Site icon Her Stories

கொண்டாட்டமான கல்லூரி விழாக்கள்

பொதுவாக முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ஜூலை இரண்டாவது வாரத்திலும் மற்ற மாணவிகளுக்கு ஜூன் கடைசி வாரத்திலும் வகுப்புகள் தொடங்கும். ஜூலை மூன்றாவது வாரத்தில் யூனியன் தேர்தல் நடைபெறும். ஜூலை கடைசி வாரத்தில் ஹோலி ஸ்பிரிட் மாஸ் (holy spirit mass) என ஒட்டுமொத்த கல்லூரிக்கும் திருப்பலி நடைபெறும்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் யூனியன் உறுப்பினர்கள் மற்றும், அசோசியேஷன் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடக்கும். சுதந்திர, குடியரசு நாள்களில் விளையாட்டுத் திடலில் கொடியேற்றம் இருக்கும். தூத்துக்குடியின் செலிபிரிட்டி (Celebrity) யாராவது வந்து கொடியேற்றுவார். என் சி சி மாணவிகளின் அணிவகுப்பு நடைபெறும். கடைசியில் ஒரு மிட்டாய் கொடுப்பார்கள். அந்த மிட்டாயும் அப்போது பெரிய மகிழ்வைத் தந்தது. 

செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினம். அது மிகக் கோலாகலமாக இருக்கும். மூன்றாம் ஆண்டு மாணவிகள், முதல், இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்குப் பாடம் எடுக்க வேண்டும். முன்தினம் அவரவர் துறையில் பேராசிரியர்களின் பாட வேளையை (period)  வகுப்புத் தலைவர் வாங்கி வருவார். அதில் நமக்குப் பிடித்த வகுப்புகளை நாம் எடுக்கலாம். பாடம் எடுப்பவர்கள் சேலை கட்டி, கொண்டை போட்டிருக்க வேண்டும். அன்று பேராசிரியைகளுக்கு ஓய்வு. சிலர் மாணவிகளின் உரையைக் கேட்க, கடைசி பெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்வர்.

நான் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி வகுப்புகளை எடுத்தேன். எனது லெக்சரைக் கவனிக்க இரு பேராசிரியர்கள் வந்தார்கள். பாடம் எடுக்காத மூன்றாம் ஆண்டு மாணவிகள் ஜாலியாக இருப்பார்கள். பாடம் எடுப்பது மாணவிகளின் ஆளுமையை அதிகரித்தது. அந்த நாளில் பேராசிரியைகளும் மாணவிகளும் மிகவும் மகிழ்வாக இருப்பார்கள்.

அன்று மாலை ஆசிரியர்களைப் போற்றும் விதமாகக் கூட்டம் ஒன்று நடைபெறும். அதில் சிலர் ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசுவர். அதன் பின்  பேராசிரியைகளுக்கு மியூசிக்கல் சேர் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசு அளிக்கப்படும். ஒருமுறை மியூசிக்கல் சேருக்கு ‘நம்ம ஊரு சிங்காரி’ பாட்டுப் போட்டிருந்தது. 

இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, யாருக்கும் தெரியாதபடி மைக்கின் முன்னால் கொலுசு, சலங்கை, பாத்திரத்தில் பைசா,  டின்னில் கல், கிளிட்டரிங் தாளைக் கசக்குவது போன்றவற்றால் விதவிதமான ஒலி எழுப்பினார்கள். அது என்ன ஒலி என்ற பேராசிரியைகள் கண்டுபிடிக்க வேண்டும். 

மூன்றாம் ஆண்டு படிக்கும்போது ஸ்ட்ரா-வை வைத்து பொரிகடலையை எடுத்து ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குக் கொண்டு  செல்லும் போட்டி நடந்தது. வேதியியல் துறை  பேராசிரியர்தான் வெற்றி பெற்றார். நாங்கள் பிப்பெட் (pipette) உபயோகிப்பதால் ஸ்ட்ரா மூலம் பொரிகடலை எடுப்பது எளிதாக இருந்திருக்கலாம்.  

டிசம்பர் 22-ம் தேதி கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம் நடைபெறும். விபரம் தெரிந்த வயதிலிருந்தே பொதுவாகவே கிறிஸ்துமஸ் வருகிறது என்றாலே மனம் முழுவதும் பெரிய கொண்டாட்டமாகவே இருக்கும். புத்தாடைகள் வாங்குவதும் அவ்வாறே. ஆண்டுக்கு இரண்டு புத்தாடைகள்தான் எடுப்பது வழக்கம். 

இந்தக் காலம் போல அந்த காலத்தில் பலகாரங்கள் கடையில் வாங்குவது கிடையாது. பெரிய ஊர்களில் மட்டுமே ஒன்று இரண்டு கடைகள் இருக்கும். அந்த ஊர்களுக்குச் செல்வதே அபூர்வம். அது மட்டுமல்லாமல் கடையில் பலகாரம் வாங்கும் அளவுக்குப் பொருளாதார வசதியும் பெரும்பாலும் கிடையாது. கிறிஸ்துமஸ் என்றால் எங்கள் ஊரில் முறுக்கு, அச்சு முறுக்கு, பணியாரம், முந்திரிக் கொத்து, ஒரு வாரம் வரை கெட்டுப் போகாத ஓலைக் கொழுக்கட்டை செய்வார்கள் (மாவை லேசாக வறுத்து முதல் கம்பி பதம் கருப்புக்கட்டி பாகு விட்டால் சீக்கிரம் கெட்டுப் போகாது). எங்கள் அப்பம்மா வறுத்த காணப் பருப்பு போட்டுச் சிறப்பாகச் செய்வார்கள். 

எங்கள் வீட்டு அச்சு முறுக்குக்கிற்கும் பச்சைப் பயறில் செய்யப்படும் முந்திரி கொத்திற்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கிறிஸ்துமஸ் முடிந்து வரும்போது பெரிய கூடையில் தனியாக எடுத்து வருவேன். இல்லை என்றால் அச்சு முறுக்கு உடைந்து போய்விடும். முட்டை சாப்பிடாத தோழிகள்கூட அச்சு முறுக்கு விரும்பி சாப்பிடுவார்கள். 

இப்படி கிறிஸ்துமஸ் என்றாலே குதூகலம் தான். அதுவும் கல்லூரி காலங்களில் கிறிஸ்துமஸ் என்றால் கேட்கவே வேண்டாம். விடுமுறை விட்டு வீட்டிற்குச் செல்கிறோம் என்று மகிழ்ச்சியும் வேறு. 

டிசம்பர் 22-ம் தேதி பிற்பகல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடக்கும். பைபிளில் இருந்து நற்செய்தி வாசிப்பார்கள். யாராவது ஒரு அருள்தந்தை கிறிஸ்துமஸ் செய்தியைக் கூறுவார். மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடுவார்கள். கல்லூரி நிர்வாகம் சார்பில் உதவி தேவைப்படுவோருக்கு தையல் மிஷின் போன்ற பொருட்களை இலவசமாக வழங்குவார்கள். கடைசியாக ஸ்லெட்ஜ் வண்டியை தள்ளிக் கொண்டு ‘ஜிங்கில் பெல்ஸ்’ என்று பாட்டுப் பாடி ஆடியபடி கிறிஸ்துமஸ் தாத்தா வருவார். 

எல்லோரும் ஆரவாரக் கூச்சலுடன் கையை ஆட்டி சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவை வரவேற்போம். அவர் பரிசுப் பொருள்கள், கேக் எல்லாம் கொண்டு வருவார். இந்த கிறிஸ்துமஸ் தாத்தா செலக்சனை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.  அவர்களும்கூட வெளியே சொல்ல மாட்டார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா ஆடிப்பாடி முடித்ததும், தனது முகமூடியைக் கழற்றுவார். அப்போதுதான் அது யார் என்று தெரியும். உடனே அந்த மாணவியின் பெயரைச் சொல்லி ஜூனியர் மாணவிகள் என்றால் பெயருடன் அக்காவையும் சேர்த்து சொல்லி கூச்சலிடுவார்கள். அதன்பின் அனைவருக்கும் கேக் விநியோகிக்கப்படும். அதைச் சாப்பிட்ட உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முடிவுக்கு வரும். எல்லோரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை கூறியபடி கலைந்து செல்வார்கள். 

நான் நான்கு முப்பது மணி பேருந்து பிடிக்க ஆய்வுக் கூடத்தில் வைத்திருக்கும் லக்கேஜை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவேன். ஞானம் பேக்கரியில் கேக், தேங்காய் பன் (அரை வட்டமாக இருக்கும்), நட் பார் வாங்க வேறு நேரம் ஒதுக்க வேண்டும். அங்கு நல்ல கூட்டமாக இருக்கும். கல்லூரி மாணவி தனியாக வாங்க வந்திருப்பதால், முதலில் தந்து விடுவார்கள். அதற்கு யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். சில சமயம் குலோப் ஜாமுன் மிக்ஸ் வாங்கி செல்வேன். அப்போது அது எளிதில் கிடைக்காது. அது வாங்கிச் சென்றால் வீட்டில் தம்பி, தங்கைக்கு மிகவும் மகிழ்வாக இருக்கும். 

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து விடுதிக்கு திரும்பிய அன்று மாலை ஓர் அறையில், அறிமுகமானவர்கள் எல்லாரும் குழுவாகக் கூடி  புத்தாடைகளை ஒருவருக்கொருவர் காட்டி மகிழ்வோம். சிலர் முதல் நாளே புத்தாடையை உடுத்திக் கொள்வர். 

ஜனவரி கடைசி வாரத்தில் விளையாட்டு விழா நடைபெறும். துறைகளுக்கு இடையே ஆன பேட்மின்டன், வாலிபால், டென்னிஸ், டென்னிகாயிட், உள் விளையாட்டு அரங்கத்தில் செஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான போட்டிகள் கொஞ்ச நாள்களுக்கு முன்பே நடைபெற்று முடிந்திருக்கும். இதற்கான புள்ளிகளும் அந்தந்த துறையில் சேர்க்கப்படும். 

விளையாட்டு வளாகம் தூய்மையாகும். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளுக்காக மணல் புதிதாக அடிக்கப்பட்டு இருக்கும். மூன்று பரிசு பெற்றவர்களும் ஏறி நிற்க மேடை அமைக்கப்பட்டிருக்கும். கொடி மரத்திற்கு எதிரே விடுதியை ஒட்டி பிரபலங்கள் உட்கார மேடை மற்றும் பந்தல் போடப்பட்டிருக்கும். பொதுவாக காவல்துறையில் உயர் பதவியில் இருப்பவர் தலைமை தாங்குவார். அவரின் மனைவியும் உடன் வந்திருப்பார்; பரிசளிப்பதற்காக. 

அன்று முழுவதும் நின்று எரியும் ஜோதியைப் பற்ற வைக்கும் டார்ச்-சை அந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை ஏந்தி வருவார். லோட்டஸ் மாதா அருகில் முக்கிய விருந்தினர் டார்ச்-சை பற்ற வைப்பார். வீராங்கனை அங்கிருந்து அதை எடுத்து வந்து மைதானத்தைச் சுற்றி வந்து ஜோதியை ஏற்றுவார்.

அன்று, முதல் போட்டியாக துறை வாரியாக அணிவகுப்பு நடைபெறும். அதற்கும் மதிப்பெண்கள் உண்டு. மூன்றாம் ஆண்டு மாணவிகள் அதற்காகவே மேஜர் சாரி (major saree) எடுப்போம்.  வார்டன் சிஸ்டரிடம் அனுமதி பெற்று ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னமே ஆறுமுகம் டெக்ஸ்டைல்ஸில் சொல்லிவைத்து வாங்கினோம். ஆலிவ் கிரீன் வண்ணச் சேலை. எங்கள் சேலை நன்றாக இருந்ததாகவும் ஆனால் அணிவகுப்பு மோசமாக இருந்ததாகவும் விமர்சனம் வாங்கினோம்.

விளையாட்டு வீரர்களுக்கு குளுக்கோஸ் போன்ற பானங்கள் வழங்கப்படும். போர் அடிக்கும் போது மாணவிகள் கேன்டீன் சென்று வருவார்கள். அன்று கிட்டத்தட்ட அனைத்து மாணவிகளும் கேன்டீன் சென்று விடுவார்கள். வெற்றி பெற்றவர்கள் மேடை ஏறும் போது மிகப்பெரிய கைதட்டல், ஆரவாரம் எழும். ஒட்டுமொத்த துறைக்கான கேடயம் எந்த துறைக்குச் செல்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருப்போம். 

பிப்ரவரியில் பட்டமளிப்பு விழா நடைபெறும். மாலை 4 மணிக்குப் பட்டமளிப்பு விழா ஆரம்பிக்கும். பட்டம் வாங்குபவர்களும், அவர்களது உறவினர்களும் தான் கலந்து கொள்வார்கள். நாங்கள் மாடியில் நின்று கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்போம். யாராவது பெரிய ஆளுமை தலைமை தாங்குவார். ஒருமுறை மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர் பட்டம் அளித்தார். நான் எம் எஸ் சி படித்துக் கொண்டிருந்ததால் எனது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை.

தொடரும்…

படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி

MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.

Exit mobile version