அன்யோன்ய உறவின் (Intimate relationship) முக்கியத்துவம்
குடும்பத்திற்கான WHO கொடுக்கும் வரையறை: ‘இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் பிறப்பினாலோ திருமணத்தினாலோ அல்லது தத்தெடுப்பது மூலமாகவோ சேர்ந்து வாழும் அமைப்பு’ என்பதே.
ஆனால், மனரீதியான பிணைப்பை, உணர்வுரீதியான நெருக்கத்தைத் திருமணம் என்ற சடங்கு உருவாக்கிவிட முடியாது. இரு மனிதர்களுக்கு இடையேயான அன்பும் அன்யோன்யமும் மட்டுமே கொண்டுவர முடியும்.
திருமண உறவாக இருந்தாலும் சரி, லிவ்விங் டுகெதர் அல்லது காதல் உறவாக இருந்தாலும் சரி, அன்யோன்யமான உறவுகள் அல்லது நெருக்கமான உறவுகள், மிகவும் கஷ்டமான ஒன்றாக, சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கின்றன. நிறைய பேர் வாழ்வில் காண கிடைக்காத ஒன்றாகவும்கூட இருக்கின்றன.
இந்த உறவுகளின் சிறப்பும் தனித்தன்மையும் என்னவென்றால், நம்மையும் மீறிய உணர்வுகளையும் நம்மையும் மீறி உணர்வுகள் நம்மிடமிருந்து வெளிப்படுவதையும் சொல்லலாம்.
ஒருமுறை ஆராய்ச்சியாளர்கள் குடும்ப உறவில் ஏற்படும் பிணைப்பை, உணர்வு ரீதியான மாற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு தாய் முயலையும் இரண்டு குட்டி முயல்களையும் எடுத்துக்கொண்டார்கள்.
முதலில் இந்த மூன்று முயல்களையும் ஒரு வாரம் தனித்தனியே வைத்தார்கள். ஒரு வார இடைவெளிக்குப் பிறகு, அந்த அம்மா முயலின் முன்னால் ஒரு குட்டி முயலை துன்புறுத்தினார்கள். அந்த அம்மா முயலின் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் மிக அதிகமானது.
மீண்டும் ஒரு வாரம் கழித்து இன்னொரு குட்டி முயலை, தாய் முயலிடமிருந்து வெகுதூரத்தில் வைத்து அந்த ஆராய்ச்சியாளர்கள் காயப்படுத்தினார்கள். வெகுதூரத்தில் இருக்கும் தனது குட்டி முயலுக்குத் துன்பம் நிகழ்ந்த போது, அந்த அம்மா முயலின் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிக அளவு அதிகமானது.
இதே மாதிரி நம்மையும் மீறிய உணர்வுகளை, நம்மையும் மீறி நாம் செய்யும் ஒரு சில செயல்களை, இந்த நெருக்கமான உறவுகளில், காதல் உறவுகளில் (intimate relationships) பார்க்கலாம்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஏன் அவ்வளவு எளிதாக அமைவது இல்லை?
தன்னுடைய முப்பத்தி எட்டு வயதில், காதல் உறவில் இருந்து வெளியே வந்தவர்தான் சரவணன். இப்போதுதான் சுதந்திரமாக இருக்கிறேன். பிடித்ததைச் செய்கிறேன். தனியாக வாழ்வதுதான் இன்பமாக உள்ளது என அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.
அதே சரவணன் சில நேரம் இப்படியும் சொல்வார்: “ஆபிஸ் முடிந்து வரும்போது, கதவைத் திறந்து நுழையும்போது வெறிச்சென்று இருக்கிறது. ஊர் சுற்றப் போனால்கூட, முடித்துவிட்டு வரும்போது மிகவும் வெற்றிடமாக உள்ளது. ஏதாவது கவலையாக உள்ளபோது. அதைப் பகிர்ந்துகொள்ளக்கூடப் பக்கத்தில் யாரும் இல்லாததுபோல் இருக்கும்.”
ஒருமுறை அவரிடம் உங்களுக்காக ஒரு துணையை ஏற்படுத்திக்கொள்ள எது தடையாக இருக்கிறது எனக் கேட்டேன். இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு சொன்னார்.
1. என்னுடைய இப்போதைய சுதந்திரம் பறிபோய் விடுமோ என்று பயமாக இருக்கிறது.
2. வரும் இன்னொரு நபருக்காக என்னை, நான் வாழுமிடத்தை நிறைய மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பயமாக இருக்கிறது.
தான் நினைத்தபடி எல்லாம் இருக்க வேண்டும் என்ற ஆசையும் எதற்காகவும் அதை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்ற எண்ணமும், நான் வாழுமிடத்தைகூட அட்ஜஸ்ட் செய்ய மாட்டேன் என்றால் தனியாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது தானே என்றேன்.
இருக்கலாம்தான். ஆனால், எப்போதுமே தனிமையில் இருக்கவும் சங்கடமாக இருக்கிறது. நண்பர்களில் பலர் திருமணம் முடிந்து குடும்ப வாழ்வில் பிஸியாகிவிட்டார்கள்.
திருமண வாழ்வும் நன்றாகத்தான் இருக்குமோ என்றும் சில நேரங்களில் தோன்றுகிறது. என்னைப் பற்றி என்னுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள யாரும் அருகில் இல்லை என்றபோது கவலை என்னைச் சூழ்ந்துகொள்கிறது என்றார்.
இவர்களுக்கு உண்மையில் என்னதான் பிரச்னை? தனியாக இருப்பதும் பிடிக்கவில்லை. குடும்பமாக வாழ்வதும் பிடிக்கவில்லை. தனிமைக்கும் பயம், உறவில் இருப்பதற்கும், திருமணத்திற்கும் பயம்.
ஆனால், இந்தக் குழப்பம் சாதாரணமான ஒன்றுதான். ஏனென்றால், நாம் பார்த்த அல்லது எதிர்கொண்ட விஷயங்கள், குறிப்பாக உறவுகளில் சந்தித்த சரிவுகள் பயத்தை மனதில் ஏற்படுத்தி அன்யோன்ய உறவுகள் வேண்டாம் என முடிவெடுக்க வைத்திருக்கும்.
ஆனால், நாம் காலம் காலமாக வாழ்ந்துவந்தது தனிமையில் இல்லைதானே? எனவே நம்மையும் மீறிய ஓர் ஈர்ப்பு உறவுகளிலும், உறவுமுறைகள் மீதும் அதிலும் குறிப்பாக இன்டிமேட் ரிலேஷன்ஷிப் மீது இருக்கும். இதை, ஃபுருஸ் லிப்டன் என்ற உயிரியலாளர் அழகாகச் சொல்வார், “மனிதர்கள் தனியாக வாழ்வதற்கானவர்கள் அல்ல. பிணைப்பு ஏற்படுத்திக்கொள்வதற்கான உயிரியல் ரீதியான ஒரு உந்துதல், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அடிப்படையில் இருந்துகொண்டே இருக்கும்.”
யோசித்துப் பார்த்தால், உண்மையில் இங்கு அன்யோன்ய உறவுகள் வேண்டாம் எனச் சொல்வதற்குக் காரணம், உறவினால் வரும் அன்யோன்னியம் கடைசி வரை நிலைக்காது, குறைந்த நாள்களில் கைவிட்டுப் போய்விடும் என்ற பயம்தான்.
ஏனென்றால் மனிதர்களுக்குக் காதலிப்பது, காதலிக்கப்படுவது, அன்யோன்யமான உறவில் இருப்பது, இளமையிலும் முதுமையிலும் எல்லாப் பருவ வயதுகளிலும் பிடித்தே இருக்கிறது.
ஆக இந்த அடிப்படையான உயிரியல் தூண்டுதலும் அன்யோன்யத்தின் மீதான ஆசையும் ஒருபுறம் இழுக்க, மறுபுறம் நம் மூளை சொல்லும் வேண்டாம் என்ற தீர்வுக்கும் இடையே எழும் குழப்பம்தான்.
சிலருக்குக் குழப்பம் குறைவு. ஆனால், தேர்வு செய்வதில் சிக்கல். திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்த நண்பர் ஒருவர், உங்கள் துணைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவ்வாறு பதில் அளித்தார்.
பார்பதற்கு சூப்பராக இருக்க வேண்டும்.
நன்றாக படித்திருக்க வேண்டும்.
பணக்காரக் குடும்பமாக இருக்க வேண்டும்.
நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்.
சமையல் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.
என் குடும்பத்தினருடன் ஒத்துப்போக வேண்டும்.
எனக்கு முழு ஆதரவாக, நான் தவறு செய்தாலும், எனக்கு ஆதரவாக இருந்த அன்பு செய்ய வேண்டும். நான் சொல்வது அனைத்தும் அப்படியே கேட்க வேண்டும்.
எனக்குக் கொஞ்சம் ஷார்ட் டெம்பர்; எனவே அந்த நேரத்தில் அமைதி காக்க வேண்டும்.
(ஓ! பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் போல!)
அவர் மனதில் இருந்ததை, அப்படியே சொன்னதற்குப் பாராட்டிவிட்டு அவரிடம், இந்த லிஸ்டில் உள்ளபடி நீங்கள் இருக்கிறீர்களா எனக் கேட்டவுடன், பதில் இல்லாமல் முழித்தார். ‘அப்படி நீங்கள் கேட்பவை எல்லாம் அடங்கிய ஒரு டிசைன் இந்த உலகத்தில் தேடுவதை விட்டுவிடலாம்; வேண்டுமானால், நீங்கள் அந்த டிசைனாக இருந்துகொள்ள முயற்சி செய்யலாம். எப்போதும் லிஸ்டில் மிக முக்கியமான மூன்றிலிருந்து ஐந்து விஷயங்களை வைத்திருக்கலாம்’ என்று சொன்னேன்.
இன்னும் சிலர் அடைந்தால் மகாதேவி என்ற ரேன்ஞ்சில், தன்னைச் சட்டையே செய்யாத ஒருவரை நினைத்து வருடக் கணக்கில் உருகிக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்தாலும் இதுதான் தோன்றும். ஓ! பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் போல!
இந்தப் பிரபஞ்சத்தில் இத்தனை கோடி, மக்கள் இருக்கும் போது தனிமையில் வாழ வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? குழப்பங்களையும் பிடிவாதங்களையும் ஓரமாக வைக்கலாமே?
நீங்கள் குடும்ப வாழ்வில் நுழையாமல் இருந்தால், சவால்கள் எதுவும் இல்லாமல் வாழ்வே இன்பமயமாக ஆகிவிடுமா என்ன? ஆனால், அன்யோன்யமான உறவுகள் வாழ்வில் கண்டிப்பாக இன்பத்தைச் சேர்க்கும்.
நான் தனியாக இருப்பதால்தான், இவ்வளவு சாதிக்க முடிகிறது என்பதெல்லாம், நாம் சொல்லிக்கொள்ளும் சமாதானங்களே. உண்மையில் இயற்கையாக அமைந்த பிணைப்பிற்கான உந்துதலை ஒத்துக்கொள்ளாமல் இருத்தல் அல்லது உறவுகளைக் கையாளத் தெரியாத இயலாமைகளே.
எனவே, அது திருமணமானலும் சரி, லிவ்விங் டூகெதர் அல்லது காதல் உறவானாலும் சரி. உங்களுக்கு ஏற்புடையதை வாழ்வில் வரவேற்கலாமே?
வாழ்க்கையின் எந்த அம்சமானாலும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதை எப்படிக் கையாண்டு கொண்டிருக்கிறோமோ, அதேபோல் அன்யோன்ய உறவுகளில் வரும் சவால்களையும் மிக எளிதாகக் கையாண்டு வாழ்வைக் கொண்டாடலாமே!
(தொடரும்)
படைப்பாளர்:
ஜான்சி ஷஹி
மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.