மனிதர்கள் தனித் தனியாகப் பிறந்தாலும் வளரும் போதும், வாழும் போதும் குழுக்களாகவே இயங்குகிறார்கள். செய்யும் தொழில், தெய்வ நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சில குறிப்பிட்ட தனித் தன்மைகள் மூலம் தங்களின் குழுவை இன்னொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொண்டார்கள். உலகம் தோன்றிய நாள்முதல் இப்படிப் பல்வேறு குழுக்களாக இருந்தவர்கள் தங்களுக்கென்று ஒரு பெயரை வைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். அவையே இன்றைய சாதிப் பிரிவுகள் என்று கொள்ளலாம்.
இந்து மத நம்பிக்கைகளின் அடிப்படையில் வர்ணம் என்று மக்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார்கள்.பிரம்மனின் தலையில் இருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், கையில் இருந்து பிறந்தவர்கள் ஷத்திரியர்கள், தொடையில் இருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், காலில் இருந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தினார்கள். தொழில் அடிப்படையில் இந்த வர்ணங்கள் உண்டாக்கப்பட்டன. பின்னர் இந்தத் தொழில்கள் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன.
தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங் குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பாடப் புத்தகத்தில் அச்சிட்டிருப்பதன் மூலம் தீண்டாமை, சாதி எல்லாம் அழிந்துவிட்டது என்று பொருள் கொள்ள முடியாது. கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்டவர்கள், உயர்ந்த சாதியினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் தனித் தனியாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளில்தாம் இன்றும் வசிக்கின்றனர்.
என் சிறு வயதில் ஒடுக்கப்பட்ட மக்கள் தினமும் உயர் குடியினர் என்று சொல்லிக் கொண்டவர்களின் வீடுகளுக்கு காலையில் வந்து முன்வாசல், பின்வாசல் பெருக்கி, சுத்தம் செய்துவிட்டு காபியையோ தேநீரையோ எதிர்பார்த்து நிற்பார்கள். பெரும்பாலும் காபி தர மாட்டார்கள். தேநீர்தான். அதுவும் அவசரகதியில் தயாரிக்கப்பட்டதாகவே இருக்கும். அதையும் ஓட்டையில்லாத கொட்டாங்கச்சியை எடுத்து வந்து நீட்டினால் டம்ளரை உயரமாகத் தூக்கிப் பிடித்து ஊற்றுவார்கள்.
ஒருமுறை தோழியின் வீட்டில் ஒரு கண் திறந்த கொட்டாங்கச்சியை ஒருவர் விரலால் அடைத்துக் கொண்டு தேநீரை வாங்கி அருந்தியதைப் பார்த்த தோழி, அவரது அம்மாவிடம் சண்டைக்குப் போய்விட்டார். அதன் பின்னர் அவர் வீட்டில் கொட்டாங்கச்சி முறை ஒழிக்கப்பட்டு, புழங்காத, பழைய, ஒடுங்கிய டம்ளர்களில் தேநீர் வழங்கப்பட்டது. அதில் குடித்துவிட்டு கழுவி வெளியில் உள்ள சன்னலில் வைத்து விட்டுச் செல்வார்கள். என்னதான் போராடினாலும் தோழியால் முழுவதும் மாற்றத்தைக் கொண்டு வர இயலவில்லை.
சங்க இலக்கியங்களில் சாதி என்கிற சொல் குறிக்கப்படவில்லை. மாறாக குடி, குலம் போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கின்றன. சங்க காலத்தில் சாதிகள் இல்லாமல்தான் இருந்தது. அகமணம், புறமணம் போன்றவை வழக்கில் இருந்தன. மனித இனத்தைப் பற்றி சங்கத் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் சொற்கள், புலையர், பறையர், துடியர், கடம்பர், மழவர், கொற்றர், சாத்து, உமணர், மகாஅர், மறவர், கள்வர், கோவலர், கொல்லர், கம்மியர், தச்சர், பார்ப்பனர், அந்தணர், புலவர், கூளியர், யாணர், பாணர், கோசர், ஞாயர், கலம் செய் கோ, வேட்கோ போன்றவை ஆகும். இதில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்கிற பேதங்கள் இருந்ததில்லை. அடையாளம் தெரிந்துகொள்ள மட்டுமே இத்தகைய பிரிவுகள் இருந்தன. இடைக்காலத்தில் வந்தவர்கள் செய்த குழப்பங்களில் சாதிகள் பூதாகரமாக வடிவெடுத்தன.
என் தாத்தாவின் காலத்தில் சாதிக்கொடுமைகள் உச்சத்தில் இருந்ததாகச் சொல்வார். பார்ப்பனர்கள் எதிரில் இதர மக்கள் வரும்போது அவர்கள் மிக அதிகமாக ஒதுங்கிக் கொள்வார்களாம். பார்ப்பனப் பெண்கள் தலையில் சேலைத் தலைப்பை முக்காடிட்டுக் கொண்டு இவர்களைப் பார்த்ததே தீட்டு என்று புலம்பிக் கொண்டு செல்வார்களாம். இன்று வெளிப்படையாக அத்தகைய சூழல் இல்லையென்றாலும் மறைமுகமாகச் சாதிப் பாகுபாடு இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
என் தோழியின் அம்மா ஒருவர் யாரைப் பார்த்தாலும், “உங்க குலதெய்வம் எது?” என்று மறைமுகமாகச் சாதியைத் தெரிந்து கொள்ள வேண்டி விசாரிப்பார். என்னிடம் அதேபோல் கேட்டபோது, “நான் சாமி கும்பிடுறதில்லைங்க” என்றேன் மெல்லிய சிரிப்போடு. “அப்போ உங்க வீட்ல என்ன சாமி கும்பிடுவாரு?” என்றார். “அவரு எல்லா சாமியையும் கும்பிடுவாருங்க” என்றேன். அவர் என்னிடம் இன்றுவரை சரிவரப் பேசுவதில்லை.
இன்னொரு பெண்மணி ஒருமுறை என்னிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது,”நான் காபி மட்டும்தான் சாப்பிடுவேன், டீயெல்லாம் பிடிக்காது. ஏன்னா அது எஸ்சிகாரங்க குடிக்கிறது” என்றதும் அதிர்ச்சியாக இருந்தது. சாதிப் பாகுபாடு உணவிலும் உண்டு என்பதை முகத்திலறைந்தாற்போல் சொன்ன நிகழ்வு அது. “நான் டீ மட்டும்தான் குடிப்பேன். ஏன்னா அது காபியைவிட உடம்புக்கு நல்லது” என்று சொன்னேன். அவர் அப்புறம் என்னிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டார். மாட்டுக் கறி, பன்றிக் கறி போன்றவை ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமே உண்ணும் உணவு என்றும் சொல்கிறார்கள். ஓர் உணவுப் பொருளை வைத்து சாதியை முடிவு செய்யும் அவலம் இந்தியச் சமூகத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பது வெட்கக்கேடான விஷயம்.
அது மட்டுமின்றி இப்போதெல்லாம் மேட்ரிமோனியல்கள் வெளிப்படையாகவே சாதிப் பெயர்களுடன் விளம்பரங்களை வெளியிடுகின்றன. இந்தச் சாதி அதில் இன்ன பிரிவு என்றெல்லாம் கூச்சமின்றி விளம்பரப்படுத்துகிறார்கள். படிப்பில், நாகரீகத்தில் மேம்பட்டதாகச் சொல்லிக்கொள்ளும் சமுதாயத்தில் இத்தகைய விளம்பரங்களை அதிகம் கண்டு கொள்ளாமல்தான் கடந்து செல்கிறார்கள். சேலம் அருகே ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் உணவில் மலத்தை கலந்திருக்கிறார்கள். கடந்த 2022 டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் ஆதிக்க சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் மலத்தைக் கலந்த அவலத்தை மறந்திருக்க மாட்டோம். சில வருடங்களுக்கு முன்பு அங்கன்வாடியில் ஒடுக்கப்பட்ட பெண் சமைத்த உணவை குழந்தைகளுக்குப் பரிமாறக் கூடாதென்று அந்தப் பகுதி மக்கள் பிரச்னை செய்தார்கள்.
என் சிறுவயதில் எங்கள் ஊர்த் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், ஒடுக்கப்பட்ட மக்கள் கடையின் பின்வாசலில்தான் அமர்ந்து தேநீர் அருந்துவதும் வழக்கமாக இருந்தது. அப்புறம் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்டாலும் காகித டம்ளர்கள் அந்த இடத்தைச் சிலகாலம் பிடித்திருந்தன. இப்போதுதான் எல்லாருக்கும் ஒன்றுபோலக் குவளைகள் வழங்கப்படுகின்றன. சிறு குழந்தைகள்கூட, “நீங்க என்ன ஆளுங்கன்னு எங்கம்மா கேட்டுட்டு வரச் சொன்னாங்க” என்று இயல்பாகப் பேசிக் கொள்கிறார்கள். நாகரீகத்தில் முதிர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் இந்தக் காலத்தில்தான் சாதி மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்தச் சாதிப் பிரிவுகளை ஒரேயடியாக ஒரே நாளில் ஒழித்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இருபது வருடங்களுக்கு முன்பு தென்மாவட்டம் ஒன்றுக்குச் சென்றபோது நண்பரின் உறவினர் தங்கள் சாதியாக இருப்பவர்களுடன் மட்டுமேதான் பழகுவதாகப் பெருமையாகச் சொல்லிக்கொண்டார். இன்னும் அதே மனநிலைதான் நீடிக்கிறது. சொல்லப் போனால் அதே மனநிலை அதிகரித்திருக்கிறது என்பது கசப்பான உண்மை. சாதிகள் ஏட்டளவில் மட்டுமே இருக்க வேண்டும். ஏனெனில் இன்னும் பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பூர்வகுடி வகுப்பினர் முழு அளவில் முன்னேற்றம் பெறவில்லை. கொஞ்ச அளவிலான ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதாரம், கல்வியில் முன்னேற்றம் பெற்றிருப்பதை வைத்து ஒட்டுமொத்த மக்களையும் முன்னேறிவிட்டதாகச் சொல்லிவிட இயலாது. எப்போது எல்லா மக்களும் சம அளவில் கல்வி, வேலை, பொருளாதாரம் என்று ஒரே மாதிரி வருகிறார்களோ அப்போதிருந்துதான் சாதி அழியத் தொடங்கும். அதற்கான அஸ்திவாரத்தை முதலில் நாம் போடத் தொடங்குவோம். நாம் நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் சாதி, பொருளாதாரம், அந்தஸ்து பாகுபாடுகள் பாராமல் பழகத் தொடங்குவோம். நமது குழந்தைகளுக்கும் அதையே கற்றுத் தருவோம். சற்றுத் தாமதமானாலும் சாதியற்ற சமுதாயம் மலர்ந்தே தீரும்.
படைப்பாளர்:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.