Site icon Her Stories

மிகப் பெரிய பொய்

ஆண், பெண், பால் புதுமையினர் அனைவருக்குமே செக்ஸ் தேவை என்பது ரகசியமல்ல. பாலுறவு நபர்களின் இணைப்பை ஆழமாக உணர்த்தும் ஒரு வழி. அவமானம், கேலி, கூச்சம் போன்ற எண்ணங்கள் குறுக்கே வராமல் கவலையோ அச்சமோ இல்லாமல் மெய்யான பாலியல் ஆசைகளை வெளிப்படுத்தும் உறவின் தோற்றத்தைப் பற்றிய வெளிப்படையான உரையாடல்களுக்கு நம் சமூக அமைப்பில் இடமில்லை. அதேநேரம், காதல் உறவில் அல்லது சட்டபூர்வ திருமண உறவில் இருக்கும் ஒருவரால் ஏற்படும் பாலியல் வன்கொடுமை அந்நியருடன் போல் தீவிரமானது அல்ல என்று பலர் நம்புகிறார்கள்.

இது முற்றிலும் தவறான நம்பிக்கை. இது போன்ற எண்ணங்கள் உண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் ஒருவருக்கு உதவுவதைவிட அதிகமாகக் காயப்படுத்தக்கூடியது. ஒருவர் பலாத்காரம் செய்யப்படும்போது உண்டாகும் பாதிப்பு காதலில் இருந்ததன் காரணத்தினாலோ சட்டபூர்வமாகத் திருமணம் செய்திருந்த காரணத்தினாலோ மாறாது. மாற்றவும் முடியாது.

பாலியல் வன்கொடுமையை யார் செய்தாலும் அது மோசமான குற்றம் என்கிற தெளிவு நிச்சயமாக ஒவ்வொரு நபருக்கும் இருக்கவேண்டியது. அன்பு, காதல், உறவு, திருணம் போன்ற ஒப்பீடுகளால் பாலியல் வன்கொடுமைக் குற்றத்தைக் குறைத்துப் பார்ப்பது, பாலியல் வன்கொடுமை செய்கின்றவரைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு, அவர்களுடன் வீட்டை, வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் தொடர்ந்தும் உறவில் இருப்பது வேதனைமிக்க அனுபவமாக மட்டுமே இருக்கும்.

பாலியல் வன்கொடுமை பற்றி மக்கள் எண்ணுகின்ற விதமானது ‘கற்பழிப்பு’ கலாச்சாரத்தால் தூண்டப்படும் ஒரு செயற்பாட்டிற்குள் வன்கொடுமையாளரைப் பாதுகாப்பதாகவே இருந்து வருகின்றது. இங்கு அந்நியரால் செய்யப்படுவதே பாலியல் வன்கொடுமை, அதற்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும், காயங்கள், கீறல்கள், உடல் வலி – இவையெல்லாம் இருந்தால் மட்டும்தான் பாலியல் வன்கொடுமை நிகழ முடியும் என்பது மிகவும் பொய்யான தவறான புரிதல்.

ஓர் உறவில், பாலியல் வன்கொடுமை பல்வேறு வழிகளில் நிகழமுடியும். சிலர் உடலுறவு கொள்ள விரும்பாமல் இருக்கலாம். உடலுறவுக்கான மனவிருப்பம் குறைவாக இருக்கலாம், இணையர் உறக்கத்தில் இருக்கலாம், உடல் நலம் போதாமலிருக்கலாம், மருந்து அருந்தி இருக்கலாம், விருப்பமின்மையில் இருக்கலாம் – இப்படி எந்தக் காரணமாகவும் இருக்கலாம், ஒருவர் துணையின் சம்மதத்தைவிட தனது சொந்த மகிழ்ச்சியை மட்டுமே தேர்ந்தெடுப்பார் எனில், சந்தேகமின்றி அது பாலியல் வன்கொடுமையின் தோற்றமே. இணையர் உடலுறவுகொள்ள விரும்பவில்லை என்பதை அறிந்துகொண்டே துணை தொடர்ந்தால், அல்லது ஒரு வகையான உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஒருவர் மாத்திரம் இணையரின் அனுமதியின்றி வேறு ஏதாவது செய்தால், அது உடலுறவின் நடுவில் நிகழ்ந்தால்கூட அதுவும் பாலியல் வன்கொடுமையாகவே வகைப்படுத்தப்படுகின்றது.

ஒருவருடனான பாலுறவு எப்படி உணரச் செய்கின்றது, முதன்முறையாக எனினும் இல்லாதுவிட்டாலும் உடலில் அல்லது மனதில், அல்லது இரண்டிலும் ஏற்படும் அதிர்ச்சி எப்போதும் ஞாபகத்தில் எப்படிப் பதிகிறது என்பதே உறவின் தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடியது.

இவை அனைத்தும் ஓர் உறவிற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கான சில எடுத்துக்காட்டுகளே. ஒரு நபர் ஏன் முன்னோக்கிச் சென்று, தான் விரும்பும் ஒருவரைத் தாக்கத் தேர்வு செய்கிறார் என்பது நம்மில் பலருக்குப் புரியாமல் இருக்கலாம்.

உறவுகளில் / திருமணங்களில் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து ஏன் யாரும் வெளியேறுவதில்லை என்ற கேள்விக்கு ஒருவர் விரும்பும் அளவுக்கு எளிதான பதிலை முன்வைப்பது கடினமானது. பாலியல் வன்கொடுமைகளைச் செய்யும் அந்நியர்களைவிட்டு வெளியேறுவதுபோல உறவுகளில் இருந்துகொண்டே உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்கின்றவர்களிடமிருந்து வெளியேற முடிவதில்லை. திருமணம், குடும்பம் போன்ற கால்கட்டுகள் இதுபோன்ற கொடுமைகளுக்குப் புகலிடம் அளிக்கின்றன. முக்கியமாக ஆண்களுக்கு இந்த நிறுவனங்கள் பாதுகாப்பான இடத்தை வழங்கி, இதுபோன்ற குற்றங்களை எந்தவிதக் குற்றவுணர்மின்றித் தொடர்வதற்குரிய எல்லாவித உத்தரவாதங்களையும் அளிக்கின்றன.

உறவில் இருக்கும்போது அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது மனஉளைச்சலை ஏற்படுத்தி, குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிடும். ஒருவேளை தான் விரும்பும் நபர் தனக்குத் தீங்கு விளைவிப்பார் என்று ஒருபோதும் நினைக்காததால், ஒருவேளை உறவின் தன்மையை வன்கொடுமை என்று நினையாததால் அல்லது புரிந்து கொள்ளாததால் அல்லது அது உடல் ரீதியாக வன்முறையாக இல்லாததால் போன்ற காரணங்கள் குடும்பத்தில் திருமண உறவில் நிகழும் பாலியல் வன்கொடுமையை யாரும் பேசுவதில்லை. முக்கியமாகப் பெண்கள். அவமான உணர்வு இந்தப் பிரச்னையின் மிகப்பெரிய விளைவுகளில் ஒன்று. இந்த விடயங்களைப் பேசுவது அவமானகரமாக எண்ணுவது. இந்த எண்ணமே கட்டிப்போட்டு விடும். யாரிடமும் வாயைத் திறக்க விடாது.

இதன் காரணமாகப் பலர் இந்தக் குற்றங்களை வெளிப்படுத்த மாட்டார்கள். மேலும் பலர் தங்களைத் தாங்களே குற்றம் சாட்டுவார்கள். இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்திருக்க முடியும் என்பதற்கான காட்சிகளை கற்பிதம் செய்வார்கள். என்ன இருந்தாலும், அவர் தன் இணையர் – அவருக்குச் சொந்தமானவள் தானே நான், என்னிடம்தானே இப்படி நடந்துகொண்டார் என்றெல்லாம் சமுதாயம் இதுவரை கற்பித்தவற்றைக் கூறி, தங்களுக்கு நேரும் கொடுமையை மிகப்பெரிய பொய்களை நிரப்பி நியாயப்படுத்திக்கொள்வார்கள். இப்படி நிகழ்வது குற்றம் என்பதைப் பெரும்பாலான பெண்கள் வாழ்வின் ஒரு நிலையிலாயினும் ஒப்புக்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியானது. பெண் உடல் அவளுக்கே சொந்தமானதில்லை, அது ஆணுக்குச் சொந்தமானது என்று தொடர்ந்து அழுத்தமாகச் சொல்லிவரும் ஒரு சமூகம் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் விடயத்தில் அமைதியாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

குற்றவாளி இணையராகவும் சட்டப்படி திருமணம் செய்துகொண்ட கணவராகவும் இருப்பதால் பாலியல் வன்கொடுமை ‘குறைந்த’ வடிவம் பெறாது.

பாலியல் வன்கொடுமை செய்கிறவன் அந்நியராக இருந்தாலும், முதலாளியாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அல்லது நேசிப்பவராக இருந்தாலும், கணவராகவே இருந்தாலும் மீறுதல் குற்றம். இதில் எந்த நியாயங்களுக்கும் இடமில்லை.

உறவில் நிகழும் வன்கொடுமையை இனங்காண்பதில் ஒரு பெண்ணுக்குக் குழப்பம் இருக்கலாம். ஏனெனில், இதுபோன்ற அதிர்ச்சியான தாக்குதல்களை எளிதாகப் பேசுவதற்கும் சட்டபூர்வமாக அணுகுவதற்குமான முறைமைகள் எல்லா வீடுகளுக்கும் எல்லாப் பெண்களுக்கும் இன்னமும் போய்ச் சேரவில்லை. இதனாலேயே பெண்கள் மௌனமாக இருப்பதைத் தேர்வு செய்கிறார்கள். எனினும், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை முற்றாக மறைத்துவிட முடியாது.

அவமானம், பயம், அதிர்ச்சி ஆகியவற்றின் ஆழமான உணர்விலிருந்து அமைதியான இருப்பைப் பெண்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒருவேளை தனக்கு நேர்வது பாலியல் வன்கொடுமை என்பதை அவர்கள் உணராமலேகூட இருக்கலாம். ஒருவேளை அவர்கள் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லாமலும் இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், தனக்கு என்ன நடந்தது, நடக்கிறது என்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவது அவர்களது முடிவு.

தன்னைப் பலமுறை வன்புணர்வு செய்கின்ற ஒருவருடன் காதலில் இருக்கும் குழப்பத்தைச் சமாளிப்பதைவிட, இந்த அனுபவத்தை இயல்பானதென்று ஏற்றுக்கொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக இது அவமானகரமான முடிவு. தான் விரும்பும் ஒரு நபருடன் ரேப்பிஸ்ட் என்ற வார்த்தையை இணைப்பதுகூடப் புரிந்து கொள்ள முடியாததாக, இப்படியெல்லாம் எண்ணுவதே அவர்களுக்குத் துரோகம் இழைப்பது போலிருப்பதாக ஒரு பாலியல் வன்கொடுமை உறவில் இருந்துகொண்டிருந்த ஒரு பெண் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது, இந்தச் சமுதாயம் ஆண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று மட்டுமே எனக்கு எண்ணத் தோன்றியது. நம் குடும்ப, திருமண அமைப்புகளில் பாலியல் வன்கொடுமைக்கு எந்த எச்சரிக்கைகளும் இல்லை.

ஆனால், ஒவ்வோர் ஆணும் தான் செய்வதை அறிந்தேயுள்ளார்.

இன்னும் பேசுவோம்…

படைப்பாளர்:

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். தற்சமயம், அமெரிக்கப் பல்கலைக்கழகம் University of Nebraska Omaha வில் மனித உரிமைகளுக்கான ஆராய்ச்சி அறிஞராகப் பணிபுரிகிறார். 

Exit mobile version