Site icon Her Stories

ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைத்த ஆப்!

‘ஒளியற்ற ஜன்னல் குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து, கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால்போல் ஆதிக்கக்கரங்கள் நீண்டு வளைத்துப்போட்டன…’

அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்கிற சிறுகதை.

பெண்கள் எப்படிச் சமையலறையை ஒரு சிறையாகவும், அந்தச் சிறையை ராஜ்ஜியமாகவும் கற்பனை செய்து வாழ வைக்கப்பட்டார்கள் என்பதற்கான மிக வேதனையான உவமை.

ஒரு காட்சி நினைவுக்கு வருகிறதா? The Great Indian Kitchen படத்தில் வரும் அந்தக் சமையலறை காட்சி. சிங்க் குழாய் உடைந்து தண்ணீர் கசிகிறது. அழுக்குத் தண்ணீர் தேங்கிக்கொண்டே இருக்கிறது. மருமகள் தினமும் வாளியில் தண்ணீர் எடுத்து வெளியே ஊற்றுகிறாள். ஆனால் வீட்டில் இருக்கும் ஆண்கள் பார்த்தும் பார்க்காதது போல இருக்கிறார்கள்.

“பிளம்பரை  அழைக்கலாம்” என்கிற யோசனைகூட அவர்களிடம் வரவில்லை.

பல பெண்களுக்கு அந்தக் காட்சியைப் பார்த்தபோது,  அது ஒரு சினிமா காட்சி போலவே தெரிந்திருக்காது. அவ்வளவு தத்ரூபமாக நிஜ வாழ்க்கை போலவே இருந்திருக்கும். அவர்களின் வாழ்க்கை.

ஏதாவது வீட்டில் பழுதாக இருந்தால் ஒரு வாக்கியம்தான், “பார்க்கிறேன்.” அது ஒரு நாளா? ஒரு மாதமா? ஒரு வருடமா?  அது புரியாத புதிர்! ஆனால், இப்போது அந்த ‘அவர்’ என்கிற எதிர்பார்ப்பை நம் கையின் பிடியில் இருக்கும் ஒரு சிறிய சாதனம் மாற்றிவிட்டது.

ஸ்மார்ட்போன்!

குழாய் உடைந்தால்… எதற்குக் காத்திருக்க வேண்டும்?

ஒரு செயலியைத் (ஆப்) திறக்கிறாள். ஒரு பிளம்பரை புக் செய்கிறாள். அவ்வளவுதான்.

Urban Company போன்ற ஆப்கள் வீட்டில் உள்ள அதிகாரச் சமநிலையை மெதுவாக மாற்றிவிட்டன.

யாரையும் நினைவூட்ட வேண்டாம். யாரிடமும் அனுமதி கேட்க வேண்டாம். பிரச்னைக்கான நேரடித் தீர்வு.

ஒரு காலத்தில் பெண்கள் எங்காவது செல்ல  வேண்டும் என்றால், ஓர் ஆண் மட்டுமே  அழைத்துச் செல்ல வேண்டும். இரண்டு நாள் முன்பே நினைவூட்ட வேண்டும். அவ்வளவு பிஸியான மனிதர் அவர். நாம் தனியாகச் செல்ல நினைத்தால் ‘யாருடன் போகிறாய்? ‘ என்கிற ஆயிரம் கேள்விகள் வேறு. ’திடுதிப்புன்னு சொன்னா எப்படி! என்னால முடியாது’ என்று தட்டிக் கழிக்கும் ஆண்கள். பாதி நிகழ்ச்சிகளுக்குப் பெண்கள் போகாமலே போய்விடுகிறது.

இப்போது uber, Fery Rides போன்ற சேவைகள் பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குகின்றன. இனி பெண்களைப் பயணிக்கச் செய்வது  உதவி இல்லை. ஒரு புக்கிங் மட்டுமே.

சமையலறை இனி சிறை இல்லை! ஒரு காலத்தில் பெண்களின் தினசரி வாழ்க்கையை நிர்ணயித்தது சமையலறை!

காலை உணவு! மதிய உணவு! இரவு உணவு! ஒரு நாளும் விடுமுறை இல்லை. காய்கறிகள்,  பழங்கள் , அசைவ பொருட்களை  மார்க்கெட்டிலிருந்து வாங்கி வருவது ஓர் ஆண்மகனின் தலையாய,  தன்மானமான  கடமையாக இருந்து வந்தது.

அந்த ஆணாதிக்கச் சிந்தனைக்கு ஆப்பு வைக்கவே வந்திருக்கிறது இன்றைய ஆப்! Zepto, Blinkit, bigbasket போன்ற செயலிகள். நாம் அவசரமாக ஆண்களிடம் கேட்ட மளிகை சாமான் அவர்களின் காது வழியாகப் போய் மூளைக்கு எட்டுவதற்குள்  இந்தச் செயலிகள்  மளிகைப் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்துவிடுகின்றன. சமைக்க மனமில்லை என்றால் Swiggy, zomato ருசியான உணவை வீட்டுக்கே கொண்டு வருகிறது.

ஒரு வேலை முடித்து சோர்வாக இருக்கும் பெண்ணுக்கு சுலைமானி டீயை Swiggy அளிக்கிறது. இதற்குப்  பெயர் உதவி அல்ல. இது ஒரு ஆர்டர் மட்டுமே. நாம் ஆண்களுக்கு நன்றி கடன்பட்டே எவ்வளவு நாள் வாழ்வது. 

பெண்களுக்குப் பெண்களே துணை! சில நேரத்தில் பெண்களுக்கு தேவையானது ஒரு பிளம்பர், எலெக்ட்ரிசியன் மட்டும்   அல்ல. ஒரு புரிதல்.

அதற்காகத்தான் SHEROES போன்ற தளங்கள் உருவாகின. வேலை, உடல்நலம், உறவுகள், விவாகரத்து, தொழில்— எதையும் பெண்கள் திறந்த மனதுடன் பேசும் இடம் இது.

முன்பு பெண்களின் கேள்விகள் நெருங்கிய தோழிகளிடம் மட்டும் கிசுகிசுவாகப் பேசப்பட்டன. இப்போது ஆயிரக்கணக்கான பெண்கள் ஒருவருக்கு இன்னொருவர் ஆதரவாக நிற்கிறார்கள்.

இது ஒரு ஆப் மட்டும் அல்ல. ஒரு சகோதரத்துவம்.

காவலன் SOS ( பெயரைக் காவலர் என்று அரசு மாற்றினால் நன்றாக இருக்கும்), காவல் உதவி  என்று பல செயலிகள் தமிழ்நாடு அரசால் நம் பாதுகாப்பிற்க்காகத் தொடங்கப்பட்டுள்னன.

பொருளாதார சுதந்திரம்!

Lxme, Mahila Money செயலிகள் பெண் தொழில்முனைவோருக்குத் தொழில் தொடங்க அல்லது விரிவுபடுத்த  கடன்களை வழங்கும் செயலி, இதில் SME கடன்கள் அடங்கும்.

Day-to-day Expenses தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை ஆதரிக்கும் ஒரு செயலி. பட்ஜெட்  அம்சங்களுடன்  தினசரி செலவுகளைக் கண்காணிக்க உதவுகிறது. 

Bookmybai செயலி,  பின்னணி சரிபார்க்கப்பட்ட சமையல்காரர்கள், 24 மணி நேரப் பணியாளர்களை நம் வீட்டிற்குக் கொண்டுவருகிறார்கள். COOX என்கிற செயலி  ஒருபடி மேலே போய் விருந்துகள் மற்றும் சிறப்புச் சமையலுக்கு  உயர்தர செஃப் ஒருவரை முன்பதிவு செய்ய உதவுகிறது.

‘இவர்கள் வேறு எதற்கெல்லாம் செயலிகள் வைத்துள்ளார்களோ என்று சங்கடப்படும் ஆண்களுக்கு! 

Tinder, Bumble, Hinge மற்றும் Happn போன்ற கேஷுவல் டேட்டிங் செயலிகளும்  Aisle போன்ற செயலிகள் சீரியசான உறவுகள்  இரண்டையும் கண்டறியவும் இருப்பிட அடிப்படையிலான பொருத்தம் மற்றும் சுயவிவரத்தைச் சரிபார்ப்பதற்கான அம்சங்களுடன்  பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

’ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைத்த ஆப்’

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!

படைப்பாளர்

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய தொடர், தற்போது ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் நூலாக வந்திருக்கிறதுஅலையாத்தி வேர்கள் – ஏனாதிகள் என்கிற இந்தத் தொடருக்கான ஓவியங்களை இவரே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கியுள்ளார்.

Exit mobile version