Site icon Her Stories

மறுகன்னத்தைக் காட்டத்தான் வேண்டுமா?

வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என்பது முக்கியமான வாசகமேயானாலும் வன்முறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தையும் காட்டித்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி வரும்போது, அப்படி மறுகன்னத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றும்.

சமீபத்தில் சாணிக்காயிதம் திரைப்படத்தைப் பார்த்தேன். ஒரு பெண்ணின் உடலைச் சூறையாடி, அவள் மொத்த குடும்பத்தையே சூறையாடும் வஞ்சகர்களை அவள் பழிவாங்கும் விதமாக கதை அமைந்திருந்தது. அவள் இடத்தில் எந்தப் பெண் இருந்தாலும் அல்லது எல்லாப் பாதிக்கப்பட்ட பெண்ணும் இவ்வாறுதான் சிந்திப்பாள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது காட்சியமைக்கப்பட்ட விதத்தில் சில கேள்விகளும் எழத்தான் செய்தன. சட்டம் தன் கடமையை நிறைவேற்றாதபோது, சட்டத்தால் எளிய மக்களுக்கு நியாயம் கிடைக்காத போது அனைவரும் இப்படி வன்முறையாளர்களாக மாறுவதுதான் தீர்ப்பா? ஒ.டி.டி யில் வரும் படமென்பதால் 18 வயது மீறியவவர்களுக்கான படமாக இருந்தாலும் ஒரு வேளை வீட்டில் பிள்ளைகள் பார்க்க நேர்ந்தால் அக்காட்சியமைப்புகள் பிள்ளைகளின் மனதில் எவ்வாறு பதியும் போன்ற பல்வேறு கேள்விகளும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ஒ.டி.டி தளங்களில் தணிக்கைக் குழு செயலாற்றுவதில்லையா? எல்லா ஆகப் பெரிய வசைகளும் மோசமான வார்த்தைகளும் எந்த பீப் ஒலியுமின்றி வீடுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

வன்முறை எல்லாக் காலகட்டங்களிலும் பல்வேறு உருவங்களில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. காந்தியின் அகிம்சை வழியில் நம்பிக்கையற்ற பகத்சிங் தன்னை ஒரு தீவிரவாதி என்றே அறிவித்துக்கொண்டார். அந்தக் காலக்கட்டத்தில் ஒரு செயலில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் தீவிரவாதியென அழைக்கப்பட்டார்கள். இன்று அதன் பொருள் மாறிவிட்டது. தன்னை வன்முறையாளன் அல்லது தீவிரவாதி என்று சொல்வதில் எந்தக் கீழ்மையும் இல்லையென்றே நம்பினார் பகத்சிங்.

குடித்துவிட்டு வீட்டிலுள்ள பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்க்கும் சில ஆண்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். மது அருந்துவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஆனால், தன்னைச் சார்ந்தவர்களை அதுவும் தன்னைவிட உடலால், பொருளாதாரத்தால் பலவீனமானவர்கள் மீது குடி என்ற பெயரில் வன்முறைச் செய்பவர்களை மன்னிக்கவே இயலாது.

பக்கத்து வீட்டில் வேலை செய்யும் அம்மா எப்போதாவது என்னிடம் பேசுவார். சமீபத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, குடித்துவிட்டுத் தன் கணவன் செய்த பல வன்முறையைப் பட்டியலிட்டுக்கொண்டிருந்தார். வீட்டு வேலை செய்து கண்ணியமான முறையில் பணம் சம்பாதித்து வருகிறார். ஒரு முறை அவர் கணவர் குடித்துவிட்டு, கத்தியை வைத்துக்கொண்டு குத்திவிடுவேன் என்ற மிரட்ட, காவல்நிலையம் வரை சென்று வந்திருக்கிறார் அந்த அம்மா. ஆனால், இந்தச் சமூகம் தரும் அழுத்தத்தால் பிள்ளைகள் இருக்கும் காரணத்தினால் அத்தனை வன்முறைகளுக்குப் பிறகும் அந்த ஆடவனோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரைப்போல இவ்வாழ்வில் எத்தனை எத்தனை பெண்கள் குடும்ப வன்முறைகளைச் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்… வாழவே பிடிக்கவில்லை என்று கூறியிருந்த அம்மாவுக்கு ஏதோ சமாதானம் கூறி அனுப்பி வைத்தாலும் இந்த வன்முறையை எல்லாம் பெண்கள் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று மனம் துடித்துக்கொண்டேயிருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் நான்காம் ஆண்டு நினைவு தினம் சில நாட்களுக்கு முன்பு அனுசரிக்கப்பட்டது. காவல்துறையில் சில அதிகாரிகள் பொதுமக்கள் மீது கட்டவிழ்க்கும் வன்முறைக்கு எடுத்துக்காட்டாகச் சாத்தான்குளம் வழக்கு போன்ற பல்வேறு எடுத்துக்காட்டுகளை நம்மால் கூற இயலும். உயர்ந்த சாதியாகக் எண்ணிக்கொள்பவன் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கும் வன்முறை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஒரு சில தினங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் உன் பெயர் என்ன, உன் பெயர் முகமதுவா என்று கேட்டு ஒரு முதியவரைக் கொலை செய்திருக்கிறார்கள். சென்ற வாரம் விழுப்புரம் அருகில் தாழ்த்தப்பட்ட பெண்ணின் சடலத்தைப் புதைக்க விடாமல் அந்தச் சுடுகாட்டில் புதைக்கக் கூடாது என்று வன்முறையாளர்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். இப்படி எத்தனையோ செய்திகளை எடுத்துக் காட்டாகச் சொல்ல இயலும். சாதி என்ற பெயராலும் மதம் என்ற பெயராலும் வன்முறையாளர்கள் தங்கள் அடக்குமுறைகளை வெவ்வேறு வடிவங்களில் காண்பித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அகிம்சை வழியில் நடக்க மிகப்பெரிய மனத்திடம் வேண்டும் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், ஆதிக்கப் பிரிவில் உள்ள ஒருவன் சாமானியனை ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னும் எத்தனை காலத்திற்கு மறுகன்னத்தைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும்?

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய் என்ற அண்ணலின் வரிகள் என்னைப் போலவே உங்கள் காதுகளிலும் ஒலிக்கிறதா?

மனிதன் ஒரு சமூக விலங்கு. ஆனால், எந்த விலங்கிடமும் இல்லாத சக மனிதர்களையே ஒடுக்கும் ஆதிக்க உணர்வு மனிதர்களிடம் உள்ளது. இன்னும் மறுகன்னத்தைக் காட்டிக்கொண்டிருந்தால் நம்மை மிதித்து இல்லாமல் செய்துவிடும் இந்தச் சமூக விலங்குகளிடம் நாம் எதிர்ப்புணர்வைக் காட்ட வேண்டியது மிகுந்த அவசியமாகிறது.

செய்தித்தாள்களும் தொலைக்காட்சி செய்திகளும் பல்வேறு இடங்களில் நடந்த கொலை தாக்குதல்களையும் வன்முறையையும் செய்திகளாக நமக்குக் காண்பித்துக்கொண்டிருக்கிறது. ஒருவேளை மனிதர்கள் வன்முறையை உள்ளுக்குள் ரசிக்கிறோமா என்கிற எங்கோ படித்த ஓர் உளவியல் பார்வை நினைவுக்கு வருகிறது. போர் குறித்த செய்திகளையும் வன்முறையையும் நேரிலோ அல்லது தொலைக்காட்சியிலோ காணும் போது ஏதோ ஒரு பதைபதைப்புடன் நாம் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒருவேளை அந்தப் பதைபதைப்பை மனிதர்கள் உள்ளார்ந்து ரசிக்கிறோமா? நமக்குள் இருக்கும் ராட்சசக் குணங்களோடுதான் நாம் வாழ்கிறோமா? ஏதோ ஒரு மெல்லிய நுனியில் வன்முறையின் மீதான நம் ரசனையைத்தான் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளின் மூலம் கண்டு களிக்கிறோமா? அதீத சத்தத்துடன் ரத்தம் கசியும் சண்டைக்காட்சிகளை அதனால் தான் மீண்டும் மீண்டும் பார்க்கிறோமா? சண்டைக் காட்சிகள் திரைப்படங்களில் இன்றியமையாத ஒன்றாகத்தானே மாறிவிட்டது. இப்படியான பல்வேறு கேள்விகள் மனதை ஆட்கொள்கின்றன.

தெரு சண்டைகளை நம்மில் பலர் பார்த்திருப்போம். தெருவில் நடக்கும் கணவன் மனைவி சண்டைகள், தெருக் குழாயடி சண்டைகள் போன்றவற்றைப் பார்த்திருப்போம். அதில் நடுநிலைமையே வகித்திருப்போம். அடிப்பார் பக்கமோ அடி வாங்குபவர் பக்கமோ சாராத மையமாக இருதரப்புக்கும் நல்லவராக இருந்திருப்போம். பலருக்கும் அது வெறும் பொழுதுபோக்கு. கடலை, வானத்தைப் பார்ப்பது போல பிறர் சண்டைகளைக் காண்பது பலருக்கும் பொழுது போக்காகவே இருக்கிறது.

இன்றைய தலைமுறைப் பிள்ளைகளிடம் முக்கியமாக இணையவழி விளையாட்டுகளில் வன்முறையே பிரதானமாக இருக்கிறது. துப்பாக்கியால் சுடும் விளையாட்டு, எல்லோரையும் சுடுதல், சும்மாவே சுடுதல், விளையாட்டில் வரும் பொம்மைகளின் ஆடையை அவிழ்த்து சுடுதல்… இப்படியெல்லாம் பல்வேறு விளையாட்டுகளை இளம் பிள்ளைகள் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். வன்முறை என்பதை வாழ்வின் ஓர் அங்கமாக இவர்கள் இளம்பிராயத்திலேயே கற்றுக்கொள்வதற்கான நிலையையன்றி வேறு எதை உருவாக்கியிருக்கிறது இந்தச் சூழல்.

பள்ளி மாணவர்களில் சிலர் ஆசிரியர்களிடம் மிக மோசமாக நடந்துகொள்ளும், மிக மோசமான வார்த்தைகளால் ஆசிரியர்களிடம் பேசும் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிரப்படுகின்றன. உண்மையில் அடிப்படையிலேயே குழந்தைகள் வன்முறையாளர்களாக வளர்கிறார்களா? இந்தச் சமூக அமைப்பு குடும்பங்களின் மூலமாகவும் திரைப்படங்களின் மூலமாகவும் இதுபோன்ற இணையவழி விளையாட்டுகளின் மூலமாகவும் வன்முறைகளைத் தெரிந்தோ தெரியாமலோ விதைத்துக் கொண்டேயிருக்கிறதா ?

இவ்வளவு சட்டங்களிலிருந்தும் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இவ்வளவு இலக்கியங்கள் இருந்தும் மனிதம் என்பது புத்தகத்தில் மட்டும்தான் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்கிற கேள்வி மனதை வாட்டுகிறது.

பழைய சிவாஜி கணேசன் படத்தில் இப்படி ஒரு வசனம் கேட்டேன். விலங்குகள்கூடத் தன் பசிக்காகத்தான் பெரும்பாலும் பிற விலங்குகளை வேட்டையாடுகிறது. ஆனால், மனிதன் மட்டும்தான் தன் வெறிக்காகச் சக மனிதனையே வேட்டையாடுகிறான். உண்மைதானே? அது வெறும் வெறி. ரத்தவெறியன்றி வேறேது?

அமெரிக்காவின் டெக்சாஸில் இளம் வாலிபன் ஒருவன் 18 சிறுவர்களையும் 3 பெரியவர்களையும் தன் சொந்த பாட்டி உட்பட 21 பேர்களைத் துப்பாக்கிக்கு இரையாக்கியிருக்கிறான். சிலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இளைஞர்களின் கையில் துப்பாக்கி எப்படி வருகிறது? இவ்வளவு சுலபமாக அவர்களால் துப்பாக்கிகளைச் சந்தைகளில் எப்படி வாங்க முடிகிறது? எத்தனை அப்பாவி குழந்தைகள் இதில் பலியாகி உள்ளார்கள்… அவர்களுக்கும் அவர்கள் பெற்றோருக்கும் யார் பதில் சொல்லப்போகிறோம்? இந்த வன்முறைக்கான விதை எங்கிருந்து தூவப்பட்டது? பெண்களுக்குக் கருக்கலைப்பு சட்ட விரோதமானது என்ற சர்ச்சையில் பிறக்காத குழந்தைகளைப் பாதுகாக்க போவதாகக் கூறிய அரசாங்கம், இறந்துபோன இந்தச் சிறுவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது? வன்முறை எப்படி அதிதீவிரமாகப் பிள்ளைகளின் மனதில் நஞ்சாக ஊறியிருக்கிறது? இதைக் களைவதற்கு ஒரு சமூகமாக நாம் என்ன செய்யப் போகிறோம்?

ஏசு கிறிஸ்துவின் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற இந்த வாசகம் அன்பைப் போதிக்கும். கெடுதல் செய்யும் ஒருவனுக்குக்கூட அன்பைக் கொடு என்பதுதான் இறைத்தூதர்களின் போதனை. ஆனால், அதன் பொருள் நாளடைவில் மருவிவிட்டது. வல்லினங்கள் எல்லாக் காலகட்டங்களிலும் மெல்லினங்களை நசுக்கிக்கொண்டே இருக்க முடியாது அல்லது இருக்கக் கூடாது.

எதிர்த்து நிற்க வேண்டும். நம் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். எந்த அடிப்படையிலும் தன்னைத் தாழ்ந்தவன், தாழ்த்தப்பட்டவன் என்று இனம்பிரிப்பதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள இயலாது. அதைப் போலவே இங்ஙனம் கட்டவிழும் வன்முறையைக் கண்டும் காணாமல் செல்ல இயலாது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை இனியும் காட்ட இயலாது. பிறரை அடிக்க முற்படும் முன் தன் கன்னத்தையும் அடிப்பவன் தயார் செய்துகொள்ளட்டும்.

துணிந்து நிற்போம்.

தொடர்ந்து பேசுவோம்.

கதைப்போமா?

படைப்பாளர்:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

Exit mobile version