காரில் கிளம்பிச் செல்லும் மகளையே கண் கொட்டாமல் மாடியிலிருந்து பார்த்த ராணிக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
அதுவும் அவள் தெருமுனையில் சென்று திரும்பி மறையும் வரை மாடியையே பார்த்துச் சென்றதைக் கண்ட போது ஓடிச் சென்று கட்டிப்பிடித்து, அறிவுரைகள் சொல்ல வேண்டும் என்று தோன்றியது . ஆனால் பிடிவாதமும் கோபமும் தடுத்துவிட்டது. திரண்டு வந்த கண்ணீர் கானல்நீராக மறைந்தது.
’கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷன் வீட்டுக்குப் போக வேண்டிய வயசுல, வேலைக்குப் போறாளாம். கனவ சுமந்துட்டுப் போறாளாம். என்ன மடத்தனம் இது?
நான் சொன்ன ஒரு வார்த்தை அவ காதுல ஏறிச்சா? என் வார்த்தைக்கு மதிக்காதவ கிட்ட எனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு? யாரு கேட்டா அவள இப்போ பாரினுக்குப் போய் சம்பாதிச்சு கொட்டலைன்னு?
இதெல்லாம் பாக்கக் கூடாதுன்னுதான் எங்கப்பாரு அப்பவே போய் சேந்துட்டாரு போல. எங்கள பாத்துக்கவும், சம்பாதிச்சு குடுக்கவும் தான் சிங்கக்குட்டி மாதிரி ஒரு ஆம்பளப் புள்ளய பெத்து வச்சிருக்கோமே!’
சரி, படிக்கணும்னு சொன்னா படிக்க வச்சாச்சு. ஆசைக்குக் கொஞ்ச வருஷம் வேலைக்கும் போயாச்சு. இனி கல்யாணம் கட்டி புருஷன் வீட்டுக்குப் போறதுதானே அழகு?
இதுல கல்யாணம் பண்ணினாலும் வேலைக்குப் போவாளாம்! அப்பவும் எங்களுக்குச் செய்வேன்னு கண்டிஷன் போடுறாளே! அவ சித்தப்பாவச் சொல்லணும். அவிய குடுக்குற எடம்!
அடக்க ஒடுக்கமா சொன்னதக் கேட்டு பொட்டிப் பாம்பா இருந்தவள, காலேஜிக்குப் படிக்கக் கூட்டிட்டுப் போறேன்னு போயி ஆம்பள கணக்கால்லா திருப்பி அனுப்பியிருக்காவ! அவியள உட்டு பேசி மனச மாத்தலாம்னு பாத்தா அவுரு அதுக்கு மேல!
‘அவ இஷ்டப்படியே விடுங்க மைனி, நாலு இடத்துக்குப் போனாதானே உலக அறிவு வளரும்’ன்னு நமக்குப் புத்திமதி சொல்லிட்டுப் போறாவ. நல்ல குடும்பம், நல்ல கண்ணுக்கு லட்சணமான பையன், பாரினுக்கு போய் கைநிறைய சம்பாதிச்சிட்டு வந்து சென்னைல சொந்தமா தொழில் தொடங்கிருக்கானாம்.
‘உங்க பொண்ணுக்கு நீங்க போடுறது போடுங்க, நாங்களே ஐம்பது பவுன் பண்ணி வச்சிருக்கோம் எங்க வீட்டுக்கு வரப் போற மருமகளுக்குன்னு,’
எந்த மாமியாக்காரி சொல்லுவா இந்தக் காலத்துல? வேற எந்தப் பிக்கல் பிடுங்கலும் இருக்குறாப்புல தெரியல.
‘பையனுக்குப் பொண்ண ரொம்பப் புடிச்சிடுச்சு, பொண்ணுக்குச் சரின்னா அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்த வச்சிரலாம்னு’ அம்மாவும் புள்ளயுமா ஊருக்கு வந்து காத்துக் கிடந்தா. வலிய வந்த சீதேவிய எட்டித் தள்ளிட்டுப் போறாளே இந்தப் பாவிமவ. அதுவும் அவ சொன்ன மாதிரி அவளுக்கு அடுத்தவ வேற சாதிக்காரனோட பரதேசம் போயிட்டான்னு தெரிஞ்சும்கூட ,
‘இதெல்லாம் இந்தக் காலத்துல நடக்காததா? அவங்க வாழ்க்கைய முடிவு பண்ண அவங்களுக்கு உரிமை இருக்கு. பசங்க சந்தோசம் தான நம்ம சந்தோசம்ன்னு’
எவ்வளவு பெருந்தன்மையா சொன்னாங்க சம்மந்தியம்மா.
ஒரு சம்பிரதாயத்துக்குக் கூட அந்த பையன பாக்க மாட்டேன்னுட்டு வெண்ண திரண்டு வர நேரமா பாத்து பானய உடச்சிட்டு போறாளே, நான் என்ன செய்ய ?
அதைக்கூட இன்னிக்கு இல்லன்னாலும் என்னிக்காவது மன்னிச்சிருவேன் . ஆனா என் தலையில கல்ல தூக்கிப் போடத்தானே வரிஞ்சிக் கட்டிக்கிட்டு வந்துருக்கா கார்த்திக முசுக்கு ஊருக்கு வாரேன்னுட்டு என்று நினைத்த போது மீண்டும் கண்ணீர் அருவியாய் பொங்கியது .
பொட்டப் புள்ளைக்கு முடிதான அழகு ?
அதைத் தானம் பண்றாளாம். இந்தக் கூத்தெல்லாம் பார்க்கணும்னு என் தலைல எழுதியிருக்கே ஆண்டவா என்று நொந்து கொண்டவருக்கு அன்று இரவு முழுக்கக் கண்ணில் ஒரு பொட்டுத் தூக்கம் இல்லை.
மனம் ஏதேதோ நினைவுகளில் முன்னும் பின்னும் சென்று உறங்காமல் முரண்டு பிடித்தது.
கல்யாணம் பொல்லாத கல்யாணம். பதினேழு வயசுல கல்யாணம் கட்டிகிட்டு வந்து வாழ்க்கைல பாதி அடுப்படிலயே முடிஞ்சு போச்சு, அவளுக்காவது உலகத்த பாக்கணும்னு எழுதியிருக்கே! எம்பிள்ள என்ன அருமையா அப்பா பட்ட கடன அடைக்கிறேன்னு சொன்னா. எவ சொல்லுவா இந்தக் காலத்துல?
‘பெத்தவங்க செய்யுற பாவ புண்ணியத்துல எனக்கு பங்கு இருக்குற மாதிரி, அவங்க கடன்லயும் எனக்கு பங்கு இருக்கு’ன்னு சொல்லி மாசா மாசம் சொசைட்டி லோனுக்குப் பணம் கட்டிக்கிட்டு இருக்க என் தங்கத்த தலையில வச்சிக் கொண்டாடுறதுக்குப் பதிலா நானே இப்படித் தூக்கி எறிஞ்சிட்டேனே.
அடுத்தவங்களுக்காக ஐஞ்சு பைசா குடுக்க யோசிக்கிற காலத்துல, புத்துநோய் வந்து முடி இல்லாத நோயாளிங்களுக்கு இலவசமா சவுரி முடி செஞ்சு குடுக்கன்னு ஆச ஆசையா வளத்த முடிய வெட்டி குடுத்துட்டு வந்த மவளுக்கு, அடுத்தவங்க மனச பத்தி யோசிக்க தெரிஞ்ச அளவுக்கு அவ மனச பத்தி யோசிக்காம போயிட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் மனம் சுட்டது.
விடிந்ததும் முத வேலையா அவளைக் கூப்பிட்டு பேசணும் என்று முடிவுக்கு வந்தவராய் அதிகாலையில் நிம்மதியாக உறங்கிப் போனவருக்கு, விடிந்ததும் தன் மகளைக் குறித்து கிடைக்கப் போகும் செய்தி தெரிந்தால் என்ன ஆகப் போகிறாரோ பாவம்!
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.