Site icon Her Stories

நடமாடும் தெய்வம்

’என்ன பேச்சுப் பேசற? ரொம்பத்தான் பயம் விட்டுப் போச்சு. நான் வயிறு எரிஞ்சு சொல்றேன். என்னை மாதிரி நீயும் புருஷன் இல்லாம கஷ்டப்படத்தான் போற. அதை நான் பார்க்கத்தான் போறேன்…’

இந்தச் சண்டையைக் கேட்டு அதிர்ந்து போனேன். சண்டை என் மாமியாருக்கும் அவருடைய மாமியார் திருமலையம்மாளுக்கும். சண்டையில் தான் பேசுவது தன் மகனைப் பற்றித்தான் என்ற பிரக்ஞை கூட இல்லாமல், மருமகளைக் காயப்படுத்த வேண்டும் என்ற வன்மம்தான் அவரை இப்படிப் பேச வைத்திருந்தது.

திருமலையம்மாள் ஏன் இப்படி?

திருமணமாகி இருபது வருடங்கள் வாழ்ந்த பிறகு முத்துக்குமார சாமி தாத்தாவுக்கு மனைவி இறந்து போனார். நாற்பது வயதில் திருமலையம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். மகன் பிறந்த நான்கே ஆண்டுகளில் தாத்தா மறைந்துவிட்டார். திருமலை தன் பிறந்த வீட்டுக்கு வந்தார். சமீபத்தில்தான் அவருடைய அண்ணன் இறந்து போயிருந்தார். அண்ணியையும் அவருடைய மூன்று பெண்களையும் வயதான காலத்தில் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார் திருமலையின் அப்பா. இப்போது மகளையும் பேரனையும் வளர்க்க வேண்டிய பொறுப்பும் கூடியிருந்தது.

மிகக் கடினமான காலங்கள். அண்ணிக்குப் பயந்து பயந்துதான் எல்லாம் செய்ய வேண்டும். தனக்கென்று சொந்த விருப்பு வெறுப்பு எதையும் வெளிக்காட்ட முடியாது. பல்லைக் கடித்துகொண்டு மகனை ஆளாக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார் திருமலை.

அந்த நாளும் வந்தது. மகன் படிப்பை முடித்து, அஞ்சல் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். தன் ஆசைகள், கனவுகள் எல்லாம் நிறைவேறப் போகிறது என்று சந்தோஷத்தில் இருந்தார் திருமலை. ஓராண்டு அம்மாவும் மகனுமாக வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றது. உறவினர்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கச் சொன்னார்கள். இன்னொரு பெண் இந்த வீட்டுக்குள் நுழைந்தால் தன்னுடைய முக்கியத்துவம் குறைந்து போகும் என்று நினைத்தார் திருமலை. அதற்காக மகனுக்குத் திருமணம் செய்து வைக்காமல் இருக்க முடியுமா?

வேலைக்குச் செல்லும் பெண்ணாகப் பார்த்தால் தன்னுடைய அதிகாரம் கைவிட்டுப் போகாது என்று நினைத்தார் திருமலை. ஜாதகம் சரியில்லை என்று சில சம்பந்தங்கள் தள்ளிப் போயின. திடீரென்று தூரத்து உறவினர் பெண்ணை, உறவினர்களே பேசி முடித்து விட்டனர். தன் மருமகளைத் தானோ, தன் மகனோ பார்க்காமல் திருமணம் செய்ததை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. மருமகள் வீட்டுக்கு வரும் முன்பே பிடிக்காதவராகி விட்டார். இன்னோர் அதிர்ச்சி அவர் வேலைக்கும் செல்லவில்லை.

எல்லாம் நடந்துவிட்டது. இனி என்ன செய்வது? மீண்டும் இன்னொரு பெண்ணிடம் தன் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. என்ன செய்தால் அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்? மூளையைக் கசக்கி யோசித்ததில் அவரே ஒரு திட்டத்தைக் கண்டுபிடித்தார்.

அந்தத் திட்டத்தின்படி மருமகளை எந்த வேலையையும் செய்ய விடக்கூடாது; எல்லோரும் தன்னையே சார்ந்து இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். வீட்டு வேலைகள், சமையல், கடைக்குச் செல்வது என்று சகலத்தையும் தானே செய்தார். சிலர் வேலையை அதிகமாகச் செய்ய வைத்து, கொடுமைப் படுத்துவார்கள். இவர் வேலையே கொடுக்காமல் கொடுமைப்படுத்தினார். மகனுக்கு காபி வேண்டும் என்றால் கூட மருமகள் போட்டுக் கொடுக்க முடியாது. காபி கேட்கிறார் என்று சொல்ல வேண்டும். அவர்தான் போட்டுக் கொடுப்பார்.

மாதம் ஒருமுறை மளிகை சாமான், தீபாவளி, பொங்கலுக்குத் துணி வாங்க என்று எங்கே வெளியே சென்றாலும் திருமலையும் அவர் மகனும் மட்டுமே செல்வார்கள். அவர் விருப்பப்படிதான் மருமகளுக்குத் துணி எடுத்துக் கொடுக்கப்படும்.

பெற்ற குழந்தை அழுதால் கூட மருமகள் தூக்க முடியாது. ’அத்தை, குழந்தை அழறான்’ என்று சொல்ல வேண்டும். அவர் தான் குழந்தையை எடுத்து மடியில் வைப்பார். பால் கொடுத்தவுடன் மீண்டும் குழந்தையை அவரிடம் கொடுக்க வேண்டும். அவர்தான் தொட்டிலில் போடுவார்.

மூன்று பேரன், பேத்திகள். அனைவரையும் தன் அன்பால் சிறை பிடித்து வைத்திருந்தார் திருமலை. எல்லோரும் அம்மா என்று எதற்கும் கூப்பிட மாட்டார்கள்.

‘ஆச்சி பசிக்குது…. ஆச்சி சட்டை எடுத்துக் கொடு… ஆச்சி காய்ச்சல் அடிக்கிது…’

எல்டிசி போட்டு, விடுமுறைக்குச் சுற்றுலா செல்லும்போது கூட திருமலை, மகன், பேரன்கள், பேத்தி மட்டுமே செல்வார்கள். மருமகள் மட்டும் தனியாக வீட்டில் இருக்க வேண்டும். அந்தச் சில நாள்கள் மட்டும் மருமகளுக்கு விடுதலை.

இப்படிச் செயல்படுத்தவிடாமல் வைத்திருந்ததால் மருமகளுக்கு எந்த வேலையும் தெரியாமல் போய்விட்டது. தன் குழந்தைகள் என்ற அக்கறையோ, பாசமோ இல்லாமல் போய்விட்டது. அதேபோல குழந்தைகளுக்கும் அம்மா பாசம் தெரியவில்லை. அம்மா ஸ்தானத்தில் ஆச்சி.

அடிக்கடி மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வந்துவிடும். அம்மா மீது இருக்கும் பாசம், வேலை, அதிகாரம் எல்லாம் திருமலையின் ப்ளஸ் பாயிண்டுகள் என்பதால் மகனிடம் சுலபமாக ஸ்கோர் செய்துவிடுவார். மென்மையான சுபாவம் கொண்ட மகன், பொறுக்க முடியாமல் தன் மனைவிக்காக ஏதாவது பரிந்து பேசி விட்டால் அவ்வளவுதான்…

’உன்னை எப்படிக் கஷ்டப்பட்டு வளர்த்தேன்? எத்தனைக் காலம் அடிமையா இருந்தேன்! இப்படிப் பச்சை மண்ணா போயிட்டீயே. உன் பொண்டாட்டி ஓதுறாளோ…’ என்று அழ ஆரம்பித்து விடுவார்.

வீட்டுக்கு யார் வந்தாலும் மருமகளைப் பற்றிக் குறை சொல்லத் தொடங்கிவிடுவார் திருமலை. அது மருமகளின் அம்மா, அப்பாவாக இருந்தாலும் கூட சளைக்க மாட்டார்.

தான் என்னவாக இந்த வீட்டில் இருக்கிறோம் என்று தெரியாமலே இருபத்தி நான்கு ஆண்டுகளைக் கழித்துவிட்டார் மருமகள். அவருக்கும் மருமகள் வந்துவிட்டாள். ஆனால் திருமலை தன் ஆட்சியை இன்னும் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

எங்கள் திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு மாமாவிடமிருந்து கடிதம் வந்தது. ’நான்கு நாள்களுக்கு முன் உன் அம்மா தரப்பில் சொல்வதென்றால் புரட்சி, உன் ஆச்சி தரப்பில் சொல்வதென்றால் கலகம் உண்டானது. சமையலறையை உன் அம்மா கைப்பற்றி விட்டாள். நான்கு நாள்களாக நாடு இழந்த மன்னன் போல் ஆச்சி விக்கித்து உட்கார்ந்திருக்கிறார்!’

ஓராண்டில் மாமாவுக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் குடும்பம் சென்னைக்கு வந்தது. மாமா இப்போது அத்தையின் கட்சி. இருவருக்கும் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு புரிதல் ஏற்பட்டிருந்தது.

எப்போதும் மருமகளைப் பற்றி குறை சொல்லிக்கொண்டே இருப்பார் திருமலை. ஆனால் ஒருநாளும் அத்தை அவர் மாமியாரைப் பற்றிச் சொன்னதில்லை. சாதாரணமாகப் பேசுவதற்கு அருகில் வந்தால்கூட திருமலையால் தாங்கிக்கொள்ள முடியாது. சண்டைக்கு வந்துவிடுவார்.

திருமலை இல்லாத ஒருநாள், ‘எல்லாரும் மகனும் மருமளும் சந்தோஷமாக இருக்கணும்னு நினைப்பாங்க. ஆனா எங்க மாமியாருக்கு நாங்க ரெண்டு பேரும் சிரிச்சுப் பேசினால் கூடப் பிடிக்காது’ என்று விரக்தியுடன் சொன்னார் அத்தை.

எல்லோரும் வேலைக்குச் சென்றவுடன், நாள் முழுவதும் ரிமோட்டைத் தன் கையில் வைத்துக்கொள்வார் திருமலை. மருமகளை டிவி பார்க்கக்கூட அனுமதிக்க மாட்டார்.

மகனுக்கு இவ்வளவு பெரிய நோய் வந்தது கூட அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அடிக்கடி சண்டை போட்டு, வீட்டில் நிம்மதி இல்லாமல் செய்து விடுவார். அதிலும் பண்டிகை, விசேஷ நாள்கள் என்றால் முதல் நாள் பெரிய சண்டை நடந்துவிடும். பண்டிகைக்கான மகிழ்ச்சி தொலைந்துவிடும்.

’எப்பப் பாரு சாமியக் கும்புட்டுக்கிட்டுத் திரியறே. நான் தெய்வமா நடமாடிக்கிட்டு இருக்கேன். நீ என்னைக் கும்பிட்டா நல்லா இருப்பே!’ என்று திருமலை அடிக்கடி மருமகளிடம் சொல்வார்.

டயாலிசிஸ் செய்வதற்காக மருத்துவமனைக்கு அருகிலேயே வீட்டைப் பார்த்துக்கொண்டு சென்றார்கள் மாமாவும் அத்தையும். அப்போது திருமலை எங்களுடன் தங்கிவிட்டார். மீண்டும் தன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, தானே சமைக்கிறேன் என்றார்.

‘வேண்டாம் ஆச்சி. நீங்க இத்தனை வருஷம் கஷ்டப்பட்டது போதும். இனி நானே பார்த்துக்கறேன்’ என்று சொல்லிவிட்டேன்.

அன்று முதல் நானும் அவருக்குப் பிடிக்காதவளாக மாறிப் போனேன்.

காலை முதல் மாலை வரை தனியாளாக வீட்டில் வேலையும் இல்லாமல், சண்டை போட ஆளும் இல்லாமல் திருமலை தவித்துப் போனார்.

வெண்டைக்காய் பொரியல் செய்தால், அதில் புளியைக் கரைத்து பச்சடியாக்கித்தான் சாப்பிடுவார். கீரை கடைந்தால், அதை எண்ணெய்யில் வதக்கி வேறொரு விதமாகச் சாப்பிடுவார். இப்படி எதையும் செய்யப்பட்ட விதத்தில் சாப்பிடுவதில்லை. பால், பழம், தயிர், நெய் என்று உடலை நன்றாகக் கவனித்துக்கொள்வார். அடிக்கடி மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்துகொள்வார். ஒரு கண் ஆபரேஷன் செய்து, பார்வை நன்றாக இருக்கிறது. இன்னொரு கண்ணை ஒன்றும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் சொன்னாலும், தன்னுடைய வயதில் பத்து ஆண்டுகளைக் குறைத்து, வாசன், அகர்வால் என்று ஏறி, இறங்கி வருகிறார்.

உறவினர்கள் வீட்டுக்குச் செல்கிறேன் என்பார்.

‘இப்ப எப்படி சந்தோஷமா போறீங்களோ, அப்படித் திரும்பி வரணும். மறுபடியும் உங்களைக் கூப்பிடற மாதிரி நடந்துக்கணும்’ என்பார் பேரன்.

ஆனால் ஒருபோதும் பிரச்னை இல்லாமல் திரும்பி வந்ததில்லை. ஒருமுறை பெரிய அத்தை வீட்டுக்குச் சென்றார். அத்தை வேலைக்குச் செல்வதால் காலை அரக்க பரக்கக் கிளம்பிச் செல்வார். வீட்டில் பொருள்கள் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும். அவர்கள் குடியிருந்த வீட்டுக்கார அம்மாவிடம், வீட்டைக்காட்டி, ‘உங்க வீட்டை எப்படி வச்சிருக்கான்னு பாருங்க. விளங்குமா?’ என்று போட்டுக் கொடுக்க, பன்னிரண்டு ஆண்டுக்கால நட்பில் விரிசல் வந்துவிட்டது. உடனே திருமலை அனுப்பப்பட்டார்.

அக்கம்பக்கத்து வீடுகளில் நல்ல பெயர் எடுக்க, போன் செய்ய அனுமதிப்பது, இட்லி, இட்லி மாவு, புத்தகங்கள், ஊரிலிருந்து கொண்டு வந்த வடகம், வற்றல், ஊறுகாய்கள் எல்லாவற்றையும் கொடுத்து விடுவார். கொடுக்கும் விஷயம் என் பேரனுக்கோ, பேரன் பெண்டாட்டிக்கோ தெரியக் கூடாது என்று சொல்லி விடுவார். வேலைக்குச் சென்று விடுவதால் பகலில் திருமலை செய்யும் காரியங்கள் எதுவும் கவனத்துக்கு வருவதில்லை.

பத்தாண்டுகள் சிறுநீரகப் பாதிப்புடன் போராடிய மாமா, மூன்று மாதங்கள் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தார். ஒருநாளும் திருமலை தன் மகனைப் பற்றி விசாரிக்க மாட்டார்.

ஒருநாள் மாமா இறந்து போனார். உறவினரிடம் திருமலையை மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி சொன்னோம்.
இரண்டு புடைவைகளை எடுத்துக்கொண்டு, சலனமில்லாமல் மருத்துவமனை வந்தார். என்ன சொல்வது என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது, ‘ரொம்ப நேரம் ஆச்சோ? எப்பப் போய்ச் சேர்ந்தான்?’ என்றார்!

86 வயதாகி விட்டது. நல்ல சுறுசுறுப்பு. மூன்று மாடியை நிற்காமல் ஏறும் சாமர்த்தியம். எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறன். எந்த உணவும் அவர் செய்தால் அத்தனை சுவையாக இருக்கும். பாத்திரம் தேய்த்தாலோ, துணி துவைத்தாலோ பளிச்சென்று இருக்கும். சுத்தமாக, நன்றாக உடை அணிவார். தேவையற்ற பொருள்களை வைத்து, க்ரியேட்டிவ்வாக எதையாவது செய்யும் ஆற்றல் எல்லாம் உண்டு. ஆனால் இத்தனை நல்ல விஷயங்களையும் தன்னுடைய இயல்பால் மறக்கச் செய்து விடுவார்.

இன்றும்…

‘ராத்திரி வந்தவுடன் நியூஸ் பார்க்க ஆரம்பிச்சுடறா. நா எப்படி சீரியல் பார்க்கறது?’

‘பகல் முழுவதும் நீங்கதானே பார்க்கறீங்க பாட்டி? கொஞ்ச நேரம் அவங்க பார்த்தா என்ன? இந்தக் காலத்துல மாமியாரையே வச்சுப் பார்க்க மாட்டேங்கிறாங்க. உங்க பேரன் பொண்டாட்டி பார்க்கறது பெரிய விஷயமில்லையா?’

‘என்ன பெரிய விஷயம்? அவ புருஷனை நான்தான் வளர்த்திருக்கேன். எனக்குப் பார்க்க வேண்டியது அவ கடமை. இப்படியெல்லாம் பேசாதீங்க. எனக்குப் புடிக்காது… ’

கட்டுரையாளர் குறிப்பு

சஹானா

பெண்கள், பெண்கள் பிரச்னைகள் குறித்துப் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். கடந்த 15 ஆண்டுகளாக எழுதி வருகிறார். குங்கும் தோழியில் ‘உலகை மாற்றிய தோழிகள்’, ‘தடம் பதித்த தாரகைகள்’ ஆகிய தலைப்புகளில் தொடர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வாசகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர்கள் சூரியன் பதிப்பக நூல்களாக வெளிவந்துள்ளன. ‘வினு விமல் வித்யா’ உள்பட பேசும் பெண் கேரக்டர்களை உருவாக்கி பெண் உலகம் சார்ந்து எழுதி வருகிறார்.

Exit mobile version