Site icon Her Stories

முடைநாற்றம் வீசும் மூடநம்பிக்கைகள்

நானாக நான் – 18

கடவுள் நம்பிக்கை என்பது தனி மனித சிந்தனையைச் சார்ந்தது. ஆனால் கடவுளின் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள மூட நம்பிக்கைகள் எப்போதும் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. நம் மனங்களில் இருந்து களையப்பட வேண்டியவை. பிஞ்சு மனங்களில் விதைக்கக் கூடாதவை. அதிலும் பெண்கள் குறித்த கட்டுப்பாடுகளும் மூடநம்பிக்கைகளும் கடவுளின் பெயரால் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன.

தோழர் கீதா இளங்கோவன் அவர்களின் ‘மாதவிடாய்’ என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். ஆண்கள் பார்க்க வேண்டிய படம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவசியம் அனைவருமே பார்க்க வேண்டிய ஆவணப்படம் அது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் வேதனைகளையும், தமிழகத்தில் கூவலபுரம் கிராமத்தில் இன்னமும் பெண்களின் உதிரப்போக்கு நாள்களில் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, வேறொரு இடத்தில் ஒரு தனி அறையில் அடைக்கப்படுவது குறித்தும் பேசியிருக்கிறார்.

கூவலபுரம் ‘அறை’, pic courtesy: ruralindiaonline

அவ்வறையில் மின்சாரமும் இல்லை. எந்த வசதியும் இல்லை. அந்தக் கிராமத்திலுள்ள பெண்கள் பூப்பெய்தினாலும் மாதவிடாயின்போதும் அவர்கள் அக்கிராமத்தில் பிள்ளை பெற்றுக் கொண்டாலும் அகற்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தனி அறைக்குள் சென்றுவிடவேண்டும். மூன்று நாட்களோ ஐந்து நாட்களோ அவர்களின் உதிரப்போக்கு முடிந்த பிறகே அவ்வறையை விட்டு வீட்டுக்குத் திரும்பி செல்ல இயலும் என்ற தகவல் நமக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது.

நன்றி: vallamai.com

உலகம் இவ்வளவு முன்னேறி இருக்கும் இக்கால கட்டத்திலும் தமிழகத்தில் ஒரு கிராமத்தில் கடைபிடிக்கப்படும் இவ்வகையான பழக்கம் எவ்வளவு ஆரோக்கியமற்ற பின்தங்கிய நிலையில் நாம் இருக்கிறோம் என்பதைத்தானே குறிக்கிறது? இது போன்ற பெண்களின்  மாதவிடாய் காலங்களில் கடைப்பிடிக்கப்படும் மூட நம்பிக்கைகள் கிராமப்புறங்களில் மட்டுமல்லாது, நகர்ப்புறங்களிலும் நிரம்பியே உள்ளது.

மாதவிடாய் காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை நம் சமூகம் பெண்களின் மேல் தொடர்ந்து சுமத்திக் கொண்டேதான் இருக்கிறது. உதிரப்போக்கு காலத்தில் பெண்கள் உண்ட உணவின் மீதியை நாய்களுக்குக் கூட வைக்கக்கூடாதாம். மாதவிடாய் என்று தெரிந்ததுமே எந்த பொருளையும் தொடாமல் உடனடியாக தலைக்கு குளித்து விட வேண்டுமாம்.

அந்த ஐந்து நாட்களில் சுபகாரியங்களில் பங்கு எடுக்கக்கூடாதாம்.பெரும்பாலும் வீட்டில் அவர்கள் சமைக்கக் கூடாதாம். சாமி அறைக்கு செல்லவோ விளக்கேற்றவோ கூடாதாம். கோயிலுக்குள் செல்லவே கூடாதாம். பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு வயதிற்கு உட்பட்ட சின்ன குழந்தைகளை அவர்கள் தூக்கக் கூடாதாம். இப்படி இச்சமூகம் பெண்களின் மீது சுமத்தி வைத்திருக்கும் அநாவசிய கட்டுகளின் எண்ணிக்கைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவற்றில் எதற்காவது அறிவியல் காரணங்கள் இருக்கின்றனவா எனக் கேட்டால் அதற்கு தெளிவான பதிலில்லை. இதில் கடவுளின் பெயரால் திணிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஏராளம். மாதவிடாய் புனிதத் தன்மைக்கு எதிரானது என்கிற தவறான கற்பிதம் பலராலும் திணிக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே அதைத் ‘தீட்டு’ என அழைக்கும் பழக்கமும் நம்மிடம் இருக்கிறது. தீட்டு, தீண்டாமை என்பது மனித சமூகத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் எளியவர்களின் மீதும் பெண்களின் மீதும் தொடர்ந்து திணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

‘கடவுள் புனிதம்’, ‘மாதவிடாய் தீட்டு’ என்ற கற்பிதத்திலிருந்து மெத்தப் படித்தவர்களும் கூட இன்னும் வெளிவந்துவிடவில்லை. ஒரு காலகட்டத்தில் எல்லா சாதியினரும் கோயிலுக்குள் செல்ல இயலாது என இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, அனைவரும் கோவிலுக்குச் செல்லலாம்; ஆனால் கருவறைக்குள் எல்லா சாதியினரும் சொல்ல இயலாது என்ற நிலையே இன்றும் தொடர்கிறது. இதற்கான சட்டங்கள் அமுலுக்கு வந்தாலும்  இன்னமும் பல கோவில்களில் இந்நிலையை முழுமையாக மாற்றியமைக்க முடியவில்லை. இந்நிலையில் சாதிபேதமும் பால் பேதமும் இல்லாமல் ஆணும் பெண்ணும் மூன்றாம் பாலினத்தவரும் இந்து மதக் கோவில் கருவறைகளுக்குள் செல்லலாம் என்ற நிலை எப்போது வரும்?

‘பூனை குறுக்கே வந்தால் அபசகுனம்’ போன்ற மூட நம்பிக்கைகளிலிருந்தெல்லாம்  நாம் மீண்டு விட்டோம். ஆனால் இன்னும் நல்ல நேரம், இராகு காலம், எமகண்டம் போன்ற எல்லாவற்றையும் பலரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றனர்?

இவர்கள் குறிப்பிடும் ராகுகாலம் எமகண்டம் போன்ற எல்லா நேரங்களிலும் உலகெங்கிலும் யாரேனும் ஒருவர் பிறக்கவோ, இறக்கவோ அல்லது ஏதேனும் ஒன்றை செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்?

wikipedia

நல்ல நேரம் பார்த்து, ஜாதகப் பொருத்தம் பார்த்து, உருவாக்கிய திருமண பந்தங்களில் எல்லோரும் விரிசல் இல்லாமலும் பிணக்கில்லாமலும் வாழ்வாங்கு வாழ்கின்றனரா? அப்படியாயின் சரித்திர கதாபாத்திரங்களாகிய இராமன் சீதையின் திருமணம் அப்படி நடத்தப்பட்டதுதானே? அவர்களின் திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக இல்லையே? கணவனிடம் தன்னை மெய்ப்பிக்க தீக்குளிக்க துணிந்த ஒருத்தி, இரட்டை பிள்ளைகளை ஒற்றை மனுஷியாக பெற்று வளர்த்த ஒருத்திதானே நம் கடவுளரான சீதாதேவி? நல்ல நாள் பார்த்து திருமணம் முடித்த பாஞ்சாலி மகாபாரதத்தில் நல்ல திருமண வாழ்க்கையை வாழ்ந்திருந்தாளா?  சிலப்பதிகாரத்தில் கண்ணகி நல்ல திருமண வாழ்வைப் பெற்றிருந்தாளா?

பெண் குலத்திற்கே எடுத்துக்காட்டாக கூறும் இவர்களில் யாருமே அப்படி ஒரு நல்ல திருமண வாழ்வை வாழவில்லை என்றுதானே சரித்திரம் நமக்கு கூறுகிறது? நல்ல நேரமும் காலமும் ஜாதகப்பொருத்தமும் இவர்களுடைய வாழ்வை மாற்றி அமைக்கவில்லையே?

பெண்ணின் கருவிலேயே குழந்தை  ஆணா பெண்ணா என்று கண்டறிவது நம் நாட்டில் சட்டப்படி குற்றம் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் ‘புள்ளதாச்சியின் வயிறு பெருசா இருந்தா பொண்ணுதான் பொறக்கும், சின்னதா இருந்தா பையன்தான் பொறக்கும்’, என்று பல்வேறு மூடநம்பிக்கைகளை இன்னும் பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல நிற பேதம் இல்லை என்று சொன்னாலும் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ போன்ற மூட நம்பிக்கைகளும் வெள்ளைதான் தூய்மை பரிசுத்தம், கருப்பு அழுக்கு என்கிற பொருந்தாத எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு. திருமணங்களுக்கு சுபகாரியங்களுக்கு கருப்பு உடை அணியக்கூடாது என்றும் கருப்பு மங்களகரமான நிறமில்லை என்கிற எண்ணமும் கருப்பு என்கிற நிறத்தை அபசகுனமாக, எதிர் கண்ணோட்டமாகப் பார்க்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

கணவன் இறந்த பிறகு மனைவியிடமிருந்து பூவையும் பொட்டையும்  நிரந்தரமாக பிரிக்கும் ஒரு சடங்கு பல இந்துக் குடும்பங்களில் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பூவும் பொட்டும் ஒரு பெண் சின்ன வயதிலிருந்தே தனக்கு தேவைப்பட்டால் வைத்துக்கொள்ளும் ஒரு அலங்கார ஒப்பனை மட்டுமே என்பதில் நாம் ஏன் இவ்வளவு தெளிவற்றிருக்கிறோம்?

வீட்டு சுவற்றில் பல்லி தவறுதலாக நம்மீது விழுந்து விட்டால் உடனடியாக ஓடிப்போய் நாள்காட்டியில் பல்லி விழுந்த பலன் பார்த்த காலங்கள் மறைந்து, இன்று அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கூற்றுகள் அடங்கிய நாள்காட்டிகள் பல வீடுகளிலும் தொங்கிக் கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சியே. 

புத்தன் ஒரு நாத்திகவாதி. கடவுள் மறுப்பாளன். கடைசியில் அவனையும் கடவுளாக்கி பூ வைத்து பொட்டு வைத்து விளக்கேற்றி மனமுருக தனக்கு வேண்டியதைத் தர வேண்டும் என்று புத்தனை வேண்டி நிற்கும் பக்தர்களை என்ன செய்வது?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு ஏதும் தரக்கூடாது என்று அரசும் மருத்துவர்களும் பல முறையும் எடுத்துரைத்திருந்தாலும் இன்னமும் சில குடும்பங்களில் பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் கழுதைப்பால் புகட்டும் நடைமுறை இருக்கிறது. இது ஏதோ பழங்குடிகளிடம் நடைமுறையில் இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. சென்னை போன்ற நகர்ப்புறங்களிலும் இவையெல்லாம் நடைபெறத்தான் செய்கின்றன.

unsplash.com

நம் உடலின் எல்லா உறுப்புகளையும் ஒன்றுபோல எண்ணுகிறோமோ? நம்  பிறப்புறுப்புகளின் பெயர்களைச் சொல்வது தவறு என்றுதானே நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம்? அப்படிப் பிறப்புறுப்புகளின் பெயர்களை சொல்வதேயானாலும் அதை ஆகச்சிறந்த வசைச் சொல்லாகவேப் பயன்படுத்துகிறோம். கை கால்களில் இருந்து வழியும் ரத்தம் வெறும் ரத்தமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் பிறப்புறுப்பில் வழியும் ரத்தம் அசுத்தமானதாக கெட்ட ரத்தமாகப் பார்க்கப்படுகிறது. கை கால்களைப் போல நம் பிறப்புறுப்பையும் உடலில் ஓர் அங்கமாக பார்க்கும் மனநிலை நமக்கு வாய்க்கப் போவது எப்போது?

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை நாவலில் மனிதர்களின் வலக்கைக்கு தரும் மரியாதையை இடக்கைக்கு தருவதில்லை என்பது பற்றிக் கூறியிருப்பார். எளிய மனிதர்களை புறக்கணிப்பது போல நம் உடலில் உள்ள ஒரு கையை, நம் பிறப்புறுப்பை என்று எத்தனை புறக்கணிப்புகளை நாம் செய்து கொண்டேயிருக்கிறோம்.

முடைநாற்றம் வீசும் மூடப் பழக்கங்களைச் சாடுவதற்கு நாம் நம் அறிவைக் கொண்டு சிந்தித்தாலே போதுமானது. மதம், கடவுள், சாதி என்ற கட்டுகளிலிருந்து விடுபட்டு ஒரு அறிவு சார்ந்த மனிதனாக சிந்தித்தல் நலமானது.

மூடப் பழக்கங்களை முற்றிலுமாக முறியடிப்போம்.

பகுத்தறிவுப் பாதையில் பயணிப்போம். கதைப்போமா?

படைப்பாளரின் மற்ற கட்டுரையை வாசிக்க:

படைப்பாளர்

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

Exit mobile version