Site icon Her Stories

கேடில் விழுச்செல்வம் கல்வி

1876ஆம் ஆண்டில் பாஸ்டனைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஹார்வார்ட் பல்கலைக்கழகத்துக்குப் பத்தாயிரம் அமெரிக்க டாலர் பணத்தை நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார். அவர் வைத்த ஒரே நிபந்தனை, ஹார்வார்ட் மருத்துவப் படிப்பில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். “பெண்களைப் படிக்க வைத்தால்தான் பணம் தருவீர்கள் என்றால், அந்த நன்கொடையே வேண்டாம்” என்று ஹார்வார்ட் அறிவித்தது!

பத்தாயிரம் டாலர் என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகை. ஒரு புரிதலுக்காகச் சொல்ல வேண்டுமானால் இன்றைய மதிப்பில் பத்தாயிரம் டாலர் என்பது கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரம் டாலர்கள். அதாவது இந்திய ரூபாயில் இரண்டேகால் கோடிக்கும் மேல். இத்தனை பணத்தை வேண்டாம் என்று ஹார்வார்ட் மறுத்திருக்கிறது. ஒரே காரணம், “பெண்களைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்கிற பிடிவாதம்.

சோபியா கோவலெவ்ஸ்காயா

ஒரு காலத்தில் நிலைமை அப்படித்தான் இருந்தது. 1898ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த எர்லாங்கென் பல்கலைக்கழகம், “பெண்களும் ஆண்களும் ஒரே கல்விக்கூடத்தில் படித்தால் கல்விப்புலத்தின் ஒழுங்கே சீர்குலைந்துவிடும்” என்று வெளிப்படையாக அறிவித்தது. பண்டைய சீனாவில், “ஒரு பெண் எந்த அளவுக்குப் பொது விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறாளோ, அந்த அளவுக்கு நல்லவள்” என்கிற நம்பிக்கை இருந்தது. இந்தியாவில் பெண்களுக்கான பள்ளிக்கூடங்களைத் தொடங்கிய சாவித்ரிபாய் பூலே அதில் பல தடைகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. “ஒவ்வொரு நாளும் சாவித்ரிபாய் வீட்டை விட்டு பள்ளிக்குச் செல்லும் வழியில் அவரை அவமதிப்பார்கள். சாணத்தையும் கற்களையும் அவர்மீது வீசுவார்கள், அதனாலேயே சாவித்ரிபாய் பள்ளிக்குப் போகும்போது இன்னொரு சேலையைக் கையோடு எடுத்துச் செல்வார்” என்று எழுதுகிறார் திவ்யா காண்டுகுரி.

கல்விக்கூடங்களில் கால்வைத்து முறையான கல்வியைப் பெறுவதற்குப் பெண்கள் போராட வேண்டியிருந்தது. படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்ட பெண்களைச் சமூக அமைப்பு பள்ளிகளுக்குள்ளும் கல்லூரிகளுக்குள்ளும் அவ்வளவு எளிதாக அனுமதிக்கவில்லை. பொதுவான கல்விக்கே தடை. இதில் அறிவியலுக்கும் கணிதத்துக்கும் கூடுதல் தடை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. முந்தைய நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல பெண் அறிவியலாளர்கள் இந்த அடிப்படை தடைக்கல்லைத் தாண்டித்தான் மேலே வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரைச் சந்திக்கலாம்.

ஜெர்மனியைச் சேர்ந்த கணிதவியலாளர் எம்மி நோயதர். கல்லூரிக் காலத்தில் இவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. அவர் விண்ணப்பித்த பல்கலைக்கழகத்தில் பெண்களைச் சேர்த்துக்கொள்வார்கள், ஆனால் முழு அனுமதி கிடையாது. “நீங்கள் வேண்டுமானால் வகுப்பறைகளில் அமர்ந்து பாடங்களைக் கேட்கலாம், ஆனால் தேர்வு எழுத முடியாது” என்று பல்கலைக்கழக நிர்வாகம் மாணவிகளிடம் அறிவித்தது. சம்பந்தப்பட்ட பேராசிரியர் அனுமதித்தால் மட்டுமே வகுப்பறைக்குள் பெண்கள் அமரலாம் என்கிற விதிமுறை வேறு. இடம் கிடைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் இத்தனையையும் மீறி உள்ளே நுழைந்த எம்மி, ஒருவழியாகப் படித்து முடித்து பட்டமும் பெற்றார். அதன்பிறகு அல்ஜீப்ராவில் அவர் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் கணிதத்தின் வரலாற்றில் முக்கியமானவை.

சோபியா ஜெர்மைன்

மற்றொரு முக்கியமான கணித மேதை சோபியா கோவலெவ்ஸ்காயாவின் கதை இன்னும் அதிகத் தடைகள் கொண்டது. ரஷ்யாவில் பிறந்த சோபியா, பெற்றோரின் ஊக்குவிப்பாலும் பெருமுயற்சியாலும் பள்ளிப்படிப்பை முடித்தார். அடுத்த கட்டமாகக் கல்லூரியில் சேர விரும்பினார். ஆனால், அப்போதைய ரஷ்யாவில் (1868) பெண்களுக்குக் கல்லூரியில் சேர அனுமதி கிடையாது. ரஷ்யாவில் மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான உலகநாடுகளில் பெண்களைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. ஆகவே வேறு எங்காவது சென்று படிக்கலாம் என்று சோபியா முடிவெடுத்தார். அதிலும் ஒரு பிரச்னை எழுந்தது. வெளிநாட்டில் படிக்க வேண்டுமானால் யாராவது ஆண் துணை வேண்டும். இது பெரிய சிக்கலாக இருக்கிறதே என்று யோசித்த சோபியா, “வெளிநாட்டுக்குச் சென்று படிப்பதற்கு ஏதுவாகத்தான் திருமணம் செய்துகொள்கிறேன்” என்கிற நிபந்தனையோடு விளாடிமிர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்! படிப்புக்காகச் செய்த திருமணம்தானே! திருமணமான கையோடு ஜெர்மனிக்குப் போய் கல்லூரிகளின் கதவைத் தட்டினார்.

அங்கேயும் ஒரு பிரச்னை காத்திருந்தது. ஜெர்மனியின் ஹெய்டல்பர்க் பல்கலைக்கழகத்தின் விதிப்படி பெண்கள் வகுப்புகளைக் கவனிக்கலாம், ஆனால் தேர்வு எழுத முடியாது. வகுப்பறைக்குள் நுழையவும் பேராசிரியர்களின் அனுமதி வேண்டும். ‘கிடைத்தவரை லாபம்’ என்று நினைத்த சோபியா பேராசிரியர்களிடம் கெஞ்சி சம்மதிக்கவைத்து வகுப்புகளைக் கவனித்தார். கணித அறிவை கூர்தீட்டிக்கொண்டார். அடுத்தகட்டமாக பெர்லினுக்குச் சென்றார். அங்கு இருந்த பல்கலைக்கழகம் இன்னும் மோசம். நிர்வாகத்தினர் அவரை வகுப்புக்குள் நுழையக்கூட அனுமதிக்கவில்லை. ஆகவே கார்ல் வெயர்ஸ்ட்ராஸ் என்கிற புகழ்பெற்ற கணிதவியலாளரின் வீட்டில் கணித வகுப்பில் சேர்ந்தார். சோபியாவின் திறனைக் கண்டு வியந்த கார்ல், பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின்படியே சோபியாவுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார். அடுத்த பல ஆண்டுகளில் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார் சோபியா. தனது செல்வாக்கை வைத்து, காட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் சோபியாவின் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க கார்ல் ஏற்பாடு செய்தார். ஒருவழியாக அவரது திறனைப் பல்கலைக்கழகம் புரிந்துகொண்டது. 1874ஆம் ஆண்டில் சோபியாவுக்கு முனைவர் பட்டம் தரப்பட்டது. கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்கிற புகழும் சோபியாவுக்குக் கிடைத்தது. தனக்குப் பிடித்த படிப்பைப் படிப்பதற்காக, ஒப்பந்தத் திருமணம் முதல் தனி வகுப்புகள் வரை எல்லாவற்றையும் அவர் செய்யவேண்டியிருந்தது.

ரஜீந்தர் ஜீத்

கல்வி பெறுவதற்காகத் தன்னுடைய அடையாளத்தையே மாற்றிக்கொண்ட பெண்களை அறிவீர்களா? மரி-சோஃபி ஜெர்மைன் என்கிற பிரெஞ்சு கணிதவியலாளருக்குக் குழந்தைப்பருவத்திலிருந்தே கணிதத்தில் அதிகமான ஆர்வம் இருந்தது. வீட்டிலிருந்தபடியே நூல்களைப் படித்து தனது கணித அறிவுக்கு சோஃபி தீனி போட்டுக்கொண்டார். 1794இல் அவர் வசித்த ஊரில் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டது. பெண் என்பதால் அந்தக் கல்லூரியில் சேர சோஃபிக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், “யாராவது விரும்பினால் பாடக்குறிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. பாடக்குறிப்புகளைப் படித்து தங்களுடைய கருத்துகளையும் புரிதல்களையும் பேராசிரியர்களுக்கு அனுப்பவும் அனுமதி இருந்தது.

பாடக்குறிப்புகளை வாங்கிப் படித்த சோஃபி, அதைப் பற்றிய தனது கருத்துகளையும் தானாக உருவாக்கிய சில சமன்பாடுகளையும் ஆசிரியர் லாக்ராஞ்சுக்கு அனுப்ப விரும்பினார். பெண் என்பதால் தன்னைக் கேலியாக நினைத்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று பயந்தார். அந்தக் காலத்தின் சூழல் அப்படிப்பட்டதுதானே! ஆகவே ஆண் ஒருவரின் பெயரில் கடிதங்களை எழுதினார்! காலப்போக்கில் சோஃபி ஒரு பெண் என்பதை அறிந்த பின்பும் அவரை மறுதலிக்காமல் அவரைத் தனது மாணவியாக லாக்ராஞ்ச் ஏற்றுக்கொண்டார்.

ஆனந்திபாய் பென்

இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளர் ரஜீந்தர் ஜீத் ஹான்ஸ் கில்லின் கதை இன்னும் சுவாரசியமானது. 1943இல் பஞ்சாப்பில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர் ரஜீந்தர். அவரது கிராமத்தின் தொடக்கப் பள்ளியில் பாடங்கள் ஒழுங்காக நடத்தப்படவில்லை. அருகில் இருந்த ஒரு சிற்றூரைச் சேர்ந்த பள்ளியில் நன்றாகப் பாடங்கள் நடத்தப்படுகின்றன என்று அவருக்குத் தெரியவந்தது. அங்கே அவரது உறவினர் ஒருவர் இருந்தார் என்பதால் அங்கேயே தங்கிப் படிப்பது என்று ஏற்பாடானது. ஆனால், ஒரே ஒரு சிக்கல் – அது ஆண்களுக்கு மட்டுமேயான பள்ளிக்கூடம்! ரஜீந்தர் தயங்கவேயில்லை. டர்பனை அணிந்துகொண்டார், தன்னை ஓர் ஆண் என்று அறிவித்துக்கொண்டார், பள்ளியில் சேர்ந்தார். அவரது அப்பாவுக்குப் பெரிய ஊருக்குப் பணியிட மாற்றம் வரும்வரை ஆணாகவே கல்விகற்றார் ரஜீந்தர்.

பாம்பே மாகாணத்தைச் சேர்ந்த ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி, மேற்கத்திய மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்று அறியப்படுகிறார். திருமணத்துக்குப் பிறகு இவரது கணவர் கோபால்ராவ் ஆனந்தியை மேற்படிப்புக்காக அமெரிக்கா அனுப்பினார். தனியாக மனைவியைப் படிக்க அனுப்பியதற்காக இருவருமே கடும் கேலிக்கும் விமர்சனத்துக்கும் ஆளானார்கள். ஊர்க்காரர்கள் சாணத்தையும் கற்களையும் அவர்கள்மீது வீசினார்கள். மனம் தளராத தம்பதி தங்களது முடிவில் உறுதியாக நின்றார்கள். ஆனந்திபாய் அமெரிக்கா சென்றார். மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

ஒரு கட்டத்தில் அவருக்குக் காசநோய் வந்தது, அவர் இந்தியா திரும்பினார். புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெறுவதற்காக ஆனந்தி சென்றபோது, “உனக்கு சிகிச்சை தர முடியாது, நீ சமூகத்தின் எல்லைகளை மீறிவிட்டாய்” என்று அந்த மருத்துவர் மறுத்துவிட்டார். எது எல்லை மீறல்? கல்வி கற்றதா?

பாலின வேறுபாடு மட்டுமல்லாமல் இனவெறியும் பெண்கல்விக்குத் தடையாக இருந்திருக்கிறது. புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளரான கேத்தரின் ஜான்சன், கல்வி கற்கும்போது கடுமையான இனவெறியைச் சந்தித்தார். அதை மீறி தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டார். ரோசி டியங் கண்ட்ஸ் என்கிற சிறுமியின் பள்ளி ஆசிரியர், “வெள்ளையர்களுடன் ஒப்பிடும்போது உன்னைப் போன்ற கறுப்பினத்தவர்களுக்கு அறிவுத்திறன் குறைவுதானே” என்று நேரடியாகவே அவரைச் சீண்டினார். பிறகு அந்தச் சிறுமி ரோசி விஞ்ஞானியாகி செயற்கை நுண்ணறிவில் வல்லுநராக மாறியது தனிக்கதை.

கல்விக்கூடத்துக்குள் அனுமதிக்கவே தடை ஒருபக்கம் என்றால், உள்ளே நுழைந்தாலும் பல கட்டுப்பாடுகளை விதித்து மாணவிகளைச் சோர்வுக்கு உள்ளாக்குவது இன்னொரு வகை வன்முறை. அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற நிலவியல் வல்லுநரான ஃப்ளாரன்ஸ் பெஸ்காமுக்கு அதுதான் நடந்தது. நூலகப் பயன்பாட்டில் மாணவிகளுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு இருந்தது. சக மாணவர்களின் கவனம் சிதறிவிடும் என்பதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஒரு திரை போடப்பட்டது! ஆசிரியர் ஓர் ஆண் என்பதால் மாணவிகளுக்கும் ஆசிரியருக்கும் மத்தியில்கூட ஒரு திரை இருந்தது. ஆசிரியரைக் கண்ணால் பார்க்காமல் கல்வி கற்கவேண்டிய கட்டாயம். “பெண்களைக் கல்விக்கூடங்களுக்குள் அனுமதித்தால் ஆண் மாணவர்களின் கவனம் சிதறிவிடும்” என்று அப்போதெல்லாம் ஒரு நம்பிக்கை நிலவியது. அந்த நம்பிக்கையின் எச்சம் இன்றும் பல இடங்களில் வெளிப்படுவதை நாம் பார்க்கலாம்.

நேரடித் தடைகள் நீங்கலாக, பெற்றோரும் சமூகமும் பேசிப் பேசியே அறிவியல் பாதையிலிருந்து பெண்களைத் திசைதிருப்புவதும் நடந்திருக்கிறது, இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற அமெரிக்க நுண்ணுயிரியலாளர் எஸ்தர் லெடர்பர்க். “நீ அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுக்காதே, பெண்களால் அறிவியல் துறையில் முன்னேற முடியாது” என்று அவரது ஆசிரியர்கள் அறிவுறுத்தினார்கள். அதைக் காதில் போட்டுக்கொள்ளாத எஸ்தர் அறிவியலில் பட்டம் பெற்று விஞ்ஞானியாக உயர்ந்தார். இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பெண் என்ன படிக்கவேண்டும் என்று முடிவு செய்வதில் குடும்பங்களே பெரும்பங்கு வகிக்கின்றன என்று எழுதுயிருக்கிறார் நம்ரதா குப்தா.

மரியம் மிர்சா கானி

கணித மேதையான மரியம் மிர்சா கானி, தன்னுடைய ஊரில் இருந்த ஒலிம்பியாட்டுக்கான சிறப்பு கணித வகுப்பில் சேரவே போராட வேண்டியிருந்தது. பெண்களால் கணிதப் போட்டிகளில் பங்குபெற முடியாது என்கிற நம்பிக்கையில் ஆண்களை மட்டுமே ஒலிம்பியாட்டுக்குத் தயார்படுத்திக்கொண்டிருந்தது நிர்வாகம். தலைமை ஆசிரியரிடம் கெஞ்சிக் கூத்தாடிய பிறகே வகுப்பில் சேர மரியத்துக்கு அனுமதி கிடைத்தது. இது நடந்தது பழங்காலத்தில் அல்ல, 1992ஆம் ஆண்டில். ஆகவே இதுபோன்ற சில தடைகள் இன்னும் தொடர்கின்றன. பெண்களுக்குக் கணக்கு வராது என்பதைப்போன்ற நம்பிக்கைகள் மாணவிகளின் கல்வியை நேரடியாகவே பாதிப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் கல்விக்கூடத்துக்குள் நுழைவதில் பெண்களுக்கு எந்தத் தடையும் இல்லை. அந்த வகையில் பெரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். ஆனால், சில நுணுக்கமான தடைகள் இன்னும் தொடர்கின்றன. என்ன படிக்கவேண்டும், எதுவரை படிக்கலாம் என்பதை இன்னும் பெண்களால் தனிச்சையாகத் தீர்மானிக்க முடிவதில்லை.

படித்தபின்பு வேலை பார்ப்பதிலும் பெண்களுக்குப் பல தடைகள் இருக்கின்றன. குறிப்பாக ஸ்டெம் துறைகளில் வேலைவாய்ப்பு, முன்னேற்றம், போதிய அங்கீகாரம் போன்றவற்றில் பல ஏற்றத்தாழ்வுகள் உண்டு. பல விஞ்ஞானிகள் அவற்றை மீறித்தான் முன்னேறியிருக்கிறார்கள். அவை எந்தமாதிரியான தடைகள்?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!

Exit mobile version