Site icon Her Stories

திருமணம் முடிந்தால் எல்லாம் முடிந்ததா?

ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு தன் எதிர்கால வாழ்க்கையைக் குறித்து மனதிற்குள் பலவிதமான ஆசைகளை வளர்த்துக் கொள்வதோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து தன் லட்சியத்தைக் குறித்த கனவுகளின் இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டே வளர்கிறாள்.

பருவ வயது எய்தியதும் திருமணம் என்கிற பந்தத்தில் இணைந்த பின்னர், சில பெண்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகள் அப்படியே தலைகீழாக மாறி, அவர்களுடைய ஆசைகளையும் கனவுகளையும் ஓரங்கட்டிவிட்டு, மேற்கொண்டு அவற்றை நிறைவேற்ற முடியாத அல்லது தொடர முடியாத நிலைக்கு உள்ளாகின்றனர்.

கடந்த வருடம் ஆறுமாத காலம், நான் ஒரு யோகா வகுப்பில் சேர்ந்து யோகா கற்றுக் கொண்டேன். கடந்த டிசம்பர் மாதத்தில், நோவா வேர்ல்டு ரெகார்டு போட்டி ஒன்றையும் அவர்கள் நடத்தினார்கள். அதில் நானும் கலந்து கொண்டேன். என்னைவிட திறமையான பெண்களும் ஒரு வருடத்திற்கும் மேலாக அங்கு பயிற்சி பெறும் பெண்களும் வகுப்பில் இருந்தார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலான பெண்கள் அப்போட்டியில் பங்கு கொள்ளவில்லை.

அவர்களெல்லாம் ஏன் பங்கு பெறவில்லை என்று யோகா கற்றுத் தரும் ஆசிரியரிடம் தனிப்பட்ட முறையில் கேட்டேன். அவர் கூறிய பதிலைக் கேட்டு மனம் சஞ்சலமடைந்தது.

ஒவ்வொருவரின் குடும்பச் சூழ்நிலையே இதற்குக் காரணம். சிலருடைய குடும்பத்தில் யோகா வகுப்பிற்குச் செல்வதையே, கல்யாணம் முடிந்த பிறகு இதெல்லாம் உனக்கு எதற்கு என்று கேட்கிறார்கள். சிலர் எப்படியோ சமாளித்து, தங்கள் உடல்நலனில் அக்கறை கொண்டு, இன்னல்களுக்கு நடுவிலும் தொடர்ந்து விடாது கற்றுக் கொண்டு வருகிறார்கள் என்று கூறினார். வீட்டில் உள்ளவர்களுக்கு யோகாசனம் செய்வதால் கிடைக்கப் பெறும் நன்மைகள் பற்றிய சரியானப் புரிதல் இல்லாது இருப்பதும், இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என எனக்குத் தோன்றியது.

என்னுடைய நட்பு, குடும்ப வட்டாரங்களில் ஒரு சிலர் என்னிடமும் கேள்வி கேட்டார்கள். யோகா வகுப்பிற்குச் செல்கிறாய் சரி, இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமென்ன என்று?

என்னுடைய மனதிருப்திக்கும் என்னாலும் எல்லா ஆசனங்களும் செய்ய முடிகிறாதா என்று என்னை நானே பரீட்சித்துப் பார்ப்பதற்கும், அதோடு மட்டுமில்லாமல் ஒரு பெண் நினைத்தால் எந்த வயதிலும் எதையும் செய்ய முடியும் என்று பிற்காலத்தில் என் குழந்தைக்கு நம்பிக்கையூட்டி வளர்ப்பதற்குமே சேர்ந்தேன் என்று பதில் கூறினேன்.

ஆனால், வழக்கம்போல நான் எந்தவொரு போட்டியில் பங்கு கொண்டாலும், என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் என் நலன் விரும்பிகள், இம்முறையும் வாழ்த்துக் கூறி என்னை இரட்டிப்பு மகிழ்ச்சியில் மூழ்கடிக்க மறக்கவில்லை.

என் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு சில காரணங்களால், என்னால் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகியது. இருந்த போதிலும் நான் எனக்கான அடையாளத்தை நோக்கித் தேடி ஓடவும், அவற்றைக் கண்டறிந்து அதில் முத்திரை பதிக்காமல் இவ்வுலகைவிட்டு விடை பெறக் கூடாது என்று வைராக்கியத்தோடும் ஓடிக் கொண்டிருக்கிறேன். கடந்த கால வாய்ப்புகளைச் சூழ்நிலையால் தவறவிட்டாலும், இனிவரும் வாய்ப்பை ஒருபோதும் தவற விடக் கூடாது என்கிற எண்ணத்தை ஆழமாக விதைத்திருக்கிறேன்.

பெண்கள் என்றாலே அவர்களுக்குப் படிப்பு எதற்கு? நாளை இன்னொரு வீட்டிற்குச் சென்று பாத்திரம்தானே தேய்க்கப் போகிறாள் என்று காலங்காலமாக நம்மை மட்டம் தட்டி, மேலும் வளர விடாமல் நம் வளர்ச்சியைத் தடுப்பதற்கென அடுக்காகப் பல கேள்விகளைக் கேட்பதற்கெனவே, ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெண்ணாகப் பிறந்த நமக்கும், பெண் குழந்தைகளைப் பெற்ற தோழர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய பொறுப்பிருக்கிறது. நம் குழந்தைகளும் நம்மைப் பார்த்துதான் வளர்கிறார்கள்.

விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்று பெருமையாக மார்த்தட்டிக் கொண்டாலும், பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராகப் பல வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தச் சமூகத்தில் ஒரு பெண் குழந்தையை வளர்க்கும் விதமும், ஆண் குழந்தையை வளர்க்கும் விதமும் சில வீடுகளில் வித்தியாசமாக இருக்கிறது என்றும், பெண் குழந்தை என்றாலே திருமண வாழ்க்கைக்கு மட்டும்தான் அவர்களைத் தயார் செய்வது போலவும், பெண் குழந்தைகளின் வளர்ப்பு முறையில் சில கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்படுவதாக, சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் கீதா இளங்கோவன் பேட்டியைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

இன்று பெண்களைப் பெரிதாக மதித்து போற்றுபவர்களும், அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகப் பல ஆதரவாளர்கள் ஒருபுறம் இருந்தாலும், பெண்களின் வளர்ச்சியைத் தடை செய்து அவர்களை முன்னேற விடாமல் அடிமைத்தனத்தோடு நடத்த வேண்டும் என்று மற்றொரு கூட்டமும் நம்மைச் சுற்றி இன்றும் இருக்கத்தான் செய்கிறது என்பது மறுக்கப்பட முடியாத கசப்பான உண்மை நிலை தோழர்களே.

எது எப்படி இருந்தாலும் சரி, திருமணம் முடிந்தால் எல்லாம் முடிந்தது என்று சோர்ந்து அமைதியாகி விடாதீர்கள்! நமக்காவும் நாம் வாழ வேண்டும். நமக்குக் கிடைத்திருக்கும் இந்தவோர் அழகான வாழ்க்கையில் நமக்கென்ற ஒரு தனித்த அடையாளத்துடன் வாழ்ந்து, அடுத்த தலைமுறைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருப்பது மிகவும் முக்கியம். நம் இலக்கை அடைய பல தடைகள் வருவது இயல்பே.

இவ்வுலகில் சரித்திரம் படைத்த வீராங்கனைகள் ஒவ்வொருவரின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஒரு விஷயம் நன்கு புலப்படும் தோழர்களே! “சரித்தரம் படைக்க வேண்டுமென்றால் பல சமுத்திரங்களையும் சோதனைகளையும் கடந்து வர வேண்டியதிருக்கும்.”

எப்போதும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காதீர்கள். உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே உருவாக்கி முன்னேறிச் செல்லுங்கள்.

இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வோர் உயிரும் ஒவ்வொரு நோக்கத்துடன் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்து துணிந்து நடைபோடப் பழகுங்கள்

படைப்பாளர்:

 இராஜதிலகம் பாலாஜி. ஹங்கேரியில் வசித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர். வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளர். பிரதிலிபி தமிழ், பிரித்தானிய தமிழிதழ், சஹானா இணைய இதழ் பலவற்றில் கதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல் பல எழுதி வருகிறார். சிந்தனைச் சிறகுகள் என்கிற சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்.

Exit mobile version