காடார்ந்த கிழக்கு – 3
சான் அன்டோனியோ ரிவர் வாக் (The San Antonio Riverwalk)
ரிவர் வாக் என்பது ஒரு இலவசமான பொழுதுபோக்கு தளம். சென்னையில் கடற்கரைக்குப் போவது போல கிழக்கு அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகரில் ஆண்டின் அனைத்து நாட்களும் மக்கள் ‘ரிவர் வாக்’ செல்கிறார்கள். ஆறு, 15 மைல் நீளம் கொண்டது. வெள்ளம் வந்தால், இதன் உபரி நீர் 10 மைல் தொலைவில் உள்ள குவாடலூபே ஆற்றில் (the Guadalupe River) கலக்கிறது. ஆற்றின் ஆழம் 2 முதல் 24 அடி வரை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி முதல் வாரத்தில், ஆற்றின் தண்ணீர் முழுவதையும் வடிய விட்டு, ஆற்றை சுத்தப்படுத்தி, மீண்டும் தண்ணீர் நிரப்புகிறார்கள். இதற்கு அவர்கள் நான்கு நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
சான் அன்டோனியா, சமீபத்தில் ஜூன் பதினொன்றாம் நாள், கொரோனா நிவாரண நிதியாக சென்னை நகரத்திற்கு பத்தாயிரம் டாலர் கொடுத்துள்ளது. இவ்வாறு சென்னைக்கும் சான் அன்டோனியாவிற்கும் இடையே நெருங்கிய உறவு இருந்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில், (AUGUST 24, 2021) சென்னை வார விழாவில், சான் அன்டோனியோ ஆற்று ஆணையத்தின் இயக்குனர் கொலின் ஸ்வைன் (Steven Schauer, Director of San Antonio River Authority), சான் அன்டோனியோ மற்றும் சென்னை நீர்வழி குறித்து “எதிர்காலத்தில் சென்னை மற்றும் சான் அன்டோனியோ எப்படி ஒத்துழைக்கலாம் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்”, என்றிருக்கிறார்.
ஆற்றின் இருகரையிலும், உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், திரை அரங்கங்கள், மற்றும் வேறு பல கட்டடங்கள் உள்ளன. இரவுகளில் வண்ண விளக்குகளின் அலங்காரத்துடன், ஆங்காங்கே இலவசமாக ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சான் அன்டோனியோவில் இல்லாத கடல், சென்னையில் இருக்கிறது. அதனால், இதே போல அல்ல இதை விட மேலான சுற்றுலா தளமாக சென்னையில் நாம் கொண்டு வரலாம்.
கட்டணத்துடன் கூடிய 35 நிமிட படகு சவாரி உண்டு. இதனால் அமெரிக்காவின் வெனிஸ் என்று சான் அன்டோனியோ அழைக்கப்படுகிறது.
நிகழ்ச்சிகள், உணவு என அனைத்திலும் மெக்ஸிகன் பண்பாடு தூக்கலாக நிற்கிறது. நிரம்பி வழிகிறது.
அமெரிக்காவின் கோபுரம் (The Tower of the Americas)
அமெரிக்காவின் கோபுரம் சான் அன்டோனியோவில் அமைந்துள்ள 750 அடி (229 மீட்டர்) கோபுரம். இது 1968 உலக கண்காட்சியான ஹெமிஸ்ஃபேர் ’68 (HemisFair ’68) இன் தீம் கட்டமைப்பாக கட்டப்பட்டது.
லாஸ் வேகாஸ் ஸ்ட்ராடோஸ்பியர் டவர் (the Las Vegas Stratosphere Tower) கட்டி முடிக்கப்பட்ட 1996 வரை, இதுதான் அமெரிக்காவின் மிக உயரமான கோபுரமாக இருந்தது. நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் உண்டு. கோபுரத்தின் முதல் தளத்தில் 4-டி திரையரங்கு உள்ளது. குறும்படங்கள் ஒளிபரப்புகிறார்கள். கட்டணமில்லாமல் பார்க்கலாம்.
கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் சுழலும் உணவகம் உள்ளது. ஆனால் நம்மால் அது சுழன்று கொண்டிருக்கிறது என்பதை உணர முடியாது. அந்த அளவிற்கு மிக மெதுவாக சுழலுகிறது. இங்கு சிறிய அளவிலான திருமண விருந்துகளும் நடைபெறுகின்றன. தன்னைத்தானே ஒரு சுற்று சுற்றுவதற்கு 1-1 ½ மணி நேரம் ஆகிறது. மேல் தளத்தில், டெக்சாஸின் ஆறு கொடிகளைப் பற்றிய வரலாற்று சுவரோவியங்களைக் காணலாம்.
உயரமான இடத்தில் இருந்து எந்த ஊரைப் பார்த்தாலும் அழகு தான். அதுவும் அழகான ஊரைப் பார்த்தால் இன்னும் அழகு. பகலில் ஒரு அழகு; இரவில் ஒரு அழகு. சூரியன் மறையும் தோற்றம் அழகோ அழகு. தூரத்தில் செல்லும் சரக்கு ரயில் இன்னும் அழகு. அந்த ரயில்கள், 100-120 பெட்டிகள் கொண்டனவாக மிக நீளமாக இருக்கின்றன. ஒரு இடத்தைக் கடக்க ஏறக்குறைய நான்கு நிமிடங்கள் ஆகின்றன. அவ்வளவு நீளமாக இருக்கிறது இங்குள்ள சரக்கு ரயில்.
சான் அன்டோனியோவில், டெக்சாஸ் குடியரசின் முதல் தலைவர் சாம் ஹூஸ்டன் பெயரில் உள்ள சாம் ஹூஸ்டன் கோட்டை (Fort Sam Houston), ஸ்பானிஷ் ஆளுநரின் அரண்மனை, (நேஷனல் ஜியோகிராஃபிக் சொசைட்டி (National Geographic Society) இதை “சான் அன்டோனியோவின் மிக அழகான கட்டிடம்” என்று குறிப்பிடுகிறது), மெக்னே ஆர்ட் மியூசியம் (The McNay Art Museum), விட்டே அருங்காட்சியகம் (Witte Museum), பிராக்கென்ரிட்ஜ் பூங்கா (Brackenridge Park), 1874 இல் நிறுவப்பட்ட கோயில் பெத்-எல் யூத தொழுகைக்கூடம் (temple Beth-El, synagogue) போன்ற பல இடங்களும் இருக்கின்றன.
மெக்னே ஆர்ட் மியூசியம், மெக்னேயின் (Marion Koogler McNay) என்ற ஓவியர் வீடு அவரது இறப்பிற்குப் பின் சான் அன்டோனியோ நகர அருங்காட்சியகத்திற்காக வழங்கப்பட்டது. விட்டே அருங்காட்சியகம், பெருந்தொகை வழங்கிய ஆல்ஃபிரட் ஜி. விட்டே என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது. இவ்வாறாக நகர வளர்ச்சியில் பலரின் பங்களிப்பு உள்ளதை அறிய முடிகிறது. மேலும் Six flags Theme Parks (டெக்சாஸின் ஆறு கொடிகளைப் பற்றிய வரலாற்றுப் பெயர்) , தாவரவியல் (The San Antonio Botanical Garden) பூங்கா, விலங்குகள் சரணாலயம், the Japanese Tea Garden, the Sunken Garden Theater என பல இடங்கள் உள்ளன.
பெரும்பான்மையான இடங்கள், அருகருகில் தான் உள்ளன. அமெரிக்காவின் கோபுரம் பார்க்க சூரியன் மறைந்தும் மறையாத மாலை நேரம் சென்றால், பகல் தோற்றம், சூரியன் மறையும் தோற்றம், இரவின் தோற்றம் என இரண்டையும் பார்க்கலாம். ரிவர் வாக் இரவு நேரத்தில் பார்க்க வேண்டிய இடம். மற்ற இடங்களைப் பகலில் பார்க்கலாம். கோடை காலத்தில் இங்கு பகல் மிக நீளமானது. குளிர் காலத்தில், இரவு மிக நீளமானது. அதைக் கணக்கிட்டு திட்டங்கள் அமைத்துக் கொண்டால், 2-3 நாட்கள் பார்க்கத் தகுந்த அழகான ஊர் சான் அன்டோனியோ.
பயணிப்போம்…
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.