டாக்டர் கார்திகேஷ் என்னை மூன்று மாதங்கள் கழித்து வரச் சொன்னார். ஆனால், செக்கப்புக்கு வருமுன் மேமோகிராம், மார்பக எக்ஸ் ரே, வயிறு ஸ்கேன், ரத்தப் பரிசோதனை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வரச் சொன்னார்.
நானும் ரபீக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்குச் சென்றோம். டாக்டர் அவற்றைப் பார்த்துவிட்டு, மிக நன்றாக இருக்கிறீர்கள் என்று சொல்லி, உடல் பரிசோதனை செய்தார். மேலும் நீங்களே மார்பகச் சுயபரிசோதனை செய்கிறீர்களா என்று கேட்டார். ஆமாம் என்றேன். இனிமேல் எங்கும் பயணம் செய்யலாம் என்றார். பல் வலி என்றதும் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
மகிழ்ச்சியாக வீட்டுக்குத் திரும்பினேன். நீண்ட காலத்துக்குப் பிறகு தம்பி மகள் வனிதாவுடன் சென்னைக்குச் சென்றேன். கண் பரிசோதனைக்குச் சென்றேன். புற்றுநோயால் என் கண்களில் உள்ள ரெட்டினா பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். நான் டாக்டர் கார்திகேஷைத் தொடர்புகொண்டேன். பொதுவாக புற்றுநோயின் போது ரெட்டினாவுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றார். கோவை அரவிந்த் கண் மருத்துவ மனைக்குச் செல்லச் சொன்னார். அங்கு கண்ணில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றார்கள்.
தாய்ச்சி கற்றுக்கொண்டால் எலும்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள், நீங்கள் சேருகிறீர்களா என்றார் கோகுல். எனக்கும் ஏதாவது கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அடுத்த நாளே சென்றோம். ஓரிரு நாட்களில் தாய்ச்சியின் முக்கியத்தும் எனக்குப் புரிய ஆரம்பித்தது. என் முன்னாள் மாணவர் ரவி என்பவரே தாய்சி மாஸ்டராக இருந்தார். அவரும் சிவக்குமார் மாஸ்டரும் எனக்குப் பயிற்றுவித்தனர்.
நான் பலவீனமாக இருந்ததால் எனக்குப் பயிற்சி செய்வது கடினமாக இருந்தது. பேசுவேன், வேலை செய்வேன். ஆனால், தொடர்ந்து ஓர் இடத்தில் நிற்க முடியாது. டாக்டரும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், நிற்பதில் கஷ்டம் இருக்கும், கால் வலிக்கும், எனவே நிற்பதைத் தவிர்த்துவிடுங்கள் என்றார். எனவே முதலில் தாய்சி பயிற்சி செய்யும்போது ரவி மாஸ்டரும் சிவா மாஸ்டரும் என்னைக் கையைப் பிடித்து நடத்திச் சென்றே சொல்லிக் கொடுத்தனர்.
சட்ட மன்றத் தேர்தல் வந்துவிட்டது. எங்கள் தோழர் ராஜமாணிக்கம் தேர்தலில் நின்றார். அவர் எனது மாணவரும்கூட. எனவே, நான் மார்ச் மாதம் பழனியில் ராஜமாணிக்கம் தோழருக்காக ஆட்டோவில் சென்று பிரச்சாரம் செய்தேன். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் பிரச்சாரம் செய்தேன். அதன் பின்னர் திண்டுக்கல் சென்று, தோழர் பால பாரதிக்குப் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
மே முதல் தேதி உழைப்பாளர் தினத்தன்று பல இடங்களில் கொடி ஏற்றினேன். பொதுக் கூட்டத்தில் உரையாற்றவும் செய்தேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
புற்றுநோய் வாழ்வில் ஓர் அத்தியாயமே தவிர, வேறு ஒன்றும் இல்லை. இருக்கும் ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இந்தப் புற்றுநோய் என்பது நாம் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு விபத்துதான். விபத்து ஏற்பட்டால், வாழ்க்கை முழுவதும் அதையே நினைத்துக்கொண்டா உட்கார்ந்திருக்கப் போகிறோம்? அதையே நினைத்துக்கொண்டிருந்தால் சந்தோஷமான தருணங்களை இழந்துவிடுவோம்.
புற்றுநோய் வந்த பிறகும் வாழ்க்கை உண்டு; அதற்குப் பின்னரும் சந்தோஷம் உண்டு; அதற்குப் பின்னரும் ரசனையும் உண்டு.
புற்றுநோய் சிகிச்சை முடிந்த பின்னரும்கூட, சின்னச் சின்னப் பிரச்னைகள் வரும். அதை எல்லாம் நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். எந்த வயதிலும் பிரச்னையே வராமல் வாழ்க்கையை ஓட்டவே முடியாது. புற்றுநோய்க்குப் பின்னர் வரக்கூடிய சின்னச் சின்னப் பிரச்னைகளுக்காக நாம் மனம் சோர்வடையவே கூடாது; துணிவுடன் எதிர்கொள்ளவே வேண்டும். நான் அப்படித்தான் சந்தித்தேன்; சந்தித்துக்கொண்டு இருக்கிறேன். இல்லையென்றால் நம் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்துவிடும். நேர்மறை சிந்தனைதான் தற்காப்பு சக்தியை உருவாக்கும்.
ஹீமோதெரபி கொடுத்தததன் விளைவாக எலும்பில் ஏற்பட்டுள்ள கால்சியம் சரிவுதான் வலிக்குக் காரணம் என அறிந்த பின்னர் என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். அதாவது புற்றுநோயின் போது கொடுத்த வேதி சிகிச்சையினால், எலும்பில் உள்ள கால்சியம் கரைந்து வெளியேறும். கால்சியம் குறைந்தால் பயங்கரமான வலி ஏற்படும். பெண்களுக்கு வயதானால் ஏற்படும் கை கால் வலி என்பது இப்படி எலும்பில் கால்சியம் குறைபாட்டினால்தான் ஏற்படுகிறது. எனக்கு கொஞ்சம் அதிகமாக வெளியேறி இருக்கிறது கால்சியம். எனவே வலியும் அதிகம்.
கீமோதெராபியினால், கால்சியம் எலும்பிலிருந்து கரைவதால், எலும்பில் மணல் துகள் போல சன்னமான ஓட்டைகள்உருவாகும். இது கிட்டத்தட்ட ஆஸ்டியோபோராசிஸ் (Osteoporosis). கால்சியம் தேய்மானத்தால் ஏற்படும் நோய் வந்தவங்களுக்கு எப்படி வலி இருக்குமா, அதே போலவே புற்றுநோய் சிகிச்சை முடிந்த பின்னரும் வேதி சிகிச்சையால் ஏற்பட்ட கால்சியம் குறைவால் (எலும்பில் உள்ள கால்சியம் கரைவதால்) இப்படிப்பட்ட கடுமையான உடல் வலி, கை கால் வலி ஏற்படும்.
பிப்ரவரியில் மொட்டை போட்டேன். நான் பணியாற்றும் தொழிற்சங்கத்தின் சிகைத்தொழிலாளர் சங்க செயலர் நாட்றாயன்தான் எனக்கு மொட்டை போட்டார். அந்த மொட்டை என் உருவத்தை அடியோடு மாற்றியது. என்னிடம் படித்த என் மாணவர்கள் 20 பேர் ஒருநாள் மதியம் கூட்டமாக வந்து என்னைப் பார்த்தனர். அவர்கள் எல்லோரும் சுமார் 8ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் படித்தவர்கள்.
(இன்னும் பகிர்வேன்)
படைப்பாளர்:
மோகனா சோமசுந்தரம்
ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.