குழந்தைப் பருவம் என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. அந்தப் பருவத்தில் அவர்கள் சரியான முறையில் கட்டமைக்கப்பட வேண்டும். சரியான வழிகாட்டுதல் இருந்தால் பிற்காலத்தில் அவர்கள் சாதனை புரிவார்கள். குறைந்த பட்சம் அடுத்தவரை வேதனைப்படுத்தாமலாவது வாழ்வார்கள். ஆனால் நமது இந்தியச் சமூகத்தில் குழந்தை வளர்ப்பு என்பது முழுமையாகப் பெண்ணின் வசமே ஒப்படைக்கப்படுகிறது. இல்லையில்லை திணிக்கப்படுகிறது.
அப்பாக்கள் ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே..’ என்று பத்தாம்பசலித்தனமாகப் பொறுப்பிலிருந்து கழன்று விடுவார்கள். குழந்தை வெற்றிகள் பெறும்போதும், விருதுகள் வாங்கும் போதும் ‘என் வித்து.. என் வம்சம்.. என் பரம்பரை..’ என்று புளங்காகிதம் அடைபவர்கள், குழந்தை தப்பித் தவறி ஏதேனும் தவறு செய்து விட்டால் மொத்தப் பழியையும் அன்னையின் மீது சுமத்தி சுலபமாக நழுவி விடுவார்கள்.
அந்தக் காலத்து குழந்தைகள் எதற்கும் அடம் பிடித்தது இல்லை. ஒரு வீட்டில் வசவசவென்று நிறையக் குழந்தைகள் இருந்ததால், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்ததில்லை. கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்தார்கள். ஆனால் இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் ஒற்றைக் குழந்தையாக இருப்பதால் அவசியமான, அவசியமற்ற என்று எல்லாமும் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறது. இதனால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருப்பதில்லை. அதிகமாகப் புகழப்பட்டு வளரும் குழந்தைகள் சிறு தோல்வியைக் கூடப் பொறுத்துக் கொள்வதில்லை. தற்கொலை என்ற பெரிய முடிவுகளை அசாதாரணமாக எடுக்கிறார்கள்.
தாய், தந்தை தமது குழந்தைகளுடன் நட்பாகப் பழக வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் மனதில் வைத்துப் புழுங்காமல், எதைப் பற்றியும் விவாதிக்கும் ஒரு சுதந்திரமான மனநிலையை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தனது பிரச்சினையை வெளியில் இருப்பவர்களுடன், முகம் தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொண்டு புது ஆபத்தை ஏற்படுத்திக் கொள்வது ஒழியும்.
வேலைக்குப் போகும் பெண்களோ இல்லை வீட்டில் இருப்பவர்களோ, யாராக இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் ஆண்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மனப்போக்கை முதலில் பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். குழந்தையின் கழிவுகளை அகற்றுவதையும், சுத்தம் செய்வதையும் இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சிறிய விஷயத்துக்கெல்லாம் மனம் நெகிழ்ந்து கண்ணீர் விடுவதைப் பெண்கள் முதலில் நிறுத்த வேண்டும்.
நம்மைப் பார்த்துத்தான் நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளும். ஆண்கள் உயர்வானவர்கள் என்றும், பெண்கள் அடுத்த நிலை என்றும் நாம் மறைமுகமாக நமது செயல்களில் காட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். அந்த ஆணாதிக்கச் சிந்தனையை மாற்றி பெண்களின் கோணத்திலும் சிந்திக்க வேண்டும். ஆண்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. நமது சக தோழர்கள் தான் என்பதை நமது குழந்தைகளுக்கு கற்பித்தல் வேண்டும்.
பெண் குழந்தை வைத்திருப்பவர்கள் தன் குழந்தையை ‘ஆண்போல தைரியமாக வளர்க்க வேண்டும்..’என்று பிதற்றுவதை முதலில் நிறுத்த வேண்டும். ஆண் போல என்று சொல்லுவதிலேயே ஆணாதிக்கச் சிந்தனை மேலோங்கி விடுகிறது. பள்ளிகளில் குழந்தைகளைத் தனித்தனியாகப் பிரித்து உட்கார வைப்பதில் தொடங்கும் பாலின பேதம் அவர்கள் வளர வளர மேலும் அதிகரிக்கிறது.
எந்த நேரமும் தனது உடல், உடை பற்றிய சிந்தனையிலேயே பெண் இருக்க வேண்டியுள்ளது. பாவாடை விலகாமல், ஆடை நழுவாமல், துப்பட்டாவைச் சுற்றிக் கொண்டு என்று பெண்ணுடல் பொத்திப் பொத்தி வைக்கப்படுகிறது. ஆனாலும் இந்தச் சமூகத்தில் தான் கற்பழிப்புகளும், பலாத்காரங்களும் வகைதொகையில்லாமல் நடக்கிறது. குறைந்த ஆடைகளோடு உலவும் பழங்குடியினரிடையே கற்பழிப்புகள் ஏதும் நடந்ததாக நாம் அறிந்துள்ளோமா?.. பின்னும் அவர்கள் தங்கள் இணைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விதங்களும், சுதந்திரமும் நாகரீகத்தில் கோலோச்சும் நமக்கு வாய்த்திருக்கிறதா என்ன?
குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்கிறோமென்று அவர்கள் சுயமாக தங்கள் வேலைகளைச் செய்து கொள்ளக் கூட முடியாதவர்களாகத்தான் நிறையப் பெற்றோர் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் அவர்களின் ஒற்றைப்பையன் பள்ளிக்குக் கிளம்பும் போது அவனது அம்மா அவனுக்கு ஷூக்களைத் துடைத்து காலில் மாட்டி விட்டார். என் கணவர், “பாரு.. எவ்ளோ பாசமா இருக்காங்கன்னு.. எவ்வளவு ஆசையா பணிவிடை செய்யறாங்கன்னு.. நீயும் தான் இருக்கியே.. பாப்பாவையே போட்டுக்கச் சொல்லிட்டு.. அவங்க கிட்ட பாசமா குழந்தையை பாத்துக்கறது எப்படின்னு கத்துக்கோ..” என்று என்னிடம் சொன்னார். அந்தப் பையன் பனிரெண்டாம் வகுப்பு படிப்பவன். என் மகள் எல்.கே.ஜி. நான் அத்தகைய பாசத்தைக் கற்றுக் கொள்ளவேயில்லை.
தனது வேலையைத் தானே செய்து கொள்ளப் பழகாத ஒரு குழந்தை எப்படி எதிர்காலத்தில் இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்ளப் போகிறது? இந்தச் சிறுவன் நாளை திருமணமானால் அம்மா செய்த பணிவிடைகளைத்(?) தன் மனைவியும் செய்ய வேண்டும் என்று தானே எதிர்பார்ப்பான். தான் எவ்வளவு மோசமான தலைமுறையை உருவாக்குகிறோம் என்று அறியாமல் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?
அன்றைய குழந்தைகள் வெளியிலேயே தான் திரிந்தார்கள். எங்கு வேண்டுமானாலும் தனியாய்ப் போவார்கள். அப்போதும் பிரச்சினைகள் இருந்தன. முடிந்தவரை அதை அந்தக் குழந்தைகளே சமாளித்துக் கொண்டார்கள். இல்லையெனில் வீட்டில் இருந்த பெரியவர்களிடம் சொன்னார்கள். ஆனால் இன்று குழந்தைகளை வெளியில் எங்கும் தனியே விட முடியாத காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அவர்களது பிரச்சினைகளைக் கேட்கப் பெரியவர்களும் பெரும்பாலான வீடுகளில் இல்லை. இருக்கும் கொஞ்சப் பேர்களும் சீரியல்களுக்குள் புதைந்து கொள்கிறார்கள்.
தனது எண்ணங்களையும், பருவ வயதில் எழும் இயற்கையான குழப்பங்களையும் பகிர்ந்து கொள்ள ஆட்களின்றி தவறான நட்புகளிடமோ அல்லது வேண்டாத இணையதளத்திலோ தேவையில்லாதவற்றைப் பார்த்து விட்டு வேண்டாத சிந்தனைகளுக்கு ஆட்பட்டு விடுவார்கள். இவற்றைத் தவிர்க்க பருவ வயதில் எழும் குழப்பங்களைப் பெற்றவர்களே தேவையான அளவுக்குத் தெளிவாக எடுத்துரைத்தால் அவற்றைப் புறந்தள்ளி விட்டு எளிதாகக் கடக்கும் வலிமை அவர்களுக்குக் கிடைக்கும்.
சமூகத்தில் நிகழும் அன்றாட நிகழ்வுகள், அவலங்கள் போன்றவற்றைக் கூடுமானவரை குழந்தைகளுடன் விவாதிக்க வேண்டும். பொத்தி வைத்த மல்லிகை மொக்குகளாகக் குழந்தைகளை வைத்துக் கொண்டிருந்தால் அவை வெம்பி விடும். இலேசான காற்றோட்டம் இருந்தால் தான் அவை அழகாக மலர்ந்து மணம் வீசும். இதற்கு ஆணின் பங்கும் இன்றியமையாதது.
ஆண் குழந்தைகளுக்கு முதலில் பெண்களை மதிக்கக் கற்றுத் தர வேண்டும். அதற்காக உட்கார வைத்து வகுப்பெடுக்க முடியாது. ஆண்கள் தனது வீட்டில் சமையல் வேலை, வீட்டுவேலை, குழந்தை பராமரிப்பு என்று பணிகளைப் பகிர்ந்து கொள்வதைப் பார்த்து வளரும் குழந்தைகள், அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளும். வளர்ந்தபின் பின்பற்றவும் தொடங்கும்.
சில வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் அவரது வீட்டில் சாப்பிடும்போது அவரது அம்மா வறுத்த பெரிய மீன் துண்டுகளை அவரது அண்ணனுக்கு வைத்து விட்டு அவருக்கு சிறிய மீன் துண்டு ஒன்றை மட்டும் வைத்தாராம். ரீமா அது குறித்து ஆட்சேபனை எழுப்பியபோது, “அவன் ஆண்பிள்ளை.. அதனால் அவனுக்குத் தான் பெரிய மீன் துண்டு..” என்ற பதில் வந்ததாம். இதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ரீமா பாலின பேதத்தைக் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்காக ‘வறுத்த மீன் துண்டுகள்’ என்ற ஒரு பக்கத்தையும் உருவாக்கியிருந்தார். அதில் நிறையப் பேர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சூடான, சுவையான உணவுகளை முதலில் ‘ஆண்களுக்கு’ சாப்பிடக் கொடுப்பது பெண்களேதான்.
மிஞ்சிய உணவுகளைச் சாப்பிட நம் வயிறு ஒன்றும் குப்பைத் தொட்டி இல்லை என்பதைப் பெண்கள் உணர வேண்டும். சாப்பிடுவதும், சமைப்பதும் இருபாலரின் சமமான பணிகள் என்பதை இனி வரும் தலைமுறைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து சமுதாயத்தில் தனித்து விடப்படும் சூழ்நிலை வந்தாலும் கூட சமாளிக்கும் திறனை வளர்க்க வேண்டும். அதற்கு முதலில் தனது கணவனையும், வீட்டிலுள்ள இதர ஆண்களையும் எல்லா வேலைகளிலும் பங்கெடுக்க வைக்க வேண்டும். அப்படியே செய்தாலும் உச்சி குளிர்ந்து ஆராதனை செய்யாமல் இயல்பாகவே இருக்கப் பெண்கள் பழக வேண்டும்.
வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு வரும் குழப்பங்களைத் தம்மிடம் வெளிப்படுத்தும் வகையில் அவர்களுடனான உறவு அமைய வேண்டும். அதை விடுத்து “இந்த வயசுலயே புத்தி போகுது பாரு..” என்பது போன்ற மூன்றாம் தர வசவுகளைத் தவிர்த்து விட வேண்டும். இன்றைய தலைமுறைக்கு எதிர்காலத் திட்டங்கள், கனவுகள் என்று எதுவும் இல்லை என்பது தான் நிச்சயமான உண்மை. அதற்கான வழிமுறைகளை, நல்ல பாதைகளை மட்டுமே பெற்றவர்கள் காட்ட வேண்டும். தனக்குரிய சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கும் தெளிவை இளையவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.
என்னுடைய உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க சென்றிருந்த போது அவரது மருமகளிடம் பேச நேர்ந்தது. கல்லூரி செல்லும் வயதில் இருக்கும் மகன் ‘ஆன்லைன் வகுப்பில்’ இருந்ததால் இங்கு வர இயலவில்லை என்று தெரிவித்தவர், “அவனுக்கு ஒரு டீ வேணும்னா கூட ஸ்விக்கில ஆர்டர் பண்ணி வரவெச்சு குடிச்சுக்குவான்..” என்றார் பெருமை பொங்க. “டீ கூட போட்டுக்க மாட்டானா?..” என்றதற்கு “அவனுக்கு அடுப்பு கூட பத்த வைக்கத் தெரியாது..”என்றார் முகம் கொள்ளாத சிரிப்புடன். இத்தகைய பலவீனமான தூண்கள்தானா நாளைய சமுதாயத்தைக் கட்டமைக்கப் போகிறது என்றெண்ணும் போது எழும் பெருமூச்சை அடக்க இயலவில்லை.
சிறு சிறு வேலைகளைச் செய்வதால் தன்னம்பிக்கை வளர்கிறது என்று புரியவைக்க வேண்டும். தன் வேலைகளைத் தானே செய்வது தான் சுதந்திரம். இன்னொருவரைச் சார்ந்தும், ஒட்டியும் வாழும் வாழ்க்கை மானுட வாழ்வில் சேர்த்தியில்லை என்று நாம் கற்றுக் கொண்டு குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.
கட்டுரையாளரின் மற்ற படைப்பு:
படைப்பு:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.