Site icon Her Stories

டயலிசிஸ்

‘என்றோ ஒரு நாள் வரப் போகிறது என்று நினைத்திருந்த சிறுநீரகச் செயலிழப்பு முடிவில் வந்தே விட்டது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை எதிர்பார்த்துதான், கடந்த மருத்துவச் சோதனையின் போதே மருத்துவர் ஃபிஸ்டுலா அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். அவர் சொன்னபடி நடக்க முடியாமல் கேரளம் பயணம் தடுத்துவிட்டது.

அடுத்து என்ன செய்வது? புதுவை மருத்துவமனையிலேயே சேர்த்து டயலிசிஸ் செய்வதா? அல்லது சென்னைக்கு வழக்கமாக நாம் பார்க்கும் மருத்துவரிடம் செல்வதா?  உடனே டயலிசிஸ் செய்ய வேண்டுமென்று சொன்னார்களே, சென்னை போய்ச் சேரும் வரை அதைச் செய்யாமல் தாமதித்தால் உயிருக்கு ஆபத்து நேராமலிருக்க வேண்டுமே என்றெல்லாம் யோசித்து முடிவு எடுக்க முடியாமல் சில மணி நேரம் குழம்பினோம். இனித் தொடர்ச்சியான சிகிச்சைத் தேவைப்படுமென்பதால் ஆரம்பத்திலிருந்து நாம் பார்த்த மருத்துவரிடம் செல்வதே நல்லது என்று இறுதி முடிவு எடுத்தோம்.

அன்று இரவுக்குள் முடிக்க வேண்டிய வேலைகள் ஏராளமிருந்தன.  வங்கிக்குச் சென்று நீண்ட நாள் விடுப்பு சொல்லிவிட்டு, மருத்துவச் செலவுக்குத் தேவையான பணம் ஏற்பாடு செய்துகொண்டு, மறுநாள் அதிகாலை  சென்னைக்குப் பயணமானோம்.

“சிறுநீரகம் ஏற்கெனவே பழுதாகி வேலை செய்யத் திணறிக் கொண்டிருக்கும் போது, புதிதாக ஏதாவது நோய்த்தொற்று தாக்கினால் அதைத் தாங்கச் சக்தியின்றி உடனே தன் செயல்பாட்டை நிறுத்திவிடும். கேரளம் பயணத்தின் போது நோய்த்தொற்று ஏற்பட்டுக் காய்ச்சல் கண்டதன் விளைவாகச் சிறுநீரகம் செயலிழந்திருக்கக் கூடும். ஏவி ஃபிஸ்டுலா தயாராக இருந்திருந்தால் அதன் மூலமாக டயலிசிஸ் செய்யலாம். அது இல்லாததால் கழுத்து வழியே கதீட்டர் போட்டுத்தான் செய்ய வேண்டும். நுரையீரலில் நிமோனியா தாக்கியிருப்பதால் மூச்சுத் திணறல் அதிகமாக இருக்கிறது. சிறுநீரகம், நுரையீரல் ஆகிய இரண்டு பெரிய உறுப்புகள் தற்போது வேலை செய்யவில்லை என்பதால் நிலைமை சீரியஸ்” என்று மருத்துவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

உடனே கணவரது கழுத்தில் கதீட்டர் (Catheter) போட்டு டயலிசிஸ் செய்யும் சிகிச்சை தொடங்கியது. கழுத்தின் வலது பக்கம் உள்ள பெரிய ரத்த நாளத்தில் (Jugular Vein) கதீட்டரைச் செலுத்தி அதன் முனையை இதயத்திற்கு அருகிலுள்ள பெரிய ரத்த நாளத்தில் வைத்து அதன் வழியாக டயலிசிஸ் செய்வது தொடர்ந்தது.  சில நாட்களில் அதில் நோய்த்தொற்று ஏற்பட்டுக் காய்ச்சல் வந்தது. பிறகு கழுத்தின் இடப்பக்கம் துளை போட்டு கதீட்டரை உள்ளே செலுத்தி டயலிசிஸ் செய்தனர்.

ஃபிஸ்டுலா அறுவை சிகிச்சை முடிந்து ஒன்றரை மாதம் கழித்தே அது டயலிசிஸிக்குத் தயாராகும் என்பதால், இடையில் ஒருநாள் அவரது இடக்கையில் ஃபிஸ்டுலா அறுவை சிகிச்சையும் நடந்தது. அது தடித்துத் தயாராகும் வரை கழுத்து, தொடை (Femoral Vein) ஆகிய பகுதிகளின் வழியே கதீட்டரைச் செலுத்தி டயலிசிஸ் செய்வது தொடர்ந்தது. 

அப்பாவின் உடல்நிலை குறித்து மகள் கேட்ட கேள்விகளுக்கு உண்மையைச் சொல்ல முடியவில்லை. அவர் தேர்வு எழுதி முடிக்கும் வரை யாரும் உண்மையைச் சொல்லக் கூடாது என்று கண்டிப்புடன் எல்லாரிடமும் சொல்லிவிட்டேன். அதனால், “சாதாரணக் காய்ச்சல்தான்; வாந்தியும் வயிற்றுவலியும் நின்றுவிட்டது; கூடிய விரைவில் டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள்” என்று அவரிடம் ஒவ்வொரு நாளும் புது புதுப் பொய்யாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

“அண்ணனுக்குச் சிறுநீரகம் செயலிழந்தால், நான்தான் சிறுநீரகம் தருவேன்” என்று பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்த கூடப்பிறந்த தம்பி, செய்தி கேள்விப்பட்டு ஒரு வாரம் வரை மருத்துவமனை பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. மருத்துவமனை வந்தால் சிறுநீரகத்தைக் கேட்டு விடுவோமோ என்று பயம். சர்க்கரை வியாதி இருந்தால் சிறுநீரகத்தை எடுக்க மாட்டார்கள் என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அந்த வார முடிவில் “எனக்குத் திடீரென்று நீரிழிவு வியாதி வந்துவிட்டது அண்ணி” என்று சொல்லிவிட்டு, மருத்துவமனை வந்து அண்ணனைப் பார்த்துப் போனார் தம்பி.

“தம்பி நிச்சயம் சிறுநீரகம் தருவான்” என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை பொய்த்துப் போனதாலும், நிலைமை சீரியஸ் என்று மருத்துவர் சொன்னதாலும் கணவருக்கு மரணபயம் வந்துவிட்டது. இனிப் பிழைக்க மாட்டோம் என்கிற அவநம்பிக்கை காரணமாகச் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார். கண்களை மூடினாலே இறந்தவர்கள் வந்து, “எங்களிடம் வா, வா” என்று கைகளை நீட்டிக் கூப்பிடுகிறார்கள் என்று சொல்லித் தூங்க மறுத்தார். அவர் கைகளில் ஊசி மருந்து ஏற்ற வென்ஃப்ளான் (Venflon) போட நரம்பு கிடைப்பதே மிகவும் கஷ்டமாக இருந்தது. சிஸ்டர் மிகவும் சிரமப்பட்டுத் தேடி தேடிப் போட்ட வென்ஃப்ளானையும் கோபத்தில் பிடுங்கி எறிந்தார். அவருக்குத் தைரியம் சொல்லிச் சிகிச்சைக்கு ஒத்துழைக்க வைப்பது பெரும்பாடாக இருந்தது.

மகள் நல்லவிதமாக இறுதியாண்டுத் தேர்வு எழுதி முடித்தவுடன் வீட்டுக்குச் செல்லாமல் நேரே சென்னைக்கு வரச் சொல்லிவிட்டேன். மருத்துவமனைக்கு வந்து உண்மை தெரிந்தவுடன் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல்  கதறி அழுதார். முடிவில் மனதைத் தேற்றிக் கொண்டு ஒரு மருத்துவராக அப்பாவுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார். மகள் வந்து தங்கிய பிறகு கணவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த மகனும் இந்தியா திரும்பி மருத்துவமனையில் கணவருக்குத் துணையாக இருந்தார்.

மருத்துவமனையில் சேர்த்து மூன்று மாதமான பிறகு கணவருக்கு நிமோனியா குணமாகி மூச்சு விடுவது சீரானது. அதற்குள் ஃபிஸ்டுலாவும் தயாராகி அதன் வழியே டயிலிசிஸ் செய்யத் தொடங்கினார்கள். இனிப் புதுவையிலேயே டயலிசிஸ் செய்து கொள்கிறோம் என்று மருத்துவரிடம் கேட்டுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.

Exit mobile version