Site icon Her Stories

மங்குனிப்புடவு – மூணாண்டிபட்டி பாறை ஓவியங்கள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… மூச்சு வாங்கியது, ‘ச்சூ… இதுவேறு! வயதாகிவிட்டது என்பதை அவ்வப்போது இப்படித்தான் உடம்பு தம்பட்டம் அடித்து விடுகிறது’, மனதிற்குள் பேசிக்கொண்டே இடுப்பில் கை வைத்தவாறு, வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். மொட்டை வெயில் படுத்தி எடுத்தது.

கைப்பைக்குள் குடை இருந்தாலும் பிடிக்க வசதி இல்லை. பெரிதாகப் போக்குவரத்து இல்லாத சாலையை ஒட்டி இருந்த மலைக்குன்று அது. படிகளோ, மனிதக் கால்தடங்களால் உருவான வழிப்பாதைகளோ அற்ற அந்த மலைக்குன்றில் கைக்குக் கிடைத்த புற்களைப் பற்றிக்கொண்டும், பாறைகளைப் பிடித்துக்கொண்டும் ஏறியும் இறங்கியும் தவழ்ந்தும் சில இடங்களில் பிறர் உதவியுடன் தாவிக்குதித்தும் அந்த சிறு குன்றின் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தோம்.

தொல்லியல் ஆய்வாளரும் போடிநாயக்கனூர் சி.பி.ஏ. கல்லூரியின் வரலாற்றுப்பேராசிரியரும் எழுத்தாளருமான பேரா. மாணிக்கராஜ் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த தொல்மரபு நடைபயணத்தில்தான் நானும் மகள் பூஷிதாவும் கலந்து கொண்டிருந்தோம்.

பேராசிரியர் மாணிக்கராஜ்

அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த மலையேற்றம். காலையிலிருந்து பல இடங்களைச் சுற்றியதில் அனைவருமே கொஞ்சம் களைத்துத்தான் போய்விட்டோம். அடிவாரத்திலேயே எங்கள் கூட்டத்தைப் பார்த்து பதைபதைத்துப் போன விவசாயி ஒருவர், “அங்ஙன… ஈராங்காய் (ஈர வெங்காயம் – உள்ளி) காயப்போட்ருக்கேன், பார்த்துக்கிடுங்க” என கூறினார். (‘பார்த்துக்கிடுங்க’ என்றால், ‘ஆளுக்கு ரெண்டு கை அள்ளிவிடாதீர்கள், பத்திரமாக இருக்கட்டும்’ என்ற பொருளாகத்தான் இருக்க வேண்டும்!)

மலையேறும் வழியில், ஒரு முள்செடியில் ஆடைகள் சிக்கிக்கொள்ள, “பார்த்து வாங்க தோழர், அது புலி இண்டம் முள் செடி” என்கிறார், அரசுப்பள்ளி ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான தோழர் மூ. செல்வம். ‘புலி தொடக்கி’ (Tiger Stopper) என்றும் ‘ஈண்டு’ என்றும் அழைக்கப்படும் முட்கள் நிறைந்திருக்கும் இந்தச்செடியை, விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் புலி போன்ற விலங்குகளிடமிருந்து தடுக்கும் வேலியாகப் பயன்படுத்துவது வழக்கம்’ என்ற செய்தியையும் உபரியாகச் சொல்கிறார். ஓ… அப்போ இந்தப்பகுதிகளில் புலிகள் இருந்திருக்குமோ..? இப்போதும் இருக்குமோ..? என மூளை அவசரமாக குறிப்பெடுத்துக்கொள்ள, மனதில் கொஞ்சம் கலக்கம் சூழ்கிறது.

ஆசிரியர் செல்வம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட புலிமான்கோம்பை கிராமத்தின் அருகே அமைந்துள்ளது மூணாண்டிபட்டி கிராமம். மதுரை – பாளையம் பெரு வழி வணிகப்பாதையில் (பண்டைய காலத்தில் பொருள்கள் கொண்டு செல்லப்பட்ட ‘பெரும் பாதைகள்’ பெருவழிப்பாதை எனும் பெயரால் வழங்கப்பட்டன), ஒரு குன்றின்மீது அமைந்திருக்கும் பாறை ஓவியங்களைக் காணத்தான் நிறைய இஷ்டப்பட்டும், கொஞ்சம் கஷ்டப்பட்டும் ஏறிக்கொண்டிருந்தோம்.

ஒரு வழியாக குன்றின் உச்சியை அடைந்தால் ‘புடவு’ என்று சொல்லக்கூடிய அந்த பாறை ஒதுக்கில் மறைந்திருக்கிறது நாங்கள் தேடிவந்த அற்புதம். குகையாக இல்லாமல் பாறையின் ஒதுக்குவாக இருப்பதையே புடவு என்கிறார்கள். தேனி மாவட்டத்தில் மட்டுமே பதினைந்திற்கும் மேற்பட்ட புடவுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நாகப்புடவு, சித்திரக்கல் புடவு, கல்புடவு, கரடிப்புடவு, மங்குனிப் புடவு என்றும் அழைக்கப்படும் பல்வேறு புடவு வகைகளில், மூணாண்டிபட்டி பாறை ஓவியங்கள் அமைந்திருப்பது ‘மங்குனிப்புடவு’ வகையைச் சார்ந்தது என்கிறார் ஆசிரியர் செல்வம்.

ஏறிய களைப்பையும் மீறி அனைவரின் கண்களிலும் எங்கே எங்கே என்ற தேடல் தெரிகிறது. ஆதித் தமிழர்கள் வரைந்து குறியீடுகளாய் நமக்கு விட்டுச்சென்ற பாறை ஓவியங்கள் அந்த ஒதுக்கில் சிகப்பு வண்ணத்திலும் வெள்ளை வண்ணத்திலுமாகக் காணக்கிடைக்கின்றன. மனிதன் பயன்படுத்திய முதல் நிறம் சிகப்பு எனக் கருதப்படுவதால், சிவப்பு வண்ண ஓவியமே மிகப்பழமையானதாக இருக்க வேண்டும் என்கின்றார் பேராசிரியர் மாணிக்கராஜ்.

சிவப்பு நிற ஓவியங்கள் 5000 வருடப் பழமையும், வெள்ளை நிற ஓவியங்கள் 3000 வருடப் பழமையும் கொண்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. ஆதிமனிதன் சிவப்பு நிறத்தைக் கொண்டுவர கல்யாணி இலை, விலங்குகளின் இரத்தம், சிவப்புக்கற்களை பொடியாக நுணுக்கி வர்ணம் தீட்டியிருக்க வேண்டும். வெள்ளை நிற ஓவியங்களில் உருவங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இடுப்பில் வாள் உறையுடன் கையில் வாள் ஏந்திய வீரர்கள், குதிரையின் மீதேறிச் செல்லும் வீரன், சந்திரன், சூரியன், சூலாயுதம், ஊர்ந்து செல்லும் விலங்குகள், கருவுற்ற பெண்ணின் உருவம் என வியக்க வைக்கின்றன.

மூன்று பேர் நிற்கும் ஓவியங்களை அந்த பாறை ஒதுக்கில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இவைகள் மூன்று முக்கிய வணிகக் குழுக்களைக் குறிக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. மூனாண்டிபட்டி என்ற ஊருக்கான பெயர்க்காரணம் இதுவாகவே இருக்கலாம். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல பாறை ஓவிங்களில் மூன்று பேர் கொண்ட ஓவியங்கள் காணப்படுகிறதாம்.

ஒரு கர்ப்பிணிப்பென், கைகளை பக்கவாட்டில் நீட்டி, விரல்களைத் திறந்த நிலையில் நிற்கிறார். அவருக்குக்கீழே சூரியன், சந்திரன் மற்றும் சில அடையாளம் காணப்படாத உருவங்கள் தெறிகின்றன. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இது கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்திற்கான சடங்குகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். புதிய கற்காலத்தில் சடங்கு முறைகள் தோன்றியபின் வரையப்பட்டிருக்க வேண்டும். ஓவியங்களில் சில விரல்களால் வரையப்பட்டிருப்பதாக அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர் செல்வம்.

சிவப்பு வண்ணத்தில் காணப்படும் நீண்ட கோட்டுருவங்கள் வைகை ஆற்றின் நீரோட்டமாக இருக்கலாம். இங்குள்ள ஓவியங்களில் ஆண், பெண், குறியீடும் வித்தியாசப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. ஆணைக் குறிக்க ஆங்கில் V வடிவத்தில் பிரியும் கால்பகுதியின் நடுவில் ஒரு முட்டை வடிவமும் (ஆண்குறி?), பெண்ணைக்குறிக்க மார்புப் பகுதியில் இரண்டு புள்ளிகளும் வைக்கப்பட்டுள்ளதை பேராசிரியர் விவரிக்கும்போது மூதாதையரின் நுணுக்கமான ஓவியத்திறன் வியக்க வைக்கிறது.

கிடைத்த பொருள்களைக்கொண்டு தன் சிந்தனையை ஓவியமாக்கியிருக்கும் அந்த மனிதர்களை மனதில் கொண்டு வந்து நிறுத்துகிறேன். ஆயிரமாயிரம் வருடங்கள் கழித்து தன் இருப்பிடத்தை வந்து பார்க்கும் தன் வழித்தோன்றல்களுக்கு என்ன செய்திகளை கடத்துகிறார்கள் எம் முன்னோர்கள்? எவரின் கைவண்ணம் இது? எந்த நேரத்தில், என்ன நோக்கத்தில் வரைந்திருக்க வேண்டும்? கேள்விகளுடன் கூடவே, எத்தனை ஓவியங்கள் பெண்களால் வரையப்பட்டிருக்கும் என்ற ஆவலும் எழுகிறது. 

ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்கள் தங்களது வாழ்வியலை பதிவு செய்ய விரும்புவது போலவே, பத்தாயிரம் வருடங்கள் முன்வாழ்ந்த மனிதர்களும் விரும்பியிருக்கவேண்டும். அத்தோடு, தான் வியந்து பார்த்த காட்சிகளையும் ஓவியமாக வரைந்திருக்க வேண்டும். ஆதிமனிதனின் வாழ்வு, நாள்முழுக்க வேட்டையாடுவதிலும், வன விலங்குகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதிலுமே கழிந்தது. பொழுதுபோக்கிற்கான நேரம் அவனுக்கு வாய்க்கவில்லை. ஆனால் வேட்டையை எளிதாக்கும் ஆயுதங்களான வில், அம்பு போன்றவை கண்டறியப்பட்ட பின்பு கிடைத்த ஓய்வுநேரங்களில் வரையப்பட்டவைதான் இது போன்ற ஓவியங்கள்.

முதலில் தன் கைகளில் கிடைத்த கரி கொண்டு வரைந்தவர்கள், அதன்பின் வர்ணங்கள் குழைத்து வரைந்திருக்கலாம். அடுத்தடுத்த தலைமுறையினர் அவரவர் பங்குக்கு ஓவியங்களைச் சேர்த்திருக்கலாம். வேட்டைக்குச் செல்லும் போது இதுபோன்ற பாறை ஓவியங்களில் இருந்த தங்கள் மூதாதையரின் கோட்டோவியங்களை வணங்கி விட்டுச் செல்லும் பழக்கமும் இருந்திருக்கிறது. இந்த ஓவியங்களின் காலவரிசையை பழங்கற்காலத்தில் தொடங்கி பல்வேறு காலகட்டங்கள் வழியாக வரலாற்றுக்காலம் வரை கண்டறியலாம்.

நாடு முழுவதுமே இதுபோன்ற பழங்காலப் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குகைகள், தங்குமிடங்கள் மற்றும் பாறைகளின் இயற்கையான மேற்பரப்புகளில் உள்ள ஓவியங்களும் கீறல்களும் சேர்ந்து பாறைக்கலை என அழைக்கப்படுகிறது. இது மனிதனின் மிகப்பழமையான கலை வெளிப்பாடுகளில் ஒன்று. பாறைக்கலை குறித்த ஆய்வுகள் தனியொரு துறையாகவே வளர்ச்சியடைந்திருக்கிறது. 

இந்தியாவில் உள்ள பாறை ஓவியங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக நாடு முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. பிராமி, கரோஷ்டி, சங்க மற்றும் நாகரி எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும் பாறை ஓவியங்கள் இந்தியாவின் வரலாற்றுக்கால பாறை ஓவியங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் முதல் பாறைக்கலைக் கண்டுபிடிப்பு, 1867இல் அப்போதைய இந்தியத் தொல்லியல் துறையின் முதல் உதவியாளராக இருந்த ஆங்கிலேய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆர்ச்சிபால்ட் கார்லைல் (Archibald Campbell Carlyle) என்பவரால் உத்திரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள சோக்கிகாட்டில் உள்ள பாறை உறைவிடங்களின் சுவர்களிலும் கூரைகளிலும் கண்டறியப்பட்டது. இவைகள் கற்காலத்தைச் சேர்ந்தவை என்று முதன்முதலில் அறிவித்தவரும் இவரே.

 இந்திய பாறைக்கலை ஆய்வுகளின் பிதாமகர் என்றழைக்கப்படும் விஷ்ணு ஸ்ரீதர் வகாங்கர் (Vishnu Shridhar Wakankar) எனும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர், 1957ஆம் ஆண்டு பீம்பெட்கா பாறைக் குகைகளையும், 1964ஆம் ஆண்டு காயத்தா கலாச்சாரத்தையும் கண்டறிந்தார். போபாலூக்குத் தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரைசென் மாவட்டத்தில் அமைந்துள்ள பீம்பெட்கா பாறை உறைவிடங்களின் தொகுப்பு 2003 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் ‘உலகப் பாரம்பரியத்தளம்’ எனப் பட்டியலிடப்பட்டது. பீம்பெட்கா பாறைக்குகைகள் இந்தியாவில் மனித வாழ்வின் ஆரம்பகாலத் தடயங்களை வெளிப்படுத்துகின்றன. விஷ்ணு ஸ்ரீதர் இந்தியாவில் 4000 க்கும் மேற்பட்ட பாறைக்குகைகளை ஆய்வுசெய்ததோடு மட்டுமல்லாமல், இங்கிலாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் கிரீஸ், மெக்சிகோ, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பாறைக்கலைகளைப் பற்றி ஆய்வு செய்தவர். இன்று அவரது ‘வகாங்கர் ஷோத் சன்ஸ்தான்’ (Wakankar Shodh Sansthan) என்ற தனியார் ஆராய்ச்சி மையம், வகாங்கரால் வரையப்பட்ட ஏறத்தாழ 7500 பாறை ஓவியங்களின் சேகரிப்பைக் கொண்டுள்ளது. அவற்றில் சுமார் 4000 ஓவியங்கள் வகாங்கரால் கண்டுபிடிக்கப்பட்டவை. 

இந்தியாவில் உள்ள பாறை ஓவியங்களை சித்திர ஓவியங்கள் (Pictographs), பாறைச் செதுக்கோவியங்கள் (Petroglyphs) என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்துகிறார்கள். இந்தியாவில் காணப்படும் சித்திர ஓவியங்கள் பெரும்பாலும் ஒற்றை நிறத்திலும் வெகுசிலவே ஒன்றுக்கு மேற்பட்ட நிறங்களிலும் அமைந்துள்ளன. ஓவியங்களிலும் செதுக்கல்களிலும் பல்வேறு சடங்குச்சின்னங்களையும் குறியீடுகளையும் தொடர்ச்சியாகக் காண முடிகிறது. அப்படியானதொரு சித்திர ஓவிய வகையைச் சேர்ந்த மூணாண்டிபட்டி பாறை ஓவியங்களில் சூலாயுதம் போன்ற சடங்குச் சின்னங்களை பார்க்கமுடிகிறது. 

மூணாண்டிபட்டி பாறை ஓவியங்கள் காணப்படும் புடவு, ‘புறவுடையான் பொந்து’ (புறா அடையும் பொந்து) என்றும் அழைக்கப்படுகிறது. இப்புடவுகளில் சிந்து சமவெளிக்குறியீடும் காணப்படுகிறது என்று அடையாளம் காட்டுகிறார் பேராசிரியர். இந்தப்பகுதி நீரோட்டமுள்ள பகுதியாக இருந்ததினால் வழிவழியாக இந்த குகைப் புடவுகளில் தங்கியிருந்த மனிதர்களால், இங்குள்ள ஓவியங்கள் பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டிருக்கலாம். நாளடைவில் இது வணிகர்கள் கூடும் இடமாகவோ, வணிகர்கள் தங்கிச்சென்ற இடமாகவோ மாறியிருக்கக்கூடும். ஏனெனில் கிரேக்கர்கள் இந்தப் பெருவணிகப் பாதையில் வந்ததிற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

இங்கு காணப்படும் ஓவியங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, தொல் ஆயுதமான வளரி ஏந்திய வீரனின் பாறை ஓவியமே. எதிரியை நோக்கி வீசப்பட்ட வளரி இலக்கை அடைந்து மீண்டும் எறிந்தவரின் கைக்கே மீண்டும் திரும்பும்படி வடிவமைக்கப்பட்ட தனித்துவமான ஆயுதம் தான் வளரி. வளரிகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று இலக்கைத் தனியாகத் தாக்கும். மற்றொன்று இலக்கைத் தாக்கிய பிறகு திரும்பும் – பூமராங் வகை. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வேட்டையாடப் பயன்படுத்தப்பட்ட வளரி, பிற்காலங்களில், தென் மாவட்டங்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இன்றைய தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இந்த ஆயுதம் 1800 வரை புழக்கத்தில் இருந்திருக்கிறது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தி நவாபூகளையும் ஆங்கிலேயர்களையும் அப்பகுதி வீரர்கள் தாக்கியது குறித்து ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. 1801 ஆம் ஆண்டு முதல் வளரி ஆயுதம் பயன்படுத்துவது ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள கருமாத்தூர் அருகே கோவிலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கோயில்களில் வைக்கப்பட்டு வளரி வழிபடப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகப்பழமையான ‘ஆகோள் பூசல்” கல்வெட்டு கிடைத்த புலிமான் (புள்ளிமான்) என்ற வேளிர் வாழ்ந்த புள்ளிமான் கோம்பை கிராமத்திற்கு அருகேயுள்ள மூணாண்டிபட்டியில் பெருங்கற்காலச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் பாறை ஓவியங்களில் வளரி ஏந்திய மனிதன் இருப்பது வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள முதல் மற்றும் ஒரே ‘வளரி பாறை ஓவியம்’ இதுவே. சமணமதம் வணிக மதம் என்பதால், இங்கு சமணர்கள் வாழ்ந்திருக்கலாம். என்றும் மருது சகோதரர்கள் வளரிக்கலையைக் இங்கு வந்து கற்றுக்கொண்டதாகவும் ஊமைத்துரை தப்பி வந்து மறைந்திருந்திருந்த இடம் என்றும் பல்வேறு செவிவழிச் செய்திகள் நிலவுகின்றன.

 ‘இந்தியப் பாறைக்கலை வெளிநாடுகளில் இருக்கும் அளவுக்கு பிரபலமானதாக இல்லை’ என்று ஆதங்கப்படும் பிரெஞ்சு ஆய்வாளர் டாக்டர் ஜீன் க்ளோட்ஸ் என்பாரின் கருத்தை வலுப்படுத்துவது போல, கலாச்சார பாரம்பரியமிக்க இந்த கலை வடிவத்தின் பெரும் செறிவுகளை அரசோ, மக்களோ கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட, இந்தியக் ‘குடிமகன்களின்’ புண்ணியத்தால் உடைந்த கண்ணாடி போத்தல்களுக்கு நடுவில் அந்த ஆதிமனிதனின் வாழ்விடமான மங்குனிப் புடவுக்குள் ‘ஈராங்காயம்’ காய்ந்து கொண்டிருக்கிறது.

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவரின் ‘போர்களின் தேசத்தில்’ நூல், 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் பரிசை வென்றுள்ளது.

Exit mobile version