Site icon Her Stories

ஜாலி டூர் போவானா சிபி?

Happy young cool brunet men in white t-shirts and checkered shirts rejoice, smile and pose on orange background. Travelers hold backpack and retro camera.

சிபி படு உற்சாகத்தில் இருந்தான். திருமணமாகி ஐந்தாண்டுகளில் முதன்முறையாகத் தன் நண்பனின் திருமணத்துக்கு வெளியூர் செல்லப் போகிறான்; அதுவும் அவன் மட்டும் மற்ற நண்பர்களுடன். ஆதிக்கு வேலை இருந்ததால் வரவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பே ஆதியிடம் கலந்து பேசி அவளது ‘அனுமதி’யைப் பெற்றிருந்தான்.

அவனது நண்பர்கள் எல்லாருக்குமே அப்படித்தான். கல்லூரியில் படிக்கும்போது கவலையின்றி ஒன்றாகச் சுற்றியவர்கள் திருமணமானதும் அப்படியே பிரிந்துவிட்டார்கள். இதோ இந்த நண்பனின் திருமணம் அவர்கள் ஒன்றாக இணைந்து மகிழ ஒரு வாய்ப்பு.

வெள்ளிக்கிழமை மாலை ட்ரெயின். ஒரு வாரமாகப் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கிறான் சிபி. தான் வீட்டில் இல்லாத நான்கு நாளைக்கும் ஆதிக்குத் தேவையான உடைகளை அயர்ன் பண்ணி வைத்தாயிற்று. குழந்தைக்கான ஸ்னாக்ஸ் என்ன கொடுக்க வேண்டும், லஞ்ச் என்ன கொடுக்க வேண்டும் என்று எழுதி ஃப்ரிஜ்ஜின் மீது ஓட்டி வைத்தான். என்னென்ன பொருள் எங்கெங்கு இருக்கிறது என்பது உட்பட. தோசை மாவு, அடை மாவு அரைத்து வைத்து சேஷாத்ரியின் உதவியுடன் வீடு முழுவதும் பளிங்கு போல் துப்புரவு செய்து, அழுக்குத் துணிகளை எல்லாம் துவைத்து மடித்து வைத்து, மாமா அத்தைக்குத் தேவையான மாத்திரைகள் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்து இல்லாததை வாங்கி வைத்து, அப்பப்பா… புறப்படுவதற்கு முதல் நாள் தூங்காமல் விழித்திருந்துதான் தனக்கு வேண்டியதைப் பாக்கிங் செய்யத் தொடங்கினான்.

“ஆதி…”

“என்னடா?”

“நாளைக்கு என்னை ட்ராப் பண்ண வருவீங்களா?”

“ம்… எனக்கு லேட்டாகும் நீ ஆட்டோ பிடிச்சுப் போயிடுடா. முடிஞ்சா ஸ்டேஷனுக்கு வரேன்.”

“சரிங்க.”

“ம்… தனியா ஊர் சுத்த ஆரம்பிச்சிட்டே, நடத்துடா!”

சிரித்தான் சிபி. இரவு நல்லிரவாகவே கழிந்தது.

காலையில் மாமனார் மாமியார் முகம் நன்றாகவே இல்லை. காபி கொடுத்தபோது முகத்தைத் திருப்பிக்கொண்டனர்.

“ஏம்பா, ஆதியால வர முடியலைன்னா நீயும் போகாம இருக்கிறதுதானே முறை? இப்டி நீ பாட்டுக்கு நாலு நாள் போயிட்டா இங்கே வேலை, குழந்தை எல்லாம் யார் பார்த்துக்குறது?”

சிபிக்குச் சுருக்கென்றது. “ஆதி பார்த்துக்குறேன்னு சொன்னா மாமா.”

“அவ ஒரு கூறுகெட்டவ. சுடுதண்ணிகூட வெக்கத் தெரியாது. உன் மேல இருக்கற பிரியத்துல எதையாச்சும் சொல்லுவா. உனக்குப் பொறுப்பு வேண்டாம்.”

அழுகையைக் கீழுதட்டைக் கடித்து அடக்கினான் சிபி. ஊருக்குப் போகும் உற்சாகத்துடன் எழுந்தவனுக்கு சூனியம் பிடித்தாற்போல் ஆனது.

காபியைக் குடித்துவிட்டுக் காலி டம்ளரை நீட்டிய மாமனார், “சரி சரி, காலையிலேயே கண்ணைக் கசக்கிட்டு நிக்காத, போய் வேலையப் பாரு” என்று ஏவிவிட்டு அகன்றார்.

“கனியட்டும் கால நேரம் உமக்கு, என்னமோ திட்டம் இருக்கு….” – ரேடியோவில் பாடல் ஒலித்தது.

“வாங்க சம்பந்தி! எப்படி இருக்கீங்க?”

சிபியின் பெற்றோரை வரவேற்றனர் அவனது மாமனார், மாமியார்.

“நல்லா இருக்கோம். இந்தாங்க…”

“ஐயோ எதுக்கு இதெல்லாம்?”

மறுத்தபடியே அவர்கள் வாங்கி வந்த ஸ்வீட்ஸ், பழக் கவரை வாங்கி வைத்தார் அவனது மாமனார்.

“சிபி எங்கே?” உள்ளே நுழையும் முன் மகனைக் காணும் பரிதவிப்பில் கேட்டார் சிபியின் அம்மா.

”ஹும்… என்னத்த சொல்ல? அதைப் பத்திப் பேசத்தான் உங்களைக் கூப்டோம். உள்ள வாங்க!”

அடிவயிறு கலங்கியது சிபியின் அப்பாவுக்கு.

”ஏன் என்னாச்சு? திரும்பவும் பிரச்னை பண்றானா? போன தடவை கோவிச்சிக்கிட்டு வந்தப்போ நல்லவிதமா புத்திமதி சொல்லித்தானே அனுப்பினோம்!”

”நல்ல பையன்தான். என்ன செய்ய? சேர்க்கை சரியில்லை. தப்பான சகவாசம். இப்பகூடப் பாருங்க. கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்குன்ற பொறுப்பில்லாம பிரெண்ட்ஸ்கூட ஊர் சுத்தப் போயிருக்கான்.”

“என்னது? எங்ககிட்ட சொல்லவே இல்லையே. சொல்லி இருந்தா நாங்க தடுத்திருப்போம்.”

“உங்க கிட்ட சொல்லலியா? பார்த்தீங்களா பெத்தவங்களையே மதிக்காத பையன் எங்களை எப்படி மதிப்பான்?”

“ஆதி ஒண்ணும் சொல்லலியா?”

“அவ என்ன பண்ணுவா பாவம்? ஏதாச்சும் கேட்டா சாமியாடுறான் புருசன்னு எல்லாத்துக்கும் அமைதியாப் போறா என் பொண்ணு. சாப்பாட்ல உப்பில்லான்னாலும் சரி, காலைல பெட் காபில சர்க்கரை குறைஞ்சாலும் சரி, ஒண்ணும் சொல்றதில்ல. அந்தத் திமிரிலதான் உங்க புள்ள இந்த ஆட்டம் ஆடுறான்.”

பேசிக்கொண்டே மாமனார் காபி கொண்டுவந்து வைத்தார். சிபியின் அப்பா, அம்மா தர்மசங்கடத்தில் நெளிந்தனர். அதை எடுத்துக் குடிக்கக்கூடத் தயங்கினர். ஆதியின் அம்மா கால் மேல் கால் போட்டு அமர்ந்து, ”என்ன புள்ளை வளர்த்திருக்கீங்க?” என்ற மாதிரி பார்க்க, சிபியின் அம்மா கூனிக்குறுகிப் போனார். இத்தனைக்கும் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தனர். இத்தனைக்கும் அவர் அதிகாரம் மிக்க அரசு உயர்பதவியில் இருப்பவர். அவருடைய அலுவலகத்தில் சுலபமாக யாரும் அவரைச் சந்தித்துவிட முடியாது. இருந்தாலும் பிள்ளையைப் பெற்றவர்கள் அல்லவா? சம்பந்திகளின் முன் சப்தநாடியும் ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்தார்கள்.

“இப்படியெல்லாம் ஊரைச் சுத்துற பையன் குடும்பத்துக்குச் சரிப்பட்டு வர மாட்டான். அவ்வளவுதான் சொல்வேன்.”

அவன் வரட்டும் நாங்க அவன்கிட்ட பேசுறோம். சொல்லி வெக்கிறோம். நீங்க பெரியவங்க கொஞ்சம் பொறுத்துப் போங்க” என்றபடி கிளம்பினர்.

வீட்டுக்குப் போனால் இருபக்க இடியைச் சந்திக்க வேண்டும் என்கிற நினைப்பில்லாமல் மகிழ்ச்சியுடன் நண்பனின் திருமணத்தில் கும்மாளமடித்துக்கொண்டிருந்தான் சிபி. புறப்படும்போது அழுத்திய குற்றவுணர்வு மொத்தமாக வடிந்திருந்தது.

யார் என்ன சொன்னாலும் சரி, இந்த மகிழ்ச்சியைத் தவறவிடக் கூடாது, அடிக்கடி நட்புகளுடன் ஊர் சுற்ற வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டான்.

பி.கு:

ஆண்கள் நினைத்த போதெல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றவும் கொண்டாடி மகிழவும் சமூகமும் குடும்பமும் அனுமதிக்கிறது. பெண்கள் தங்களைத் தாங்களே அனுமதிப்பதில்லை. கீதா இளங்கோவன் தொடங்கிய சாவித்திரிபாய் புலே பயணக்குழுவில் முப்பது முதல் எழுபது வயது வரை உடைய பன்னிரண்டு பெண்கள் அண்மையில் அந்தமான் தீவுகளுக்குச் சென்று, அவ்வெழில் மிகுந்த தீவுகளை ரசித்து மகிழ்ந்து ஆட்டம் போட்டுக் களித்துத் திரும்பியுள்ளனர். வீட்டு வெளிகளைத் தாண்டி சக பெண்களுடன் பயணிப்பது அவர்களிடம் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். அதனையொட்டியே இன்றைய ‘ஆண்கள் நலம்’ பதிவு.

(ஆண்கள் நலம்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.

Exit mobile version