Site icon Her Stories

ஆண்பால் பெண்பால் தன்பால்

இயற்கை எத்தனையோ விசித்திரமான முரண்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. எந்தவொரு விஷயத்திலும் பல கோணங்கள் இருக்கின்றன. ஒருபுறம் சரியாகத் தோன்றும் ஒன்று மறுபக்கம் தவறாகத் தோற்றமளிக்கிறது. எந்தவொரு கருத்தையும் சரி தவறு என்று நம்மால் பகுக்க முடியாது.

உயிரினங்கள் இந்தப் பூமியில் தழைக்க இயற்கை இனப்பெருக்கம் என்ற ஒரு வழியை வைத்திருக்கிறது. ஆணும் பெண்ணும் கலவி செய்வதால் உயிர்கள் உருவாகின்றன. இது பொதுவான விதி. ஆனால் கலவி வெறும் குழந்தைப் பிறப்புக்குத் தான் என்பது பிற உயிர்களுக்கு மட்டுமே பொருந்தும். இனப்பெருக்கம் தவிர்த்து வெறும் உடல் இன்பத்திற்காகவும் மனித குலம் கலவி கொள்ளும் வகையில் தான் படைக்கப்பட்டிருக்கிறது.
ஆதிகாலம் தொட்டே உடல் ரீதியான உறவு என்றால் ஆணும் பெண்ணும் மட்டும்தான் ஈடுபட வேண்டும் என்று ஒரு பொதுக்கருத்து நிலவுகிறது. அதற்கு மாற்றாக இருக்கும் உறவுகளை இயற்கைக்கு முரணானது என்று சமூகம் ஒதுக்கி வைத்திருக்கிறது.

ஒருபால் அல்லது தன்பால் உறவு என்பது புராதன காலத்தில் இருந்தே இருக்கிறது. அரசர்களின் அந்தப்புரங்களில் அடைபட்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது பாலியல் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றியிருக்க முடியும்? அந்தப்புரத்தில் காவலுக்கு ஆண் காவலர்களை நியமிக்காமல் மூன்றாம் பாலினத்தவர்களை காவலுக்கும், வேலைக்கும் வைத்தார்கள். எனவே அந்தப் பெண்கள் தங்களுக்குள்ளேயே தான் நிச்சயம் உறவு வைத்திருக்க வேண்டும்.

தன்பால் உறவென்பது இயற்கையான உணர்ச்சியின் ஒரு பகுதியே. இதில் ஈடுபடுவது அவரவர் ஹார்மோன்களின் செயல்பாட்டினால் தான். இதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆண் பெண் உறவில் இருப்போர் இதைத் தவறென்று சொன்னால் தன்பால் உறவினர் அவர்களை விமர்சிக்கலாம் தானே? இத்தகைய உறவு இயற்கையின் விதிகளுக்கு அப்பாற்பட்டது என்ற முட்டாள்தனமான கருத்து கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து தான் ஏற்பட்டது. அதற்கு முன்பு இது சட்ட விரோதம் என்று யாரும் சொன்னதில்லை.

பழங்கால கிரேக்கத்தில், சாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோ உள்ளிட்ட தத்துவஞானிகள் கூட இளம் சிறார்களுடன் பாலியல் உறவு கொண்டிருந்தனர். அங்கே அது இயல்பானதாக ஏற்கப்பட்டிருந்தது. நமது புராணங்களில் கூட இத்தகைய உறவுகள் சுட்டப்பட்டுள்ளன. தன்பால் உறவில் இருக்கும் சிலர் எதிர்பால் உறவிலும் ஈடுபடுவர். அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்கும். ஆனால் அவையும் அவர்கள்போல பாலியல் செயல்பாட்டில் ஈடுபடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Photo by Jason Leung on Unsplash

வளரும்போது எங்கோ எப்போதோ ஒரு இடத்தில் ஹார்மோன்கள் மாற்றமடைகின்றன. இதை அறிவியல் ரீதியாகத்தான் அணுக வேண்டும்.
தன்பால் உறவில் ஈடுபடும் ஆண்கள் ‘கே’ என்றும் பெண்கள் ‘லெஸ்பியன்’ என்றும் பொதுமைப்படுத்தப் படுகிறார்கள். சிறைக்கூடங்களிலும், இராணுவத்திலும் இருப்பவர்கள் தங்கள் உடல் தேவையைத் தீர்த்துக் கொள்ள தன்பால் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதேநேரம் இதைச் சுயஇன்பம் போல ஒரு சாதாரணப் பழக்கமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருபால் உறவு இயற்கைக்கு மாறானது என்று இந்தியச் சட்டப்பிரிவு. 377 கூறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் கூட நமது பண்பாடு, கலாச்சாரம் போன்ற மாயச் சங்கிலிகளால் கட்டமைக்கப்பட்டதாகத்தான் இருக்கிறது. 1970 களில் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சிகளின் விளைவாக விலங்குகளிலும் இதுபோல தன்பாலுறவு உள்ளவைகளைக் கண்டுபிடித்தார்கள். அதன் பின்னரே தன்பால் உறவு என்பது மன நோய், மனப் பிறழ்வு அல்ல என்பதை உணர்ந்தார்கள்.

நத்தை, மண்புழு, அட்டை போன்ற உயிரினங்களில் தனித்தனியே ஆண், பெண் என்ற பாலினம் கிடையாது. அவைகளே தேவைக்கு தகுந்தபடி ஆணும், பெண்ணுமாக இயங்குகின்றன. அப்போது இவற்றை என்ன சொல்வது?

அறிவியலாளர்கள் உணர்ந்து கொண்டார்களே தவிர பொதுமக்களின் கண்ணோட்டம் மாறவில்லை. இதில், படித்தவர், படிக்காதவர் என்ற எவ்வித வித்தியாசமும் இல்லாமல் அனைவராலும் ஒருபால் உறவு மனநோய் என்று கணிக்கப்படுகிறது. இது அநாகரிகமானதாகவும் அவமானத்துக்கு உரியதாகவும், ஆட்சேபகரமாகவும் பார்க்கப்படுகிறது. இதில் இருக்கிறோம் என்று வெளியே சொன்னாலே கேவலமான பார்வையைத் தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

இத்தகைய உறவில் மாபெரும் அறிஞர்கள் கூட இருந்திருக்கின்றனர். மாவீரன் அலெக்ஸாண்டர், ஆஸ்கார் வைல்ட், கணித மேதையும், கணினி அறிவியலின் தந்தையுமான ஆலன் டூரிங், புகழ் பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி, ஜூலியஸ் சீசர், கவிஞர் பைரன் போன்றவர்களும் தன்பால் ஈர்ப்பாளர்களே. இன்னும் பெயர் தெரியாத எண்ணற்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள் ஒருபால் உறவு குற்றம் என்றும் அதில் ஈடுபடுவோர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இது தனி மனித சுதந்திரத்திற்கும், அந்தரங்க உரிமைகளுக்கும் எதிரானது.சவுதி அரேபியாவில் பெண்ணியம் பேசுவது, நாத்திகம் பேசுவது, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது போன்றவை தீவிரவாதத்திற்கு சமமான குற்றமாகக் கருதப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Photo by Nina Hill on Unsplash

கலவி என்பதை வெறும்‌ உடல் பசிக்காக என்று மட்டும் நினைக்கக்கூடாது. இதில் ஈடுபடுவோரின் மன உணர்வுகள் சமமாக்கப்படுகிறது. மூளையில் சுரக்கும் ‘எண்டார்பின்’ என்னும் ஹார்மோன் மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ என்னும் ஹார்மோன் அந்த சமயத்தில் அதிக அளவில் சுரந்து அவர்களுக்கு நன்மை அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒலிம்பிக்கில் மூன்று தங்கப்பதக்கம் வென்ற ஒரு விளையாட்டு வீராங்கனை கலவி கொண்டு மகிழ்ந்ததன் காரணமாகவே நன்றாக விளையாடி இத்தனை பதக்கங்களை வென்றதாகக் கூறியுள்ளார்.

தன்பால் உறவால் பலவிதமான நோய்கள் தொற்றும் என்பவர்கள் ஆண் பெண் உறவிலும் அத்தகைய நோய்கள் வரும் என்பதை அறிந்துள்ளார்கள் தானே? ஒரு தனிப்பட்டவரின் காயங்களை ஆற்ற உதவாதவர்கள், அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள் என்று சொல்வார்கள். அப்படி உதவியவர்கள் கூட அதிகப்படியான உரிமை எடுத்துக் கொண்டு அந்தரங்கத்தை ஆராய்ச்சி செய்யக் கூடாது. அதுதான் நாகரீகம். ஒருவர் தானாக தனது அந்தரங்க பிரச்சினையை, குழப்பத்தை சொன்னாலொழிய அதைப்பற்றி தேவையற்ற சிந்தனைகளை நமது மூளையில் ஏற்றிக் கொண்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

கலாச்சாரம், பண்பாடு போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அதனால் அது மாற்றங்களுக்கு உட்பட்டது. கஜூராஹோ போன்ற கோயில்களில் கூட தன்பாலுறவுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. எனவே இது காலங்காலமாக இருந்துவரும் ஒரு வழக்கம் தான் என்பதை அறியலாம். மனித மனம் தனக்கு சாதகமானவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். பிறவற்றைப் புறந்தள்ளும்.

மனிதர்கள் இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். இயற்கையின் நோக்கில் எதுவும் ஆபாசமோ, அருவருப்போ, காட்டுமிராண்டித்தனமோ இல்லை. அதன் பன்முகத்தன்மையில் இதுவும் ஒன்று. இதைப் புரிந்து கொண்டாலே எதையும் எள்ளலாகப் பார்க்கும் போக்கு குறைந்து விடும். மேலை நாடுகளில் இருந்து தான் இந்த முறை பரவியிருக்கும் என்று பொத்தாம் பொதுவாகப் பேசுபவர்கள் ஒருமுறை நமது இந்தியப் புராணங்கள், இதிகாசங்கள் இவற்றைப் புரட்டிப் பார்ப்பது நல்லது.

கட்டுரையாளரின் மற்ற படைப்பு:

படைப்பு:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.

Exit mobile version