Site icon Her Stories

“மாசா மாசம் வர்ற பிரச்னைதானே?”

இது ஒரு பழைய பிரச்னை, எவ்வளவோ பேசப்பட்ட பிரச்னையும்கூட. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் பெண்கள் வேலைக்குப் போவது இயல்பானதாக மாறிய பின்னரும், உலக அளவில் தொழிலாளர்களில் 40.24% பெண்கள்தான் என்றான பின்னரும் தீர்க்கப்படாத பிரச்னையும் இதுதான். வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை பிள்ளைப்பேறு எனும்போது மகப்பேறு விடுப்பு தொடங்கி எல்லா விஷயங்களும் கவனிக்கப்படுகின்றன. ஆனால், மாதாமாதம் வரும் மாதவிடாய்க்குப் போதுமான கவனம் தரப்படுவதில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? குறிப்பாக ஸ்டெம் துறையில் இருக்கும் பெண்கள் இதை எப்படிச் சமாளிக்கிறார்கள்?

இன்றும் இது, “த்ரீ டேஸ் ப்ராப்ளம்”, “லேடீஸ் விஷயம்” என்று  அடிக்குரலில்தான் பேசப்படுகிறது. ’பொம்பளைங்க சமாச்சாரம்’ என்பதிலிருந்து இது ஆங்கிலத்துக்கு மாறியிருக்கிறது, அவ்வளவுதான். ஜெர்மனியில் இதற்கு ’ஸ்ட்ராபெரி வாரம்’ என்று பெயராம், இத்தாலியர்கள் இதைச் ’சிவப்பு பலூன்’ என்கிறார்கள், சீன மரபில் இதற்கு  ’வழக்கமான விடுமுறை’ என்று செல்லப்பெயர். ஜப்பானில் ’பெண்களுக்கான நாள்’, ரஷ்யாவில் ’சிவப்பு ராணுவம்’ என்றெல்லாம் பல செல்லப்பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. மாதவிடாய்ப் பிரச்னைகள் குறித்த ஆய்வுகள் ஒழுங்காக நடக்காததற்கு இந்த மூடிமறைத்தலும் ஒரு முக்கியக் காரணம். ஒருபக்கம் ஹாரிபாட்டர் நூலில் வரும் வால்டிமார்ட்டைப் போல ’பெயர் சொல்லக் கூடாது’ என்று சொல்லி, அது ஏதோ பெரிய விஷயம் என்பதுபோல பயமுறுத்துவார்கள். இன்னொரு பக்கம் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கச் சொல்லி, ’என்ன! நாங்கள்ளாம் பாக்காததா’ என்றும் அலட்சியப்படுத்துவார்கள். இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் நாப்கின் விளம்பரங்களில் நீல சாயத்துக்குப் பதிலாகச் சிவப்புச் சாயத்தைப் பார்க்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறோம்.

சினி என்கிற ஓர் இந்திய ஆராய்ச்சியாளர், “ஸ்டெம் துறை வளாகங்களில் மாதவிடாய் அறை ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று விழி விரியக் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஸ்டெம் துறையைச் சேர்ந்தவள் என்கிற முறையில் இது ஒரு மலையுச்சிக் கனவு என்பேன் நான். இதன் அடிவாரத்தையே இன்னும் நாம் தொடவில்லை. ஏன் தெரியுமா? பல ஸ்டெம் அமைப்புகளில் மாதவிடாய்க்கால பெண்களுக்கான அடிப்படை வசதிகளே இருக்காது.

80களில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த நிகழ்வு இது. பெண்கள் அப்போதுதான் மருத்துவத்துறையில் அதிகமாகப் பங்களிக்கத் தொடங்கியிருந்த காலம். இரவுநேரப் பணி செய்யும் பெண் மருத்துவர்களுக்கான தனி ஓய்வறை வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இப்போது இருக்கும் பொது ஓய்வறையில் என்ன பிரச்னை என்று அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் பல போதாமைகளை அடுக்கிவிட்டு இறுதியில், “சில நேரங்களில் அறைக்குக் கதவு இருக்காது, கதவு இருந்தால் தாழ்ப்பாள் இருக்காது, தாழ்ப்பாள் இருந்தால் அதைப் போட முடியாது” என்று முடித்திருக்கிறார். அதே நிலைதான் ஸ்டெம் பெண்களுக்கும்.

பல ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் சுத்தமான கழிப்பறைகள் இருக்காது, இருந்தால் அவற்றில் எல்லா நேரமும் தண்ணீர் வராது. கைகழுவ வாஷ்பேசின் இருக்காது, வாஷ்பேசின் இருந்தால் சோப் இருக்காது. பயன்படுத்திய நாப்கினைத் தூரப் போடச் சரியான குப்பைத்தொட்டி இருக்காது. குப்பைத் தொட்டியில் நாப்கினை அப்படியே போட்டால் திட்டுவிழும், ஆனால், அதைச் சுற்றிப் போட டிஷ்யூ தாள் இருக்காது. ஆகவே ஒவ்வொரு முறையும் நாமே ஏதாவது ஒரு தாளை எடுத்துச் செல்ல வேண்டும். ஏதோ ஒரு சூழலில் உடையில் கறைபட்டுவிட்டால் உடை மாற்ற ஈரமில்லாத தரை கொண்ட தனி அறைகள் கிடையாது.

முன்னைப் போலல்லாமல் இப்போது பல இடங்களில் நாப்கின் இயந்திரம் வைத்திருக்கிறார்கள். சந்திரமுகி திரைப்படத்தில் வரும் மலைப்பாம்பும் இந்த இயந்திரமும் ஒன்றுதான். இது எதற்காக இருக்கிறது, இதன் வேலை என்ன என்று யாருக்குமே தெரியாது. பெரும்பாலான நேரத்தில் இந்த இயந்திரத்தின் ப்ளக்கைக்கூடச் செருகி அதைத் தயார்நிலையில் வைத்திருக்க மாட்டார்கள். விளக்கு எரிந்தபடி தயார்நிலையில் இயந்திரத்தை எப்போதாவது பார்த்துவிட்டால் உடனே பக்கத்தில் போய்க் கவனிப்பேன். ’இயந்திரக்கோளாறு’ என்பதுபோல ஏதாவது ஒரு செய்தி அதில் வரும். அப்படி எதுவும் இல்லை என்றால் காசு போட்டுப் பார்ப்பேன். சில நேரம் அந்த இயந்திரம் காசு போட்டதும் அப்படியே அதைத் திருப்பித் தரும். சில நேரம் அந்த நாணயம் (?) கூட இல்லாமல் காசை விழுங்கிவிட்டு நாப்கின் அனுப்பாமல் என்னைப் பார்த்து முறைக்கும். இத்தனை ஆண்டுகளில் பல ஆராய்ச்சி மையங்களில் நான் பார்த்த எந்த நாப்கின் இயந்திரத்திலிருந்தும் எனக்கு ஒரு நாப்கின்கூடக் கிடைத்ததில்லை. இதுதான் நிலை எனும்போது சினியின் ’மாதவிடாய் அறை’ எனக்குப் பெரிய கனவாகத்தான் தெரிகிறது.

நான் படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் கல்லூரி வளாகத்தில் நாய்கள் அதிமாக இருப்பது ஒரு பிரச்னையாக எழுந்தது. இதற்கு ஒவ்வொருவரும் பல காரணங்கள் சொன்னார்கள். அதில் ஒருவர் சொன்ன காரணம் முக்கியமானது – “லேடீஸ் ஹாஸ்டல் குப்பைத் தொட்டியில இருக்குற சானிட்டரி நாப்கின் ரத்த வாடைக்குத்தான் நாய்ங்க வருது” என்றார். சமீபத்தில் இந்தியா முழுக்கவே தெருநாய்ப் பிரச்னை வந்தபோது ஒருவர் இதையே சமூக ஊடகப் பதிவாகவும் எழுதியிருந்தார். அப்போதுதான் இது ஒரு பரவலான கருத்து என்பதே எனக்குப் புரிந்தது. அந்தச் சமூக ஊடகப் பதிவின் இறுதி வரியையும் இங்கே சொல்லிவிடுகிறேன் – “நமது பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் துணி பயன்படுத்தியவரை எந்தப் பிரச்னையும் இல்லை” என்று அந்த உன்னதமான பதிவு நிறைவடைந்தது! உண்மையில் பெண்கள் அதிகமாக இருக்கும் வளாகங்களில் இந்த நாப்கின் குப்பைகளைச் சரியான முறையில் மேலாண்மை செய்ய ஏதாவது வழி இருக்க வேண்டும். மாதவிடாய்க்காலப் பெண்களின் பயன்பாட்டுக்கு சோப் கூட இல்லாத இடங்களில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?

ஆய்வக வளாகங்களுக்குள் இந்தப் பிரச்னை என்றால், களப்பணி செய்யும் பெண் ஆராய்ச்சியாளர்களின் பிரச்னை பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம். ஆராய்ச்சியாளரான தனது தங்கை மாதவிடாய்க் காலத்தின்போது எதிர்கொண்ட பிரச்னை பற்றி விரிவாக எழுதுகிறார் சைரித்ரா கணேஷ். “உத்தரகாண்ட்டில் களப்பணியில் இருக்கும்போது அவளுக்கு நாப்கின் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுற்றிலும் எங்குமே எந்த வசதியும் இல்லை. பிறகு ஆய்வுக்குழுத் தலைவர் அவளை ஒரு ஜீப்பில் ஏற்றிவிட்டு, அருகில் இருக்கும் கிராமத்துக்கு அனுப்பிவைத்தார். அவர் புரிந்துகொள்பவராக இருப்பதால் இது சாத்தியமானது. எல்லாருக்கும் இது நடக்குமா?” என்று கேட்கிறார். தேவையான இடங்களில் பொருத்தி உடைமாற்றிக்கொள்ள வசதி செய்யும் ’மாதவிடாய்க் கூடாரங்களை’க் களப்பணி உபகரணங்களோடு ஆய்வுக் குழுவினர் தர வேண்டும் அவர் பரிந்துரைக்கிறார். களப்பணியின் முதலுதவிப் பெட்டிகளில் நாப்கின் போன்றவை வேண்டும் என்றும், மாதவிடாய்க் காலங்களில் பெண்களின் கள ஆய்வு இருந்தால் சுற்றியிருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். ஸ்பெயினில் 429 ஸ்டெம் துறையினரிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 75% பேர், தங்களது களப்பணியின்போது மாதவிடாய்க்கால உதவி கிடைப்பது சிரமமாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. “கழிப்பறை வசதிகள் இல்லாததால் ஒரு நாள் முழுக்க ஒரே பேடுடன் வேலை செய்ய வேண்டும் என்று யாருமே என்னிடம் சொல்லவில்லை” என்று எழுதுகிறார் சந்திரயீ கோஸ்வாமி.

இதில் இன்னொரு மிகப்பெரிய சிக்கலும் இருக்கிறது. ஏற்கெனவே கண்ணாடிக் கூரைகளை எதிர்கொள்ளும் ஸ்டெம் பெண்கள், வெளிப்படையாக மாதவிடாய்க்காலப் பிரச்னைகளைப் பேச முடியாது. குறிப்பாகக் களப்பணியின்போது இது கடினமாக இருக்கிறது என்பதைச் சொல்லவே முடியாது. இந்தியாவில் பெண் ஆராய்ச்சியாளர்களைக் களப்பணிக்கு அனுப்பும் அமைப்புகளே மிகவும் குறைவு. போய்த்தான் ஆக வேண்டுமா என்பார்கள். பெண் ஆராய்ச்சியாளரை வெளியில் அனுப்பிவிட்டு ஏதாவது பிரச்னை வந்தால் பழி தங்கள்மீது வரும் என்று தயங்குவார்கள். ஓர் ஆண் ஆராய்ச்சியாளரைத் துணைக்கு அனுப்புவார்கள், அவர் உடனே களப்பணிக்கு வரமாட்டார். அவரது நேரச் சூழலைப் பொறுத்து களப்பணி மாற்றி வைக்கப்படும். எல்லாத் தடைகளையும் தாண்டித்தான் களப்பணிக்கான ஒப்புதலைப் பெற முடியும்.

“ஒரு பொண்ணா இருந்திட்டு எதுக்கு வெளியில் போய் கஷ்டப்படணும்? லேப் வேலை மட்டுமே பாத்துக்கலாமே” என்று என்னிடமே பலர் சொல்லியிருக்கிறார்கள். களப்பணிக்கான அனுமதியும் சுதந்திரமும் கிடைப்பதே கடினம். நிலைமை இப்படி இருக்க, “மாதவிடா….” என்று நாம் சொல்லி முடிப்பதற்குள், “நான் அப்பவே சொன்னேன்ல பொண்ணுங்களுக்கு இது சரிவராதுன்னு” என்று சொல்லி ஆய்வகத்துக்குள்ளேயே இருக்க வைத்துவிடுவார்கள். சக ஆண் ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்பவர்களாக இருந்தால் பரவாயில்லை, இல்லாவிட்டால் அவர்களும் இதை வைத்தே “களப்பணி இவர்களுக்கு ஒத்துவராது” என்று முடிவெடுத்துவிடுவார்கள். ஆகவே எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் குரல் எழுப்பாமல் அதைச் சமாளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதாகத்தான் நிலை இருந்தது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பெண் ஆராய்ச்சியாளர்கள் தங்களது உரிமைகளைக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ரத்தப்போக்குக்கே இவ்வளவுதான் கவனம் தரப்படுகிறது எனும்போது அந்தக் காலக்கட்டத்தில் ஏற்படும் வலி, மன உளைச்சல், குழப்பம் ஆகியவையோ, பி.சி.ஓ.டி., எண்டோமெட்ரியோசிஸ் போன்ற நோய்களால் ஏற்படும் தீவிர மாதவிடாய்ப் பிரச்னையோ பேசப்படுவதற்கு இன்னும் பல காலம் ஆகும். மாதவிடாய்க்கால வலியுடன் களப்பணியில் முக்கிய முடிவுகள் எடுப்பது சிரமமாக இருந்ததாகவும், இது கல்லூரிக்காலத்திலேயே சொல்லித் தரப்பட்டிருந்தால் மனதளவில் தயாராக இருந்திருக்க முடியும் என்றும் அழுத்தமாக சொல்கிறார் ஆராய்ச்சியாளர் சந்திரயீ கோஸ்வாமி.

மாதவிடாய் விடுப்பு இன்னொரு மிகப்பெரிய விவாதப்புள்ளி. இதை எப்படி அணுக வேண்டும் என்று நாம் ஒரு சரியான கட்டத்துக்கு இன்னும் வந்து சேரவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. மாதவிடாய்க்கு விடுப்பு எடுக்கும் வசதி கண்டிப்பாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது மகப்பேறு விடுப்பைப் போல இயல்பானதாக மாற என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் விவாதிக்க வேண்டும், சரியான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மாதவிடாய் தனக்கு ஒவ்வொரு மாதமும் பெரிய பிரச்னையாக இருக்கிறதா இல்லையா, விடுப்போ ஓய்வோ உதவியோ தேவையா இல்லையா என்று சம்பந்தப்பட்டவர் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அதற்கான உரிமை முதலில் வழங்கப்படுகிறதா, இல்லையா என்கிற கேள்வி எழுகிறது.

அதற்கு முன்னால் மாதவிடாய்க்காலப் பெண்களின் தேவைக்கான அடிப்படை வசதிகள் இருப்பதை ஸ்டெம் துறை உறுதிசெய்ய வேண்டும். இது மட்டுமல்லாமல் திருநர் ஆண்களின் மாதவிடாய்த் தேவைகளையும் பேச வேண்டும். ஸ்டெம் துறைகளில் பால்புதுமையினரின் பங்களிப்பை ஊக்குவிக்க இவற்றையும் நாம் செய்ய வேண்டும். மாதவிடாய் பற்றிய விவாதங்களில், ’பெண்கள்’ என்று மட்டும் குறிப்பிடுவதற்குப் பதிலாக, அனைவரையும் உள்ளடக்கிய விதமாக, ’மாதவிடாயை எதிர்கொள்பவர்கள்’ (Menstruators) என்று குறிப்பிடும் இடத்துக்கு நாம் நகர வேண்டும்.

மாதவிடாய் பற்றி, குறிப்பாக மாதவிடாய் தொடர்பான நோய்கள் பற்றி இன்னும் நமக்கு நிறைய விஷயங்கள் தெரியாது, பெண் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். இதேபோல் பெண் ஆராய்ச்சியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால் ஏற்பட்டுள்ள ஆய்வு இடைவெளிகள் என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!

Exit mobile version