எல்லாப் பள்ளியிலும் மாணவிகளுக்கு இலவச உதிரப்பட்டை (sanitary pad ) வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 2011லேயே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டதை ஒப்பிடும்போது, இது மிகக் காலம் தாழ்ந்த தீர்ப்பு. சுமார் 15 ஆண்டுகள் இடைவேளை என்கிற போதும், இந்தத் தீர்ப்பு பாராட்டிற்குரியதே.
தீர்ப்பு வழங்கிய அடுத்த நாளே 16 வயது மகனிடம் கர்ப்பப்பை அகற்றம் குறித்துப் பேச நேர்ந்தது. மிக அதிகமான உதிரப் போக்குக் காரணமாக அகற்றப்பட்டதை விளக்கும்போது எனக்கோ அவனுக்கோ கொஞ்சம்கூட சங்கடமாக இல்லை. ‘உன்னுடன் இந்த உரையாடலை நிகழ்த்துவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றேன்.
வளர்ந்த நாடுகளில் 6ஆம் வகுப்பிலேயே ஆண், பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் குறித்த பாடம் பள்ளிகளில் எடுக்கப்படுகிறது. இது இரண்டு பாலினக் குழந்தைகளுக்கும் பல வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதின் விளைவுதான் கவினுடன் என்னுடைய உரையாடல்.
என் முதல் மாதவிடாயின்போது எனக்கு 14 வயது. அது உதிரப்போக்கு என்று எனக்குத் தெரியவே ஒரு நாள் ஆனது. உதிரப்போக்கைப் பற்றி நண்பர்கள் கூறியதைத் தாண்டி, பெரிய விழிப்புணர்வு எல்லாம் இல்லை. உதிரப்போக்கு எப்படி இருக்கும் என்றும் தெரியாது. அதனாலேயே லேசான உதிரப்போக்கைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.
‘ஜாதி’ வழக்கம் போல மாமா குடிசை கட்ட (வீட்டிற்குள் தான்), தீட்டுக் கழிக்கும் வரை கழிப்பறையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எதற்காகவும் வெளியில் வர அனுமதியில்லை. 5 நாட்களுக்கு அதற்குள்ளேயேதான் இருந்தேன். ஒவ்வொரு நாளும் உறவினர்கள் சமைத்துப் போட்டார்கள். வண்ணார்கள் கொடுக்கும் உடைதான் உடுத்த வேண்டும். ஏனென்றால் நான் ‘அசுத்தமானவள்’. இவையெல்லாம் என் சுய மரியாதைக்கு இழுக்கு என்பதை அறியும் அளவிற்குப் பெரியாரைப் படிக்காத காலம். நம் வீட்டுப் பெண்ணை இப்படியா அவமானப்படுத்துவது என்பதைக் கணிக்க முடியாத அளவிற்கு, அது ‘கலாசாரத்தோடு’ கலந்து போயிருந்தது.
அதை எல்லாம் தாண்டி மிகக் கடினமான ஒன்று என்றால், அது உதிரப்போக்கை மாற்றும் நேரம்தான். அப்போது உதிரப்பட்டை எல்லாம் பிரபலம் கிடையாது. பாட்டியின் பழைய புடவைதான் சிறிய துண்டுகளாகக் கிழித்துக் கொடுக்கப்பட்டது. என் உதிரப்போக்குதான் என்றபோதும், அதைக் கையால் தொட அவ்வளவு அருவருப்பாக இருக்கும். கால்களால் அதை மிதித்துச் சுத்தப் படுத்துவேன். முதல்முறையாக அந்தத் துணியைப் பெரியம்மா பெண் துவைத்துக் கொடுத்தார். ‘இப்படித்தான் சுத்தம் செய்ய வேண்டும். இனிமேல் நீயேதான் செய்து கொள்ள வேண்டும்’ என்றார். என் உதிரத்தைச் சுத்தம் செய்வதே அவ்வளவு சங்கடமாக இருக்கும்போது, அவர் எப்படி என்னுடையதைச் சுத்தம் செய்தார் என்று இன்று வரை தெரியவில்லை.
பள்ளிப் பையில், கறை படிந்த அந்தப் பழைய புடவையின் சிறு பகுதி ஒரு பிளாஸ்டிக் பையில் இருக்கும். பள்ளியில் மாற்றிக்கொள்ள. உதிரப்பட்டைக் கொஞ்சம் பிரபலம் ஆன போது அதைச் சுற்றி நிறையப் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. அது சுகாதாரமானதில்லை, பெண்களுக்குப் பல விதத்திலும் கேடு, சுற்றுச்சூழலுக்குக் கேடு என்றெல்லாம். அந்தச் சமயத்தில் துணியை வைத்துக் கொள்வது பழக்கமாகி இருந்தது. அதனாலேயே உதிரட்டையைப் பயன்படுத்தும் எண்ணம் வந்ததில்லை. முதன்முறையாக விடுமுறை காலத்தில் அத்தை வீட்டிற்குச் சென்றபோதுதான் உபயோகித்தேன். முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும், இனிமேல் அந்தத் துணியைத் துவைக்க வேண்டாம் என்கிற எண்ணமே பெரும் நிம்மதியைக் கொடுத்தது.
உதிரப்பட்டையை அடுத்து பெண்கள் உதிரப்போக்கை எளிதாக்க நிறைய வழிகள் வந்துவிட்டன என்கிற போதும் முதல் மாதவிடாய் வந்த குழந்தைகளை வீட்டின் மூலையில் உட்கார வைப்பதும், தீட்டுக் கழிப்பதும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. எங்கெல்லாம் இந்துக்கள் வெளிநாடுகளில் குடியேறி இருக்கிறார்களோ, அங்கேயும் பெண்களின் முதல் உதிரப்போக்குத் தீட்டாகத்தான் பார்க்கப்படுகிறது.
குழந்தைகளின் முதல் உதிரப்போக்கை எப்படிக் கொண்டாடுவது என்பதில் காட்டும் அக்கறையைப் பெற்றோர்கள், பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது ஆண் குழந்தைகளுக்கும் அது பற்றிய விழிப்புணர்வைக் கொடுப்பதே ஓர் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும்.
படைப்பாளர்
சுமதி விஜயகுமார்
பொதுச் செயலாளர், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா


