Site icon Her Stories

ஆணாதிக்க உலகில் பகடைக்காய்களாகும் நாதிராக்கள்

“உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், அதனை மாற்றுங்கள். மாற்ற முடியாவிட்டால், உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள்” – மாயா ஏஞ்சலோ சொன்ன இந்த வரிகளைத்தான் நாதிரா நினைவுபடுத்துகிறாள். அறிமுகமேயற்ற எந்த விதத்திலும் இணக்கமற்ற வகையில், ஓர் ஆணுக்குத் தன் உடலைத் தீனியாகக் கொடுப்பதை அருவருத்து தனக்குள்ளேயே மருகி மருகி மெல்ல மெல்லக் கரைந்து, ஊண் உறக்கம் மறந்து அஞ்சி ஒடுங்கும் அவளின் வாட்டம் நம்மையுமே துவண்டுபோகச் செய்கிறது. நடப்பவை எதனையும் மாற்ற முடியாது என்று முற்றாக உணர்ந்து சாவதற்கு துணிகின்றபோது அவளுக்குத் துளியும் அச்சமில்லை. வாசக மனம் அவளின் சாவைப் பெருமூச்சுடன் ஏற்றுக்கொள்கிறது. சின்னதொரு குடுவைக்குள் அகப்பட விரும்பாத மீன் பரந்த ஆழமான ஆற்றினுள் துள்ளிக்கொண்டு நீந்தித் தப்பி ஓடுவதை யார் மனம்தான் விரும்பாது?

கண்ணெதிரே தனக்கு எதிராக நடப்பவற்றை மாற்ற முடியாதபோது தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்கிறாள் நாதிரா. மரணம்தான் அவளது அணுகுமுறை. மரணம்தான் அவளின் வெற்றி. அவள் வாழ்ந்த அமைப்பு வேறெதனையும் அவளுக்குச் சொல்லித் தரவில்லை. பிறப்புத் தொடங்கி எல்லாக் காலத்திலும் தனது எல்லாத் துக்கங்கள், ஏக்கங்கள், கனவுகள், ஆசைகளுக்கும் ஒரே சாட்சியாக இருந்த சந்திரிகிரி ஆற்றைத் தனியாகப் படகில் கடப்பதற்குக்கூட அனுமதிக்காத அமைப்புக்குள் வேறு மார்க்கங்களைப் பற்றிச் சிந்திக்கவே முடியாதவள் அந்த ஆற்றிலே மூழ்கிப்போவதுதானே அவள் தேர்ந்தெடுக்க முடியுமான மாற்றத்திற்கான அணுகுமுறை!

மத ஆதிக்கமும் ஆண் முன்னிலை சமூக அமைப்புமுள்ள பெண் வெறுப்புப் பண்புகளின் சிக்கலான கட்டமைப்புகளை எளிமையாகக் கட்டவிழ்த்துக் காட்டுகின்ற பெண் அகநிலைக் கதையின் மையக் கதாபாத்திரமான நாதிராவை வாசகர் யாருமே எளிதில் மறந்துவிட முடியாது. அவ்வளவு திண்மையான இந்தக் கதாபாத்திரம், கதையாசிரியர் சாரா அபூபக்கரின் கற்பனைப் பாத்திரமல்ல. கர்நாடகாவையும் கேரளாவையும் ஒட்டிய கடலோர இஸ்லாமிய சமூகங்களில் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை நாடிபிடித்தறிந்து தன் கண்கள் வழியாகவும் செவிகள் வழியாகவும் இதயத்திற்குள் இறங்கி அடங்க மறுத்த கதைகளுக்கே சாரா அபூபக்கர் உயிர் கொடுத்துள்ளார்.

எப்போதும் சௌகரியமாக இருக்க விரும்புபவர்கள் சர்ச்சைக்குரிய இடங்களில் மாற்றம் செய்ய மாட்டார்கள் என்கின்ற ஆழமான உண்மையை நாதிராவின் வாழ்க்கை வழி சாரா அபூபக்கர் தெளிவுபடுத்துகிறார். ஆண்களின் தீர்ப்புகளைப் பற்றி எதுவும் தெரியாதவள் எனினும், கணவன் ரஷீதுடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான கனவுகளை வளர்க்கும் நாதிரா, மதம் அனுமதிக்கும் வழியில் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றால் மட்டுமே காதல் கணவனைச் சேரலாம் என்றறியும்போது அவளை அவநம்பிக்கையும் வெறுப்பும் சூழ்கிறது. உறுதியாக இரண்டாவது திருமணத்தை மறுக்கிறாள். வெறுக்கிறாள். ஒரேயொரு நாள் புதிய கணவனுடன் இருந்தால் போதும் என்று அவளை எல்லாரும் சமாதானப்படுத்துகிறார்கள். அவளின் கணவன் ரஷீதுக்குக்கூட இதில் எந்த வருத்தமுமோ மனச் சலனமோ இல்லை, அல்லாஹ்வின் தீர்ப்பை அவனால் மாற்ற முடியுமா என்று மாமியார் வந்து சொல்கிறாள். பெண்ணின் விருப்பத்தைப் பற்றி, இது பற்றி அவள் என்ன கருதுகிறாள் என்பதை, அவளுக்கும் அபிப்பிராயம் இருக்க முடியும் என்பதைப் பற்றியெல்லாம் யாருக்குமே எந்தக் கேள்வியுமில்லை. அந்த ஊரில் இதுபோன்ற ஒரு நாள் திருமணத்திற்கென்றே ஓதிவிடப்பட்ட ஒரு மனிதர்கூட உள்ளார் என்பது போன்ற அதிர்ச்சியுண்டாக்கும் எதைப் பற்றியும் கருத்துக்கூறத் தகுதியற்றவள், இந்த ஒரு நாள் திருமண உறவினால் தான் கருவுற்றால் என்ன ஆகும் என்று தாயைக் கேட்கிறாள். அப்படி நேர்ந்தால் நிகழ்கால புதிய கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற குழந்தை பிறக்கும் வரையிலும் அவள் காத்திருக்க வேண்டும் என்கின்ற தீர்ப்பைச் சொல்கிறார்கள். அப்போதே நாதிராவுக்குப் புரிந்து விடுகின்றது. தன்னைக் காப்பாற்ற யாருமே முன்வரப்போவதில்லை. யாருமே சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து தனக்கு மீட்பளிக்கப் போவதில்லை.

சமூக, அரசியல் அதிகாரங்களைத் தங்களுக்கு வசதியாக வளைத்துக் கொண்டிருக்கும் ஏனைய எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமிய சமூகத்திலும் ஆண்களின் சட்டங்கள் பெண்களின் கௌரவங்களைக் காலுக்கு அடியிலும் ஒளிபடாத நிலவறைகளிலும் வைத்துள்ளது.

இஸ்லாமிய உலகக் கண்ணோட்டத்தின்படி, குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பெண்களின் உரிமைகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாகப் பொருள்கோரப்படுகின்றது எனினும், பெண்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து விடயங்களிலும் பெண்களின் உரிமைகள் குறிப்பாக சம உரிமை நிராகரிக்கப்பட்டே வருகின்றது என்பதையும் இந்த நிராகரிப்பு இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் அரபு தேசங்களில் மட்டுமல்ல, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழுகின்ற நாடுகளிலும் புழக்கத்தில் உள்ளது என்பதற்கும் இந்தக் கதையும் ஒரு சாட்சி. இந்தக் கதை வெளியிடப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்தோடிவிட்டதால் மத பழமைவாதக் கூறுகளில் மாற்றம் நிகழ்ந்துவிட்டதாக நம்பிவிடுவதற்கில்லை. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மத பாரம்பரியங்களில் மாற்றம் நிகழ்வதற்கில்லை. பெண்கள் ஆட்சிப் பொறுப்புகளில் இருப்பதற்கு, சட்டமன்றங்களில் அமர்வதற்கு தகுதியற்றவர்கள் என்று பிதற்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இன்னமும் உலகளாவிய ரீதியில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியச் சட்டம் எனப்படும் ஷரீஆ முறைப்படி முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டங்களில் தீர்ப்பளிக்கும் காதி நீதிமன்றங்களில் நீதிபதியாகுவதற்குப் பெண்கள் தகுதியற்றவர்கள் என்று பூகோளரீதியாக இந்தக் கதைக் களத்திற்கு மிகச் சமீபமாக இந்து சமுத்திரத்திலிருக்கும் இலங்கை நாட்டில் இன்றளவும் இஸ்லாமிய ஆண்கள் போராடுகிறார்கள். அவள் சட்டம் பயின்ற சட்டத்தரணியே என்றாலும் அவர்களின் நிலைப்பாடுகளில் மாற்றமில்லை. சட்டத்துறையிலும் சட்டம் இயற்றக்கூடிய, அதிகாரமுள்ள ஆட்சித் துறையிலிருந்தும் பெண்களைத் திட்டவட்டமாக ஒதுக்கித்தள்ளும் மத அமைப்பு முற்றிலும் ஆண்களையே உள்வாங்குகின்றது. தாங்கள் விரும்பும் சட்டங்களை இயற்றிவைத்துக் காலங்காலமாகப் பாதுகாத்தும் வரும் காவலர்களாக ஆண்கள் உள்ளார்கள்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டத்திற்கமைய, திருமண உடன்படிக்கையில் கையெழுத்திட பெண்ணுக்கு அனுமதியில்லை. அவள் சார்பாக ஆண்களே பொறுப்புதாரியாக இருக்கவேண்டும், திருமணத்திற்குச் சாட்சியாக ஆண்களே இருக்க முடியும் போன்ற சட்டங்களை இஸ்லாமிய ஆட்சிகள் நிலவும் நாடுகளை விடவும், இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத நாடுகளில் சிறுபான்மை முஸ்லிம்கள் அதிக இறுக்கமாக பின்பற்றுவதற்கு இந்தியாவும் இலங்கையும் நல்ல எடுத்துக்காட்டு.

சவூதி அரேபியா 2015களில்தான் பெண்களுக்கு வாக்குரிமையே அளித்தது. இதுகூடப் பெண்களின் வாக்குரிமை மூலம் நவீன உலக ஒழுங்கில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கும்தான். சமீபத்திய ஆண்டுகளில்தாம் ஜமாத் – இ- இஸ்லாமி போன்ற இஸ்லாமிய அரசியல் குழுக்களும் ஈரான், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் ‘ஜனநாயகம்’ என்ற கருத்தியலைக் குறைந்தபட்சம் ஒரு வழிமுறையாக ஏற்றுக்கொண்டன. இந்த நாடுகளில் ‘ஜனநாயகம்’ கருத்தியலால் பெண்களின் உரிமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமே நிகழவில்லை. அதற்கான சாத்தியங்களையும் காண முடியவில்லை.

சந்திரகிரி ஆற்றங்கரையில் கதையானது, இஸ்லாமிய சமூகங்களில் நிகழும் முத்தலாக் நடைமுறையை மையக்கருவாகக் கொண்டிருக்கிறது. சிறுமி நாதிரா வன்முறையும் அகங்கார குணமும் கொண்ட தந்தையினால் அக்கால நடைமுறைப்படி குறைந்த வயதிலும், அவள் சம்மதமில்லாமலும் திருமணம் முடித்துவைக்கப்படுகின்றாள். அவள் அஞ்சியதுபோலில்லாமல் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக மாறுகிறது. குறுகிய காலத்திலேயே அவளின் ஆசை வாழ்வில் அனல் காற்று வீசுவதற்கு அவள் வாழ்வில் சம்பந்தப்படும் இரு ஆண்களுமே காரணமாகிறார்கள். நாதிராவின் தகப்பனார் மஹமத் கான், அவளின் கணவன் ரஷீத் இருவரினதும் ஆண் திமிர், வரட்டுக் கௌரவங்களுக்கு வசதியாக மதத்தின் நடைமுறைகளும் இருக்கின்றன. ஆணாதிக்கத்திற்கும் மதத்திற்குமிடையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்புகளின் புள்ளிகள் இணையும் இடமாக நாதிராவுக்குத் தெரியாமலேயே அவள் விவாகரத்தானவளாகிறாள்.

விவாகரத்தான தம்பதி ஒருவரை இன்னொருவர் சமரசம் செய்து கொண்டு மீண்டும் இணைந்து வாழ அல்லது மறுமணம் செய்து கொள்ள விரும்புவது அரிதாக இருக்கலாம், ஆனால், இது நடப்பதற்கு சாத்தியமான ஒன்றே. எத்தனையோ மனப்போராட்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகு தனக்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத விவாகரத்திலிருந்து நீங்கி, தன் கணவனுடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை எட்டிப்பிடிக்கும் நாதிராவின் நம்பிக்கைகளை மதத்தின் விசித்திரமான திருமணச் சட்டம் அப்படியே சுட்டுப் பொசுக்குகிறது.

விவாகரத்தான தம்பதி ஒருவரை இன்னொருவர் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால், மனைவி முதலில் வேறோர் ஆணை மணந்து, உடலுறவு கொண்டால், இந்த இரண்டாவது ஆண் அவளை விவாகரத்து செய்தால் மட்டுமே சாத்தியம் என்கிறது விசித்திர சட்டம்.

விவாகரத்துப் பெற்ற தம்பதிகள் ஒருவரை இன்னொருவர் சமரசம் செய்து கொண்டு மணவாழ்வைத் தொடங்குவதற்குக் குறுக்காக எழுதப்பட்ட இந்தச் சட்டம் அல் குர்ஆன் சூரா 2:230 அத்தியாயத்தில் உள்ளது.

கணவன் தனது மனைவியை (மூன்றாவதுமுறையாக) விவாகரத்து செய்தால், இந்த (முழுமையான) விவாகரத்துக்குப் பிறகு, அவள் வேறொரு கணவனை மணந்து, இரண்டாவது கணவன் அவளை விவாகரத்து செய்தால், முன்னைய கணவனுடன் அவள் மீண்டும் ஒன்றிணைவது அனுமதிக்கப்படுகிறது. இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும்.

இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில், ஒரு பெண்ணின் மாதாந்திர சுழற்சியுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகவே மூன்று-நிலை செயல்முறையின் அடிப்படையில் இறுதியான முழுமையான விவாகரத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஓர் ஆண் தன் மனைவியை மாதவிடாய்க்குப் பிறகுதான் விவாகரத்துச் செய்யமுடியும்.

இந்த ஏற்பாடு அவள் கருத்தரித்தவளா, இல்லையா என்பதை அறிவதற்கு மட்டுமல்ல, மனிதர்களின் இயல்பான கோபம் போன்ற அவசரகாலச் செயலைச் சரிபார்ப்பதற்கும் நல்லிணக்கத்திற்கான கதவைத் திறந்து வைப்பதற்குமான வாய்ப்பைக் குறிக்கிறது.

குர்ஆன் கற்பித்தபடி தலாக் உச்சரிப்பதற்குச் சரியான முறையென்று சொல்லப்படுவது என்னவென்றால், விவாகரத்து தவிர்க்க முடியாததாக இருக்கும்பட்சத்தில் அது மனைவி முன்னிலையில் உச்சரிக்கப்பட வேண்டும் என்றும், ஒரு மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு தலாக்கிற்கும் இடைப்பட்ட கால இடைவெளியாக இருக்கவேண்டும் என்றும் விவரிக்கப்படுகின்றது. மூன்றாவது தலாக் இறுதியானதும் முழுமையானதுமான விவாகரத்து எனப்படுகின்றது.

முதல் முறை தலாக் கூறி இரண்டாவது தலாக்கை உச்சரிப்பதற்காகப் பெண்ணின் மாதவிடாய் சுழற்சி முடியும்வரைக் காத்திருக்க வேண்டும். அவ்வாறே இரண்டாவது மூன்றாவதற்கும் காத்திருக்க வேண்டும். இந்த இடைவெளி, ‘கூலிங் ஆஃப்’ காலத்தை அனுமதிக்கிறது. இந்தக் கால இடைவெளியில் தம்பதி மீண்டும் இணைந்து கொள்வது அனுமதிக்கப்படுகின்றது.

நாதிரா விடயத்தில் இந்த நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை. அவளது கணவன் ரஷீத் மாமனாரின் கோப ஆவேசத்தினால் உந்தப்பட்டு, மனைவி பற்றிய எந்தச் சிந்தனையுமில்லாமல் உண்மையை அறிந்து கொள்வதில் குறைந்தபட்சம் தன் மனைவியை நேரே சந்தித்து அவளின் மன உணர்வுகளைத் தெரிந்து கொள்வதற்கான எந்த முயற்சியையும் காட்டாமல் மூன்று தலாக்குகளையும் ஒரே தடவையில் உச்சரிக்கிறான். இதனைப் பள்ளிவாசலில் மார்க்க அறிஞர் எனப்படும் மௌலவி முன்னிலையிலேயே உச்சரிக்கிறான். இங்கு சம்பந்தப்பட்ட எந்த ஆணுக்கும் இந்த வழக்கில் பிரதானமாக இருக்கும் நாதிரா என்கின்ற பெண்ணைப் பற்றி எந்த அக்கறையுமில்லை. அவளைப் பொருட்படுத்துவதற்கான எந்தத் தேவையும் அவர்களுக்கில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் பெண் அவர்களுக்கு உடமையானவள், தங்கள் இஷ்டம்போல் கையாளப்பட வேண்டியவள். அவள் ஒப்புதல் இல்லாமல் திருமணத்தை நடத்தவும் அவள் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்தை முடிக்கவும் எல்லாம் ஆண்களால் முடிகிறது.

நடைமுறையில் இருக்கும் இஸ்லாமிய ஷரீஆ சட்டம், விவாகரத்துக்கு உரிய படிமுறைகள் எதனையும் முறையாகப் பின்பற்றாமல், விரைவாக அடுத்தடுத்த தலாக்குகளைக் கூறி பெண்ணுக்கு விவாகரத்து வழங்க ஓர் ஆணை அனுமதிக்கிறது. உண்மையில் விவாகரத்துக்கான உரிமை முற்றிலும் கணவனுக்குச் சாதகமாக மட்டுமே உள்ளது. இஸ்லாமிய சட்டத்தில், ஒரு பெண் தனது கணவரின் விருப்பத்திற்கு மாறாக விவாகரத்து செய்வது மிகவும் கடினம்.

நடைமுறை ஷரீஆ சட்டம் பெண்களைப் பாதுகாப்பதிலும் திருமணத்தைக் கௌரவிப்பதிலும் போதுமான அளவு ஆழம் போகவில்லை. நீதிக்குப் புறம்பான முறையில் பெண்ணின் உரிமையும் கௌரவமும் முற்றாகப் புறக்கணிப்பட்ட நிலையில் ஒரு விவாகரத்து நடந்து, தம்பதி உண்மை நிலையை அறிந்து, கருத்து வேறுபாடுகளைக் களைந்து அல்லது இழைக்கப்பட்ட அநீதியை, நயவஞ்சகத்தைத் தெரிந்து உணர்ந்து திருந்தி மறுமணம் செய்வதற்கு அல்லது இணைவதற்குத் தடையாக விநோதமான முற்றிலும் நேர்மையற்ற விதிமுறை உள்ளது.

இந்த விதிமுறையானது, திருமணத்தையே அவமதிக்கிறது. இது காரணமேயில்லாமல் பெண்ணுக்கும் மற்றோர் ஆணுக்கும் இடையே இரண்டாவது விவாகரத்தைத் திணிக்கிறது. அசல் தம்பதியரின் நல்லிணக்கத்திற்குச் சாத்தியமான பாதையில் முட்களைப் பரப்புகின்றது. முதல் விவாகரத்து பெற்ற தம்பதி, தங்கள் வேறுபாடுகளைச் சரிசெய்து மீண்டும் ஒன்றிணைவதற்கு ஏன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும்? அதிலும் ஏன் இந்த நடைமுறை பெண்ணின் மீது சுமத்தப்படுகின்றது? விபச்சாரத்தை அனுமதிப்பதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற கேள்விகள் இறை விசுவாசத்திற்கு எதிரானவை எனப்படுகின்றன.

மனிதர்கள் இணைவதையும் பிரிவதையும் மீண்டும் சேர விரும்புவதையும் சட்டங்களால் கட்டுப்படுத்துவது மனிதாபிமானத்திற்கு விரோதமான செயல். எனினும், ஒரு முழுமையான விவாகரத்துக்குப் பிறகு தம்பதி மீண்டும் சமரசம் செய்வதெனில் ஒரு நீதி விசாரணை அவசியம் என்றிருந்தால்கூட ஏற்றுக்கொள்ளமுடியும். அசல் தம்பதி மீண்டும் இணைவதற்கு முன் இரண்டாவது திருமணம் அதிலிருந்து இரண்டாவது விவாகரத்து போன்ற தடைகளை வைப்பது குழப்பகரமானது. அவசியமேயற்றது.

அவசர கதியில் மூன்று தலாக்குகளையும் உச்சரித்த உதடுகள் மூடிக்கொள்வதற்குள் இன்னொரு திருமணம் செய்துகொள்கின்ற ஆண்களே எதார்த்த உலகில் அதிகம். முத்தலாக்கிற்கு எதிராக இந்திய இஸ்லாமியப் பெண்கள் போராடியதற்கு இதுவும் ஒரு காரணம். ஒரு வகையில் இந்த நாவல் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாதிராவின் கதை எனினும், 2019, ஜுலை 25 இந்திய மக்களவையிலும் ஜூலை 30 மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடைச் சட்டத்தின் நியாயத்திலும் கவனத்தைக் குவிக்கிறது. ‘ஒரே நேரத்தில் மூன்று முறை ‘தலாக்’ உச்சரித்து விவாகரத்து செய்வது சட்டத்துக்குப் புறம்பானது’ என்பதே இந்திய மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இயற்றப்பட்ட சட்ட மசோதாவின் சுருக்கம். மேலும், நேரிலும், எழுத்து, கடிதம், இ-மெயில், எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வழியேயாகவும் கால இடைவெளியின்றி, உரிய விதிகளைப் பின்பற்றாமல் விரைவாக தலாக் உச்சரிப்பதையும் சட்டவிரோதம் என்கிறது இந்தச் சட்ட மசோதா.

எதைத்தான் சட்டம், சட்டவிரோதம் என்று மசோதாக்களில் எழுதிவைத்துக் கொண்டாலும் பெண்களின் முழுமையான கௌரவத்தையும் மதிப்புணர்வையும் உறுதி செய்வதற்கான வழிகளில் ஆணாதிக்கம் குறுக்காக நிற்கிறது. இந்த நாவல் முழுவதிலும் எல்லாவற்றையும் ஆண்களே முடிவு செய்கின்றார்கள். எந்த அறஉணர்ச்சியுமில்லாமல் தங்களுக்கு வசதியானபடி பெண்களை வளைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். பெண் உயிருள்ள மனுஷி என்றோ, அவளுக்கும் இதயம் உண்டென்றோ இந்தக் கதையில் வரும் ஆண்கள் யாரும் துளியும் எண்ணிப் பார்க்கவில்லை. அவ்வளவு நேசத்துக்குரியவளாக இருந்தபோதும் அவளின் சூழ்நிலையை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தபோதும் தாயையே அனுப்பி மகனை கடத்திக்கொண்டுபோகிறான் நாதிராவின் கணவன் ரஷீத். அவனைப் பொருத்தவரையில் குழந்தை அவனது வாரிசு. பத்து மாதங்கள் சுமந்து ரத்தமும் சதையுமாகப் பெற்றெடுத்து முலைப்பாலூட்டிக் கொண்டிருக்கும் நாதிரா என்கின்ற பிள்ளை பெறும் இயந்திரம் பற்றி எந்தப் பிரக்ஞையும் அவனுக்கில்லை. இந்த இயந்திரம் இல்லையென்றால் இன்னோர் இயந்திரத்தை அவனால் உரிமையாக்கிக் கொள்வதொன்றும் அவன் வாழும் சமுதாயத்தில் கடின காரியமுமில்லை. மனைவியாக, குழந்தையின் தாயாக ஒரு மனுஷியாக அவள் பொருட்படுத்தப்படவில்லை. தன்னை அழைத்துக் கொண்டுபோகத்தான் மாமியார் வந்துள்ளார் என்று எண்ணிக்கொண்டு அவருடன் புறப்பட்டுச் செல்வதற்காகத் தயாராகிய நிலையில் ஏமாற்றத்தில் கதறும் நாதிராக்கள் இன்னமும் நம் மத்தியில் உள்ளார்கள். நாதிராவின் தகப்பனார், கணவன் போன்ற ஆண்களுக்கும் விவாகரத்திற்குப் பிறகு பிள்ளைகளுக்குரிய பராமரிப்புத் தொகையைச் செலுத்தாமல் அதைக் கொடுக்கக் கூடாதென்பதற்காகவே குழந்தைகளைப் பந்தயமாக்கும் ஆண்களுக்கும்தான் மதங்களின் சட்டங்களும் விதிகளும் விநோதப் பிரஸ்தாபிப்புகளும் சாதமாக இருக்கின்றன.

‘மனித முன்னேற்றம் தானாகவோ அல்லது தவிர்க்க முடியாததாகவோ ஏற்படுவதில்லை, நீதியின் இலக்கை நோக்கிய ஒவ்வோர் அடியிலும் தியாகம், துன்பம், போராட்டமும், அர்ப்பணிப்புள்ள நபர்களின் அயராத உழைப்பும் தீவிர அக்கறையும் தேவை’ என்பார் மார்ட்டின் லூதர் கிங். சந்திரகிரி ஆற்றங்கரையில் நாவல் நீதியின் இலக்கை நோக்கிய பயணத்தில் வெளிச்சமாகத் தொடரும் ஒரு தீப்பொறி.

சந்திரகிரிய தீரதல்லி (Chandragiriya Teeradalli) என்கிற பெயரில் கன்னட மொழியில் 1981இல் எழுதப்பட்ட இந்த நாவல் அதே ஆண்டு ஆங்கிலத்தில் பிரேக்கிங் டைஸ் என மொழிபெயர்க்கப்பட்டது. பதின்மூன்றுக்கும் அதிகமான இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த நாவலுக்கு கன்னட சாகித்திய அகாடமி விருது வழங்கிய பின்னர், சாரா அபூபக்கர் அளித்த ஒரு நேர்காணலில் சொல்லியிருந்த ஒரு விடயம் அவரின் மதிப்பைக் கூட்டுகிறது. “இந்த நாவலுக்கு விருது கிடைக்கின்ற வரையிலும் சாகித்திய அகாடமி என்றொரு அமைப்பு இருப்பதே எனக்குத் தெரியாது. நான் விருதுகளுக்காக எழுதவில்லை. என் சமூகத்துப் பெண்களின் மனசாட்சியாக இருந்து எழுதுகிறேன்” – 1982இல் செவ்வியொன்றில் சொல்லப்பட்ட இந்தக் கூற்று சாரா அபூபக்கரை, சமுதாயப் பொறுப்புணர்வுமிக்க கலைஞராகவும் பெண்ணிலாளராகவும் உயர்த்துகிறது.

இந்த நாவல் திருமணம், விவாகரத்து, முத்தலாக் போன்ற சர்ச்சைக்குரிய பேசுபொருள்களை மையப்படுத்தியிருந்தாலும் சாரா அபூபக்கர் இந்தக் கதையில் பெண் கதாபாத்திரங்கள் வழியாக சமூக அமைப்பையும் கலாசாரங்களையும் தத்ரூபமாக நுட்பமாகக் காண்பிக்கிறார். இந்த நாவலில் வீடுகள் பெண்களின் அடைக்கலம். அவளின் அடையாளத்தைக் குறிக்கும் இடம். ஆண் ‘வெளியில்’ ஆட்சி செய்கிறான். வீட்டைச் சுற்றியுள்ள குறுகிய மட்டுப்படுத்தப்பட்ட பெண்களின் வெளியுலக அணுகல் ஆணின் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளது; அவள் அங்கு வீட்டு வேலைகளைச் செய்யலாம், ஜீவனாம்சத்திற்காக பீடிகள் செய்யலாம், தென்னோலைகளை முடையலாம், பசு, ஆடுகள், கோழிகளைப் பராமரிக்கலாம், திறந்த நெருப்பில் சமைக்கலாம், ஆனால் மற்ற ஆண்களைக் கண்டால் அவள் உள்ளே விரைந்து செல்ல வேண்டும். தனியாக வீட்டைத் தாண்டி எங்குமே அவள் செல்ல முடியாது.

ஆணாதிக்க மதிப்புகளின் மைய இயக்கியாக மதம் எப்படிச் செயற்படுகின்றது, எத்தகைய விளைவுகளை உருவாக்குகின்றது என்பதற்கு குடும்பங்களிலும் சமூகங்களிலும் பெண்களே கண்ணாடி. முஸ்லிம்களாயினும், முஸ்லிமல்லாதவர்களாயினும் ஆணாதிக்க விழுமியங்களைப் பரவலாக்கப் பெண்கள் மீதே அழுத்தங்களைப் பிரயோகிப்பர். ஆணாதிக்க விழுமியங்களுக்கு மதம் கூடுதல் ஆதரவையும் எளிய காரணத்தையும் கொண்டிருக்கிறது. ஆணாதிக்கமும் மதமும் சமூகங்களில் எந்த வகையிலும் தற்செயலானதோ சிறியதானதோ நிகழ்வு இல்லை.

சந்திரகிரி ஆற்றங்கரையில்… ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடு

விலை: 150 தொடர்புக்கு: 755-0098666

படைப்பாளர்:

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். தற்சமயம், அமெரிக்கப் பல்கலைக்கழகம் University of Nebraska Omaha வில் மனித உரிமைகளுக்கான ஆராய்ச்சி அறிஞராகப் பணிபுரிகிறார். 

Exit mobile version