அம்மாவின் சத்தம் ராசாத்தியின் மனதில் இடியாக இறங்கியது. வேகமாக வீட்டை அடைந்தாள் ராசாத்தி. ஆண்கள் வெளியில் கவலையோடு நின்றுகொண்டிருந்தார்கள்.
கூட்டத்தின் இடையே அப்பா தோளில் போட்டிருந்த துண்டால் முகத்தை மூடி அழுதுகொண்டிருந்தார். அவர் அருகில் மணி மாமாவும் அழுதுகொண்டிருந்தார்.
அப்பாவை பார்த்ததும் தன்னை ஒரு விதமாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ராசாத்தி. திண்ணையில் ராசாத்தியின் அக்கா மலர் பயந்து போய் உட்கார்ந்திருந்தாள்.
ராசாத்திக்கும் மலருக்கும் இரண்டு ஆண்டுகள் வித்தியாசம். ராசாத்திக்கு முன்பே பள்ளிக்குக் கிளம்பிவிடுவாள். ராசாத்திக்கு முன்பே வீட்டிற்கு வந்துவிடுவாள். ராசாத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டு வீட்டிற்கு வந்துசேர நேரமாகும்.
மலரின் அருகில் சரசு சித்தி அமர்ந்திருந்தார்.
’’என்ன பெத்த மகராசியே என்ன வுட்டுப் போயிட்டியே..
இனி எங்கே உன்னோட சிரிப்ப பாப்பேனோ..
உன்னோட சிவந்த ரோசாப்பூ முகத்தைப் பார்ப்பேனோ…
அடி ராசாத்தி பாத்திய பாப்பா நம்மள வுட்டுப் போயிட்டாளே… என்ன பெத்த மகராசி” என்று கதறிக்கொண்டு அழுதார். அம்மாவின் அருகில் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த உருவத்தை திறந்தாள் ராசாத்தி.
செக்கச் சிவந்த நிறத்தில் பனியில் உறங்கும் தேவதை போல் படுத்துக் கிடந்தாள் ராசாத்தியின் தங்கை சங்கீதா.
அந்தத் தூக்கம் எழ முடியாத தூக்கம்.
“அம்மா என்னாச்சு பாப்பாவுக்கு?” என்று கதறினாள் ராசாத்தி.
“ஐயோ… சளிதான புடிச்சிருந்துது. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனோமே. கோழகட்டி மூச்சு வரலையாமா எந்தங்கத்துக்கு மூச்சு வரலயாமா” என்று அழுதார் மாணிக்கம்மா.
ராசாத்தியை வாரி அணைத்து, “நம்ம பாப்பா போயிட்டா. இனி நம்ம பாப்பாவை நாம பார்க்கவே முடியாது” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
அருகில் அம்மத்தா சித்திகள் அத்தைகள் எல்லோரும் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தார்கள்.
எதிரில் தாமரை அக்கா கதறிக்கொண்டிருந்தாள்.
ராசாத்தியின் பெரியப்பா மகள் 15 வயது தாமரை. சங்கீதா பிறந்தது முதல் யாரைத்தான் கவரவில்லை. எல்லோரையும்விட தாமரை அக்காவை அதிகமாகவே கவர்ந்திருந்தாள்.
ராசாத்தி சற்று நிறம் குறைவாக இருப்பாள். மலரும் மாநிறம் தான். ஆனால், சங்கீதாவோ செக்கச் சிவந்த நிறம். மூன்றும் பெண் என்றாலும், இது சொக்கத்தங்கமாவே வந்து பிறந்திருக்கிறாள் என்றார்கள்.
மூன்றாவது பையனாகப் பிறக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் வந்து பிறந்தவள்தான் சங்கீதா. அதனால்தானோ என்னவோ ஒரு நாளும் சங்கீதாவை மாணிக்கமா கொஞ்சியது இல்லை.
திடீரென்று வெளியில் பரபரப்பு. அழுதுகொண்டே ராசாத்தி வெளியே வந்தாள். மலரைக் காணவில்லை. பொதுவாகவே மலர் பயந்த சுபாவம் கொண்டவள். ஒருமுறை ராசாத்தியின் இரண்டாவது சித்தி தன் கணவனை இழந்து வெள்ளைச் சேலையுடன் வந்தபோது பயந்து நடுங்கி எங்கோ ஒளிந்துகொண்டாள். பிறகு தேடிப் பிடித்துஅழைத்து வந்தார்கள். இன்றும் தங்கையைப் பார்த்து பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தாள். அந்த வெள்ளைத் துணி ஏனோ மலரை பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுகொண்டிருந்தது.
ஒரு வழியாக மலரைப் பிடித்து வந்து பெரியம்மா வீட்டில் உட்கார வைத்தார்கள்.
அந்த நேரம் ஒரு பெருங்குரலெடுத்து அழுதுகொண்டே நுழைந்தார் ராசாத்தியின் அப்புச்சி.
” என்ன பெத்த மகராசி. ஆம்பள புள்ள வேணுமுன்னு மூணாவதும் பொம்பளப்புள்ள பெத்தப்போ இன்னொன்னு இருக்கட்டுமுன்னு சொன்னேனே. நானு நாளு பெத்து அதுக்கப்புறம் ஆம்பளப் புள்ள பெத்தேனே… அடுத்தது உனக்கு ஆம்பள புள்ளை பொறந்திருக்குமே… அதுக்குள்ள ஆபரேஷனை பண்ணிட்டியே…” என்று தலையில் அடித்தபடி அழுதுகொண்டே வந்தார் ராசாத்தியின் அப்புச்சி. தன் மகளுக்கு ஒரு மகன் இல்லையே என்ற ஏக்கம் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
சடங்குகள் தொடங்கின. மெதுவாக காடு நோக்கி சங்கீதாவோடு பெரியப்பா நடக்க, ஆண்கள் கூட்டம் அவர் பின்னால் சென்றது.
(தொடரும்)
ப்பாளர்
சரிதா
கதைசொல்லி, சிறார் எழுத்தாளர், பண்பலைத் தொகுப்பாளர் Scan foundation India animal welfare அமைப்பின் தூதுவர். Skillware Founder இதன் வழியாக கதைசொல்லல் பயிற்சிகளும் வழங்கி வருகிறார். கருவுடன் கதையாடல் இந்த தலைப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு இணைய வழியாகக் கதைகளைக் கூறி வருகிறார்.