Site icon Her Stories

நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்

முனைவர். இரா. பிரேமா

முதலில் இவ்வளவு பெண்கள் எழுதி இருக்கிறார்கள் என்பதே சாகசம் போன்று இருக்கிறது. அதைத் தேர்ந்தெடுத்து தொகுப்பது என்பது அதைவிடப் பெரிய அசாத்தியம்தான். நூறு கதையாசிரியர்களைப் பற்றிய அறிமுகம், அவர்தம் நிழற்படம், அதற்கான தேடல் எல்லாம் அவ்வளவு சுலபமல்ல. ஏனெனில் அவர்கள் பல காலக்கட்டத்தைச் சேர்ந்த பெண்கள். இதற்கு மிகுந்த மெனக்கெடல் வேண்டும். இந்த வயதில் இந்த நூலுக்கான முனைப்பு பெரும் விஷயம். தமிழ் இலக்கிய உலகம் மறந்து போன சென்ற தலைமுறைப் பெண் எழுத்தாளர்கள் பலரை இந்நூலில் வெளிச்சமிட்டுக் காட்டி நம்மை நினைவுகூரச் செய்திருக்கிறார். அறியாதோருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் முனைவர். இரா. பிரேமா. 

சுதந்திரப்போராட்டத்திற்கு முன் பிறந்தவர்கள், சுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்கள், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர்கள் எனப் பல தலைமுறைப் பெண்களின் கதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. பெரும்பாலான இருபதாம் நூற்றாண்டு பெண்களின் உலகம் மிகச் சிறியது. வீடு, குடும்பம், குழந்தைகளே அவர்கள் கண்ட உலகம். இன்றைய சுதந்திரம் அவர்கள் அறியாதது. அந்தச் சின்னஞ்சிறு கூட்டுக்குள் இருந்து கொண்டு அவர்கள் படைத்தது மாபெரும் எழுத்துலகம். அந்தக் குட்டி உலகத்தில் இருந்து அவர்கள் பெற்ற அறிவு, அனுபவம் இவற்றைக் கொண்டே அவர்கள் இவ்வளவு வலிமையான, அழுத்தமான கதைகளை எழுதி இருக்கிறார்கள் என்பதே பெரிய விஷயம்தான்.

பலதரப்பட்ட கோணங்களை உடைய பலவிதமான கதைகளைப் படிக்கும் அனுபவம் ஒரே புத்தகத்தில் கிடைப்பதே பெரும் சுவாரசியமே. சில கதைகள் பெண்ணியம் பேசுகின்றன. சில கதைகள் வாழக்கையின் அர்த்தம் சொல்கின்றன. சில கதைகள் சிலிர்ப்பூட்டுகின்றன. மிகச் சில கதைகள் மட்டும் சாதாரணமான பொழுதுபோக்கு கதைகளாக இருக்கின்றன. இந்தக் கதைகளைப் படிக்கும் போது துரதிருஷ்டவசமாகச் சிலர் மட்டுமே லைம் ஃலைட்டில் இருப்பதும் தரமான பல கதைகளை எழுதியுள்ள பல பெண்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதும் அப்பட்டமாகத் தெரிகிறது.

நூற்றாண்டுக்கு முற்பட்ட பெண்கள் இப்படியெல்லாம் எழுதி இருக்கிறார்களா என ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் கையாளும் பழைய தமிழ் வார்த்தைகள் நமக்குள் மகிழ்ச்சியை அளிப்பது ஒருபுறம் அவர்கள் பயன்படுத்தி இருக்கும் ஆங்கில வார்த்தைகள், நவீனப் பொருட்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் கண்களை அகல விரியச் செய்கின்றன.

புத்தகத்தின் கனம்தான் கொஞ்சம் ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், கையில் புத்தகத்தை எடுத்துவிட்டால் நேரம் போவதே தெரியாமல் ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட உணர்வு கிடைப்பது உறுதி.

படைப்பாளர்

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார். பெண் படைப்பாளிகளைச் சந்தித்து இவர் எடுத்த நேர்காணல்கள், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.

Exit mobile version