அந்தத் தொட்டியில் மிதந்துகொண்டிருந்த கல்லையே சுற்றி நின்று எல்லோரும் அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். “நீரின் அடர்த்தியைவிட கல்லின் அடர்த்தி அதிகம், அதனால் கல் நீரில் மூழ்கும், மிதக்காது” என்றுதானே கஸ்தூரி டீச்சர் சொல்லித் தந்திருக்கிறார்! இது எப்படி மிதக்கிறது என்று குழப்பமாக இருந்தது. வீட்டிலிருந்து குடும்பத்துடன் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா (?) வந்திருந்தோம். எண்பதுகளில் சுற்றுலா என்றாலே ராமேஸ்வரம் அல்லது திருச்செந்தூர்தான். எப்போதாவது, கொடைக்கானல், அடிக்கடி வைகை டேம். அவ்வளவுதான். ராமேஸ்வரத்தின் பெரிய கோயிலைப் பார்த்துவிட்டு, நகருக்குள் ஆங்காங்கே இருந்த சிறிய கோயில்களை வலம் வந்துகொண்டிருந்தோம். அந்தக் கோயிலின் பொறுப்பாளர் போலிருந்த ‘சாமி’ (!) விவரிக்கத் தொடங்கினார். “ஸ்ரீ ராமபிரான், அரக்கன் ராவணனோடு யுத்தம் செஞ்சி, சீதா பிராட்டியாரை அழைச்சுண்டு வாரதுக்காக, லங்காவுக்குக் கிளம்பினார். அப்போ கடலைக் கடக்கறதுக்காக, வானரங்களோட துணை கொண்டு, இங்கிருந்து லங்காவுக்குக் கட்டிய பாலத்தில் பயன்படுத்திய கற்கள்தாம் இதெல்லாம், சேவிச்சிக்கோங்கோ” அவர் சொல்லச் சொல்ல… வீட்டின் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அரைகுறை நம்பிக்கையுடன் கல்லைத் தொடாமலேயே, தொட்ட பாவனையுடன் கண்களில் ஒற்றிக்கொண்டோம். ‘கடலுக்குள்ளிருந்த பாலத்திலிருந்து கல்லை எடுத்து வந்துட்டாங்களா? அது எப்படி?’ எனக்கு இன்னும் குழப்பம் தீரவில்லை. “ராமர், அனுமார் கை பட்டதால கல்லுகூட மெதக்குது பாரு, இதப் பார்க்க கொடுத்து வைச்சிருக்கணும்லா” என்று சித்தப்பா சிலாகித்துக்கொண்டார் (கிண்டலாக சொன்ன மாதிரியும் எனக்குத் தோன்றியது).
இப்படித்தான் கனமற்ற சுண்ணாம்புக்கல்லைக் காட்டி ரொம்ப காலமாகக் கதை சொல்லிக் (விட்டு) கொண்டிருந்தவர்கள், நாசா புகைப்படம் வெளியிட்டவுடன் அதுதான் ராமர் கட்டிய பாலம் எனக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். விஞ்ஞானம் கண்டறிந்த இயற்கை உண்மையைத் தங்களது இதிகாச புராணக் கதைக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டனர். சாட்சாத் ராமபிரானே கட்டியதாக நம்பப்படுகின்ற… ராமாயணத்தில் ‘சேது பந்தனம்’ என்கிற பெயரில் குறிப்பிடப்படுகின்ற… ‘ராமசேது’ அல்லது ‘ராமர் பாலம்’ என்று அழைக்கப்படுகின்ற… இந்தப் பாலத்தை, ‘ஆதாம் பாலம்’ என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆபிரகாமிய மதங்களில் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதாமின் கால்தடங்கள்தாம் இவை என்பது அவர்களின் நம்பிக்கை(கதை)யாக இருக்கிறது. இலங்கையில் இருக்கும் ‘ஆதாம்சிகரத்தின்’ உச்சிக்குச் சென்று ஒற்றைக்காலால் ஆயிரம் ஆண்டுகள் தவமிருப்பதற்காக ஆதாம் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி இலங்கையை அடைந்ததால், இது ‘ஆதாம் பாலம்’ என்கிறது கிறிஸ்துவ வரலாற்றுக் கதைகள்.
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில் இப்படியொரு பாலம் இருந்ததையும் அது மனிதர்கள் நடந்து செல்ல வசதியாக இருந்ததையும் புவியியலாளர்கள் உறுதி செய்கின்றனர். அது எவ்வாறு தோன்றியது அல்லது கட்டப்பட்டது என்பதில்தான் எத்தனையெத்தனை யூகங்கள், நம்பிக்கைகள், செய்திகள்? இந்த இரு நாடுகளையும் பிரிக்கும் கடல்பகுதி ‘சேது சமுத்திரம்’ அல்லது ‘சீ ஆப் தி பிரிட்ஜ்’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ராமேஸ்வரத்தின் பாம்பன் தீவுக்கும் இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே 48 கிலோமீட்டர் தூரத்திற்கு 13 மணல் திட்டுகள் காணப்படுகின்றன. சுண்ணாம்புக் கற்களால் சங்கிலித்தொடர் போல ஆன அந்த மேடுகள் 3 அடி முதல் 30 அடி வரையிலான ஆழம் கொண்டதாகவும் சில மேடுகள் கடல் மட்டத்துக்கு மேலும் உள்ளன. இதைத்தான் ‘ராமர் பாலம்’ என்கின்றனர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான இந்த பாக்ஜல சந்தியில், மன்னார் வளைகுடா பகுதி ஆழம் குறைவாக இருப்பதால், பெரிய கப்பல்கள் வந்தால், தரைதட்டிவிடும். அதனால் இந்தியத் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றியே செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்தப் பகுதியில் 89 கி.மீ தூரத்திற்கு 300 மீட்டர் அகலமும் 12 மீட்டர் ஆழமும் கொண்டதாக கடலை ஆழமாக்கினால் கப்பல்கள் இலங்கையைச் சுற்றத் தேவையிருக்காது. எனவே, 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயர்கள் இந்தக் கால்வாயை ஆழப்படுத்த திட்டமிட்டனர். 1860இல் கமாண்டர் டெய்லர் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் முதன்முதலில் இது குறித்துப் பரிந்துரைத்தார். அவரைத் தொடர்ந்து டவுன்சென்ட், சர்வில்லியம் டென்னிஸன் போன்றோர்களும் இத்திட்டத்தை விரிவுபடுத்தினர். 1871இல் ஸ்டோடர்ட், 1872 இல் ராபர்ட்சன், 1884இல் சர் ஜான் கோட், 1903இல் தென்னிந்திய ரயில்வே பொறியாளர்கள், 1922இல் சர் ராபர்ட்பிஸ்டோ என்று தொடர்ந்து இதற்கான பரிந்துரைகள் காகிதங்களாகவே இருந்தன. சுதந்திர இந்தியாவில் இந்தப் பரிந்துரைகள் ‘சேது சமுத்திரத் திட்டமாக’ உயிர்பெற்றது.
“சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்ற பாரதியின் நூற்றாண்டுச் சிந்தனை, தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவாகவே இருக்கிறது. தமிழினக்கால்வாய், சேது சமுத்திரக் கால்வாய் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இத்திட்டத்தின் அவசியம், அவசரம் குறித்து, அறிஞர் அண்ணா முதன் முதலில் நாடாளுமன்றத்தில் பேசினார். 1968 ஏப்ரல் மாதத்திய 25ஆம் நாள் காஞ்சி இதழில், “தனுஷ்கோடியைக் கடல் மூழ்கடித்ததால் தமிழன் கால்வாய் எனப்படும் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகிவிட்டது” என்று எழுதினார்.
நூறாண்டுகளுக்கும் மேலாக, வெறும் பரிந்துரைகளாக இருந்த இந்தத் திட்டம் குறித்து, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வைகோ நாடாளுமன்றத்தில் பேசிப் பேசி உயிர்ப்புடன் இருக்க வைத்தார். 1998இல் செப்டம்பர் 15இல் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த மதிமுக கூட்டதில் பேசிய பிரதமர் வாஜ்பாய், ‘சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்’ என முதன் முறையாக உறுதிமொழி அளித்தார். ஒருவழியாக 2004இல் வாஜ்பாய் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2005இல் மன்மோகன்சிங்கால் தொடங்கி வைக்கப்பட்டது சேதுசமுத்திரத் திட்டம். இந்திய அரசும் தனுஷ்கோடி அருகே கடலை ஆழப்படுத்தி கப்பல் போக்குவாத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியைத் துவங்கியது. இதன்படி சுமார் 400 கி.மீ. தொலைவு மற்றும் 30 மணி நேரக் கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அத்திட்டத்தின் வழித்தடம், ராமர் பாலத்தைச் சேதப்படுத்தும் வகையில் இருந்ததால், அதற்கு எதிர்ப்பு எழுந்தது. கடலில் மூழ்கியுள்ள அந்த நிலத்திட்டுகளின் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்ட நாள் முதல், ‘இதுதான் ராமர் கட்டிய பாலம்’ என்ற மதவாத அரசியல் துவங்கிவிட்டன. புராணத்தைத் தவிர வேறு எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லையென்றாலும், பாஜக, சிவசேனா, சங்கராச்சாரிகள் என வரிந்துகட்டி வந்து திட்டத்தைக் கிடப்பில்போட பேருதவி(!) செய்தனர்.
பெரிய கண்டங்களையோ நிலப்பகுதிகளையோ இணைக்கும் மெல்லியதான நிலப்பகுதியை பூகோளவியலில் ‘இஸ்மஸ்’ என்று அழைக்கின்றனர். இப்படியான இஸ்மஸ்கள் உலகில் ஏராளமாக உள்ளன. அவை கடலில் மூழ்கியோ அல்லது மேலே நிலத் திட்டுகளாகவோ அல்லது ஒன்றிணைந்து தீவுகளாகவோ இருக்கின்றன. பசுபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைத்த (பனாமா நாடு என்று உலக வரைபடத்தில் இன்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்) மெல்லிய நிலப்பகுதியில்தான் பனாமா கால்வாய் தோண்டப்பட்டது. மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் காலவாய், ஐரோப்பிய கண்டத்தையும், ஆப்பிரிக்கக் கண்டத்தையும் மெல்லிய நிலப்பகுதியாக இணைக்கும் நிலத்திட்டில் வெட்டப்பட்டே உருவாக்கப்பட்டது. நியூசிலாந்தின் ஆக்லாண்டு தீவுகள், கனடாவில் நியூ ஃபவுண்ட் லாண்ட் தீவுப்பகுதிகள், ஆஸ்திரேலியாவின் எண்ட்றி கேஸ்ட்டியக்ஸ் சேனல் நீர்வழி எனப் பல இடங்களில் நீர்வழிகள் வெட்டப்பட்டு, பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்யும் பயணதூரமும் நேரமும் சுருக்கப்பட்டது. அப்படிப்பட்ட பாதையாக மாறியிருக்க வேண்டிய திட்டம் அரசியல் காரணங்களால் வீணடிக்கப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஓர் அங்கமான விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாகத் தோன்றியதாகக் கூறியது. 2007ஆம் ஆண்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்றும், புராணங்கள் வரலாற்றுப் பதிவு ஆக முடியாது என்றும் கூறியது. இந்தப் பிரமாணப்பத்திரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, திரும்பப் பெறப்பட்டு, இரண்டு இந்தியத் தொல்லியல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் இந்தத் திட்டம் வகுப்புவாத நிறமாக மாற்றமடைந்தது.
“அட, ஆக்சுவலி, அது பாலமே இல்லீங்க, சுண்ணாம்புக் கற்களின் சங்கிலிதான், ஒரு நல்ல திட்டத்தை முடக்குவதற்கு மதவாதிகள் செய்யும் சதி” என்போர் ஒருபுறம், ராமர் பாலத்தை உலக மரபுரிமைப் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கைகள் மறுபுறம், ‘இது கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும்’ என்ற சுற்றுச் சூழலியலாளர்களின் வாதம் இன்னொருபுறம் என்று சின்னாபின்னமாகிக் கிடக்கிறது தமிழனின் கனவுத் திட்டம்.
ராமர் சேது பற்றிய பல்வேறு ஆய்வுகள் உலகின் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன. ‘ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான்’ என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியதாக டிஸ்கவரி நிறுவனத்திற்குச் சொந்தமான அமெரிக்க அறிவியல் சேனலில் ‘பூமியில் பாலங்கள்’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல்திட்டுகள் வேண்டுமானால், இயற்கையாக உருவாகியிருக்கலாம். ஆனால், அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான் என்கிறார் தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ்.
ராமர் பாலம் என நம்பும் ஆதரவாளர்கள், நாசா படங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வாதங்கள் செய்ய, 2013இல் நாசா செய்தி தொடர்பாளர் மைக்கேல், “விண்வெளி வீரர்கள் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு, இவர்கள் கூறும் எந்தக் கருத்தையும் தீர்மானிக்க முடியாது. எனவே இந்தக் கருத்துகளுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
இன்றைய தமிழ்நாடும் இலங்கைத் தீவும் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருந்த நிலப்பகுதிகளே. மிகப் பெரிய பூகம்பமும் கடல்கோளும் ஏற்பட்டு அதனால் பிரிந்த பகுதியே இன்றைய இலங்கைப் பகுதி என்பது புவியியலாளர்கள் ஒப்புக்கொண்ட உண்மை. அவ்வாறு கடல்கோளால் விழுங்கப்பட்ட நிலப்பரப்பின் சில பகுதிகளே தமிழக, இலங்கைக்கு இடையிலான கடற்பகுதியில் தீவுகளாகவும் நிலத்திட்டுகளாகவும் மாறியிருக்க வேண்டும். புவியின் டெக்டானிக் தட்டுகளின் இயக்கம் மற்றும் பவளப்பாறைகளில் மணல் சிக்கியதால் உருவான இயற்கை அமைப்புதான் ராமர் சேது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், சரக்குக் கப்பல்கள் அரபிக்கடலுக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையில் பயணிக்க இனி இலங்கையைச் சுற்றிவரத் தேவையில்லை, நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும், ரோந்து பணிகளை அதிகரிப்பதால் கடத்தலைத் தடுக்க முடியும் என்று இத்திட்டத்தின் நன்மைகள் ஒருபுறம் பட்டியலிடப்பட்டாலும் புராணக் கண்ணாடிகளைக் கழற்றி வைத்துவிட்டு அறிவியல் உலகைப் பார்க்கும் மனிதர்களின் மனப்பக்குவத்திற்காகக் காத்துக்கிடக்கிறது செல்லரித்துப் போன காகிதங்கள்.
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.