Site icon Her Stories

பயன்பாட்டில் இருந்த பொருட்கள்

காடி மட்டை

காடி கிண்டுவதற்கு, இரண்டு இரண்டரை அடி நீளத்தில் பனை மட்டையைச் செதுக்கி வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இதை அடுப்பங்கரையில் ஓட்டிலோ ஓலையிலோ செருகி வைத்திருப்பார்கள்.

பனை மட்டை இருபுறமும் மேடாகவும் நடுவில் குழிந்தும் இருக்கும். செதுக்கி எடுத்தால், அந்தக் குழிந்த பகுதி மட்டும் இவ்வாறு சிறிது தட்டையாகக் கிடைக்கும். குடித்துவிட்டு சாலையில் படுப்பவர்கள் தட்டையாகப் படுப்பதால் மட்டையாகி விட்டான் என்கிறார்கள். தட்டையாக விமரிசிப்பவர்களை மட்டையடியாக விமரிசித்தல் போன்ற வார்த்தைகள் இதிலிருந்து பிறந்தவையாக இருக்க வேண்டும்.

வீட்டில் அடி விழுந்தாலும் காடி மட்டை அடிதான். நன்றாக அடி வாங்கியதைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், ‘மட்டையாலே சாத்து சாத்து எனச் சாத்தி விட்டான்’ என்று சொல்வார்கள்.

காடி

பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள் தன் அமுதவல்லி நாவலில் ‘குற்றச் சாட்டும், அக்குற்றத்தின் அநியாயம் போல ஒலித்த தேம்பலும் மட்டையடியாக விழுந்தன’ என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார். அதாவது நாம் சாட்டையடி என சொல்வது போல பயன்படுத்தியிருக்கிறார்.

காடி கிண்டும் வழக்கம் நின்ற பின்னும் உளுந்தஞ்சோறு பொங்கும் போது கிண்டுவதற்கு வசமாக இருக்கும் என்பதால் பல வீடுகளில் இருந்தன. இது அவ்வாறு என் மாமியார் வைத்திருந்தது.

சிரட்டை அகப்பை

சிரட்டை அகப்பை, தேங்காய் சிரட்டை எனப்படும் கொட்டாங்குச்சியில் செய்யப்படுகிறது. கைப்பிடியாக மூங்கிலைச் சீவிப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அன்று அகப்பையாகப் பயன்பட்டது. தங்கள் தேவைக்கு ஏற்ப கைப்பிடியின் நீளத்தில், சிரட்டையில் அளவில் கூடுதல் குறைவு இருக்கும். அவரவர் தேவைக்கு ஏற்றதை வாங்கிக்கொள்வார்கள். கைப்பிடி மூங்கிலாலானது என்பதால், கையில் சூடு ஏறாது. இதனால் நிறைய நேரம் சூடான கஞ்சி போன்றவற்றை ஊற்றப் பயன்படுத்துவார்கள்.

கட்டிலில் மூட்டைப்பூச்சி வந்தால் வெந்நீர் ஊற்றுவார்கள். அதற்கு இதுதான் உகந்த அகப்பை. ஏனென்றால் எவ்வளவு நேரம் ஊற்றினாலும் கையில் சூடே தெரியாது.

பொங்கல் விழாவின் போது மண்பானையில் உள்ள அரிசியைக் கிளறுதற்குச் சிரட்டை அகப்பையை இப்போதும் பலர் பயன்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் படித்த செய்தி, ‘தஞ்சையை அடுத்த வேங்கராயன் குடிக்காடு என்ற கிராமத்தில் பொங்கலன்று சிரட்டை அகப்பையைப் பயன்படுத்தி, பொங்கல் பொங்குகிறார்கள். இதற்காக அவ்வூரில் உள்ள தச்சுத் தொழிலாளர்கள் தாங்கள் செய்த அகப்பைகளைப் பொங்கலன்று அதிகாலையில் ஊர் மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்குகிறார்கள். அதற்கு அவர்கள் பணம் பெற்றுக்கொள்வதில்லை. மாறாக ஒருபடி நெல், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் பெற்றுக் கொள்கின்றனர்.’

சிரட்டை அகப்பை

தலைச்சுமையாகத் தயிர் மோர் விற்கும் பெண்கள், தயிரை அளப்பதற்குச் சிரட்டை அகப்பையைப் பயன்படுத்துவார்கள். ஓர் அகப்பை இவ்வளவு எனதான் சொல்வார்கள். விலைவாசி ஏற ஏற சிரட்டை அகப்பையின் அளவு சிறிதாகிக்கொண்டே இருக்கும். அவர்கள் தயிரை எடுக்கும் போது, சிரட்டையில் நிறமும் தயிரின் வெள்ளை நிறமும் அவர்கள் எடுக்கும் லாகவமும் சேர்த்துப் பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும்.

சிரட்டையை அழகுப்படுத்தி பல்வேறு பொருட்கள் செய்யும் வழக்கம் உலகில் பல இடங்களிலும் இருக்கிறது. இது பிலிப்பைன்ஸ் அம்மா ஒருவர், அவர்கள் ஊரில் செய்தது என எனக்குப் பரிசாகத் தந்தது. அவர்களின் பெயர் சூசன். இன்று அவர்கள் இல்லை. அனைவருக்கும் பரிசு வழங்கும் நல்ல மனம் கொண்டவர்கள். இதில் இருக்கும் பட்டன், பூ வேலைப்பாடு முழுவதும் சிரட்டையால் தான் செய்திருக்கிறார்கள்.

உலக்கை

உலக்கை சுமார் ஐந்து அடி நீளம் கொண்டது. இதன் இரண்டு பக்கமும் இரும்பால் செய்யப்பட்ட  பூண்கள் பொருத்தப்பட்டிருக்கும். 

நெல்லுக் குற்றுதல் போன்ற செயல்களில், உமி தான் நீக்கப் படவேண்டும். உள்ளே இருக்கும் தானியம் உடையக்கூடாது. அதனால், ஒரு பக்கம்  வளையம் போன்ற பூண் வைக்கிறார்கள். 

மறுபக்கம் மாவு இடித்தல் போன்று, தானியங்களைத் தூளாக்குவதற்கு, முழுவதும் இரும்பாலான பூண் போடுகிறார்கள். உலக்கையை சும்மா வைக்கும் போது, எப்போதுமே பூண் மேலே இருக்குமாறு நிறுத்தி தான் வைப்பார்கள். கீழே பட்டால் மண் தூசு ஒட்டும் என்பதற்காக இருக்கலாம். 

உலக்கை

பொதுவாகக் கருங்காலி மரத்தில் இருந்து உலக்கை செய்யப்படுகிறது. தண்டு, இலை எங்கும் முட்கள் கொண்ட இந்த மரம் பார்க்க மிக அழகாக இருக்கும். கருங்காலி மரம் மிகவும் வலிமையானது. அதனால் பல பொருட்கள் கருங்காலி மரத்திலிருந்து செய்கிறார்கள். மரத்தை வெட்டப் பயன்படும் கோடரிக்கான கைப்பிடி பெரும்பாலும் கருங்காலி மரத்திலிருந்துதான் செய்கிறார்கள். மர இனத்தை அழிப்பதற்கு அது துணை செய்கிறது என்பது போல தன் இனத்தை அழிப்பதற்குத் துணை செய்பவர்களைக் ‘கருங்காலி’, ‘இனத்தை அழிக்க வந்த கோடரிக் காம்பு’ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

பூண் தேய்ந்த, அல்லது பூண் இல்லாத உலக்கை கழுந்துலக்கை. வழக்கமான நீளம் கொண்ட கழுந்துலக்கை, குற்றிய நெல்லைத் தீட்டுதற்குப் பயன்பட்டிருக்கிறது.

எங்கள் ஊரில் ஒரு வகை மரத்தை ‘விட தளை மரம்’ என்பார்கள். இதிலிருந்து என் ஐயா (தாத்தா) கழுந்துலக்கை செய்து வைத்திருந்தார்கள். கருங்காலி ‘விட தளை மரம்’ இரண்டும் ஒரே மரமா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. எங்கள் வீட்டுக் கழுந்துலக்கை உயரம் குறைவாக, மூன்று அல்லது நான்கு அடி நீளமுள்ளதாக, சிறு பலகையில் இருந்து இடிக்கும் விதமாக இருந்தது. பூண் இல்லாததால் கனம் குறைவாக இருக்கும். அதனால் இடிப்பது எளிது. ஆனால், நேரம் கூடுதலாக எடுக்கும். பொதுவாக வேகவைத்த பயிறு போன்ற மென்மையான பொருட்களை இடிக்க இதைப் பயன்படுத்துவார்கள்.

விட தளை மரம்

எங்கள் ஊர் மலைக்கோயிலில் பல ஆண்டுகளாக ஒரு விட தளை மரம் நிற்கிறது. வெடத்தலை என அதைச் சொல்வார்கள். அதன் இலை, பூக்களை பக்தர்கள், புதுமை எனப் பறித்துச் செல்வார்கள்.

அக்காள் நடக்க முடியாதவள்; தங்கை ஆட்டக்காரி 

இந்த இருவரும் இல்லாவிட்டால் குடித்தனப் பெண் சிணுங்குவாள் என்ற விடுகதையின் பதில் ,உரல் உலக்கை. 

சங்க இலக்கியங்கள், உலக்கை போடும் போது பாடும் பாடல்களை வள்ளைப்பாட்டு என்கிறார்கள்.

‘மழை வருது மழை வருது நெல்லை வாருங்கோ

மூணு படி அரிசி குத்தி முறுக்கு சுடுங்கோ’ என்பது பழைய நாட்டுப்புறப் பாடல்.

மழ வருது மழ வருது மாவு இடிங்கோ

முக்காப் படி அரிசி போட்டு முறுக்கு சுத்துங்கோ

ஏரோட்டற மாமனுக்கு எடுத்து வையுங்க…

சும்மா வாற மாமனுக்குச் சூடு வையுங்க…

என நாங்கள் சிறுவராக இருக்கும் போது பாடியதாக நினைவு.

கீழ்க்காண்பவை எல்லாம் நவீன வள்ளைப் பாடல்களுக்கு எடுத்துக்காட்டுகள்.

“அடி ராக்காயி மூக்காயி குப்பாயி

செவப்பாயி கஸ்தூரி மீனாக்‌ஷி

தங்கப்பல் கரையா

தங்க மகளுக்கும் வாத்யாரையாவுக்கும்

தை மாசம் கல்யாணம் நெல்லு குத்த வாங்கடியோ

சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்

முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்

முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்

நம்ம வீட்டுக் கல்யாணம் இது நம்ம வீட்டுக் கல்யாணம்

பத்தோடு ஒண்ணு பலகாரம் பண்ண

சத்தாக மாவிடிங்க

கல்லோடு உமியும் சேராம பார்த்துப் பக்குவமா இடிங்க

பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்

வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்

இதுதானே கல்யாண விருந்தென்று

ஊரே பாரட்ட வேணும்.”

“பச்சரிசி மாவிடிச்சு

சக்கரையில் பாகு வைச்சு

சுக்குடிச்சி மிளகிடிச்சி

மிளகிடிச்சு மிளகிடிச்சி

பக்குவமா கலந்து வச்சு

அம்மனுக்கு மாவிளக்கு

எடுத்து வந்தோம்

அம்மன் அவ எங்களையும்

காக்கவேணும் காக்கவேணும் சாமி.”

சூரிய கிரகணத்தின்போது மட்டுமல்ல, உலக்கை எப்போது நிற்க வைத்தாலும் நிற்கும் என்பது தெரியாமல், சூரிய கிரகணத்தின்போது உலக்கையைச் செங்குத்தாக நிற்க வைத்து நம்பி ஏமாந்ததும் உண்டு. உலக்கை மக்களின் வாழ்வோடு இணைந்து இருந்ததால், பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நிகழ்வுகளிலும் சில சடங்குகள் சம்பிரதாயங்களில் பயன்படுத்திருக்கிறார்கள்.


(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

Exit mobile version