புதுவை நகரம் ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பிரஞ்சுப் பெண்ணைத் தன் காலனியின் வீரமிகு பெண்ணாகக் கொண்டாடியிருக்கிறது. கடற்கரை கப்ஸ் கோயிலின் முன் பிரெஞ்சுப் பெண்ணான ஜோனுக்கு மார்பளவு சிலை உண்டு. 1431ம் ஆண்டு ஆங்கிலேயப் படைகளால் 19 வயதான பிரான்சு நாட்டுப் பெண் ஜோன் எரித்துக் கொல்லப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலராக அவரைக் கருதிய அந்நாட்டினர், ஜோனின் சிற்பங்களை தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் நிறுவினார்கள். அப்படித்தான் பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலரான ஜோன் சிற்பம், புதுவைக்கு வந்துசேர்ந்தது.
ஆனால், அதே புதுவையைப் பிடிக்க ஆண் உடையில் போரிட்டு, 11 குண்டுகளை உடலில் தாங்கிய ஆங்கிலப் படைகளின் கப்பல்படை வீரர் ஹானா ஸ்னெல் (Hannah Snell) பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இங்கிலாந்தின் வார்சஸ்டர் நகரில் ஏப்ரல் 23, 1723 அன்று நடுத்தர வர்க்க குடும்பம் ஒன்றின் ஆறாவது மகளாக ஹானா ஸ்னெல் பிறந்தார். தன் 13வது வயதிலேயே தாய் தந்தையைப் பறிகொடுத்த ஹானா, வாபிங் என்ற ஊரிலிருந்த தன் சகோதரியின் வீட்டில் வசித்தார். லண்டனில் ஹானாவுக்கு டச்சு மாலுமியான ஜேம்ஸ் சம்ஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஜனவரி 6, 1943 அன்று, தன் இருபதாவது வயதில் ஜேம்ஸை திருமணம் செய்துகொண்டார் ஹானா.
திருமணம் முடிந்தவுடன் தன் உண்மை முகத்தை காட்டத்தொடங்கிய ஜேம்ஸ், அவளிடமிருந்த செல்வத்தை குடித்துக் கரைத்தான். ஏழு மாத கர்ப்பிணியான மனைவியை ஒரு நாள் தலைமுழுகிவிட்டு, காணாமல் போனான். பிறந்த குழந்தை 7 மாதங்களில் இறந்துபோக, மீண்டும் தன் அக்காவிடமே வந்து சேர்ந்தார் ஹானா.
கணவன் தன்னை விட்டு விலகிய காலம் முதலே தனித்து வாழ்ந்த ஹானா, பாதுகாப்புக்காக ஆண் உடைகளை அணியத் தொடங்கினார். மாலுமியான தன் கணவனைத் தேடி கப்பல் படையில் சேர முயற்சித்தார். அப்போது ஆங்கிலேய ராணுவத்திலோ, கப்பல் படையிலோ பெண்களுக்கு இடமில்லை. 1745ம் ஆண்டு ஆங்கிலேயப்படையில், அக்காள் கணவர் ‘ஜேம்ஸ் கிரே’ பெயரை தனக்குத் தானே சூட்டிக்கொண்டு, வேலையில் சேர்ந்தார்.
போர்ட்ஸ்மவுத் நகரிலிருந்த அட்மைரல் போஸ்கவனின் கப்பலில் அவருக்கு மாலுமியாகப் பணி வழங்கப்பட்டது. ‘ஸ்வாலோ’ என்ற கப்பலில் புயலிலும், மழையிலும் கடும்பணியாற்றினார். கப்பல் மூழ்கும் சூழல் வந்தது; ஒரு நாளைக்கு ஒரு பின்ட் அளவே குடிநீர் வழங்கப்பட்டது; எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஹானா தன் வேலையைச் செய்தார். மொரீஷியசில் கப்பல் தாக்கப்பட, பாதுகாப்பு காரணங்களுக்காக, கப்பலை அதன் அட்மைரல் போஸ்கவன் கடலூர் டேவிட் கோட்டைக்குத் திருப்பினார். ஹானா இந்தியா வந்து சேர்ந்தார்.
1748ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கடலூர் டேவிட் கோட்டையிலிருந்து புறப்பட்ட ஆங்கிலேயப் படைகள், புதுவை நகரைச் சூழ்ந்தன. அவர்களுடன் புதுவைக்கு தெற்கே மூன்று மைல் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயக் கப்பலிலிருந்து இடுப்பளவு நீர் கொண்ட ‘டிரெஞ்சுகளுக்கு’ ஹானா உள்ளிட்ட கப்பல் படையினர் இடம்மாறி, புதுவைக் கோட்டையை நோக்கி குண்டுமழை பொழிந்தார்கள்.
37 ரவுண்டுகள் தன் துப்பாக்கியால் சுட்ட ஹானாவை எதிரிப் படையின் குண்டுகள் துளைத்தன. தொடைப்பகுதியில் ஒரு குண்டும், ஒரு காலில் ஐந்து, மற்றொரு காலில் ஆறு என மொத்தம் பதினோரு குண்டுகள் அவர் மேல் பாய்ந்தன. பருவமழை புதுவை சுற்றுவட்டாரத்தை அடித்துநொறுக்க, ஆங்கிலேயப் படைகள் பின்வாங்கின.
ஹானா சிகிச்சைக்காக கடலூர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரது கால்களிலிருந்த குண்டுகளை அறுவைசிகிச்சை மூலம் அகற்றினார்கள்.
மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு ஒப்புக்கொண்ட ஹானா, தன் வேடம் கலைந்துவிடும் என பயந்ததால், தொடையிலிருந்த குண்டை யாருக்கும் தெரியாமல் தானே அகற்றி, கட்டுப்போட்டு சிகிச்சை செய்துகொண்டார். அப்போது அவருடன் துணையிருந்த தமிழ்ப் பெண் ஒருவருக்கு அங்கிருந்து புறப்படுகையில் ஒரு ரூபாய் இந்தியப் பணம் பரிசாகத் தந்தார். அடுத்த ஆண்டே தேவிக்கோட்டை போரிலும் கலந்துகொண்டார்.
1750ம் ஆண்டு லிஸ்பன் நகரில் மாலுமி ஒருவன், ஜேம்ஸ் சம்ஸ் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டதை ஹானாவிடம் தெரிவித்தான். மனம் ஒடிந்து போனாலும், நல்ல மனைவியாக கணவரைத் தேடிப் பயணித்த ஹானா, நல்ல மாலுமியாக இங்கிலாந்து திரும்பினார். இதற்கு மேல் தான் யார் என்பதை தன்னுடன் பயணித்த மாலுமிகளிடம் மறைப்பது சரியல்ல என்று தோன்ற, ஜூன் 2, 1750 அன்று தன்னை வெளிப்படுத்தினார். ராபர்ட் வாக்கர் என்பவரிடம் தன் வாழ்க்கைக் கதையைச் சொல்லி, ‘தி ஃபீமேல் சோல்ஜர்’ என்ற நூலாக எழுதினார். அவரது ஓய்வூதியக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின் இரண்டு திருமணங்கள் செய்துகொண்ட ஹானா, 8 பிப்ரவரி, 1792 அன்று இறந்துபோனார்.
250 ஆண்டுகளுக்கு முன்பே, ஆண்களின் உலகில், அவர்களது பார்வைக்குத் தப்பி கப்பல் படை வீரராக ஐந்தாண்டுகள் பணியாற்றினார் ஹானா ஸ்னெல். பாலின உள்ளடக்கத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர் என்று ஹானாவை குயர் செயற்பாட்டாளர்கள் மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள். புதுவை சந்தித்த வீரமிகு வெளிநாட்டுப் பெண் ஹானா ஸ்னெல் தான்!
(யாதும் இதழ், ஜூன், 2021)
கட்டுரையாளரின் மற்ற படைப்பு:
கட்டுரையாளர்:
நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர், வரலாற்றாளர்.