூரியில் படிக்கும் மகன், மகள் நிஷா, கடைக்குட்டி மகள் என்று நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரத்தில் வாழ்கிறார். அங்கு கடை வைத்திருக்கிறார்.
வீட்டில் கட்டுப்பாடுகள் நிறைந்த பழமைவாத குடும்பச் சூழலுக்கு ஏற்ப அடக்க ஒடுக்கமான பெண்ணாக இருக்கும் நிஷா, பள்ளியிலும் நண்பர்கள் வட்டாரத்திலும் கலகலப்பான, துடிப்பு மிக்க இளம்பெண்ணாக வலம்வருகிறாள். பாஸ்கெட் பால், விளையாட்டு, பார்ட்டிகள், ட்ரிங்க்ஸ் என்று நார்வே நாட்டு கலாச்சாரத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறாள். அந்த வயதுக்கே உரிய குறும்புத்தனத்துடன் தனது பாய்ஃப்ரெண்ட் மைக்கேலை, சுவரேறிக் குதித்து ஜன்னல் வழியாக வீட்டுக்கு, தனது அறைக்கு வரச்செய்கிறாள். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, அவன் செல்போன் அடிக்கும் ஓசை கேட்டு நிஷாவின் தந்தையிடம் இருவரும் பிடிபடுகின்றனர். அவர் இருவரையும் அடித்துத் துவைக்க, அவர்கள் அலறும் ஓசை கேட்டு அண்டை வீட்டார் புகார் செய்ய அந்த நாட்டு சைல்ட் கேர் அமைப்பிடம் இருவரும் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
“நிஷாவும் மைக்கேலும் உடலுறவு வைத்துக்கொண்டவர்கள்; நிஷாவை வீட்டுக்கு அழைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவள் மைக்கேலைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று நிபந்தனை விதிக்கிறார் மிர்ஸா. “நாங்கள் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை” என்று நிஷா மறுக்க, அதை நம்பாமல் தன் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருக்கிறார் அவள் தந்தை. “நான் தப்பு செய்துட்டேன். என்னோட குடும்பத்துக்கு என்னால அவமானம்” என்று நிஷா குற்றவுணர்வுடன் சொல்ல, “நீ எந்தத் தவறும் செய்யல” என்று சைல்டு கேர் அமைப்பில் அவளுக்கு கவுன்சிலிங் தருகிறார்கள். அவள் அம்மா ஒரு நாள் போன் செய்து, “நீ வீட்டுக்கு வா, வழக்கம்போல் இருக்கலாம்” என்று அழைக்க, நிஷா சைல்டு கேர் அமைப்பிலிருந்து கிளம்புகிறாள்.
நிஷாவை, அவள் தந்தையும் அண்ணனும் வந்து காரில் அழைத்துப் போகிறார்கள். வீட்டுக்குப் போகாமல் கார் ஏர்போர்ட் செல்கிறது. அங்கு அவள் தந்தை மிர்ஸா, அவளைக் கட்டாயப்படுத்தி, பாகிஸ்தானுக்கு விமானத்தில் அழைத்துச் செல்கிறார். பாகிஸ்தானில் உள்ள தனது அம்மா, சகோதரி குடும்பத்தில் அவளை விட்டுவிட்டு நார்வே திரும்புகிறார். “இது உன் நல்லதுக்குத்தான்” என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். விருப்பமே இல்லாமல், மனஉளைச்சலுடன் அங்கு தங்கியிருக்கும் நிஷா, எப்படியாவது அங்கிருந்து தப்பிவிடத் தவிக்கிறாள். அத்தை அசந்த நேரத்தில் இண்டர் நெட் செண்டருக்குப் போய் ஃபேஸ்புக்கில் தன் தோழிக்குத் தகவல் அனுப்புகிறாள். அதற்குள் அத்தையிடம் பார்த்துவிட, வீட்டில் அடிஉதை கிடைக்கிறது. மாமா அவள் பாஸ்போர்டை எரித்துவிட, கையறு நிலையில் அந்தச் சூழலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகுகிறாள். சமையல் கற்றுக்கொள்கிறாள். வீட்டு வேலை செய்கிறாள். மதராசா பள்ளிக்குப் போய்ப் படிக்கிறாள். எல்லாவற்றையும் இயந்திரத்தனமாகச் செய்கிறாள். ஒட்டுதல் இல்லாத உறவுகளுக்கு நடுவே, அத்தை பையன் காட்டும் அன்பால் இருவருக்குமிடையே ஈர்ப்பு உருவாகிறது. நிஷா வாழ்க்கையில் மகிழ்ச்சி கொஞ்சம் எட்டிப்பார்க்கிறது.
ஓரிரவு, அத்தை பையன் நிஷாவை வெளியே கூட்டிச் சென்று, இருண்ட தெருமுனையில் முத்தமிடுகிறான். அங்கு வரும் போலீஸ்காரர்களிடம் இருவரும் மாட்டிக்கொள்கின்றனர். நிஷாவை உடையைக் கழற்றச் சொல்லி, தடுக்கும் அந்தப் பையனை அடித்து உதைத்து, இருவரையும் அவமானப்படுத்தி, அவர்களை வீடியோ எடுக்கின்றனர். பிறகு அவர்களின் வீட்டுக்கு கூட்டிப் போய், “வெட்கம் கெட்ட பெண் இவள், இவர்கள் செய்த காரியத்தைப் பாருங்கள்” என்று வீடியோவைக் காட்டி, இருபதாயிரம் ரூபாய் தராவிட்டால் இந்த வீடியோவை ஆன்லைனில் போட்டுவிடுவோம் என்று மிரட்ட, மாமா பணம் தருகிறார். நிஷாவின் அத்தை அவள் அப்பாவுக்கு போன் செய்து, “24 மணி நேரத்தில் இங்கு வந்து உன் பெண்ணை அழைத்துப் போய்விடு” என்று சொல்ல, அப்பா வருகிறார். “உன் பெண் என் பையனை மயக்கி செக்ஸ் வைத்துக்கொண்டாள்” என்று அத்தை தூற்ற, “இல்லை, நாங்க முத்தமிட்டதோட சரி” என்று நிஷா அழுகிறாள். நிஷாவின் அப்பா, “நடந்தது நடந்துருச்சு, உங்க பையனுக்கு என் பெண்ணைக் கல்யாணம் செய்து வச்சிரலாம்” எனக் கேட்க அவர்களும் பையனும் மறுத்துவிடுகின்றனர்.
நிஷாவை கூட்டிக்கொண்டு கிளம்பும் அப்பா, வழியில் மலைஉச்சியில் அவளை நிறுத்தி, “நீ குதித்து செத்துப் போயிரு, நான் நிம்மதியா இருப்பேன்” என்று வெறுப்பைக் கக்குகிறார். உடைந்துபோய் அழுகிறாள் மகள். ஒரு வழியாக இருவரும் நார்வே வந்து சேர்கின்றனர். பழைய தோழிகளுடன் பேசக் கூடாது, வேறு ஸ்கூல், அப்பாவுடன்தான் செல்ல வேண்டும் என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் வீட்டில். அம்மா உட்பட குடும்பமே பாராமுகம் காட்ட, எந்த அரவணைப்பும் இல்லாமல் தனிமைப்படுத்தப்படுகிறாள். சைல்டு கேர் அமைப்பு, அவள் பாகிஸ்தானில் இருக்கும்போது தோழிக்கு அனுப்பிய மெஸேஜை வைத்து, நிஷாவின் குடும்பத்தையும் அவளையும் விசாரிக்கிறது. “ஒரு கோபத்தில் அப்படி அனுப்பிவிட்டேன், என் குடும்பத்தினர் மீது தவறில்லை” என்று பொய்யாக விளக்கம் அளித்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள்.
சில நாட்களுக்குப் பிறகு, அம்மா அவளுக்கு வரன் பார்க்க, அவள் படிப்பை நிறுத்திவிட்டு டாக்டர் பையனைக் கல்யாணம் செய்துகொண்டு கனடா போக வேண்டும் என்று குடும்பம் தீர்மானிக்கிறது. யாரும் நிஷாவின் விருப்பத்தைக் கேட்கவில்லை. “அவள் கல்யாணத்திற்குப் பிறகு படிக்கலாம், வேலைக்குப் போகலாம் தானே” என்று நிஷாவின் அப்பா கேட்க, வருங்கால மாமியார் “ஒன்னும் வேணாம், அவள் வீட்டைப் பாத்துக்கிட்டு, குழந்தைகளைப் பெத்து வளர்த்தால் போதும்” என்று கறாராகச் சொல்லிவிடுகிறார். எல்லோரும் போன பிறகு, அன்றிரவு நிஷா வீட்டைவிட்டு ஓடிப் போகிறாள். சாலையில் போகும் அவளை ஜன்னலில் இருந்து அவள் அப்பா பார்க்கிறார், கண்கள் கசிய. ஆனால், தடுக்கவில்லை.
இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் இராம் ஹக்(Iram Haq) என்ற பெண் இயக்குனர். இது அவரின் சொந்தக் கதை. 14 வயதில் தனது தந்தையால் பாகிஸ்தானுக்குக் கடத்தப்பட்டு, எல்லா இடர்பாடுகளையும் எதிர்கொண்டு, மீண்டு, நார்வேயில் நடிகையாகவும் திரைக்கதையாசிரியராகவும் இயக்குநராகவும் தற்போது பரிணமித்திருக்கிறார்.
ஒரு பெண் குழந்தை, ஆணாதிக்க சமுதாயம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளிலிருந்து நூலிழை பிசகினால்கூட, கல்வியும் அவள் வாழ்க்கையும் எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது என்பதை, ’வாட் வில் பீபுள் சே’ தெளிவாகச் சித்தரிக்கிறது. இந்தப் படம் இந்திய சமுதாயத்திற்கும் அப்படியே பொருந்திப் போகிறது.
ஆணாதிக்க சமுதாயத்தின் அழுத்தங்களுக்குப் பலிகடாவாகும் பெற்றோர், “நாலு பேர் என் பெண்ணைப் பற்றி என்ன சொல்வார்கள்” என்று பயந்து, மகளை, அவள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். பெண் குழந்தையைப் பொருத்தவரை, பெற்றோருக்கு அவள் கல்வி பெற வேண்டும் என்பதோ, வேலைக்குப் போய்த் தற்சார்புடன் இருக்க வேண்டும் என்பதோ, அவள் விருப்பத்திற்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதோ… எதுவுமே முக்கியமில்லை. பொதுப்புத்தி வரையறுத்திருக்கும் so called ’ஒழுக்கத்துடன்’ அவள் இருக்கிறாளா என்பதுதான் மிக முக்கியம். இதில் சிறு சிக்கல் வந்தால்கூட, முதலில் அவள் கல்வி நிறுத்தப்படும், அவளின் நியாயமான விருப்பங்களுக்கெல்லாம் தடைவிதிக்கப்படும், எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ணி வைத்துவிடுவார்கள். இதில் அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு எந்த இடமும் இல்லை.
அன்புத் தோழர்களே, உங்கள் மகளை அன்பாக வளர்த்தால் மட்டும் போதாது, அவளுடன் மனம் விட்டுப் பேசுங்கள். அவள் உலகைப் புரிந்துகொள்ளுங்கள். அவளுக்கு என்ன பிடிக்கிறது, அவளது விருப்பங்கள், முன்னுரிமைகள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். முடிந்தால், அவள் ஆற்றல் மிக்க ஆளுமையாக வளர துணை நில்லுங்கள். அவள் எண்ணங்கள் உங்கள் விருப்பங்களுடன் ஒத்துப் போகவில்லையா, ஒரு பிரச்னையுமில்லை, ஒதுங்கிக்கொள்ளுங்கள். அவள் வாழ்க்கையை அவள் வாழட்டும். அதை விட்டுவிட்டு, வன்முறையால் அவளை ஒடுக்கி, கட்டுப்படுத்துவது அப்பட்டமான மனித உரிமை மீறல். ஒருபோதும் அதைச் செய்யாதீர்கள். உங்கள் மகளாக மட்டுமே வாழ அவர்கள் பிறப்பெடுத்து வரவில்லை. அவர்களை முழுமனுசிகளாக வாழவிடுங்கள். அவர்கள் நம் பெண்கள்.
படைப்பாளர்:
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.