Site icon Her Stories

சுயம் (எனக்கே எனக்காக)

நிலாச்சாரல்

“இந்தப் பெண்களுக்கு வேற வேலையே இல்லை. எந்நேரமும் ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று பேசிக் கொண்டு. இப்போதெல்லாம் அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? இல்லவே இல்லை”, என்று தவறாக நினைப்பவர்களுக்கு தெரிவதில்லை, இன்னமும் இந்த உலகம், ஆண்கள் உலகமாகத்தான் இருக்கிறது என்பது.

வெளிப்படையாக அடித்தலும் உதைத்தலும், ஆசைநாயகி வைத்துக்கொள்வதும் குறைந்து போய் இருக்கலாம். ஆனால் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், நைச்சியமாக ஆணாதிக்க செயல்பாடுகள் காலத்துக்கும் இருந்துகொண்டே தான் இருக்கின்றன.
பெண்கள் மீது அன்பு, பாசம், காதல் எல்லாம் உண்டு. ஆனால் ஆண்கள் தான் தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும். அதை மீற நினைக்கும் ஒவ்வொரு முறையும் கட்டாயம் பெண்ணை தலையில் குட்டி உட்கார வைப்பார்கள்.

ஆண்கள் எல்லாருமே அப்படியா என்றால், எல்லா விஷயங்களிலும் சில விதிவிலக்குகள் உண்டு என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.
அளவுக்கு மீறின அடிமை வாழ்வு கசந்து போகும் போது, வெளியேற நினைக்கும் பெண்களை பெரும்பாலும் ஆண்கள் கட்டுப்படுத்த நினைப்பது பிள்ளை எனும் அங்குசத்தைக் கொண்டு மட்டும்தான். பிள்ளைகளுக்காகவே தன் சுயத்தைத்தொலைத்து வாழும் பெண்கள் இங்கே எத்தனையோ. கோயில் யானைகள் போல, தன் பலம் அறியாமல் கட்டுண்டு கிடக்கும் பெண்களை கணக்கில் அடக்க முடியுமா?

அவர்களைப் போன்றவர்களின் நிழலாக மாறாமல், சுயமாக நல்லதொரு தீர்மானம் எடுத்து நாயகி ஆகி விடுகிறாள் “சுயம்” கதாநாயகி பத்மினி.
விவாகரத்து செய்ய முடிவெடுத்த பத்மினிக்கு, அவள் குழந்தையை தரமறுப்பதோடு மட்டுமில்லாது, அவள் தங்குமிடங்களிலும் குழந்தையை பார்க்க வரும் இடங்களிலும் கூட வந்து தொல்லை அளிக்கின்றனர் அவரது கணவன் குடும்பத்தினர்.

ஹாஸ்டலில் தனித்திருப்பது அவளது பலவீனமாகி விடுகிறது. அதை விசாரணையில் காரணமாக சொல்லப்போகிறார்கள் என்று ஊரில் இருக்கும் அம்மா அப்பாவை, குழந்தை தன் கைக்கு வரும் வரையாவது, தன்னோடு வந்து தங்குமாறு கேட்கிறாள். இவள் விவாகரத்து செய்ய நினைத்ததை பத்மினியின் அம்மா லஷ்மி விரும்பவில்லை. ஊர் உலகம் என்ன சொல்லுமோ என பயம் அவள் தாயாருக்கு. ‘உதவினால் நம்ம ஆதரவு இருக்குங்கிற தைரியத்தில் இவள் விவாகரத்து வாங்கி விடுவாள். நாம் ஒத்துக்கொள்ளவில்லையென்றால் குழந்தைக்காகவேனும் சேர்ந்து விடுவாள்’, என நினைக்கிறாள். அதனாலேயே பத்மினியின் அழைப்புக்கு உடன்பட மறுக்கிறாள்.

குழந்தைக்காக வேண்டி அனைவருடனும் போராடும் பத்மினி, குழந்தை இல்லாவிட்டால் தன் வாழ்க்கையே இருக்காது என நினைத்து வருந்திக் கொண்டிருந்தவள், ஒருநாள் தோழி ஒருத்தியின் அறிவுறுத்தலால் தனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என புரிந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு, குழந்தையை கணவன் வீட்டாரிடமே விட்டுவிட்டு அவள் எதிர்பார்த்த வேலையைப் பெற்று ஆஸ்திரேலியா சென்றுவிடுகிறாள்.

வீம்புக்காகவேனும் பிள்ளை எனும் துருப்புச் சீட்டைக் காட்டி அடக்க நினைப்பவர்களை விட்டு விலகி, ‘தனக்கே தனக்காக’ வாழ புறப்பட்டுவிடும் பத்மினி கட்டாயம் புத்திசாலிதான்.

நூலுலகம்

சிறுகதை- சுயம்
கதை ஆசிரியர் – ஜெயந்தி சங்கர்
சிறுகதைத் தொகுப்பு – நியாயங்கள் பொதுவானவை
மற்றும் ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு

பதிப்பகம்

நியாயங்கள் பொதுவானவை
manimegalai pirasuram No 1447, Post Box, 7, Thanikachalam Rd, T Nagar, T. Nagar, Chennai, Tamil Nadu 600017, India
Phone: +91 44 2434 2926

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு காவ்யா பதிப்பகம் Trustpuram, Kodambakkam, Chennai, Tamil Nadu 600024, India
Phone: +91 98404 80232

கட்டுரையாளர்

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

Exit mobile version