சிலுசிலுவென காற்றும் லேசான சாரலுமாக இனிமையான மாலைப்பொழுதின் ரம்யமான சூழலில் மெய், பொய் எல்லாம் மறந்து ஆனந்த சயனத்தில் ஆழ்ந்திருக்க, கார் அலுங்காமல், குலுங்காமல் (ஜப்பான் மேட்) ஓரிடத்தில் நின்றது. “மேன்மை தாங்கிய சீமாட்டிகளை எங்கள் தமிழ் நிலப்பரப்பிற்குள் வரவேற்கிறோம், வருக, வருக” கிண்டலாகக் கூறிக்கொண்டே நண்பர் மடுதீன் இறங்க, மதியச் சாப்பாட்டின் உபயத்தால் சொக்கி வந்த சோம்பலைத் தள்ளிவைத்து விட்டு இறங்கினோம். கொழும்பிலிருந்து வடமாகாணமான மன்னார் நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். மன்னாரை நெருங்குவதற்கு, 15 கி.மீ முன்னதாகவே வந்துவிட்டது கட்டுக்கரைக்குளம் (Giant Tank). இறங்கியதும் கண்ணில் பட்ட விநாயகருக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லிவிட்டு நகர்ந்தோம்.
மிகப் பிரம்மாண்டமான ஏரி. நாங்கள் சென்ற மே மாதத்திலும் தண்ணீர் வற்றாமல் கிடந்தது. அலைவீசும் ஏரிக்கரையில் நின்ற போது பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் அறிமுகமாகும் வீரநாராயண ஏரிக்காட்சியும் ஏரி குறித்த வர்ணனைகளும் ஏனோ நினைவுக்கு வந்தது. அருள்மொழி வர்மனும் வந்தியத் தேவனும் பூங்குழலியும் நடமாடிய இலங்கை மண்ணில் நானும் இன்று. நினைக்கவே கொஞ்சம் கிளுகிளுப்பாகத்தான் இருந்தது. கல்கி விவரித்த இலங்கையழகும் குட்டித் தீவுகளும் வானுயர்ந்த மரங்களும் வெளிச்சம் புக முடியாத காடுகளும் பிரம்மாண்ட புத்தர் சிலைகளும் பழமை வாய்ந்த கட்டிடங்களும் காலத்தால் அழியாத ஓவியங்களும் காணக்கிடைக்குமா என மனதிற்குள் நப்பாசை.
இந்தக் கட்டுக்கரைக்குளம் பகுதியில்,1600 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக, நூற்றுக்கணக்கான பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஐயனார் கோயில் ஒன்று இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட யானைகள், காளைகள் போன்றவற்றுக்கு கட்டுகின்ற மணிகள் இலங்கையின் எந்தப் பாகத்திலும் காணப்படவில்லையாம். ஏன், ஐயனார் வழிபாடு மேற்கொள்ளப்பட்ட மதுரையில்கூட இந்த வகையான மணிகள் காணப்படாததால், இந்தப் பிரதேசம் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்ந்திருக்கிறது என்கிறார் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் புஸ்பரட்னம்.
ஐந்தாம் நூற்றாண்டில் மன்னர் ததுசேனனால் கட்டப்பட்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் மன்னர் முதலாம் பராக்கிரம பாகுவால் புனரமைக்கப்பட்ட மகாநாம மாதா வாபி குளம் தான், மான மடுவாவி, யோதவாவி, ராட்சச தொட்டி ( Giant Tank ) என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் 98 சதுர கிலோ மீட்டர் நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டிருந்திருக்கிறது. தற்போது, 27,000 ஏக்கர் விவசாயத்திற்கு இந்த ஏரி நீரே பயன்படுகிறது. இலங்கையில் இந்த நீர்த்தேக்கத்தில் மட்டுமே சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் Montmorillonite என்ற வகை களிமண் கிடைக்கிறதாம். நண்பரின் சொந்த ஊர்க்கதை கேட்டுக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம்.
அட, இது என்ன பாம்பன் பாலம் போல… கடலுக்குள் பாலமா… ஆம், மன்னார் தீவை இலங்கையின் பிற பகுதிகளுடன் இணைப்பதற்கான 3.5 கி.மீ நீளமுள்ள பாலம் கடலின் மீது செல்கிறது. பாம்பன் பாலம் போல் மிக உயரத்தில் இல்லாமல் தாழ்வாகவே இருப்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. 1930களில் போடப்பட்ட ஒரு குறுகிய ஒற்றைப்பாதை பாலம், 1990இல் இன அழிப்பு போரின் போது உடைக்கப்பட, பயணத்திற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். சில கி.மீ தூரத்தில் இருக்கும் பக்கத்து ஊர்களுக்குச் செல்பவர்களும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களும் பட்டதுயரங்களைக் கேட்டபோது ஆயாசமாக இருந்தது. அதன் பிறகு அலுமினியத்தால் ஆன தற்காலிகப் பாலம் போடப்பட்டது. 1990இல் உடைக்கப்பட்ட பாலம் 2010, மார்ச்சில் ஜப்பான் நாட்டு உதவியுடன் புனரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டது என்பதை அங்கிருந்த கல்வெட்டு ஜப்பான் மொழியில் சொல்கிறது. கிட்டத்தட்ட 157.1 மீட்டர் நீளமும் 11 மீட்டர் அகலமும் கொண்ட பாலம் இன்று மன்னாரின் அடையாளமாகிவிட்டது. மன்னார் தீவினுக்கோர் பாலமமைத்து, பயணத்தை எளிதாக்கிய ஜப்பானுக்கு ஒரு ‘அரிகாடோ’ ( thanks) சொல்லிவிட்டு இறங்கினோம். ஆழமற்ற அழகான கடல்பகுதி இருபுறமும். பரபரவென வீசும் காற்றோடு மல்லுக்கட்டிக்கொண்டே பாலத்தில் நடந்து செல்வது சுகமாகத்தான் இருக்கிறது.
நாற்புறமும் அலைகள் தரையைத் தொட்டு தாலாட்டிக்கொண்டிருக்க, கடலோரத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது 30 கி.மீ. நீளம் கொண்ட அந்தத் தீவு. இலங்கையின் வடமேற்கில், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக, மாவட்டத் தலைநகராக இலங்கையின் தொங்கலில் (கடைசியில்) இந்தியாவிற்கு மிக அருகில் அமைந்துள்ளது மன்னார். கி.பி. 1650இல் போர்த்துகீசியர் படையெடுத்து வரும்வரை மன்னார், யாழ்ப்பாணம் ராஜியத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. போர்த்துகீசியம், டச்சு அதன்பின் பிரிட்டிஷ் எனத் தலைமைகள் மாறியிருக்கின்றன. இயற்கை ஆர்வலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், சுற்றுலாவாசிகள் என அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்தக் கண்ணழகிதான் மன்னார் என்பதில் சந்தேகமில்லை.
யுத்த காலத்தில் பல ஆண்டுகள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் மாவட்டம், 2008 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தின்கீழ் வந்தது. இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் இலங்கை மூர்ஸ் மற்றும் சிங்களவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் இந்தியத் தமிழர்கள் (0.40 %) மிக மிகக் குறைவாகவும் இருக்கின்றனர். போர்த்துகீசிய ஆட்சி கொழும்பில் தொடங்கி நீர்க்கொழும்பு, யாழ்ப்பாணம் வரை பரவி, (அத்தோடு சந்தடி சாக்கில் நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி வரை) கிறிஸ்துவத்தை அறிமுகப்படுத்தி, மன்னார்வளைகுடா முழுவதையும் கத்தோலிக்க பெல்ட் ஆக்கியதால், இங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
திருக்கேதீஸ்வரம், மடுமாதா தேவாலயம், தள்ளாடி, குஞ்சுகுளம் தொங்கு பாலம், அல்லி ராணிக்கோட்டை, கட்டுக்கரைக்குளம், வங்காலை பறவைகள் சரணாலயம், பெருக்குமரம், மாதோட்ட துறைமுகம், மன்னார்கோட்டை என வரலாற்றுச் சிறப்புகளால் நிறைந்திருக்கிறது மன்னார். “ஹேய் வண்டியை நிறுத்துங்க…நிறுத்துங்க” என்று கத்தினேன். மன்னாருக்குள் நுழையுமிடத்தில் இருந்த ஒரு விளம்பரப்பலகையைப் பார்த்து, ‘கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்விமையம்’. நான் தான் தவறாக வாசிக்கிறேனோ? என் குழம்பிய முகத்தைப் படித்துவிட்ட மெரினா சிரித்தார். ”என்ன தெகைச்சிப்போய்ப் பார்க்கறீங்கள், எங்கட நாட்டில் கழுதைக்குக்கூட ஓஸ்பிடல் உண்டு தெரியுமோ?” மன்னாரின் பிரதான வீதிகள் உட்பட அனைத்து வீதிகளிலும் சர்வ சுதந்திரத்துடன் வலம் வருகின்றன ஏராளமான கழுதைகள். நம் ஊரில் மிதவாதிகளாகக் காணப்படும் கழுதைகள், அங்கு எப்போது பாய்ந்து வரும், எப்போது தள்ளிவிடும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு, தெருவில் செல்வோரை இடித்துத்தள்ளி பாரிய விபத்துகளையும் ஏற்படுத்தி தீவிரவாதி அவதாரமெடுத்து விடுகின்றனவாம். கழுதைகளுக்கான பராமரிப்பு, மருத்துவ சிகிச்சைகள், கழுதைகள் தொடர்பான ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்ளவே கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்விமையம் இயங்குகிறது. கிளியோபாட்ராவின் அழகைப் பராமரித்த கழுதைப்பால் இங்கும் உற்பத்தி செய்யப்பட்டு அழகுசாதனப் பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறதாம். இவ்வளவையும் கேட்ட பிறகு கழுதையின் படத்துடன் பார்த்த Donkeys – Go SLOW என்ற அறிவிப்பு பலகை எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
ஊருக்குள் நுழைந்துவிட்டோம். நகரின் நடுவாந்திரமாக உள்ளது பஸ் தரிப்பிடம் (Bus Stand). பெரும்பாலும் அரசு பேருந்துகள்தாம். நீண்ட தூரப் பயணங்களுக்குத் தனியார் பேருந்துகளும் உண்டு. பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் மன்னார் மாவட்ட ‘கச்சேரி’ (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) அமைந்திருக்க, மையத்தில் தந்தை செல்வநாயகத்தின் நினைவுஸ்தூபி, சிலையாகக் காணப்படுகிறது. தலைமன்னாரிலிருந்து மன்னார் வழியாகத் தொடருந்து போக்குவரத்தும் கொழும்பு வரை செல்கிறது. போர்க்காலத்தில் சேதமடைந்த இப்பாதை இலங்கை – இந்திய நட்புறவின் அடையாளமாக இந்திய அரசின் நிதியில் மீள புனரமைக்கப்பட்டுள்ளது. 150 வருடம் தொன்மையான புனித சவேரியர் ஆண்கள் தேசியக் கல்லூரியும் புனித சேவியர் பெண்கள் கல்லூரியும் தான் (பள்ளிகள்தாம்) மாவட்டத்தின் முக்கிய பாடசாலைகளாக விளங்குகின்றன.
ஒரு லட்சம் ஜனத்தொகையுள்ள மன்னாரில் மீன்பிடியே பிரதான தொழில். மீன்கள் சல்லிசான விலையில் கிடைப்பதாலோ என்னவோ, தினசரி சமையலில் மீன்கறி கட்டாயம் உண்டு. இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு நல்ல தோணியிலும் கள்ளத்தோணியிலுமாக காலம் காலமாக மன்னார் வழியாகவே தொடர்ந்திருக்கிறது. 15ஆம் நூற்றாண்டிலிருந்தே தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு அனுமதிக்கப்பட்ட தோணி படகுப் போக்குவரத்து தினமும் நடைபெற்றுள்ளது. இலங்கையிலிருந்து சோப்பும் தேங்காய் எண்ணெயும் லுங்கிகளும் இங்குவர இங்கிருந்து பெட்ரோல் முதலான எரிபொருள்களும், வெங்காயமும், மஞ்சளும், இன்னபிற பொருள்களும் சர்வ சாதாரணமாகப் பயணமாயிருக்கிறது மிகச்சமீபக் காலம் வரை. 1915இல் கட்டப்பட்ட தலைமன்னார் கலங்கரை விளக்கம் 19 மீட்டர் (62 அடி) உயரத்தில் வெண்ணிறத்தில் பளீரென நிற்கிறது.
தனுஷ்கோடியில முத்துக்குளிக்க இறங்குபவர்கள் அப்படியே கடல் வழியாகவே போய் மன்னார் கடற்கரையில ஓய்வெடுப்பார்களாம். (மன்னாரில் ஒரு குடும்பத்தையும் ராமேஸ்வரத்தில ஒரு குடும்பத்தையும் ஒருத்தருக்கொருத்தர் தெரியாம வைச்சிருந்த குடும்பத் தலைவர்கள் (?) நிறைய இருந்ததாகக் கூறப்படும் செவிவழிச் செய்தியைக் கதையாகச் சொல்லி சொல்லிச் சிரிக்கிறார்கள்).
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.