Site icon Her Stories

கனடா எனும் கனவு தேசம்-2

ஒரு வழியாக கனடா நேரத்திற்கு நாம் பழகிவிட்டோம் என்று சந்தோஷப்பட்டால், அடுத்த பெரிய குழப்பம் திசையின் உருவத்தில் காத்திருக்கும்! இங்கு வந்த புதிதில் நம் பயன்பாட்டிற்கு நேர் எதிர்மறையான பல பயன்பாடுகள் ஆச்சரியத்தை அளித்தன. இது வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா அல்லது பூகோள உருண்டையின் எதிரெதிர் பக்கத்தில் இருப்பதால் ஏற்பட்டதா என்ற அளவிற்கு யோசிக்க வைத்துவிட்டது. போக்குவரத்து நம் ஊரில் இடப்பக்கம் என்றால் இங்கே வலப்பக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதைத் தவிர, பூட்டைத் திறக்கும் விதம், ஸ்விட்ச்சில் ஆன்/ஆஃப், பிளக் பாயிண்ட் துளைகள், கதவு கைப்பிடி இருக்கும் இடம் என இப்படிப் பல விஷயங்களை இங்கே நேரெதிராகப் பயன்படுத்த வேண்டும். இதையும் பழகிக்கொள்ள கொஞ்ச நாள் ஆகும்.

திசை என்ற ஒன்றை நான் சென்னையில் உபயோகிக்கப் பழகவில்லை. வழி கேட்க பெரும்பாலும் வாய்மொழி வழிகாட்டியான மக்களை நம்பியே வளர்ந்த எனக்கு இடது, வலது மட்டுமே தெரிந்த திசைகள். அதில் ஏதும் குழப்பம் வந்தால், எந்தக் கையால் சாப்பிடுவேன் என்று நினைத்துப் பார்த்து உறுதி செய்துகொள்வேன். மற்றபடி என்னை நம்பி திசை, வழி கேட்டவர்கள் பட்ட பாடு, அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அதிகம் பழக்கமான ஊரிலேயே, உறியடி விளையாட்டில் சுற்றுவது போல இரண்டு முறை சுற்றிவிட்டால் போக வேண்டிய திசை குழம்பிவிடும், கண்ணை கட்டாமலேயே.

இங்கு வந்தபின் குழப்பத்திற்குப் பஞ்சமே இல்லை. நடந்து செல்லும்போது சாலையின் இடது பக்கமாகவே நடப்பது. சாலையைக் கடக்க சிக்னல் போட்டிருந்தாலும் இடது பக்கமிருந்து ஏதேனும் வாகனம் வருகிறதா என்று தன்னிச்சையாகத் திரும்பிப் பார்ப்பது. இவையெல்லாம் விட, பழக்க தோஷத்தில் பஸ் ஸ்டாப்பில் தனியாக நின்றிருக்க நேர்ந்தால் என்னையும் அறியாமல் சாலையின் இடது பக்கமாக பஸ் வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பேன். இங்கு பஸ் வரும் இடத்தை மொபைல் ஆப் துல்லியமாகக் காட்டிவிடும்.

இது போதாதென்று, என் லாஜிக்கிற்குப் புலப்படாத வகையில், சாலையில் பெயர்ப்பலகைகள் வைத்திருப்பார்கள். நான்கு சாலை சந்திப்பில், ஒரு சாலையின் நுழைவாயிலின் நேர்மேலே பெயர்ப்பலகை நீல நிறத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும். என்னை விடுங்கள், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நுழையப் போகும் சாலையின் பெயர் என்று தானே, அதுதான் இல்லை. அது நுழையப் போகும் சாலையின் குறுக்கில் செல்லும் சாலையின் பெயர். என் தலை சுற்றியதில் உங்களுக்கு ஆச்சரியம் இல்லைதானே! சாலையின் பெயரை வைத்து போனால்தான் குழப்பம் வருமா, மேப் பார்த்து போனால் குழப்பம் வராதா என்றால் அதுவும் இல்லை.

நாம் எங்கே சென்றாலும் பெரும்பாலும் மேப்பை நம்பியே செல்ல வேண்டும். நம் பொது அறிவைக்கொண்டு விலாசம் கண்டுபிடிப்பது, திருப்பதியில் மொட்டை அடித்தவரைத் தேடுவது போன்றதுதான். கூகுள் மேப் எந்த விலாசத்தையும் துல்லியமாகக் காட்டிவிடும். ஆனால், செல்ல வேண்டிய வழியைச் சொல்லச் சொன்னால், தென்கிழக்கு, வடமேற்கு என்று காட்டி குழப்பிவிடும். நான் நிற்கும் இடம் தெரிந்தாலும், எந்தத் திசை பார்த்து நிற்கிறேன் என்று தெரியாமல் கூகுள் மேப் என்ன செய்யும்?

20 வருடங்களுக்கு முன்பு ஜப்பானுக்குச் சென்றபோதே அங்கே மேப் பயன்பாடு இருந்தது. ஆனால், பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்டது. எல்லா பொது இடங்களிலும் அந்தந்த ஏரியா மேப் இருக்கும், நாம் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் அந்த இடம் குறிக்கப்பட்டு அங்கே இருந்து நாம் போக வேண்டிய இடத்திற்கு வழி கொடுக்கப்பட்டிருக்கும். பேப்பர் மேப் வைத்து என்னால் இடது, வலது கண்டுபிடிக்க முடிந்தது. என்ன இருந்தாலும் ஆசிய நாடு என்பது நம் ஒன்றுவிட்ட சகோதரன் போல, சிந்தனை ஒற்றுமை இருந்தது.

இன்னொரு சிக்கல், என்னதான் தூரத்தை கிலோமீட்டர், மீட்டரில் துல்லியமாகக் காட்டினாலும், தெரியாத இடத்திற்கு முதல்முறை போகும்போது, போகப்போக பாதை வளர்ந்துகொண்டே போவதுபோல் தோன்றும். கூகுள் தென்கிழக்கு, வடமேற்கு என்று சொல்லும்போது புரியாமல் தவறான திசையில் போய்விட்டால், தூரம் இன்னும் அதிகமாகிவிடும். தவறாகச் சென்ற சாலையிலிருந்து மீண்டும் சரியான பாதைக்கு வர மாற்றி மாற்றி ரூட் டைவர்ஷன் போட்டு சொல்லிக்கொண்டேயிருக்கும். இவ்வளவு சிரமப்படுவதற்குப் பதில் மனிதர்களிடம் வழி கேட்கலாமே என்று தானே நினைக்கிறீர்கள்?

பெரும்பாலும் கார்களில் பயணம் செய்யும் மக்கள். நம்மைப்போல யாரேனும் தென்பட்டால் கேட்டுக்கொள்ளலாம். அவர்களுக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில், இது தெரியாதா என்ற ஒரு ஏளனப் பார்வையுடன், மேற்கத்திய பாணியிலேயே சொல்லிக்கொடுப்பார்கள்.

பஸ் ரூட்டாவது ஈசியாக இருக்குமா என்றால், ரூட் நம்பருடன் சேர்த்து திசையும் வைத்திருப்பார்கள். சோதனை மேல் சோதனை. உதாரணத்திற்கு வடக்கில் போகிற பஸ் என்றால் 19N, அதே பஸ் எதிர்திசையில் வரும்போது 19S. நாம் போகிற இடத்திற்கு மொபைல் ஆப்-பில் சரியாக எந்தத் திசையில் போகிற பஸ் என்று காட்டிவிடும். ஆனால், அது சாலையின் எந்தப் பக்கம் உள்ள பஸ் ஸ்டாப் என்பதில்தான் குழப்பம் வரும். அதை பஸ் ஸ்டாப்பில் எழுதிவைத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் திசை தண்ணி பட்ட பாடு போல. நம் நிலை தான் அந்தோ பரிதாபம்.

ஏற்கெனவே, பழக்க தோஷத்தில் வரவேண்டிய திசைக்கு எதிர்திசையில் பஸ்சை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். பஸ் ஸ்டாப் பெயர் ஒரே இடத்திலேயே எதிரெதிர் ஸ்டாப்பிற்கு வேறு வேறாக இருக்கும். என் ஆபீஸ்க்கு போய் இறங்க வேண்டிய ஸ்டாப் Aldridge Street. ஆனால், திரும்ப வீட்டிற்கு வர பஸ் ஏற வேண்டிய ஸ்டாப் Traders Boulevard East. உணர்ச்சிவசப்பட்டு, என் வீட்டிலிருந்து ஆபீஸ் கிழக்கு திசையில் இருப்பதாக யூகித்திருந்தீர்கள் என்றால் அது தவறு. அது இருப்பது வடக்கில், ஆனால், பஸ் ஸ்டாப் பெயர் East என்று தான் முடியும்.

நாம் போக வேண்டிய பஸ் சாலையின் எதிர்புறத்தில் நிற்கும்பொழுது, சட்டென்று சாலையைக் கடந்து செல்லவும் முடியாது. நாம் இருக்கும் ஸ்டாப்பில் இருந்து சிக்னல் வரை சென்று, சிக்னலுக்கு காத்திருந்து, பின்னர் எதிர்ச் சாலையில் பஸ் ஸ்டாப்பிற்குச் சென்றுதான் ஏற வேண்டும்.

தவறான பஸ்சில் ஏறிவிட்டால் டிக்கெட் வாங்கும்போது தெரிந்துவிடுமே என்று நினைக்க வேண்டாம். பெரும்பாலும் பாஸ் எனப்படும் சலுகைச் சீட்டு பயன்பாடுதான் இங்கே. பஸ்சில் ஏறியவுடன், டிரைவர் அருகிலே வைத்திருக்கிற மெஷினில் பாஸைப் பதிந்துவிட்டு உள்ளே தாமதிக்காமல் சென்றுகொண்டேயிருக்க வேண்டும். பாஸ் இல்லையென்றால் அதிக செலவு மட்டுமில்லை. சரியான சில்லறை இல்லாவிட்டால் டிக்கெட் மெஷினில் மீதிச் சில்லறை எல்லாம் வராது. அது குவீன் விக்டோரியா கணக்கு என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

அப்படியே சில்லறை கொடுத்து நாம் செல்ல வேண்டிய ஸ்டாப்பைச் சொல்லி டிக்கெட் கேட்கும்பொழுது, அது எதிர்திசையில் செல்லும் பஸ்ஸாக இருக்கும் பட்சத்தில், அதே விலைக்கு டிக்கெட் கொடுத்த பிறகே அடுத்த ஸ்டாப்பில் இறக்கிவிடுவார் டிரைவர். ஏனென்றால், கண்டக்டர் என்று யாரும் கிடையாது, டிரைவர் மட்டும்தான். நடுவில் எங்கும் பஸ்ஸை நிறுத்த முடியாது. ஒரு டிக்கெட் எடுக்கப்பட்ட நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை செல்லும். அதே பஸ் சர்வீஸைச் சேர்ந்த எந்த பஸ்சில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஏறும்பொழுது டிரைவரிடம் டிக்கெட்டைக் காட்டினால் போதும்.

எக்ஸ்பிரஸ் பஸ்ஸோ, சாதா பஸ்ஸோ முதல் ஸ்டாப்பிலிருந்து கடைசி ஸ்டாப் வரை டிக்கெட் ஒரே விலைதான். இதுவும் ஓர் ஆறுதல். கண்டக்டர் இல்லை என்ற காரணத்தினால் யாரும் டிக்கெட் வாங்காமல் ஏமாற்ற முடியாது. யாராக இருந்தாலும் பஸ்ஸின் முன்புற வாயிலின் வழியாகத்தான் ஏறவேண்டும். பின்புற வாயிலின் கதவு திறந்திருந்தாலும், அது இறங்குகிறவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். யாரேனும் மீறி தவறு செய்தால், டிரைவர் முன்புற கண்ணாடி வழியாகப் பார்த்து, அந்த நபரைக் குறிப்பிட்டு, இறங்கி முன்புறமாக ஏறச் செய்வார். ஒவ்வொருவராக முன்பக்க வழியில் ஏறி, டிக்கெட் வாங்கிக்கொண்டு அல்லது பாஸைப் பதிந்துவிட்டு உள்ள செல்லவேண்டும். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கண்காணிப்பு காமிராவில் ரெகார்ட் ஆகிவிடும், டிரைவர் உடனே பஸ்சில் இருக்கும் தொலைபேசியில் தகவல் அளித்துவிடுவார். அடுத்த ஸ்டாப்பை பஸ் அடையும் முன்பே போலீஸ் அல்லது பஸ் சர்வீஸ் நிர்வாக அதிகாரி காத்திருப்பார்.

இன்னும் சில நல்ல விஷயங்களைச் சொல்ல வேண்டும். வீடு பஸ் ஸ்டாப்பில் இருந்து தூரமாக இருந்தால் சைக்கிளில் சென்று பஸ் பிடிக்கலாம். சைக்கிளைப் பற்றி கவலை வேண்டாம், அதையும் உடன் கொண்டு செல்ல முடியும். அதற்கு டிரைவர் இறங்கி வந்து சைக்கிளை பஸ்ஸின் முன்புறமாக இருக்கும் ஸ்டாண்ட்டில் வைக்கவும், பின்னர் இறங்கும் இடத்தில் அதை இறக்கித் தரவும் உதவுவார். அதே போன்று, வீல் சேர் உபயோகப்படுத்துபவர்கள் ஏற, இறங்க தானியங்கி சறுக்குப்பாதையை டிரைவர் இயக்குவார். அவர்களுக்கு ஏறும்பொழுதும் இறங்கும்பொழுதும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தப்பித்தவறி யாரேனும் கவனிக்காமல் முன்னால் ஏறினால் டிரைவரின் கண்டனத்திற்கு உள்ளாகி, இறங்கி வழிவிட நேரிடும். எல்லாம் இருந்தும் என்ன பயன், குளிர்காலத்தில் 6 மாதங்கள் ஸ்னோ இருக்கும்போது சைக்கிளாவது, வீல் சேராவது!

தொடரும்…

கட்டுரையாளர்:

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக 21/2 வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாக கருத்துகளை பகிர்ந்து கொள்வதாக கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாக தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Exit mobile version