Site icon Her Stories

பெண் ஓவியம்

“தெருக்களில் வியாபாரம் செய்யும் பெண்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். சேலையை வரிந்து கட்டுவது தொடங்கி பொது இடங்களில் தனக்கான இடத்தை லாவகமாக எடுத்துக் கொள்வது வரை என அவர்களிடம் உள்ள இயல்பான துணிவு, எதையும் எதிர்கொள்ளும் சமயோசிதம் கண்டு வியக்கிறேன். அதிலும் முதிய பெண்கள் காலை நீட்டியும், ‘அசால்ட்டாகவும்’ அமர்வதை ரசிக்கிறேன். ‘பெண் பார்வையில்’ அவர்கள் குறித்து நாம் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்.”

“கலைத் துறையோ அவர்களைத் தொடர்ந்து ‘பொருளாகவே’ பார்க்கிறது. அவர்களது மிடுக்கு+இயல்பு+பொது இடங்களில் இயங்க வேண்டும் என்ற முனைப்பு போன்றவை அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை. பெரும்பாலும் முதிய பெண்களை நீங்கள் ஓவியங்களில் காணமுடியாது; அவர்களை விட ‘கொழுகொழு’ பெண்களே அதிகம் கவனப்படுத்தப்படுகிறார்கள். (சலவை செய்யும் பெண்கள் ஓவியம் ஒன்று நினைவுக்கு வருகிறது). ஆணாதிக்க பார்வையும், வர்க்க பார்வையும் கூட கலையில் இந்தப் பெண்களுக்கான இடத்தை மறுத்து வருகிறது”, என்று சொல்கிறார் Archestudio நிறுவனத்தின் டிசைன் இயக்குனர், ஓவியக் கலைஞருமான வெண்ணிலா. இந்த வாரம் கலை முற்றம் ஓவியத் தொகுப்பில், வெண்ணிலா வரைந்த சென்னை சுற்றுப்புறங்களில் உள்ள பெண் வியாபாரிகள் ஓவியங்கள் இடம்பெறுகின்றன.

கடற்கரையில் ஒரு அக்கா
சேத்துப்பட்டு பாலம் அருகே டீக்கடை ஒன்றில் அரட்டை அடித்தபடி டீ குடிக்கும் உழைக்கும் பெண்கள். ஷில்பா ஃபாட்கே தன் ‘ஒய் லாய்ட்டர்’ (Why Loiter?) நூலில் முன்வைக்கும் கேள்வி போல, வீட்டுக்கு வெளியே செல்லும் பெண் ஏதோ ஒரு குறிப்பிட்ட ‘காரணத்துடன்’ மட்டுமே வெளியேற முடிகிறது. இலக்கின்றி அலைவது பெண்களுக்கு சாத்தியமில்லை!
பூக்காரம்மா
குழந்தையுடன் பயணிக்கும் அம்மா
காசிமேடு மீன் சந்தையில் மீன் விற்கும் பெண்கள். ஆண்டாண்டு காலமாக இந்த கடற்புரத்து பெண்கள் செய்யும் தொழில் மீன் வியாபாரம். அவர்களது துணிவு, உடல் மொழியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பூக்கார அக்காக்களுக்கும் இவர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே உடல்மொழியை நீங்கள் காணமுடியும்!

ஓவியக் கலைஞர்:

தி. வெண்ணிலா

சென்னை நகரின் மூத்த கட்டிடக்கலை நிபுணர்களில் ஒருவர்; பரந்துபட்ட அனுபவம் கொண்டவர். தனது ஓய்வு நேரத்தில் டிஜிட்டல் ஸ்கெட்சுகள் வரைந்துவருகிறார். பெண்களை முன்னிறுத்தி இவர் வரைந்த ஓவியங்கள் பெருமளவு கவனம் பெற்றவை.

Exit mobile version