மாணிக்கத்தாய்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய கிழக்குக் கடற்கரை கலைப் பயணத்தில் புதுக்கோட்டை சென்றிருந்தபோது, கவனகனையும் மாணிக்கத்தாயையும் சந்தித்தேன். மாணிக்கத்தாய் அறிவியல் இயக்கப் பாடல்களை அழகாகப் பாடினார். அடுத்த ஆண்டு ஒரு முகாமில் மாணிக்கத்தாயுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
மாணிக்கத்தாயின் இணையர் கவனகன், அஞ்சல் துறையில் பணிபுரிந்தார். மாணிக்கத்தாய் முதுகலை சமூகவியல் படித்தவர். மாணிக்கத்தாயின் இயற்பெயர் மும்தாஜ் என்பதை அறிந்தவுடன், காதல் திருமணமா என்று கேட்டேன். இல்லை என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
கவனகன், மாணிக்கத்தாய் குடும்பத்தினர் திருச்சி அருகில் உள்ள மெய்வழிச்சாலையில் ’மெய் மதம்’ அமைப்பில் இருந்தனர். மெய் மதத்தில் எல்லா மதத்தினரும் இருப்பார்கள். அனைத்து மதங்களும் சமம் என்ற கருத்தினைக்கொண்டது. இங்கு வசிப்பவர்கள் இயற்கை வழியில்தான் வாழ்வார்கள். கேஸ் அடுப்பு கிடையாது. மின்சாரம் முன்பு இல்லை. இப்போது சூரிய ஒளியில் கிடைக்கும் மின்சாரம் மூலம் விளக்கு, காற்றாடிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் தலையில் முண்டாசு கட்டியிருப்பார்கள். இங்குள்ளவர்கள் குடிசைகளில்தான் வாழ்கிறார்கள். சுமார் 800 குடிசைகள் உள்ளன.
மெய்வழிச்சாலையில் ஆண்டுக்கு 5 முறை நடக்கும் திருவிழாவுக்கு மெய் மதத்தைப் பின்பற்றுபவர்கள் செல்வார்கள். அப்படியொரு சந்திப்பில்தான் இரு வீட்டாரும் திருமணம்குறித்துப் பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். திருச்சியைச் சேர்ந்த கவனகனும் கடையநல்லூரைச் சேர்ந்த மும்தாஜும் இப்படித்தான் வாழ்க்கையில் இணைந்தனர். திருமணத்துக்குப் பிறகுதான் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் மாணிக்கத்தாய். கவனகன் முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டவர்.
மாணிக்கத்தாய் திருமணத்துக்குப் பின் கவனகனுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். புதுக்கோட்டைக்கு அறிவொளி இயக்கம் வந்தபோது, மாணிக்கத்தாய் பெண்களுக்கான ஒருங்கிணைப்பாளரானார். அப்போது புதுக்கோட்டையின் ஆட்சியர் ஷீலாராணி சுங்கத் திட்டத் தலைவராக இருந்தார். அறிவொளிதான் தன்னை விழிப்புணர்வு உள்ள பெண்ணாகவும், சமூகத்துக்குப் பணியாற்றும் பெண்ணாகவும் மாற்றியது என்கிறார் மாணிக்கத்தாய்.
”அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய அனுபவம் மகத்தானது. எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது. என் இரு மகன்களையும் விட்டுவிட்டு, நான் இயக்கப் பணிகளுக்குக் கிளம்பிவிடுவேன். நேரம் காலம் பார்க்காமல் உழைப்பேன். பெண்களுக்கு எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொடுத்தோம். அதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்ததை மிக முக்கியமாகக் கருதுகிறேன். கிராமங்களில் பேருந்து வசதி அதிகம் இருக்காது. ஆண்கள் வேலைகளுக்குச் சென்றுவிடுவார்கள். திடீரென்று யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றாலும் பக்கத்து டவுனுக்கு அழைத்துச் செல்ல வாகன வசதி இருக்காது. பெண்களுக்க்ச் சைக்கிள் ஓட்டும் பயிற்சி என்றதும் நாங்களே எதிர்பார்க்காத அளவுக்குப் பெண்கள் ஆர்வமாக வந்தார்கள். மொத்தத்தில் ஆண்களைச் சார்ந்திருக்காமல், வாழ ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு சைக்கிள் கிடைக்கவும் ஏற்பாடுகளைச் செய்தோம்” என்று சொல்லும்போதே மாணிக்கத்தாயின் குரலில் உற்சாகம் வழிகிறது.
சைக்கிள் என்பது ஒரு வாகனம் மட்டுமல்ல. அது பெண்கள் வெளி உலகைக் காணும் வாசல். தன்னம்பிக்கை டானிக். 10 வயது பெண் குழந்தைகளிலிருந்து 72 வயது பாட்டிகள்வரை சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர்.
”அறிவொளிதான் எனக்கும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தது. நான் சிறுமியாக இருந்தபோது சைக்கிள் ஓட்ட அனுமதி இல்லை. அறிவொளிதான் எனக்குப் பலவித ஜன்னல்களைத் திறந்து காட்டியது. மானுட சமூகத்துக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையையும் கொடுத்தது.”
மாணிக்கத்தாய்
புதுக்கோட்டை முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சுற்றி வந்து பெண்களின் பிரச்னைகளைத் தெரிந்துகொண்டார் மாணிக்கத்தாய். பெண்கள் உழைத்க்ச் சம்பாதிக்கும் பணத்தை, அவர்கள் கணவர்கள் மதுவுக்கும் கடனுக்குமாகப் பிடுங்கிக்கொள்வார்கள். இதனால் குழந்தைகளின் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பெண்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட வீடுகளுக்குச் சென்று கணவர்களிடம் பேசி, குடியை நிறுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். கழிவறை, குடிநீரின்றி கஷ்டப்படும் பெண்களுக்கு அறிவொளி மூலம் உதவி செய்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டார்.
புதுக்கோட்டையில் ஆட்சியர் ஷீலா ராணி சுங்கத் மூலம் பல சிறப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பெண்களை மேம்படுத்த, பொருளாதார ரீதியாக உதவ ’டோக்ரா’ என்ற திட்டம் வந்தது. இதில் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளராக கண்ணம்மாவும், செயலராக மாணிக்கத்தாயும் சிறப்பாகச் செயல்பட்டனர்.
”கல் குவாரியில் கொத்தடிமைகளாக இருக்கும் பெண்களை, ஷீலா ராணி அம்மாமூலம் மீட்டோம். டோக்ரா திட்டம்மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கல்குவாரியில் வேலை செய்யும் பெண்களே அதனை எடுத்து நடத்தும்படி ஏற்பாடு செய்தோம். நெடுவாசல் கிராமத்தில் சாராய ஒழிப்பு இயக்கம் நடத்தி வெற்றி கண்டோம்” என்று மாணிக்கத்தாய் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
அறிவொளிக்குப் பிறகு அறிவியல் இயக்கத்தில் பணிபுரிகிறார் மாணிக்கத்தாய். 2005-ல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். இதில் எச்ஐவி உள்ளவர்களுக்குக் குழந்தை பிறந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு எச்ஐவி பரவ விடாமல் பாதுகாப்பதுதான் இவர் வேலை. அதற்காக மாணிக்கத்தாய் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பயணித்தார். கருவுற்ற பெண்களிடம் சோதனை செய்து, அவர்களில் யாருக்காவது பாசிட்டிவ்வாக இருந்தால் சிகிச்சையளித்து, பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டார். காச நோய் ஒழிப்பு திட்டத்தில் பணியாற்றினார்.
இப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருச்சி மாவட்டத் துணைத் தலைவராக இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாணிக்கத்தாயின் சமூகப் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. தொடரட்டும்!