Site icon Her Stories

சைனாடவுனும் சீனப் புத்தாண்டும்

சான் பிரான்சிஸ்கோ – 4

யெர்பா பியூனா (Yerba Buena) புதினா வகை பூ பூக்கும் செடி. சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த செடி ஏராளமாக உள்ளது. பிரான்சிஸ்கன் மிஷனரி குருவானவர் ஒருவர், இந்த செடிக்கு யெர்பா பியூனா என்ற ஸ்பானிஷ் பெயரை இட்டார். அதற்கு நல்ல மூலிகை என்று பொருள். அந்த பெயரே தொழிலாளர்களுக்கு வீடு கட்ட இடம் தேர்வு செய்த அவர்களின் குடியேற்றத்திற்குமான பெயராக மாறியது. யெர்பா பியூனா பகுதி, சான் பிரான்சிஸ்கோவின் பிரசிடியோ (Presidio of San Francisco) மற்றும் மிஷன் சான் பிரான்சிஸ்கோ டி ஆசிஸ் (Misión San Francisco de Asís) இடையே இருந்தது. அது அப்போது, சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கு வருகை தரும் கப்பல்களுக்கான வணிக நிலையமாக இருந்தது. இதன் சுற்று வட்டாரமே  பிற்காலத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரமாக விரிவடைந்தது. அன்றைய யெர்பா பியூனா பகுதி தான் இன்றைய சைனா டவுன். 

யெர்பா பியூனா

சீனாவின் புஜியான் மாகாணத்தில் (Fujian Province) இருந்து, 1800களின் முற்பகுதியில் இருந்தே, மக்கள் அமெரிக்கா வந்து குடியேறியிருக்கின்றனர். அதாவது 1949ம் ஆண்டு இங்கு வந்த குழுக்களுக்கு முன்பே அவர்கள் வந்துள்ளனர்.

1848 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தங்கம் கிடைப்பதாக கேள்விப்பட்டதும்,  மேலும் அதிகமானோர் சீனாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தனர். சான் பிரான்சிஸ்கோ துறைமுகம் வந்து இறங்கினர். 

1800 களின் மத்தியில் சீன அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில், அமெரிக்காவில் சீன குடியேற்றம் பெரிய அளவில் ஏற்பட்டது. 

மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் குறைவான ஊதியம் பெற்று  அவர்கள் மேற்கு ரயில்வே தண்டவாளங்களை அமைத்தனர். ரயில்வே தண்டவாள வேலை, 1868 இல் முடிக்கப்பட்டது. தங்கச் சுரங்கங்களிலும் அவர்கள் வேலை செய்தனர்.  1850 மற்றும் 1882 க்கு இடையில் 322,000 சீனர்கள் அமெரிக்காவிற்கு வந்தனர். அமெரிக்க காங்கிரஸ் 1882 இல் சீனர் விலக்கு சட்டத்தை நிறைவேற்றியது. மேலும் ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறிய சீன குடியுரிமை மறுக்கப்பட்டது.

சீன குடியேறியவர்கள் தங்கள் சொந்த அமைப்புகளை உருவாக்கினர். சைனாடவுன் நிறுவப்பட்டது. ஜியரி சட்டம் 1892 ( Geary Act in 1892) சீனர்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்தது. சட்டத்தை எதிர்த்து சீனர்கள் 10,000 வழக்குகளை தாக்கல் செய்தனர். 1905 யுனைடெட் ஸ்டேட்ஸ் v. ஜூ டாய் (United States v. Ju Toy) வழக்கிற்குப் பின் வணிகம் மற்றும் தொழிலாளர் துறை நிறுவபட்டது. இதன் விளைவாக சீன குடியேற்ற வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

1906ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ பூகம்பம் மற்றும் நகரமெங்கும் ஏற்பட்ட தீ விபத்து பல குடியேற்ற பதிவுகளை அழித்தது. பதிவுகள் எதுவும் கிடைக்காத நிலையில், ஏற்கனவே அமெரிக்காவில் வசித்த சீனர்கள் பலர், இங்கு பிறந்ததாக சொல்லித்  தங்களைக்  குடிமக்களாக ஆக்கிக் கொண்டனர். நிலநடுக்கத்தின்போது சைனாடவுன், முற்றிலும் அழிந்தது. மீண்டும் புதுப்பிக்கப் பட்ட சைனாடவுன், இப்போது சீன பாரம்பரிய, உணவு, மற்றும் கலைப் பொருட்கள் விற்கும் இடமாக உள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது, சீனா நேச நாடுகளுடன் இணைந்ததால், ஜனாதிபதி ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் ( Franklin D. Roosevelt) மேக்னுசன் சட்டத்தில் (Magnuson Act) கையெழுத்திட்டார். டிசம்பர் 13, 1943ன் இந்தச் சட்டம் சீனர்களை அமெரிக்க குடிமக்களாகக் கருத அனுமதித்தது. இருப்பினும், அக்டோபர் 1965 இன் குடியேற்றச் சட்டம் வரும் வரை, பல சட்டங்கள் சீன குடியேற்றத்தின் மீது கட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தன. 1965 ஆம் ஆண்டின் குடியேற்றச்  சட்டம் (he Immigration and Naturalization Act of 1965) திறமையான தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதித்தது. 

இவ்வாறு பல வரலாறுகளைக் கொண்டுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சைனாடவுன், வட அமெரிக்காவின் மிகப் பழமையான சைனாடவுன் மற்றும் ஆசியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சீன வாழ்விடம். ஏறத்தாழ தோராயமாக 1⁄2 மைல் (0.80 கிமீ) நீளம் 1⁄4 மைல் (0.40 கிமீ) அகலம் மட்டுமே கொண்ட, சைனாடவுன் மட்டும் ஐந்து அஞ்சல் ZIP குறியீடுகளைக் (pincode) கொண்டுள்ளது. நாட்டில் சான் பிரான்சிஸ்கோ சைனாடவுன் தான் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட இரண்டாவது இடம் (முதலிடம் மன்ஹாட்டன், நியூயார்க்).

1970 ஆம் ஆண்டில், சீன-அமெரிக்க கட்டிடக் கலைஞர் கிளேட்டன் லீ நுழைவாயிலை (Chinatown gate) வடிவமைத்து அமைத்தார். கல் தூண்கள், பச்சை ஓடு வேயப்பட்ட பகோடாக்கள் மற்றும் டிராகன் சிற்பங்களுடன், மூன்று கல் சிங்க சிலைகளும் உள்ளன. சீனக் குடியரசை நிறுவிய டாக்டர். சன் யாட் சென் (Dr. Sun Yat Sen) அவர்களின், “வானத்தின் கீழுள்ள அனைத்தும் மக்களின் நன்மைக்காக” (“All under heaven is for the good of the people”) என்ற வாசகம் சீன மொழியில், பொறிக்கப் பட்டுள்ளது.  

மேடு பள்ளமான, மலைகள் நிறைந்த இடமாக சைனாடவுனில் உள்ள சொர்க்க தேவி கோவில் Tin How, சீன விளக்கு கம்பங்கள், சிவப்பு நிற விளக்குகள், கடைகள், சீன பாணியில் கட்டிடங்கள் என தெருக்கள் முழுவதுமே பார்க்க மிக அழகானவை. 

சீனக் கடை

1854 ஆம் ஆண்டு கட்டப்பட்ட, சைனாடவுனில் இருக்கும் மாதா கோவில் (St. Mary’s) தான் கலிபோர்னியாவின் பழைய ஆலயம். இதன் அடித்தளத்திற்குப் பயன்படுத்திய கற்கள், கட்டடத்திற்குப் பயன்படுத்திய செங்கற்கள் அனைத்தும் சீனாவில் இருந்து வந்தவை. கதீட்ரல் உள்ளே, 1906 பூகம்பம் மற்றும் தீயில் இருந்து புகைப்படங்கள் ஒரு சிறிய காட்சி உள்ளது. கோபுரத்தில் உள்ள கடிகாரம் மிகவும் பிரபலமானது. தேவாலயம், பூங்காவுடன் கூடிய  செயின்ட் மேரி சதுக்கத்தில் (St. Mary’s Square) உள்ளது. 

இங்கு இருக்கும், போர்ட்ஸ்மவுத் சதுக்கம் (Portsmouth Square) இருக்கும் இடத்தில், ஸ்பானிஷ் பாணியில் 1775–76 இல் குடியேற்றம் ஏற்பட்டது. 1833 ஆம் ஆண்டில் பொது மக்கள் கூடும் தளமாகப் பயன்படுத்தப்பட்ட இது, இன்றும் அவ்வாறே பயன்படுகிறது. மெக்சிகன்-அமெரிக்கப் (Mexican–American War) போரின் போது, கேப்டன் ஜான் மாண்ட்கோமெரி (John Montgomery) இப் பகுதியில், யுஎஸ்எஸ் போர்ட்ஸ்மவுத் (USS Portsmouth) கப்பலை ஜூலை 9, 1846 இல் தரை இறக்கினார். அதனால், இந்தப் பகுதிக்கு, போர்ட்ஸ்மவுத் சதுக்கம் என்று பெயரிடப்பட்டது.

போர்ட்ஸ்மவுத் (Portsmouth Square), சான் பிரான்சிஸ்கோவின் முதல் மேயர் ஜான் டபிள்யூ. கியரி (John W. Geary ) அவர்களால் ஏற்படுத்தப் பட்ட மூன்று நகரப் பூங்காக்களில் ஒன்று. சைனாடவுனின் மக்கள், குழந்தைகளை விளையாட அல்லது நண்பர்களைச் சந்திக்க என பலவகையிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள். சிறிய இடம் தான் என்றாலும், சீட்டு, மஜாங் (mahjong game) Chinese chess போன்ற விளையாட்டுகளால் அந்த இடம் எப்போதும், கலகலப்பாக இருக்கிறது. சிறிய பெட்டிகளைக் கவிழ்த்து மேசை போல பயன்படுத்துகிறார்கள். குடும்பம் முழுவதுமே, தங்களுக்கென நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டு விளையாடுகிறார்கள். அருகில் சொர்க்க தேவி கோவில் Tin How உள்ளது. தூபம் இங்கு அதிகமாக பயன்படுத்துவதால், மிகவும் வாசனையாக இந்த இடம் இருக்கிறது.

கோல்டன் கேட் பார்ச்சூன் குக்கீ ஃபேக்டரி (Golden Gate Fortune Cookie Factory), 1962 முதல் இயங்குகிறது. இன்றும் பழமையான முறையில் இயங்கும் தொழிற்சாலை என இதைக் கூறலாம். இந்த தொழிற்சாலை ஒரு நாளைக்கு சுமார் 20,000 குக்கீகளை உற்பத்தி செய்கிறது. இலவச சாம்பிள் கிடைக்கும். அவரவர் விருப்பப்பட்ட வாசகம் குக்கீயில் அச்சிட தனிக்கட்டணம் வசூலிக்கிறார்கள். 

சைனா டவுன் வெள்ளை மாளிகை

ஒரு காலகட்டத்தில், சீனா டௌனின் வெள்ளை மாளிகை (White House of Chinatown) என அழைக்கப் பட்ட Chinese Six Companies கட்டடம். இந்த ஆறு நிறுவனங்கள் சைனாடவுனுக்குள் ஒரு அரசாங்கமாகச் செயல்பட்டன. உறுப்பினர்களிடையே உள்ள சர்ச்சைகளைத் தீர்த்து வைத்தன. சீன எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராடின. ஆறு நிறுவனங்களை நடத்திய வணிகத் தலைவர்கள், அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தினர். 

சைனா டவுன் வணிக வீதி

அருகில் டிரான்ஸ்அமெரிக்கா பிரமிடு (The Transamerica Pyramid) உள்ளது. இது  48 மாடி  கட்டிடம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ இரண்டாவது மிக உயரமான கட்டிடம் ஆகும். 1972 இல் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து 2018 சேல்ஸ்ஃபோர்ஸ் டவர் காட்டப்படும் வரை இதுவே மிக உயரமான கட்டிடமாக இது இருந்தது. 

டிரான்ஸ் அமெரிக்கா பிரமிடு

பிராட்வே சுரங்கப்பாதையின் (Broadway Tunnel) சைனாடவுன் பக்கம், 56 அடி நீளமுள்ள ஒரு டிராகனின் வெண்கல மற்றும் பித்தளை சிற்பம் உள்ளது.

சீனப் புத்தாண்டு

சீனப் புத்தாண்டு, என்பது, சீன நாட்காட்டியில் புதிய ஆண்டின் தொடக்கத்தை கொண்டாடும் நாள். இது, சீனா மற்றும் கிழக்கு /தென்கிழக்கு ஆசிய நாடுகளில், வசந்த காலத்தின் தொடக்க  விழா. சீனப் புத்தாண்டின் முதல் நாள் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20 வரை தோன்றும் அமாவாசை அன்று தொடங்கி 15 நாட்கள் கொண்டாடப் படுகிறது.

12 ராசி விலங்குகளின் ஆண்டுகளாக 12 ஆண்டு சுழற்சி முறையில் ஆண்டுகள் கடைபிடிக்கப் படுகின்றன. அதன்படி இந்த ஆண்டு புலி ஆண்டு. மன்னர் ஒருவர், இந்த 12 விலங்குகளுக்கும் ஓட்டப் பந்தயம் வைத்ததாகவும், அவை வந்த வரிசையின் படி ஆண்டுகளின் வரிசை இருப்பதாக அவர்களின் புராணம் சொல்கிறது.  அவரவர் பிறந்த ஆண்டு அவர்களுக்கு ராசி இல்லாத ஆண்டு என கருதப் படுகிறது.

நமது பொங்கல் முடிந்து சில நாட்களில் வரும் இவ்விழா, பொங்கல் போலவே, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடும் விழாவாக உள்ளது. நாம் போகி அன்று வீட்டைத் தூய்மை செய்வது போல அவர்களும் சீனப் புத்தாண்டிற்கு வீட்டைத் தூய்மை செய்கிறார்கள். சிவப்பு காகித உறைகளில் வைத்து இளையவர்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள். என் மகளுக்கு இங்கு ஒரு அம்மா அவ்வாறு கொடுப்பார்கள். 

பரிசுகள் பரிமாறிக் கொள்கிறார்கள். இவ்வாறாக நமது பொங்கலை பல விதத்திலும் நினைவூட்டும் விழாவாக இது உள்ளது. 

விழா நடந்த நாளில் குளித்தால், வீட்டில்  உள்ள குப்பையை வெளியே வீசினால், செல்வமும் வெளியே சென்று விடும் என்பது போன்ற பல நம்பிக்கைகள் அவர்களுக்கு இருக்கிறது.  சில இடங்களில், வீட்டில் ஏழைகளுக்குப் புண்ணியம் கொடுத்த பிறகு குளித்தால், வீட்டில்  உள்ள குப்பையை வெளியே வீசினால்,கடவுளின் அருள்  வெளியே சென்று விடும் என நம்பிக்கை இருக்கிறது. அதே போல வீட்டில் இருந்து பிள்ளைகள் நெடுந்தூர, நெடுங்கால பயணமாக வெளியூர் சென்றாலும், இதே முறை கடைபிடிக்கப் படுகிறது. இவ்வாறு ஒரே மாதிரியான நம்பிக்கைகள் பல இடங்களிலும் உள்ளன.

விழாவின் போது, வீட்டை சிவப்பு காகிதம் கொண்டு அலங்கரிக்கிறார்கள். பட்டாசு வெடித்து மகிழ்கிறார்கள். 

கொண்டாடத்தில் இந்த வகை சிறிய ஆரஞ்சுப் பழம் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. குறிப்பாக முதல் நாள் இப்பழங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறார்கள். இந்த வகைப் பழத்தை மாண்டரின் (Mandarin) என்று தான் அழைக்கிறார்கள். மாண்டரின் என்றால் சீன மொழியின் பெயர். 

மாண்டரின் ஆரஞ்சு

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான வழக்கம் உள்ளது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள இவ்வாறு செய்கின்றனர். இந்த தட்டில் உள்ள உணவுப்பொருட்கள், அனைத்தும் வீட்டிற்கு, நன்மை கொண்டுவரும் பொருட்களாகக் கருதப் படுகின்றன.

அனைவரும் இவற்றை மேலே தூக்கி வீசுகிறார்கள். எவ்வளவு உயரத்தை தூக்கி எறிகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நன்மை நடக்கும் என்பது ஐதீகம்.  இது தனித்துவமான சிங்கப்பூர் மற்றும் மலேசிய சீனர்களின் பாரம்பரிய உணவு. காய்கறிகள் மீன் மற்றும் ஜெல்லிமீன்கள் மேல் எள் (Veggies and sashimi grade fresh fish and jellyfish) தூவி வைத்திருக்கிறார்கள்.

இங்கே நாம் அனைவரும் தூக்கி வீச, பொருட்களை எடுக்கத் தொடங்குகிறோம். இவை குடும்ப நண்பர் வீட்டில் நேற்று எடுத்த புகைப் படங்கள்.

டாஸ்!

பொதுவாகவே அவர்கள், விருந்தில் இவ்வாறு முட்டையை  நிறமூட்டி பரிமாறுகிறார்கள். சீன கலாச்சாரத்தில் முட்டைகள் பிறப்பு அல்லது ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கிறது; எனவே, பிறந்தநாளின் போது குறிப்பாக முதல் மாதம் அல்லது முதல் ஆண்டின் பிறப்பு போன்றவற்றின் போது விருந்தினர்களுக்கு இவ்வாறான சிவப்பு முட்டைகளை வழங்குகிறார்கள். இவை குடும்ப நண்பர் அவரது பேரனின் முதல் மாத நிறைவிற்குத் தந்தது.

தேயிலை முட்டை

புத்தாண்டின் போது தேயிலை முட்டை / சா யே டான் (Cha Ye Dan) செய்கிறார்கள். முட்டை பொதுவாகவே தங்கக் கட்டிகளைக் குறிக்கின்றன. செல்வம் மற்றும் செழிப்பு குடும்பத்தின் முழுமை ஒற்றுமை போன்றவற்றைக் குறிக்கிறது. 

சிவப்பு முட்டையின் சுவையில் வேறுபாடு ஒன்றும் இருக்காது. ஆனால் தேயிலை முட்டையில் தேயிலை வாசம் வருவதால் நன்றாக இருக்கும். ஆனால் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்காது. உடைத்த பின் முட்டையில், தேயிலையின் நிறம் ஆங்காங்கே நரம்பு ஓடுவது போல / தாவரத்தில் வேர் ஓடுவது போல முட்டை முழுவதும் தென்படும். 

இறுதி நாளில் விளக்கு வைத்துக் (chinese lantern festival) கொண்டாடுகிறார்கள். டிராகன் மற்றும் சிங்க நடனங்கள் நடைபெறுகின்றன.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும்  சீன புத்தாண்டு கொண்டாட்டம், ஆசியாவிற்கு வெளியே நடைபெறும், மிகப்பெரிய மற்றும் பழமையான சீன புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒன்றாகும். 958 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இவ்விழாவில், கண்காட்சி,மலர் கண்காட்சி அணிவகுப்பு என ஊரே களைகட்டும். இங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்க  சுமார் 500,000 பேர் வருகிறார்கள். டிவியில் 300,000 பேர் பார்க்கிறார்கள். 

பல்வேறு நாடுகளும் சீனப்புத்தாண்டு அஞ்சல் தலைகள் வெளியிடுகின்றன. இந்த ஆண்டு சிங்கப்பூர் வெளியிட்ட அஞ்சல் தலைகள் 

சிங்கப்பூர் நகரில் அலங்காரம்

மக்காவு சீன புத்தாண்டு

ஆசியாவின் லாஸ் வேகாஸ் என்று அழைக்கப் படும் மக்காவு, சீனாவின் தெற்கு கடற்கரையில், ஹாங்காங்கிற்கு மேற்கே 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மக்காவு சென்று கொண்டிருந்த கப்பல் தான் புயலில் சிக்கி தான் வேளாங்கண்ணியில் கரை இறங்கியதாக வேளாங்கண்ணி ஆலய வரலாறு சொல்கிறது. 16 ஆம் நூற்றாண்டு முதல் போர்த்துகீசியர்கள் குடியேற்றமாக இருந்த மக்காவு தான், போர்ச்சுக்கலிடமிருந்து விடுதலை பெற்ற கடைசி காலனி. மக்காவு, 1999 ஆம் ஆண்டு சீனா கைவசம் வந்தது. தற்போது சீனாவின் ஒரு சிறப்பு நிர்வாக பகுதியாக உள்ளது. மக்காவு நாட்டிற்கென தனி நாணயம், அஞ்சல் தலை எல்லாம் உண்டு.

இரு ஆண்டுகளுக்கு முன் மக்காவு சென்ற போது இது சீன புத்தாண்டு காலகட்டம் என்பதால் ஊரே சிவப்பு நிற விளக்குகள் மற்றும் அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அந்த ஆண்டு எலி ஆண்டு என்பது அலங்கார அமைப்புகளில் தெரிகிறது. 

அவற்றில் இருந்து சில புகைப்படங்கள் 

அனைவருக்கும் சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

சுற்றுவோம்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

Exit mobile version