அவளது கையில் நீண்ட தண்டுடன் கூடிய கண்ணாடி மதுக்கிண்ணம். அதில் அவளுக்குப் பிடித்த ‘ஓட்கா காக்டெய்ல்’. செந்நிற மது, விளக்கினொளியில் பளபளத்தது.
இப்படி, வருணிக்கப்படுவது மட்டும் அவளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ‘பிலு பிலு’ என்று பிடித்துக்கொள்வாள். கையில் மது வைத்திருந்ததைச் சொல்லியதற்காக அல்ல, அதைச் செந்நிறம் என்று சொன்னதற்காக. அதன் நிறத்தைச் சரியாகச் சொல்லத் தவறியதற்காக. அது இள ரோஜா நிறம். இன்னும் சரியாகச் சொன்னால், ‘பட் ரோஸ்’ என்பார்களே அந்த நிறத்தில் இருந்தது.
அது சென்னை மாநரத்தின் உயர்தர மதுபான விடுதி.
கண்களை உறுத்தாத மென்னொளி. காதை வருடும் இசை. அவள் வழக்கமாக, தான் அமரும் ‘ஹை சேரில் அமர்ந்திருந்தாள். தனியாக வரும் யாரும் பொதுவாக அந்தப் பெரிய மேஜையைச் சுற்றியுள்ள உயர நாற்காலிகளில்தான் அமர்வார்கள். அவள் இன்று தனியாக வந்திருந்தாள்.
ஃ
எப்போதும் அவளுக்கு மது குடிக்கும்போது நடிகை ஷோபாவின் நினைவு வந்துவிடும் அல்லது ஷோபா நினைவு வரும்போதெல்லாம் குடிக்கத் தொடங்கி விடுவாள்.
எப்பேர்ப்பட்ட வாழ்க்கை; எப்பேர்ப்பட்ட அழகு; எப்பேர்பட்ட திறமை. ஒரு பார்வையில், இமைச் சிமிட்டலில், சின்னஞ்சிறு உதட்டுச் சுழிப்பில் – உலகையே கட்டிப்போட்ட யுவதி அல்லவா அவள்.
அவளுடைய அழகு, பயம் கொள்ள வைக்காத, அலையென ஆர்ப்பரிக்காத அழகு; கையெட்டத்தில் ஓடும் தெளிந்த நீரோடை போன்ற அழகு; சுடர் போன்ற அழகு; சொல்லித் தீராத மொழியின் அழகு.
அப்புறம் அவளின் அந்தக் குரல். பேசும்போதே அந்தக் குரலின் சின்ன நடுக்கம். கெஞ்சலான கொஞ்சலான வசீகரமான நடுக்கம். அது அவளுக்கேயானது. அவளுக்குப் பிறகு யாருக்குமே அந்தக் குரல் வாய்க்கவில்லை. நடிகை ரோகிணிக்கு வேண்டுமானால் அதன் சாயல் வெகு கொஞ்சம் வாய்த்திருப்பதாகச் சொல்லலாம்.
திரையில் ஷோபாவின் தொடுகை, தென்றல் நம் முகம் தொட்ட உணர்வைத் தரும். ‘பூவண்ணம் போல நெஞ்சம்’ பாடலிலும் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலிலும் பிரதாப் போத்தன் – ஷோபாவின் அன்பும் நெருக்கமும் தொடுகைகளும் பார்க்கவே மனதிற்கு இனிமையாக இருக்கும். இப்படி ஒரு ஜோடி நிஜத்திலும் அமைந்திருக்கலாமே என எண்ணத் தோன்றும்படி படு இயல்பாக இருக்கும். உண்மையில், அத்தனை மன நெருக்கம் இருந்தால்தான் அவ்விதமான தொடுகைகள் இயல்பாக நிகழும்.
…ஷோபா மெள்ள தன் விரல்களால் பிரதாப்பின் தலை கோதுவது, முகத்தில் மென்மையாகத் தொடுவது, சட்டையைத் திருகுவது, வானம் பார்த்துப் படுத்திருக்கும் அவரின் நெற்றியில் தன் முகவாயை வைப்பது, இணையாக நடந்தபடிப் பேசிச் சிரிப்பது…
அப்புறம் இருவருக்கும் இருக்கிற பொதுவான தடுக்கி விழுவது போன்ற ஒரு தத்து நடை, பித்து மனதுத் தோற்றம்…
ஃ
பொதுவாக, திரையில் ஷோபாவின் உடல் அசைவுகள், இலை ஒன்று காற்றில் மிதப்பது போல எடையற்று இருக்கும். ஆனால், முள்ளும் மலரும் படத்தில், ‘உங்க அண்ணன் யாரையோ போட்டு அடிச்சிட்டு இருக்கு’ காட்சியில் குடுகுடுவென ஷோபா ஓடுவது – விழுந்தடித்து ஓடுவது என்பார்களே அப்படி அதறிப்பதறி இருக்கும்.
ஓடும் காட்சிகளில் ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு மாதிரி ஓடுவார்கள். ‘வா வா அன்பே அன்பே’ பாடலில் கார்த்திக் ஓடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ரஜினி ஒருவிதம். இப்போதைய படங்களில், சமீப காலத்தில் பகத் பாசில் நடிப்பிலும் உடல்மொழியிலும்
எவ்வளவோ சிறந்தவராக மாறி இருக்கலாம். ஆனால், ‘நெத்தோலி செரிய மீன் அல்லா’ படத்தின் க்ளைமாக்ஸில் யானை தும்பிச்சாங்கையை வைத்துக்கொண்டு ஓடுவது போல கைகளை வைத்துக்கொண்டு ஓடுவார். பார்க்கவே படு காமெடியாக இருக்கும்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது.
மதுபான விடுதியில் இன்று அவ்வளவாகக் கூட்டம் இல்லை. பகல் பொழுதுகளில் பொதுவாகக் கூட்டம் இருக்காது. கல்லூரியைக் கட்’டடித்துவிட்டு வரும் கூட்டம், வியாபார நிமித்தம் வருகிற நடுத்தர, வயோதிகக் கூட்டம் அவ்வளவுதான். இதுவே வார இறுதி, அதுவும் மாலை நேரம் என்றால், கூட்டம் அள்ளும். அப்படியான நேரத்தில்தான் அவள் நண்பர்களோடு வருவாள்.
சுவரை ஒட்டி இருந்த இன்னொரு மேஜையில், அவளின் கடைசித் தம்பி வயதுள்ள ஒருவன் அங்கிருந்து இவளைப் பார்ப்பதும், இவள் பார்க்கும்போது வேறு எங்கோ பார்ப்பது போலவும் இருந்தான். கையில்லாத பனியன் அணிந்திருந்தான். வலுவான தோள்களில் ‘டாட்டூ’ குத்தியிருந்தான். அது அவனுக்கு அழகாக இருந்தது. அவனைக் கம்பீரமாக் காட்டியது.
இந்த வாழ்வு எவ்வளவு அநித்தியமானது; அதற்குள் எத்தனை வானவில்கள்… எத்தனை மின்மினிகள்…
இவள் ஹை’சேரிலிருந்து சேலைத் தடுக்காமல் லேசாகக் குதித்து இறங்கி ஒயிலாக நடந்தாள். பார்க்கும் யாரையும் போதை ஏற்றிவிடும் அழகு. அவள் நடை ஓர் இசைக் குறிப்பு அசைந்து அசைந்து நடை பழகுவதுபோல இருந்தது. கஜகேசரி நடை.
வழக்கமாக நண்பர்களோடு அமரும் மேஜையில் சென்று அமர்ந்தாள். பணியாள் ஒருவர் வந்து அவளது மதுக்கிண்ணத்தை நிரப்பினார். எடுத்து ஒரு மிடறு விழுங்கினாள். ஷோபாவைப் பற்றி, தான் இதுகாலம் கேள்விப்பட்டதை எல்லாம் நினைவுகூர்ந்தாள்.
அவள் ஏதாவது ஒன்றைத் தோண்டித் துருவுவது என்று முடிவெடுத்துவிட்டால், ஆதியோடந்தமாய் ஆராய்வாள். அது அவளின் பிறவி குணம். அப்படித்தான் ஷோபாவின் வாழ்வையும் மரணத்தையும் பற்றி ஒரு வீடியோ விடாமல் பார்த்திருந்தாள். ஷோபாவின் எல்லாப் படங்களும் அத்துப்படி.
1978இலிருந்து 80இற்குள் இரண்டு, மூன்று வருடங்களில் -கிட்டத்தட்ட அவளின் பதினாறு பதினேழு பதினெட்டு வயதிற்குள்- எத்தனையெத்தனை படங்கள். எத்தனை விருதுகள், பெருமைகள், செல்வம், செல்வாக்கு…
அழியாத கோலங்கள்… அழியாத புகழ்… ம்… பெருமூச்செறிந்தாள். வேலையின் மன அழுத்தமேகூட அந்தப் பிள்ளையைக் கொன்றிருக்கலாம். யார் கண்டது?
’மூடுபனி’ படத்தில் ஷோபா பாலு மகேந்திரா என்று டைட்டிலில் பெயர் போடுவார்கள்; ஆனால், இவர்களின் உறவை உலகிற்கு அறிவிக்க, ப்ரஸ் மீட் வைத்துச் சொல்வதற்குள் ஷோபா இப்படிச் செய்துவிட்டதாகப் பேச்சு இருந்தது.
சம்பவம் நடப்பதற்கு முந்தைய தினத்தில் ஷோபாவுக்கும் பாலு மகேந்திராவுக்கும் கடும் வாக்குவாதம் நடந்ததாகவும், அவர் தன் மனைவியை விட்டுவிட்டு, நிரந்தரமாகத் தன்னிடமே அவர் வந்துவிட வேண்டும் என ஷோபா நிர்பந்தித்ததாகவும் சொல்லிக்கொண்டார்கள்.
சந்தேகத்தின் பேரில், தற்கொலைக்குத் தூண்டியவர் என்கிற வகையில் பாலுமகேந்திரா சில மாதங்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அப்போது எழுதிய கதைதான் ’மூன்றாம் பிறை’ எனவும் சொல்லப்பட்டது.
மூன்றாம் பிறை படத்தில் எப்படியான அன்பு அது. அப்படி அன்பை விட்டுச் செல்ல இந்தப் பிள்ளைக்கு எப்படி முடிந்தது? ஏனிப்படி?
என்ன இல்லை அவளிடம்? புகழில்லையா? பணமில்லையா? அன்பில்லையா? எதற்குப் பஞ்சம்? என்னதான் பிரச்சினை. பதினெட்டு வயதிற்குள் எண்பது வயது வாழ்வை வாழ்ந்துவிடவில்லையா? ஒருவேளை அதுவேதான் பிரச்னையோ?
ஷோபாவின் அதே பிரச்னைகள் பாலுமகேந்திராவின் வாழ்வில், பின் வந்த மௌனிகாவுக்கும் இருந்திருக்கும்தானே? உண்மையில் மௌனிகா வேறு யாரும் இல்லை. சாகாத ஷோபா. ஷோபா சாகாமல் வாழ்ந்திருந்தால், அந்த வாழ்க்கைதான் மௌனிகாவுடையது.
பாலு மகேந்திராவின் இறப்பின்போது மௌனிகாவை கடைசியாகக்கூட அவருடலைப் பார்க்கவிடாமல் எல்லாரும் மறுத்தது, பிறகு பார்க்கலாம், தொட்டு அழக் கூடாது என்றதெல்லாம் நினைவுக்கு வந்தது.
அவருக்காக வருந்தி இன்னொரு மிடறை விழுங்கினாள்.
இத்தனை பெண்களால் நேசிக்கப்பட்ட ஒருவர் எப்படிப்பட்ட மனிதராய் இருந்திருப்பார். அவரது படங்களில் பெண்களை ஆராதித்து மரியாதை செய்யும் விதத்திலேயே அது தெரியும். ஒருவேளை ஷோபாவின் துர்மரணம் நிகழ்ந்திருக்காவிடில் நிச்சயம் ஜெமினி போல மதிக்கப்பட கூடியவராய்தான் பாலு மகேந்திரா, சமூகத்தின் பார்வையில் இருந்திருப்பார்.
ஹிட்லரைக்கூடச் சொல்வார்கள். அவரின் கடைசி சில வருடங்களுக்கு முன்பே அவர் இறந்திருந்தார் என்றால், உலகின் மிகச் சிறந்த போற்றத்தக்க மனிதர்களில் ஒருவராகத்ததான் அவர் அறியப்பட்டிருப்பார் என்று.
ஷோபா இன்னும் இருந்திருந்து, வாழ்வை வாழ்ந்திருக்கக் கூடாதா. இத்தனை சின்ன வயதில் வாழ்வைப் போதுமென ஏன் முடிவெடுத்தார்?
யாராவது ஷோபாவைப் பற்றிச் சொன்னால், சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டிருக்கலாம்போலத் தோன்றியது. யாரிடமாவது அவரைப் பற்றிப் பேச வேண்டும்போல இருந்தது.
ஆனால் சொல்லவோ கேட்கவோ நினைக்கவோகூட யாருமற்று காலச்சுழலில் எல்லாம் சென்றுவிடுகிறது; காணாமலாகிறது.
அவளுக்குத் தன் அம்மாவின் நினைவு வந்தது.
அவளுக்கு அவள் அம்மாவை அவ்வளவு பிடிக்கும். அம்மாதான் எல்லாமே. ஆனால், அம்மா ஏன் அப்படிச் செய்தாள்?
மனிதர்கள் ஒவ்வொருவருமே அதிசய விநோத பிராணிகள்தான். எவ்வளவு அறிந்தாலுமே அறியாதது இன்னும் அதிகமே. ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தாலுமே ஒருவருக்கு ஒருவர் உள்ள தொலைவு யாரும் அறியாதது.
யாருடைய சாவிற்கும் யாருமே காரணமாக இருக்க முடியாது; அல்லது எல்லாருமே காரணம்.
ஏன் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்… தனக்குப் பிடிக்காத மனிதர்களைக் கொலை செய்ய வேண்டும்… எப்படியும் எல்லா மனிதர்களும் இறந்துதான் போகப் போகிறார்கள். யாரும் சாகாமல் இருக்கப் போவதில்லை. பின்னும் ஏன் கொலை செய்ய வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?
அவளிடம் அம்மாவின் நினைவாகச் சில ஒளிப்படங்கள் உண்டு; அம்மாவின் குரல், அது மனதில், மனதிற்குள் மட்டுமே.
அவளுக்குக் கண்ணீர் பொங்கிப் பொங்கி வந்தது
அந்த டாட்டூ’ பையன் இவளருகே வந்தான். சுத்தமான ஆங்கிலத்தில், ”ஏன் கலக்கமாகக் தென்படுகிறாய்” என்று கேட்டான்.
ஷோபா இறந்த வருடத்தில்கூடப் பிறந்திருக்க மாட்டான். அத்தனை சின்னவன். தமிழ்ப் படங்கள் பார்ப்பானோ என்னவோ. இவனுக்குச் சொன்னால் புரியுமா என்கிற அவநம்பிக்கையோடு அவள், ‘முள்ளும் மலரும்’ படத்தில் ஷோபா தனது சேலைக் கிழிசலின் வழியாக உலகையே காண்கிற காட்சியை, வீடியோவில் காட்டினாள். அதைக் காண்பித்து, ஷோபாவின் வாழ்வு பற்றிச் சுருக்கமாக விவரித்தாள்.
”மற்றவர்களுக்காக இரக்கம் கொள்ளும் எத்தனை இளகிய மனம் உனக்கு” என்றான்.
‘ஃபேமிலி ட்ரீ’ என்பது பயாலஜிக்கலாக மட்டுமல்ல, எங்கெங்கோ இவளின் துண்டுகள், யார் யாரிடமோ இவளின் தன்மைகள், உலகளாவ எங்கும் எங்கெங்கும் இருப்பதுபோலத்தான் இவள் உணர்ந்திருக்கிறாள். அது ஷோபாவிலோ, சில்க் ஸ்மிதாவிலோ, இவள் அம்மாவிலோ … ஓரொரு சமயம், தான் வாழ்வது அவர்கள் வாழாத, மொத்த வாழ்வையும் என்றுகூட யோசிப்பாள். இந்த யோசனையின் தலை வெடிப்பில் தன்னை சில்வியா பிளாத் ஆக உணர்வாள். சமயங்களில், செல்வி – சிவரமணி. இதில் பால் வித்தியாசங்கள் ஏதுமில்லை. காஃப்கா, வான்கோ, கவிஞர் ஆத்மாநாம், பாரதியார், மண்டோ என எல்லாருமேதான்.
இப்போது இந்த நிமிடம் அந்த டாட்டூ’ பையனைத் தனதின் ஒரு சிறு பகுதியாக உணர்ந்தாள்.
ஒரு பாடலுக்குத் தன்னோடு நடனமாட வரும்படி அழைத்தான். சென்றாள்.
அவன் யாரோ, இவள் யாரோ; மறுபடியும் சந்திப்பார்களோ, மாட்டார்களோ; பாடலினிடை வரும் முத்தத்தை அவன் நிஜத்திலும் நிகழ்த்தினான்; அவள் தடுக்கவில்லை, கொண்டாடவும் இல்லை. அவனிலும் அது அப்படி நோக்கம் கொண்டு இல்லை. நடன அசைவுகளில் ஒன்றுபோலத்தான் அது நிகழ்ந்தது.
அப்புறமாகக் காலம் கடந்து நினைத்துப் பார்க்கையில், நிலையில்லாத இந்த வாழ்வில் இது ஒரு துளி தேன். வாழ்வு, அன்பை மறுக்கும்போது நினைந்து பற்றிக்கொள்ள ஒரு தருணம். அவ்வளவுதான்.
ஃ
பொதுவாக மனிதர்கள் தன் மீதோ பிறர் மீதோ வரும் தாங்க முடியாத கோபத்தில், மரணிக்கும் முடிவை எடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் மரணிக்கும் முடிவு எடுத்த பிறகு யார் மீதும் கோபம் வருமா, கோபம் இருக்குமா?
வேறெந்த தினங்களையும் விட, அன்றைக்கு அவள் அம்மா மிகவும் அன்பாகத்தானே நடந்துகொண்டாள்.
அன்று இவளுக்குப் பத்தாம் வகுப்பு கடைசித் தேர்வு. பொதுத் தேர்வு என்பதால் கூடுதல் கவனம். கூடுதல் பயம். விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தாள்.
அம்மா எப்போதும் இவளைக் கேலி செய்வாள் ‘படிப்புச் சிகாமணி’ என்று.
அம்மா ஒரு ‘டோன்ட் கேர் மாஸ்டர்’. எதற்குமே கலங்கமாட்டாள்.
‘அம்மா கணிதத்தில் இரண்டு மார்க் குறைஞ்சிருச்சு.’
‘சரி, அடுத்தவாட்டி நல்லா பண்ணு.’
வயதுக்கு வந்தபோது முதன் முதலில் குருதியைப் பார்த்து இவள் அப்படியே ‘வாழ்வே மாயம்’ படத்தில் கமல் செத்ததுபோல, தான் செத்துவிடுவோம் என்று பயந்து, தனக்கு கேன்சர் வந்துவிட்டது என்று அழுதபடியே அம்மாவிடம் வந்து சொல்ல, அம்மா சிரித்தபடியே அவளை அணைத்துக்கொண்டாள்.
”இதுக்குதான் நிறைய சினிமா பார்க்காதே என்பது” என்று கேலி செய்தாள்.
வாழ்வில் எது குறித்தும் பயப்படத் தேவையில்லை என்று அம்மாதான் தேற்றினாள். நம்மால் தாங்க முடியாத துன்பத்தை ஒருபோதும் இயற்கை தராது என்பாள்.
அன்றைக்கு அவள் பள்ளி செல்லும் முன்பு, அம்மா வழக்கமில்லாத வழக்கமாய் அவளை அணைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் நெற்றியில் முத்தமிட்டாள்.
”நீதான் அப்பாவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.
இவள் பரீட்சைப் பதட்டத்தில் இருந்தாள். இந்தக் கேள்வி வருமா, அந்தக் கேள்வி வருமா? படித்ததெல்லாம் நினைவில் இருக்க வேண்டுமே கடவுளே.
எதையோ கொறித்தபடி எங்கோ பார்த்தபடி நேரத்திற்குச் செல்ல வேண்டுமே என்கிற பரபரப்புடன், அம்மா சொல்வதற்கு எல்லாம் கவனமின்றி ‘ம்’ சொல்லிக் கொண்டிருந்தாள்.
பரீட்சை முடிந்ததும், அன்றைக்கு மதியம் யார் என்றே தெரியாத உறவினர் அவளைப் பள்ளியிலிருந்து கூட்டிச் சென்றார். வீட்டில் அம்மா இறந்து போயிருந்தாள்.
இவள் இன்றளவும் மனதுக்குள் கதறிக் கொண்டே இருக்கிறாள். ‘அம்மா, அப்பாவைப் பத்திரமா பார்த்துக்கொள்ளச் சொன்னாயே. என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்… நான் பாவம் இல்லையா… ஏன் என்னை விட்டுச் சென்றாய்… என்னைப் பற்றி எந்தக் கவலையும் இல்லையா உனக்கு…’
அப்பாவும் இவளும், தம்பி தங்கைகளை முறை வைத்து வளர்த்தார்கள். வீட்டையும் பார்த்துக்கொண்டு, கல்லூரிக்கும் சென்று, படித்துப் பட்டம் வாங்கி, வேலைக்குப் போய், உயர்ந்ததொரு நிலைக்குக் குடும்பம் மொத்தத்தையும் தலைதூக்க வைத்து – இன்றுவரை அவளது ஓட்டம் நிற்கவில்லை.
அப்பா தாயுமானவர் என்றால், இவளை என்ன சொல்வது கன்னித்தாய் என்றா?
திடீரென அவளுக்குக் கழிவிரக்கம் மிகுந்து கண்ணீர் கசிந்தது. எனக்கு மட்டும் ஏன் இப்படி?
கூடவே உடனடியாக வாழ்க்கை தனக்கு அருளிய நன்மைகள் எல்லாமும் நினைவுக்கு வந்தன. அம்மாதான் அடிக்கடி சொல்வார், ’கண்ணைக் கெடுத்த தெய்வம், கோலையும் கொடுக்கும்’ என்று. வாழ்வு நொறுங்க அடித்த தருணங்களில் எல்லாம், தான் மீண்டெழுந்ததை நினைத்துப் பார்த்தாள்.
அம்மா, அப்பா இருவரில் யாரை மிகவும் மிஸ் பண்ணுகிறோமோ அவர்கள்தான் இணையராக வந்து சேர்வார்கள் என்று இவளது தோழி மாலதி சொல்வாள். அப்படித்தான் வந்து சேர்ந்தான் குணசேகரன்.
உண்மையிலேயே குணசேகரன் அப்படியே அம்மாவின் குண வார்ப்பு. அவ்வளவு பார்த்துக் கொள்வான். இவளுக்கு ஒன்றென்றால் துடித்துப் போவான். இவள் சார்ந்த கடமைகளைத் தனதாக நினைப்பான்.
இவள் தன் அம்மாவின் மரண நினைவில் திகைத்து நிற்கும்போது அவன் சொல்வான், ‘எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் உணர்ச்சி மிகுந்த ஒரு தருணத்தை எதிர்கொண்டேதான் ஆக வேண்டும்; அப்படியான மனப்பதட்டம் மிகுந்த நேரத்தில் அப்போது என்ன தோன்றுகிறதோ அதன்படிதான் செயல்படுவார்கள். யார் மேல் எவ்வளவு
அன்பானவராக இருந்தாலும் இந்த வாழ்வை விட்டு நீங்கிச் செல்லத்தான் வேண்டும். அது எப்போது எப்படி ஏன் நிகழ்கிறது என்று யாருக்குமே தெரியாது. எல்லாருமே ‘லைசென்ஸ் எடுத்திருந்தாலும் ஏன் விபத்துகள் நடக்கின்றன? அப்படித்தான் இதுவும்’ என்பான்.
அம்மாவுக்கு அப்புறம் இவள் கணவனிடம்தான் எல்லாவற்றையும் சொல்வாள். கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஒப்புவிப்பாள் என்றுகூடச் சொல்லலாம் ‘என்னடா கன்ஃபசனா’ என்று செல்லமாகக் கடிந்து கொள்வான்.
இந்தப் பையன் முத்தமிட்டதை போய்ச் சொன்னால், ‘சாதாரண கிஸ்ஸா, பிரெஞ்ச் கிஸ்ஸா’ என்று கலாய்ப்பான்.
ஃ
ஆடி முடித்த களைப்பில் இருவரும் இன்னொரு ட்ரிங்க் ஆர்டர் செய்தனர்.
அவள் நினைவைத் தொடர்ந்தாள்.
மனிதர்கள் ஏன் சாக வேண்டும். அதுவும் நமக்குப் பிரியமானவர்கள் ஏன் சாக வேண்டும். அந்த வேதனையை நாம் ஏன் அனுபவிக்க வேண்டும்.
நமக்குப் பிடித்தமானவர்கள் யாரும் சாகவே கூடாது. நாம் சாகும்வரை நம் கூடவே இருக்க வேண்டும். வேண்டுமானால் நாம் செத்துப்போகிற அன்றைக்கு எல்லாருமே செத்துப் போய்க்கொள்ளலாம். இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?
டாட்டூ பையனிடம், சரியாக தேசிய விருது கிடைத்த அன்று ஷோபா தூக்குப் போட்டுக்கொண்டதைச் சொன்னாள். காலையில் பார்த்திருந்த அம்மா மதியம் இல்லாமல் போனதைப் பற்றிச் சொன்னாள்.
அவன் கேட்டான்.
”இப்படிக் கேட்பதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் அம்மாவும் ஷோபாவைப்போலத் தூக்குபோட்டுக் கொண்டார்களா?”
இவள் அவனையே பார்த்தாள்.
”இல்லை, என் அம்மா தன்னை எரித்துக்கொண்டு இல்லாமல் போனாள்.”
ஃ
படைப்பாளர்
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. கேளடா மானிடவா, கடல், அருவி முதல் அயலி வரை, கதவு திறந்ததும் கடல், அப்புறம் என்பது எப்போதும் இல்லை, வாழ்க்கை வாழ்வதற்கே ஆகிய நூல்கள் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வந்துள்ளன.