இந்தக் கேள்வியைக் கொஞ்சம் உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள்; குறைந்தபட்சம் ஒரு நிமிடம் கண்ணைமூடி, உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது உங்கள் வாழ்க்கையில் கடந்து சென்ற பெண்களின் விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது யாரால் என்று யோசித்துப் பாருங்கள்?
நீங்களோ அல்லது உங்கள் வாழ்க்கையில் உடன் பயணம் செய்யும் பெண்களோ அவர்களின் விருப்பங்களைத் தைரியமாகக் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்ல முடிந்திருக்கிறதா?
“இது என் விருப்பம்; இதை நான் செயல்படுத்த விரும்புகிறேன்” என்று பெண்களால் எல்லா இடங்களிலும் சொல்லிவிட முடியுமா? இந்த வார்த்தைகளைக் கேட்கும்போதே அது திமிரின் அடையாளமாகத்தான் பார்க்கப்படுகிறது நம் சமூகத்தில்.
படிப்பு, வேலை, திருமணம் என்று எதுவானாலும் பெண்களின் விருப்பத்தின் பேரில் அது நடப்பதில்லை. அது எப்போதுமே அறிவுரை என்கிற பெயரில் திணிக்கப்படுவதாகத்தான் இருக்கிறது. அதையும் மீறி தன் விருப்பத்தை வெளிப்படுத்துபவர்கள், செயல்படுத்த முனைபவர்கள் எல்லாரும் திமிர் பிடித்தவர் என முத்திரை குத்தபடுகிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினீரிங் படிக்க இடம் கிடைத்த பெண்ணின் பெற்றோரிடம், “சென்னைக்கு எல்லாம் போனா பொண்ணுங்க கெட்டுப் போயிடுவாங்க, பேசாம உள்ளூர்ல இருக்கற காலேஜிலே சேர்த்துடுங்க” என்று அழைக்காமலே அறிவுரை சொல்லப்படுவது எதனால்?
எரிச்சலூட்டும் இந்த அறிவுரையைக் கூறுபவர்களின் வாயை அடைக்க வழி தெரியாமல், “இல்லை, நான் அங்குதான் சென்று படிப்பேன்” என்று ஒரு பெண் பதிலுரைத்தால் என்ன ஆகும்? “சரியான திமிர் பிடிச்ச பெண்ணாக வளர்த்திருக்கிறார்கள்” என்று அடுத்த ஆயுதம் பறந்து வரும்.
பெண்கள் என்றாலே அடுத்தவர் பேச்சை கேட்டு நடக்க வேண்டியவர்கள்தான், அவர்கள் சுயமாக முடிவெடுக்கத் தகுதியுடையவர்கள் அல்ல என்று ஒரு பிம்பம் மிக வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது ஏன் பெண்களின் வாழ்க்கையின் மீது மட்டும் அவர்களுக்கு அவ்வளவு அக்கறை? அடுத்த வீட்டுப் பெண்ணின் வாழ்க்கையைக்கூடத் தன் வாழ்க்கையாக யோசித்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்களின் நல்லெண்ணத்தை(?) மீறி, பெண்கள் தங்களுக்கு விருப்பமான முடிவுகளை எடுக்கும்போது திமிர் பிடித்தவர் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.
அப்படித் தங்கள் விருப்பப்படி எடுத்த முடிவுகளில் பெண்கள் ஏதேனும் பிரச்னைகளை எதிர்கொண்டாலோ தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தாலோ மீண்டும் இந்த நலம் விரும்பிகள் தலை தூக்குவார்கள். நான் அப்பவே சொன்னேனே கேட்டியா என்று ஆலாபனை செய்வார்கள்.
பெண்கள் விருப்பப்படி நடப்பது ஏன் ஒரு குற்றமாகவே பார்க்கப்படுகிறது?
தன் விருப்பத்தை முன்னிலைப்படுத்துவதைத் தவறானதாக அறிவுறுத்தி வளர்க்கப்பட்டதன் விளைவுதான் இது. ஏன் அப்படி அறிவுறுத்தப்பட்டார்கள்? ஏனெனில் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் அப்படித்தான் அறிவுறுத்தப்பட்டார்கள்.
கட்டமைக்கப்பட்ட தளத்தில் மட்டும் பெண்கள் இயங்கினால் போதும் என்கிற எதிர்பார்ப்பு சமுதாயத்தில் உள்ளது. பெண்கள் புதிதாகச் சிந்திப்பதையோ, ஏன் என்று கேள்வி எழுப்புவதையோ அது முற்றிலுமாக வெறுக்கிறது. இப்படிக் கட்டமைக்கப்பட்ட ஒரு தளத்தில் இயங்குவது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. யார் அந்த ’அவர்கள்?’ தங்கள் விருப்பப்படி பெண்கள் இயங்குவதை யாரெல்லாம் தடுக்கிறார்களோ, யாரெல்லாம் பெண்களுக்குத் திமிர் பிடித்தவர் என முத்திரை குத்துகிறார்களோ அவர்கள்தான்.
அடுத்த வீடு, தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று எல்லாத் தளங்களில் இருந்தும் உதாரணங்களைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு அப்படி நடந்தது; இவர்களுக்கு இப்படி நடந்தது; எனவே நாங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதுதான் நல்வழி என்று சொல்வார்கள். அது நிச்சயம் பெண்களின் முன்னேற்றத்திற்கான வழியாக இல்லாமல், முட்டு சந்துக்குள் கொண்டு செல்லும் வழியாகத்தான் இருக்கும்.
சுய சிந்தனையும் ஆக்கபூர்வமான செயல்களை முன்னெடுக்கும் திறமையும் கொண்ட பெண்களை உள்ளடக்கியதே ஆரோக்கியமான சமுதாயம். சமுதாய முன்னேற்றம் பற்றிய சிந்தனைகளும், பேச்சுகளும் எல்லாக் காலத்திலும் முன்னெடுக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களை அடிமட்டத்தில் தள்ளி மேலேறிச் செல்லும் எந்த ஒரு முன்னற்றமும் சரிவையே சந்திக்கும்.
பெண்களின் சுய மதிப்பு, சுய மரியாதை, சுய விருப்பம், சுய கவனிப்பு இவை எல்லாமே தற்பெருமை மற்றும் திமிரின் அடையாளமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், தன் விருப்பத்திற்கு ஏற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து, எல்லா வகையிலும் தன்னை நன்கு கவனித்துக் கொண்டு, தன்னைப் பற்றிச் சரியான மதிப்பீடுகளையும் மனதில் கொண்டு, சுய மரியாதையுடன் தலை நிமிர்ந்து முன்னேறிச் செல்லும் பெண்களைப் பார்த்து, “வாழ்ந்தா, அவங்களை மாறி வாழணும்” என்று உதாரணம் காட்டும் உலகம்.
கீழே உள்ள படத்தில், இரண்டு பெண் குழந்தைகளைக் கையில் பிடித்தபடி அமெரிக்க வீதியில் நிற்கும் இந்தப் பெண்மணியை நீங்கள் அவ்வளவாக அறிந்திருக்க மாட்டீர்கள்.
இந்தப் பெண்ணுக்கு 1955இல் டெல்லி யுனிவர்சிட்டியில் பி.எஸ்.ஸி ஹோம் சயின்ஸ் படிக்க இடம் கிடைத்தது. “சமைக்கவும் வீட்டை அழகுபடுத்தவும் விருந்தினர்களைப் பராமரிக்கவும் நீ படிக்கப் போகிறாயா?” என்று தந்தை கேட்கிறார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மூன்றாண்டு படித்து முடித்த பிறகு, 1958இல் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான விண்ணப்பத்திற்குத் தந்தையிடம் அனுமதி கேட்கிறார். “உனக்கு இடம் கிடைத்தால் நீ தாராளமாக அங்கு சென்று படிக்கலாம்” என்று சொல்லி விடுகிறார் தந்தை. பத்தொன்பது வயதில் குடும்பத்தினர் யாரும் இல்லாமல், தனியொரு பெண்ணாக, முதன்முறையாக வீட்டைத் தாண்டி, நாட்டைத் தாண்டி அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு கணமும் போராட்டக் களமே. படிக்க வந்திருக்கும் இடத்தில் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிச் செல்லாமல், நிறவெறிக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் பங்கேற்றார். புற்றுநோய் ஆராய்ச்சியில் முனைவர் பட்டமும் பெற்றார். படிப்பு, போராட்டம் என இருவழிகளிலும் பயணம் செய்யும் போது, தன்னுடன் கைகோக்கும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவரை விரும்பி மணம்புரிகிறார். குடும்பம், குழந்தை என்று வந்த பிறகும் போராட்டங்களைக் கைவிடாமல், குழந்தைகளையும் போராட்டக் களத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
அன்று குழந்தைகளுக்கான தள்ளுவண்டியில் படுத்தபடி தாயும் தந்தையும் பங்கேற்ற போராட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தை, இன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக வந்து நிற்பது அதிசயம் அல்ல. அது எந்த மந்திரத்தினாலும் நிகழ்த்தப்பட்டதல்ல. அது தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை. கடின உழைப்பின் அடையாளம்.
மேலே உள்ள போட்டோவில் நீங்கள் பார்த்தது, மகள்கள் கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் உடன் சியாமளா கோபாலன்.
இப்படித் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, அதற்கான உழைப்பையும் முழு மனதுடன் தரத் தயாராக இருக்கும் பெண்கள் வேலியிடும் சமூகத்தையே புறந்தள்ளி முன்னேறுகிறார்கள்.
(தொடரும்)
தரங்கிணி
எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.