கீமோதெரபி மருந்தால் பக்கவிளைவுகள் இருந்தாலும், புற்று நோயிலிருந்து ஒருவரைக் காப்பாற்றவும், புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை முடிந்து அவர்களை நீண்ட நாட்கள் வாழவைக்கவும், கீமோதெரபி தவிர வேறு சிகிச்சை முறைகளே இல்லை என்பதுதான் உண்மை. எனவேதான் , Oncologists எனும் கீமோதெரபி கொடுக்கும் மருத்துவர்கள், ஒரு மனநல மருத்துவர் உதவியுடன்தான் கீமோதெரபி கொடுப்பார்கள். அவர் நமக்கு கீமோதெரபி தொடர்பாக, இதன் நன்மைகளையும் பக்க விளைவுகளையும் அவற்றால் நாம் எப்படிப் புற்றுநோயில் இருந்து மீளப்போகிறோம் என்றும் தெளிவாகப் பேசுவார்.
இந்த கீமோதெரபி மருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால்தான் இதனை பல நாட்கள் இடைவெளி விட்டுக் கொடுப்பார்கள். ஏனெனில் இடையில் சாதாரண செல்கள் நன்றாகச் செயல்பட சில நாட்கள் தேவைப்படும். இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இரு வேறு நபர்களுக்கு ஒரே வகையான புற்றுநோய் , அதாவது நுரையீரல் புற்று நோய் இருக்கலாம். ஆனால், இருவருக்கும் ஒரே வகையான கீமோ தெரபி இருக்காது. ஒவ்வொருவருக்கும் அவரின் தன்மை பொறுத்துப் புற்றுநோய் சிகிச்சை வேறுபடும். ஒரேவகை புற்றுநோய் எத்தனை பேருக்கு வந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தன்மை பொருத்து சிகிச்சை தன்மை வேறுபடும். இரண்டு புற்றுநோய்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு தனிப்பட்ட புற்றுநோய்க்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளன. ஒரே வகைப் புற்றுநோயும்கூட அவற்றின் தன்மைகள் பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கலாம்.
கதிர்வீச்சு சிகிச்சை:
கதிர்வீச்சு சிகிச்சையானது புற்றுநோய் செல்களைக் கொல்லுவதற்கு எக்ஸ்-கதிர்கள் அல்லது புரோட்டான்கள் போன்ற உயர் ஆற்றல் கொண்ட ஆற்றல் கற்றைகளைப் பயன்படுத்தும் சிகிச்சை. இந்தக் கதிர்வீச்சு சிகிச்சையானது உடலுக்கு வெளியே உள்ள ஓர் இயந்திரத்திலிருந்து (வெளிப்புற கற்றை கதிர்வீச்சு) வரலாம் அல்லது அதனை உடலுக்குள்ளேயே வைத்தும் சிகிச்சை தருவார்கள். இதனை பிராச்சிதெரபி (brachytherapy) என்று அழைக்கின்றனர்.
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை முறை:
எலும்பு மஜ்ஜை என்பது நம் எலும்புகளுக்குள் உள்ள பொருள். முழங்கால், முழங்கை போன்ற எலும்பின் இணைப்பு இடங்களில் இது உள்ளது. ரத்த ஸ்டெம் செல்களிலிருந்து ரத்த அணுக்களை உருவாக்குகிறது. இந்தச் சிகிச்சை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த எலும்பு மஜ்ஜையை நன்கொடையாளரிடமிருந்து எடுத்தம் பயன்படுத்தப்படலாம்.
இம்யூனோதெரபி:
உயிரியல் சிகிச்சை என்றும் அறியப்படும் இம்யூனோதெரபி என்றும் அறியப்படும் இந்தச் சிகிச்சை, புற்றுநோயை எதிர்த்துப் போராட, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்துகிறது. புற்றுநோயானது நம் உடலில் கட்டுப்படாமல் உயிர்வாழ முடியும். ஏனெனில் நோயெதிர்ப்பு அமைப்பு அதை ஊடுருவும் நபராக அங்கீகரிக்கவில்லை. நோயெதிர்ப்பு சிகிச்சை என்பது நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோயை “பார்த்து” அதைத் தாக்க உதவும்.
ஹார்மோன் சிகிச்சை:
சில வகையான புற்றுநோய்கள் உடலின் ஹார்மோன்களால் தூண்டப்படுகின்றன. மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவை இவற்றில் அடங்கும். உடலில் இருந்து அந்த ஹார்மோன்களை அகற்றுவது அல்லது அவற்றின் விளைவுகளைத் தடுப்பதன் மூலம் புற்றுநோய் செல்கள் வளர்வதை நிறுத்தலாம். மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை முடித்த பின்னர் தொடர்ந்து 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு கொடுக்கப்படும் Tamoxifen மற்றும் Letrozole மருந்துகளின் சிகிச்சையும் ஒருவகை ஹார்மோன் சிகிச்சைதான்.
இலக்கு மருந்து சிகிச்சை:
இலக்கு மருந்து சிகிச்சையானது புற்றுநோய் உயிரணுக்களுக்குள் இருக்கும் குறிப்பிட்ட பகுதிகளின் மீது கவனம் செலுத்துகிறது, அவை உயிர்வாழ அனுமதிக்கின்றன.
Cryoablation:
இந்தச் சிகிச்சையானது குளிர்ச்சியுடன் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. கிரையோஆப்லேஷன் போது, மெல்லிய ஊசி (கிரையோபிரோப்) தோல் வழியாக நேரடியாகப் புற்றுநோய்க் கட்டிக்குள் செருகப்படுகிறது. திசுவை உறைய வைப்பதற்காக ஒரு வாயு கிரையோபிரோப்பில் செலுத்தப்படுகிறது. பின்னர் திசு உருக அனுமதிக்கப்படுகிறது. புற்றுநோய் செல்களை அழிக்க ஒரே சிகிச்சை அமர்வின் போது உறைதல் மற்றும் உருகுதல் செயல்முறை பல முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.
கதிரியக்க அதிர்வெண் நீக்கம்:
இந்தச் சிகிச்சையானது புற்றுநோய் செல்களை வெப்பப்படுத்த மின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இதனால் அவை இறக்கின்றன. கதிரியக்க அதிர்வெண் நீக்கத்தின் போது, மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியைத் தோல் வழியாக அல்லது ஒரு கீறல் வழியாகப் புற்றுநோய் திசுக்களில் செலுத்துகிறார். உயர் அதிர்வெண் ஆற்றல் ஊசி வழியாகச் செல்கிறது. சுற்றியுள்ள திசுக்களை வெப்பமாக்குகிறது, அருகிலுள்ள செல்களை அழிக்கிறது.
எக்ஸ்ரே கதிர்வீச்சு சிகிச்சையுடன் ஒப்பிடுகையில், புரோட்டான் சிகிச்சை பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது திசுக்களுக்கு கதிர்வீச்சு சேதத்தின் குறைந்த ஆபத்து. கட்டிக்கு அதிக கதிர்வீச்சு அளவு, அனைத்துக் கட்டி செல்கள் அழிக்கப்படுவதற்கான சிறந்த வாய்ப்பு.
நவீன தொழில்நுட்பங்கள்
இன்று புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன தொழில்நுட்பங்கள் நிறையவே வந்துவிட்டன. இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய்க்கு எதிரான போரை நடத்தி, மனிதர்களைக் காப்பற்ற முடியம். இதனால் சிகிச்சையை விரைவுபடுத்துவதற்கான கதவைத் திறக்கலாம். CRISPR, செயற்கை நுண்ணறிவு, டெலிஹெல்த், இன்பினியம் அஸ்ஸே (Infinium Assay), கிரையோ-எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி(cryo-electron microscopy,) மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற தொழில்நுட்பங்கள் புற்றுநோய்க்கு எதிரான முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த உதவுகின்றன. இந்தத் தொழில்நுட்பம், வியாதிகளை முக்கியமாகப் புற்றுநோயைக் குணப்படுத்த உதவுகிறது. யாருக்குச் சிகிச்சை செய்ய விரும்புகிறோமோ, அவரது DNA துணுக்கை எடுத்து அதனை மாற்றி அமைத்து, அதன் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்துவதாகும்.
ரோபோடிக் அறுவை சிகிச்சை
என் தோழி ஒருவருக்கு மலக்குடல் புற்றுநோய் வந்தது. அவர் 7 ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூருவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம்தான் அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டார். இப்போது நல்ல நலத்துடன் அயல்நாடுகளுக்கும் தனியாகவே சென்று வருகிறார். இந்த அறுவை சிகிச்சை கொஞ்சம் வலி குறைவானது. ஆனால், செலவு கொஞ்சம் அதிகம். அறுவை சிகிச்சை நிபுணர் செல்வராஜ், ‘அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அருகில் இல்லாமல் ரோபாடிக் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இது கிட்டத்தட்ட Laproscopy போலவேதான். லேப்ராஸ்கோபியில் நாங்களே அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாளுவோம். ரோபாடிக் அறுவை சிகிச்சையில் ரோபாட் அறுவை சிகிச்சை கருவியைக் கொண்டு, மிக மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யும், நோயாளிக்கு வலி, பிரச்னைகள் 80% குறையும். ஆனால், நாங்கள் மருத்துவர்கள் நோயாளியின் அருகிலேயே இருந்து கையைக் காண்பிப்போம், அந்த இடங்களில், நாங்கள் சொல்லச் சொல்ல ஒரு சின்ன ஓட்டைக்குள் நுழைந்து ரத்த சேதம் அதிகம் இன்றி, வலி இன்றி வெட்டி எடுத்துவிடும். நாங்கள் இல்லாவிட்டால் அது இஷ்டம் போல நோயாளியின் உடலை துவம்சம் பண்ணிவிடும். உயிர் இல்லாத கருவிதானே ரோபாட், நாம் அதற்கு கவனமாக கட்டளைகள் பிறப்பிக்க வேண்டும்’ என்றார்.
cosmotic அறுவை சிகிச்சை:
மார்பகப் புற்றுநோய் சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, அந்த இடத்தில் மார்பகம் போலவே ஒன்றை உருவாக்குவார்கள். தொடையில் இருந்து தசையை எடுத்து மார்பகம் போலவே தைத்து, மார்பகம் உள்ள இடத்தில் வைத்துவிடுவார்கள். இந்தச் சிகிச்சை நோயாளியின் விருப்பத்தைப் பொறுத்ததே. ஏனெனில் மார்பகம் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று வருத்தப்படும் பெண்களுக்கே இப்படி மருத்துவர்கள், உடலில் வேறு இடத்திலிருந்து தசையை வெட்டி எடுத்து மார்பகம் இருந்த இடத்தில் ஒட்டி வைக்கிறார்கள். என் நெருங்கிய தோழி ஒருவருக்கு இப்படி உருவாக்கப்பட்ட மார்பகம் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அந்த இடத்தில் சில நேரம், செகண்டரீஸ் வரவும் வாய்ப்பு உண்டு. சில மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் வந்தவர்களுக்கு, எந்த மார்பகத்தில் புற்றுநோய்க் கட்டி உள்ளதோ அதனை மட்டும் வெட்டி எடுத்துவிடுவார்கள், மார்பகம் அப்படியே இருக்கும். இது புற்றுநோயின் இரண்டாம் நிலையில்தான் சாத்தியம், மருத்துவர்கள் எது நோயாளிக்குச் சரி என்று தோன்றுகிறதோ அதன்படி செய்வார்கள. எல்லோருக்கும் ஒரே மாதிரி சிகிச்சை அளிக்க முடியாது. செய்யவும் மாட்டார்கள்.
(இன்னும் பகிர்வேன்)
படைப்பாளர்:
மோகனா சோமசுந்தரம்
ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.