Site icon Her Stories

உயிர், அதிகாரம்: நிலத்தின் இரு முகங்கள் 

மனிதனைப் படிப்போம் – 1

புதிய தொடர்

மனித பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்திலிருந்து நிலத்துடனான மனிதர்களின் தொடர்பு, தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்வதில் எப்போதும் முரண்பாடு நிலவி வருகிறது. சிலர் நிலத்தை அதிகாரம் என்கிறார்கள்; சிலர் நிலமே உயிர் என்கிறார்கள். இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இந்தக் கூற்றுகளில் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதையும் இந்தக் கூற்றுகளை நம்பும் நபர்களைப் பற்றியும் இந்தக் கட்டுரை பேசுகிறது.

மனித வரலாறு முழுவதும், மனிதர்கள் தங்கள் முந்தைய வாழ்விடங்கள் வாழத் தகுதியற்றதாக மாறும்போது வேறொரு சிறந்த வாழ்விடத்தைத் தேடியபடியே உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். இதேபோல், வட அமெரிக்காவின் பழங்குடி மக்கள் 10000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசியாவில் இருந்து வட அமெரிக்காவிற்கு ‘பெரிங் லேண்ட்’ பாலம் என்ற தரைப்பாலத்தின் வழியாகப் பயணம் செய்தனர். பின்னர் இந்த தரைப்பாலம் கடைசி பனி யுகத்தில் காணாமல் போனது. வட அமெரிக்காவின் பழங்குடியின மக்களின் மூதாதையர்களின் இந்த இடப்பெயர்வு ‘பெரிங்கியா கோட்பாடு’ என்று அழைக்கப்படுகிறது.

கொஞ்சம் பொறுங்கள்! 10000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொடர்ந்து வாழ்ந்த இந்த நிலத்தை எப்படி பாலம் என்று அழைக்க முடியும்? மேல் கண்ட பத்தியை வாசித்த பிறகு இந்தக் கேள்வி உங்களுக்கு தோன்றியிருக்கலாம். இந்த கேள்வியில்தான் அரசியல் உள்ளது.

வட அமெரிக்காவின் பழங்குடியின மக்களும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளனர் என்பதை பெரிங்கியா கோட்பாடு நிரூபிக்கிறது. பாரபட்சம் கொண்ட வெள்ளை மேலாதிக்கவாதிகள் இந்த கோட்பாட்டைப் பயன்படுத்தி வட அமெரிக்க பழங்குடியினரின் பூர்வீக அந்தஸ்தை அகற்றி, அமெரிக்க நிலத்தின் மீது அவர்கள் உரிமை கோர முடியாதபடி செய்ய முயற்சிக்கின்றனர். அதன் தொரடர்ச்சியாகவேதான் ஆசிய கண்டத்தில் உள்ள சைபீரியாவில் இருந்து வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா வரை நீடித்திருந்த மிகபெரிய நிலப்பகுதியை பெரிங் லேண்ட் பிரிட்ஜ் என்று தொடர்ந்து அழைத்து வருகின்றனர். அந்த நிலப்பகுதியை பாலம் என்று குறிப்பிடுவதன் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் பல்லாயிர ஆண்டுகால இடப்பெயர்வு வரலாற்றை ஐரோபியர்களின் சில ஆண்டுகால இடப்பெயர்வு வரலாற்றுடன் பொருத்திப் பார்த்து பழங்குடிகளின் வரலாற்றை சிறுமைப் படுத்துகின்றனர்.   

பெரிங்கியா இப்போது இல்லாததால் அது ஒரு தற்காலிக நிலம் என்ற எண்ணத்தைப் பெறுவது எளிது. ஆனால் உண்மையில் பெரிங்கியா 10,000 ஆண்டுகள் நீடித்தது. இந்த காலமானது பதிவுசெய்யப்பட்ட வரலாற்று காலத்தை விட இரண்டு மடங்கு நீளமானது; ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் இருந்ததை விட இருபது மடங்கு அதிகமானது. பெரிங்கியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்த ஒரு இடம். கடைசி பனிக்காலம் முடிந்த பிறகு பெரிங்கியா கடலில் மூழ்கியதால், அங்கு வாழ்ந்த மக்கள் அலாஸ்கா வழியாக வந்து அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவி பல தலைமுறைகள் கடந்து வாழ்ந்து வருகின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவுக்கு வந்தடைந்த முதல் மனிதர்களின் எச்சங்களையும் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான குடியிருப்புகளையும் கண்டுபிடித்துள்ளனர். இது போன்ற பல தொல்பொருள் ஆய்வுகள் மூலம், அம்மக்கள் அமெரிக்க மண்ணின் பூர்வடியே என்பது நிரூபணமாகிறது.

இந்த இடத்தில் உங்களுக்கு மற்றொரு கேள்வி எழலாம். ஒரு நிலப்பகுதிக்கு முதலில் வந்ததனாலேயே அம்மக்களுக்கு அந்நிலத்தின் மீதும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிளும் சிறப்புரிமை வழங்கப்படுவது சரியான செயலாக இருக்குமா எனத் தோன்றலாம். ஆனால், இது போன்ற சிறப்புரிமைகள் அம்மக்களுக்கு பூர்வகுடிகளாக இருப்பதினால், அதாவது அந்நிலத்திற்கு முதன்முதலில் வந்தவர்கள் என்பதினால் மட்டும் வழங்கப்படுவதில்லை.

சில நூற்றாண்டுகளுக்கு முன் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்களின் கரங்கள் காலனித்துவத்தினால் ஓங்கின. அதனால், அந்நிலத்தின் பூர்வகுடிகள் எண்ணற்ற கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகினர். அமெரிக்க பூர்வகுடிகள் தங்கள் சொந்த நிலத்திலேயே அடிமைகள் ஆக்கப்பட்டனர். அவர்களுக்கு நேர்ந்த அத்தனை குரூரங்களுக்கும் அடிப்படையான காரணம்: ஐரோப்பியர்களின் இனவெறி.

ஐரோப்பியர்களின் இனவெறியால் ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கு நேர்ந்த அத்தனை ஒடுக்குமுறைகளும் அப்படியே அமெரிக்க பூர்வகுடிகளுக்கும் நடந்தது.

ஐரோப்பிய காலனி ஆதிக்கவாதிகளால் அமெரிக்கா கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்த பூர்வகுடிகளுக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான துன்பங்கள் நேர்ந்தன. குறிப்பாக, கனடா நாட்டின் நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றிய நிலப்பரப்பில் வாழ்ந்த பூர்வகுடிகள் வரலாற்றில் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க எல்லைகளில் தற்போது இருப்பதுபோல் அமைதியானதாகவோ எளிதில் கடந்து போகக்கூடியதாகவோ இல்லை.

அமெரிக்க புரட்சிக்கு பிறகு அந்த எல்லை பகுதியில் இரு நாட்டவர்க்கும் இடையே நீண்டகாலமாக ஒருவித பதட்டமான போர் சூழல் நிலவியது. கனடாவில் குடியேறிய ஐரோப்பியர்கள் 1812 ஆம் ஆண்டின் கடைசிப் போர் வரை இராணுவ உதவிக்காக பழங்குடி மக்களைப் பயன்படுத்தினர். போர் முடிந்த பிறகு அவர்களுக்கு பூர்வகுடிகளின் உதவி தேவைப்படாமல் போனது. காலப்போக்கில், அம்மண்ணின் பூர்வகுடிகள் ஐரோப்பிய காலனி ஆதிக்கவாதிகளின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இடையூறு விளைவிப்பதாக எண்ணி அவர்களை முற்றிலுமாக ஒடுக்கத்தொடங்கினர்.  

கனடாவில், ஐரோப்பிய குடியேறிகளுக்கு கல்வி மற்றும் நவீன சுகாதாரம் போன்ற அனைத்து அடிப்படை உரிமைகளும் கிடைக்கப் பெற்றுது. ஆனால், அதில் ஒரு உரிமை கூட அம்மண்ணின் பூர்வகுடி மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர்களது முன்னேற்றம் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் தேங்கிக்கிடந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்  வரை, அதாவது உலகம் தொழிற்துறை வளர்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்கிய காலம் வரை பூர்வகுடிகளைப் பற்றி ஐரோப்பிய குடியேறிகள் நினைத்துப் பார்க்கவில்லை.

கனடாவின் தொழிற்துறை வளர்ச்சிக்கு மனித சக்தி மிக முக்கியமான தேவை என்பதை உணர்ந்த பிறகுதான் பூர்வக்குடிகளுக்கு அடிப்படை உரிமைகள் சில வாழங்கப்பட்டன. அமெரிக்க கண்டத்தின் வரலாறு முழுவதும் தங்கள் தேவைகளுக்காக மட்டுமே ஐரோப்பிய குடியேறிகள், அம்மண்ணின் பூர்வகுடிகளை முன்னேற அனுமதித்தனர்.

பல ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகுதான் அந்நாட்டு பூர்வகுடிகளுக்கு மீண்டும் அவர்கள் இழந்த அத்தனை உரிமைகளும் கிடைத்தன. வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் அரசுகள் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டு பூர்வகுடிகளின் வாழ்வு மெல்ல மெல்ல மேம்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு வெள்ளை ஆதிக்கவாதிகள் பூர்வகுடிகளுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை நிறுவுவதற்கு பெரிங்கிய கோட்பாடு போன்ற அறிவியல் சான்றுகளை திரித்துப் பயன்படுத்துகின்றனர்.  

பூர்வ குடியினருடன் கனடா நாட்டுப் பிரதமர், நன்றி: Canada Wiki

இது போன்ற பல்வேறு சான்றுகளை திரித்து பேசி ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்கும் பழக்கம் உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் உள்ளது. கனடாவின் பூர்வகுடிகளை போலவே உலகின் அத்தனை நாடுகளின் பூர்வகுடிகளும் வரலாற்றில் எண்ணற்ற அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர். அதுபோல, இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல ஒடுக்குக்குமுறைகளுக்கு ஆளானவர்கள் பட்டியலின மக்கள். பட்டியலின மக்கள் இந்து மதத்தின் சாதிய அமைப்பின்படி இழிவான தொழில்களை மட்டுமே செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் சமுதாயத்தின் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமில்லாமல், அவர்கள் நிலமற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

பல்லலாயிர ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு வெகுசில ஆண்டுகளாகத்தான் அம்மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் இடஒதுக்கீடு மூலம் கிடைக்கக் தொடங்கியுள்ளன. இப்பொதுதான் மெல்ல மெல்ல அவர்கள் முன்னேறி வருகின்றனர்.

ஆனால் அவர்களின் முன்னேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதி மக்கள், அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க எண்ணற்ற தடைகளை உருவாக்கி வருகின்றனர். அந்தத் தடைகளில் ஒன்றுதான் “தகுதி”.

பட்டியலின மக்களுக்கு இழிவான வேலைகளைச் செய்ய மட்டுமே தகுதி உள்ளது என்று தொடர்ச்சியாக பொதுப்புத்தியில் ஆதிக்கசாதியினரால் நம்பவைக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டும் இல்லாமல், இடஒதுக்கீடு மூலம் “தகுதி” அற்ற மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது என்றும் நம்பவைக்கப்பட்டு வருகின்றது. இது போன்ற வாதங்கள் இடஒதுக்கீட்டின் முழு வரலாற்றையும் அறியாதவர்களால்  அல்லது அறிந்தும் அறியாதது போல் இருப்பவர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.

பெரிங் கோட்பாட்டைப் பயன்படுத்தி அமெரிக்க பூர்வகுடிகளுக்கு சிறப்புரிமைகள் வழங்கப்படக்கூடாது என்று வெள்ளை மேலாதிக்கவாதிகள் கூறுவதுபோல், இந்திய ஆதிக்க சாதி மக்களும் “தகுதி அற்றவர்கள்” என்ற வாதத்தை பயன்படுத்தி, பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு மூலம் வாய்ப்புகள் வழங்கக்கூடாது என்று கூறிவருகின்றனர். 

ஒரு சமுதாயத்தில், நிலத்தை அதிகாரமாக கருதுபவர்கள் அந்த சமுதாயத்தின் ஆதிக்க சக்திகளாகவும் நிலத்தை உயிராக கருதுபவர்கள் அந்த   சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களாகவும் இருக்கிறார்கள் என்று இக்கட்டுரையின் மூலம் நான் வலியுறுத்துகிறேன்.


கூடுதல் தகவலுக்கு: https://www.smithsonianmag.com/science-nature/how-humans-came-to-americas-180973739/

படைப்பு:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகலை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ

Exit mobile version