Site icon Her Stories

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

டயலிசிஸ் தொடங்கி மூன்று மாதமான பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து யோசிக்கத் தொடங்கினோம். இதற்கு உயிருடன் உள்ளவர்களிடம் தானம் பெறுவது (Living Donor Donation), இறந்தவர்களிடமிருந்து தானம் பெறுவது (Deceased Donor Donation) என இரு வழியுண்டு.

‘The Transplantation of Human Organs and Tissues Act (THOTA)1994,’ என்பது இந்தியாவின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டம். இந்தச் சட்டப்படி தந்தை, தாய், மகன், மகள், கணவன், மனைவி போன்ற நெருங்கிய உறவினரிடமிருந்து உறுப்பைத் தானம் பெறுவதில் சிக்கல் ஏதுமில்லை. தானம் செய்பவர், பெறுபவர் என இருவரின் நெருங்கிய உறவை அடையாள ஆவணங்கள் மூலம் மருத்துவமனையில் நிரூபித்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும்.

ஆனால் உறவினர் அல்லாத நெருங்கிய நண்பரோ, தூரத்துச் சொந்தமோ   ‘நான் சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுக்க விரும்புகிறேன்’ என்று மருத்துவமனையில் சொன்னால் மட்டும் போதாது. அதற்கான அங்கீகாரக் குழுவிடம் (Authorization Committee) தங்களது தானத்துக்கான நோக்கத்தை நிரூபிக்க வேண்டும். அரசு அமைக்கும் அந்தக் குழு விண்ணப்பங்களை ஆய்வு செய்து அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கும்.

இந்தியாவில் உறுப்பு விற்பனை சட்டவிரோதமானது என்பதால், ‘நீங்கள் இவருக்குச் சிறுநீரகம் கொடுக்கக் காரணம் என்ன? உங்கள் இருவருக்கும் எத்தனை ஆண்டுகளாகப் பழக்கம்?’ போன்ற பல கேள்விகளைத் தானம் கொடுக்க விரும்புபவரிடம் கேட்டு, அது மனிதநேய உதவியா அல்லது பணத்திற்காக உறுப்பை விற்கிறாரா என்பதைக் குழு கண்டறிந்து இறுதி முடிவெடுக்கும். பணத்திற்காக உறுப்பை விற்பதைத் தடுப்பது இந்தக் குழுவின் முக்கிய நோக்கம்.

நெருங்கிய உறவுகளில் ஒரே பெற்றோரிடமிருந்து மரபணுக்களைப் பெறும்  உடன் பிறந்தோரின் சிறுநீரகத்துக்கே பொருந்தும் வாய்ப்பு அதிகம்.   பெற்றோருக்குக்கூட இரண்டாவது இடம்தான்.

கணவரின் உடன்பிறந்தோர் ஐவர். யாரும் சிறுநீரகத்தைத் தர முன்வரவில்லை. ‘நான் கொடுக்கிறேன்’ என்று ஏற்கெனவே சொல்லியிருந்த தம்பியும் சிறுநீரகச் செயலிழப்பு நேர்ந்தவுடன் ‘எனக்கு சுகர் வந்துவிட்டது’ என்று சொல்லிப் பின்வாங்கிவிட்டார். பெற்றோர் இருவரும் வயதானவர்கள் என்பதால், அவர்களிடம் பெற வழியில்லை.

எங்கள் மகன், மகள் இருவரும் இளம்வயதினர் என்பதால் இவர் மறுத்துவிட்டார். நான் கொடுக்கத் தயாராக இருந்தேன். ஆனால் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடிய உடல்வாகு எனக்கு. மேலும் ஏற்கெனவே கர்ப்பப்பை, பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் எனக்கு நடைபெற்றிருந்தன. ஒரு சிறுநீரகத்தை எடுப்பது மேஜர் அறுவை சிகிச்சை  என்பதாலும், அதைச் செய்து கொண்டு நானும் படுத்துக் கொண்டால் இவரை யார் கவனிப்பது என்கிற யோசனையாலும் நான் தரவில்லை. எனவே இறந்தவரிடமிருந்து சிறுநீரகம் (cadaver kidney) பெறலாம் என்கிற முடிவுக்கு வந்தோம். இவருடன் டயலிசிஸ் செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவர் அந்த முறையில் அறுவை சிகிச்சை செய்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்ததும் ஒரு காரணம்.

சென்னை பிரபல தனியார் மருத்துவமனையில் இறந்தவரின் சிறுநீரக அறுவை சிகிச்சை விருப்பத்தைச் சொன்னவுடன் மாற்று அறுவை சிகிச்சைக்கு இவர் தகுதியானவரா என்பதை மதிப்பீடு செய்ய இவருக்குப்  பல்வேறு ரத்தப் பரிசோதனைகளைச் செய்தார்கள். மேலும் இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகளையும் அந்தந்தத் துறையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் முழுமையாகப் பரிசோதித்து அறுவை சிகிச்சை செய்யலாம் என்பதை உறுதி செய்தார்கள். அதற்குப் பிறகு மருத்துவமனை இவர் பெயர், வயது, ரத்த வகை உள்ளிட்ட அனைத்து மருத்துவ விவரங்களையும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத் தளத்தில் சிறுநீரகத்துக்காகக் காத்திருப்போர் பட்டியலில் பதிவுசெய்தது. அந்தப் பதிவுக்குப் பிறகு இவர் Cadaver சிறுநீரகம் பெறத் தகுதி பெற்றார். தற்போது இந்த ஆணையத் தளத்துக்கான இணைப்பு https://transtan.tn.gov.in.

இந்தத் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் (Transplant Authority of Tamil Nadu – TRANSTAN) நாம் நேரடியாகப் பதிவு செய்ய முடியாது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு இந்த ஆணையத்தின் அனுமதி பெற்ற மருத்துவமனை மூலமாகவே செய்ய முடியும். https://transtan.tn.gov.in/approved-hospitals.php என்கிற இணைப்பில் இந்த ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற மருத்துவமனைகளின் பட்டியல் உள்ளது.

இவரின் பெயரைப் பதிவு செய்தவுடன் ஓர் எண்ணைக் கொடுத்தார்கள். கீழே கொடுத்துள்ள தமிழ்நாடு ஆணையத்தின் இணைப்புக்குச் சென்று காத்திருப்போர் பட்டியலில் நம் எண் எந்த இடத்தில் உள்ளது என்பதை நாம் அவ்வப்போது பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். https://registry.transtan.tn.gov.in/#/commong-waiting-list

‘சிறுநீரகம் எப்போது கிடைக்கும் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. தொலைபேசி எண்ணை மாற்றக் கூடாது. மாற்றினால் உடனே மருத்துவமனைக்குத் தெரிவிக்க வேண்டும். பொருத்தமான சிறுநீரகம் கிடைத்தால் உடனே கூப்பிடுவோம். இறந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்படும் சிறுநீரகத்தை நீண்ட நேரம் பாதுகாக்க முடியாது. எனவே கூப்பிட்ட சில மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வர வேண்டும்’ என்று மருத்துவமனை அறிவுறுத்தியது.  

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உடல் தொடர்ந்து தகுதியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க மூன்று மாதத்துக்கு ஒரு முறை தவறாமல் அவர்கள் குறித்துக் கொடுக்கும் தேதியன்று மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் உடல்நலம் சீராக இருக்கிறதா என்பதைப் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்தார்கள். 

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்தால் சிறுநீரகம் கிடைக்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகுமென்றும், உடனே கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு ஏற்பாடு செய்ய புரோக்கர்கள் இருக்கிறார்கள் என்றும் சிலர் எங்களிடம் சொன்னார்கள். சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, புரோக்கர்கள் ஏழைகளை ஏமாற்றிச் சொற்ப தொகைக்கு அவர்களது உறுப்பைப் பெற்றுக் கொண்டு பெரும்பான்மையைச் சுருட்டிவிடுவார்கள் என்று ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தோம். சட்டத்தை மீறுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்பதால், அவர்களது யோசனையை நிராகரித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் காத்திருக்கத் தயாரானோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.

Exit mobile version