கேளடா, மானிடவா – 17
‘அம்மாவும் அப்பாவும் தன் குழந்தைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருப்பார்கள்; ஆனால், அந்தக் குழந்தை என்ன கேட்கிறதோ அதைத் தர மாட்டார்கள்.’ – சமீபத்தில் படித்த மீம்ஸ் இது. எத்தனை உண்மை. இந்த வாழ்க்கை ஒரே ஒரு முறைதான். அந்த வாழ்க்கையைத் தனக்குப் பிடித்த விதமாக வாழத்தானே ஒவ்வொருவரும் விரும்புவார்கள். குழந்தைகள் உட்பட. அதை அவர்களுக்கு அளிப்பதுதானே பெற்றோர் தரும் மிகச் சிறந்த பரிசு.
பிடித்த படிப்பு, பிடித்த வேலை, பிடித்த இணையர் – இவை அமைந்துவிட்டால், வேறெதுவுமே இந்த வாழ்வில் குறையாகத் தெரியாது. இவை அமையாமல், மொத்த உலகமே கிடைத்தால்கூட அது மகிழ்வில்லை. இல்லையா?!
சின்னச் சின்ன அடம்பிடித்தல்களை எவ்வாறு பிள்ளைகளிடம் ‘ஹேண்டில்’ பண்ணுகிறோமோ, அதைப்போலத்தான் பெரிய விஷயங்களையும் நம்பிக்கையுடன் மன உறுதியுடன் எளிமையாகச் செய்ய வேண்டும்.
எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் தன் 5 வயது குழந்தை தன்னிடம் ’அம்மா ஏன் பௌடர் போடுறே’ என்று கேட்டதற்காக, இருபது வருடங்களாகத் தான் பௌடரோ கண் மையோ போடுவதில்லை என்றார். இதிலென்ன பெருமை? அந்தச் சின்னஞ்சிறிய மகளுக்கும் குற்றவுணர்வை வரவழைத்து, தான் பௌடர் போட்டுக்கொள்ளும் மகிழ்வையும் இழந்து… இது என்ன வகையிலான பெருங்கொடுமை?
ஏன் பௌடர் போடுகிறாய் என்று கேட்டால், எது காரணமோ அதைச் சொல்லிவிட்டுப் போனால் மிக எளிமையாகக் கடந்திருக்க வேண்டிய தருணம் இது. ஆனால், அதை எவ்வளவு வன்மையானதாக ஆக்குகிறோம் என்பது நமது கைகளில்தான் இருக்கிறது. இதே போலத்தான் செக்ஸ் பற்றிய, ஆண் பெண் உறவுகள் பற்றிய கேள்விகளுக்கும் ஏதோ மிக அப்பட்டமாகப் பதில் சொல்ல வேண்டும் என்று நாமாக நினைத்துக்கொள்கிறோம். இது நமது அதிக அறிதலால் ஏற்பட்ட விளைவு. குழந்தைகளின் அறியாமையை, அப்பாவித்தனத்தை, வெகுளித் தனத்தைப் புரியாமல், நம் அறிவிலிருந்து விஷயத்தைப் புரிந்துகொண்டு விளக்குவது என்பது தேவையே இல்லை. அறிந்த முழுவதையும் கொட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை.
குழந்தைகளுடன் மனப்புரிதலுடன் உறவாடும் அறிவைப் பெற்றவுடன் இது தானாக அமைந்துவிடும். ஒவ்வோர் அம்மா, அப்பா, மகன், மகள்களோடும் அவரவருக்கான புரிதலுணர்வு அமைந்திருக்கும். அதன் வழியே சென்றால்தான் அவரவர் அவரவருக்கான உறவின் வெளியை அடையமுடியும்.
இந்தக் கட்டுரைகள், சொல்லிக்கொடுத்தல்கள் எல்லாமே, ஒருவித வினையூக்கிபோல. இவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்; ஆனால், இவையே உணவல்ல. இவை உங்களின் உணவை உண்டாக்கப் பயன்படும் கரண்டிகள் அவ்வளவே. உணவின் அனைத்தும் நீங்கள்தான். செய்யவும், பரிமாறவும் மட்டுமே கரண்டிகள். இதை உணர்ந்தால், உங்களுணவை நீங்களே, உங்களுக்குப் பிடித்தமான, சரியான விதத்தில் செய்துகொள்ள முடியும்.
எப்படி இந்தக் கட்டுரைகள் உங்களுக்கோ, அப்படித்தான் நீங்கள் உங்களது மகன், மகள்களுக்கு என்பதைப் புரிந்து கொண்டால், அவர்களது வாழ்வில் எந்தளவு உங்களது தலையீடு இருக்கலாம், இருக்கக் கூடாது என்பதையும் உணர்வீர்கள்.
உங்களின் பதின்பருவ மகளோ மகனோ ‘செக்ஸ்’ வீடியோஸ் பார்த்துக்கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எப்படி எதிர்கொள்வீர்கள்?
பதின் பருவம்
குழந்தைகளுக்கு முதல் மூன்று வருடங்களில் ஏற்படும் அதே அறிதலுணர்வு, என்னுடல் ஏன் இப்படி இருக்கிறது, பிறருடையது ஏன் அப்படி இருக்கிறது, இந்த அமைப்புடைய உடலுக்கு இதுதான் பெயரா, நான் யார் – ஆணா, பெண்ணா, டாம்பாயா (Tomboy – பெண்களில் ஆண் போன்ற கம்பீரத் தன்மைகளுடன் இருப்பவர்), எஃபமினேட்டா (Effeminate – ஆண்களில் பெண் போன்ற நளினத் தன்மைகளுடன் இருப்பவர்), திருநரா, பால்புதுமையினரா போன்ற பல கேள்விகள், மரணம், சாவு பற்றிய மனக்குழப்பங்கள், பயங்கள், சந்தேகங்கள் பதின்பருவத்தில் இருக்கும்.
இதே போன்ற தன்னைப் பற்றிய, தன்னுடலைப் பற்றிய அறிதல்களும் புரிதல்களும் உணர்தல்களும் நாற்பதுகளில் இரண்டாம் பதின்பருவத்தில் ஏற்படுகிறது.
அதுவே மறுபடியும் எழுபதுகளிலும் மூன்றாம் பதின் பருவத்தில் ஏற்படும். இவை பற்றி அடுத்தடுத்த அத்யாயங்களில் காண்போம்.
முதல் பதின்பருவம்:
குழந்தைகள் தாங்கள் யாரோ, அவர்களாக – அவர்கள் உருவாகிற காலம் இது. பதின்பருவத்தில் எதிர் பாலினத்தவரிடம் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு. காதல், காமம் பற்றிய புதிர்மையான கனவுகளுடன் – கேள்விகளைப் பிள்ளைகள் கேட்பது நலம். கேள்விகளைக் கேட்பதற்கான வெளியைப் பெரியவர்கள் தந்திருக்க வேண்டும்.
பிள்ளைகளின் யதார்த்தமான கேள்விகளுக்கு, சீரியஸாக பதில் சொல்லி, சீரியஸான கேள்விகளுக்கு மொக்கையாகப் பதில் சொல்லி பல்பு வாங்குவது என்பது எல்லாம் அடிக்கடி நடக்கும்.
வெளியே போயிருந்தால் அவர்கள் தங்களுடைய நண்பர்களுடன் பேசிவிட்டு, வீட்டுக்கு கிளம்ப மனம் வராது; 1 அலாரம், 2 வது அலாரம், 3 வது அலாரம் கொடுத்துக் கூப்பிடுவது நல்லது. திடீரெனக் கிளம்புவது, ’ஆ’ காட்டு என்று வாயில் போடுவது, இந்த ட்ரெஸ் எடு என வற்புறுத்துவது கூடவே கூடாது. அவர்களுக்கு என்று ஒரு தனித்துவத்துடன் அவர்களாக உருவாகிற தருணங்கள் இவை. அவர்களுடைய தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நமது சீனியாரிட்டியைத் திணிக்கக் கூடாது.
ஃப்ரெண்ட்லியாக இருப்பது வேறு; ஃப்ரெண்டாக இருப்பது வேறு. தன்னிடம் பிள்ளைகள் எது பற்றியும் பகிரும்படியான நட்புறவுடன் பெற்றோர் இருக்க வேண்டும். அவர்களுக்கென்று ரகசியம் இருப்பதை மதிக்க வேண்டும். அவர்களுக்கான அறை என்பது கண்டிப்பாக வேண்டும். அறை எனத் தனியே தர முடியாதவர்கள் அவர்களுக்கென ஒரு பீரோவோ அல்லது மேஜையோ தந்திருக்க வேண்டும்.
ஐன்ஸ்டைனுடைய பிரபலமான வாசகம் ஒன்று உண்டு. “If you want your children to be intelligent, read them fairy tales. If you want them to be more intelligent, read them more fairy tales.”
― Albert Einstein
எட்டு, ஒன்பது வயதில் Pre-Teen தொடங்குகிறது. சாதாரணமாகவே பிள்ளைகள் ஏன் கோபித்துக்கொள்கிறார்கள்; எதற்குச் சிடுசிடுக்கிறார்கள் என்பது புரியாது. இந்தக் காலக்கட்டத்தில் இன்னும் புரியாமல் விதவிதமாக நடந்துகொள்வார்கள்.
ப்ரீ டீனிலும் சரி, பதின் பருவத்திலும் சரி, பிள்ளைகளுக்கு நிறையக் கோபம் வரும்; தான் நினைத்த வேகத்தில் இல்லாமல், இந்த உலகம் மிக மெதுவாகச் சுழலுவதாகத் தோன்றும்; எதெற்கெடுத்தாலும் அடம்பிடிப்பார்கள்; கத்துவார்கள்; நிறைய உணர்ச்சிவசப்படுவார்கள்; அறிவுரை சொன்னால் பிடிக்கவே பிடிக்காது (யாருக்குத்தான் பிடிக்கும்?). கட்டளையாக எதையும் சொல்லிவிடக் கூடாது. அவ்வளவுதான், முடிந்தது. நான்கைந்து வயதுப் பிள்ளைகள் போலத் தவறுகள் நிறையச் செய்து செய்து கற்றுக்கொள்வார்கள். அப்போது நாம் இதமாகப் பதமாகச் சொல்லிக் கூட்டிவர வேண்டும். ஆனால், நாமோ நமது இரண்டாவது பதின் பருவத்தில் இருப்போம்.
பிள்ளைகள், தன்னைப் பெரியாளாக நினைத்துக்கொள்வார்கள். அவர்களின் அந்தப் பிம்பத்தை, நாம் உடைத்துவிடக் கூடாது. சிறுபிள்ளைத்தனமாக நிறையச் செய்வார்கள். அதை நாம் பெரிதுபடுத்தக் கூடாது. மறந்தது போல விட்டுவிட வேண்டும். யாரிடமும் அதைப் பற்றி, சாதாரணமாக்கூடச் சொல்லிவிடக் கூடாது.
உதாரணமாக: எனது நண்பரின் மகனுக்குப் பள்ளி ஆண்டுவிழா. அவருக்கோ அலுவலகத்தில் முக்கியமான வேலை. மகனை, விழா நடக்கும் ஆடிட்டோரியத்தில் விட்டுவிட்டு, வீட்டுக்குத் திரும்பவந்து, குளித்துக் கிளம்பி அலுவலகம் செல்ல வேண்டும். மகன் சாதாரணமாகவே எங்கு கிளம்பவும் படுத்தி எடுப்பவர். தாமதமாக, ‘நீ கதவைப் பூட்டிட்டு கீழ வா, நான் காரை எடுக்கிறேன்’ என்று போய்விட்டார். இது வழக்கமாக அவர் வீட்டில் நடப்பதுதான். காரை எடுக்கும் நேரத்தில் பிள்ளை இன்னும் தயாராகி வரலாமே என்று அவர் போக, பிள்ளை வர, ஆடிட்டோரியம் போய்விட்டு வீட்டுக்கு வந்து இவர் பாக்கெட்டில் கை விட்டால், என்றைக்கும் இல்லாமல் மகன் சாவியைத் தானே எடுத்துக் கொண்டு போய்விட்டார். பிள்ளையின் போனுக்கு அடித்தால், எடுக்கவில்லை.
இதேபோல ஒரு முறை, இன்னொரு தோழியின் மகனோ வீட்டைப் பூட்டவே இல்லை. உங்களில் யாருக்கும் இப்படி எல்லாம் இதுவரை நடக்கவில்லை எனில், இனிமேல் நடக்கும்.
இரண்டு வயதுக் குழந்தை கையில் கத்தி. அதை எப்படி வாங்குவது என்று ஒரு கதை உண்டு. சிம்பிள் லாஜிக் என்னவென்றால், அதற்குப் பிடித்த ஒரு பொம்மையைக் கொடுத்தால், அல்லது வேறு விளையாட்டுகளில் கவனம் திருப்ப வைத்தால், தானாகக் கத்தியைக் கீழே வைத்துவிட்டு, மற்றதில் கவனம் வைக்கும் என்று. குழந்தைகள் சைக்காலஜி மட்டுமல்லாமல் மொத்த மனித சைக்கலாஜிக்குமே இதைச் சொல்லலாம். நெகட்டிவ்வானவற்றை நீக்க வேண்டுமெனில், பாஸிட்டிவ்வான நல்ல விஷயங்களை அதிகப்படுத்துவது.
எது பிரச்னையோ அதைப் பேசவே கூடாது. என்ன ‘ரிசல்ட்’ வேண்டுமோ அதை நோக்கிச் செல்வது.
ஃ
தோழியின் மகள் கராத்தே வகுப்பிற்குப் போகும்போது, (5 வயதில் போட்டு அமுக்கிதான் சேர்த்துவிட்டார்கள்). பதினோரு வயதில் ப்ளாக் பெல்ட் தேர்வு 18 தினங்கள். அதற்குப் போகும் முன்பே, தன்னால் எதுவும் முடியாது; தேர்வுக்குச் செல்ல மாட்டேன் என்று ஏக ரகளை.
தோழி, ‘நாங்க இந்த டிவிலருந்து வர்றம், அந்த டிவிலருந்து வர்றம். எப்படி நீங்க சின்ன வயசிலயே இதெல்லாம் சாதிச்சீங்க’ என்று பேட்டி எடுப்பதுபோல விளையாடுவார். அதில் அம்மா, அப்பா பற்றிய கேள்விகளும் வரும். உணவு மற்ற மேனர்ஸ் போன்றவையும் வரும். அப்படி
இப்போது மகள் கலெக்டர் ஆகிவிட்டார். அதைப் பேட்டி எடுப்பது. ‘உங்களால எப்படி கலெக்டர் ஆக முடிஞ்சது. அதுக்கு என்னல்லாம் செய்தீங்க. ஓ… ஒன்பது வயசிலயே கராத்தே கத்துகிட்டீங்களா, சின்னப் பிள்ளைகளுக்கு உங்க அட்வைஸ் என்ன’ இப்படி… இப்படி எல்லாம் தாஜா செய்து, ப்ளாக் பெல்ட் தேர்வுக்கு அனுப்பி, வெற்றியடையச் செய்துவிட்டார்.
இதெல்லாம் கொஞ்சம் கிறுக்குத் தனமாகத் தோன்றும். ஆனால், இது வேண்டும்; நிறைய வேண்டும்.
ஒரு கதை. ஒரு குழந்தை தான் டான்ஸராக வேண்டும் என நினைக்கிறது; அடுத்து கிடாரிஸ்ட் ஆக வேண்டும் என்று, அடுத்து ட்ரைவர் ஆக வேண்டுமென, அப்புறம் ஓட்டப்பந்தய வீரராக வேண்டுமென – இப்படியே நீளும். கடைசியில் இவை எதுவுமே சம்பந்தப்படாமல் ஆனால், மகிழ்வாக ஒன்றைச் செய்வதாக முடியும். இந்த உலகத்தில் எதுவும் ஆகித்தான் தீர வேண்டும் என்பது இல்லை. மனநிறைவும் மகிழ்ச்சியும்தான் எப்போதும் முக்கியம்.
நண்பரின் மகள், பள்ளியில் ஸ்கேட்டிங் சேர்ந்தார். இரண்டு வருடத்தில், பேஸ்கட் பால் சேர்ந்தார். இரண்டே வருடங்களில் கண்ணீருடன், நான் போக மாட்டேன் என்றார். நண்பர், வேற எதுவும் சொல்ல முடியாத காரணங்கள் இருக்கிறதா எனத் துருவிப் பார்த்துவிட்டு, ஓகே என்று விட்டுவிட்டார். அவர் சொல்வார், ‘பிள்ளைகள் ஏதாவது ஒன்றாக ஆகணும்னா எல்லாத்துலயும் முயற்சி பண்ணுவாங்க. அந்த எல்லா முயற்சிகளும் எப்போதும் வீணில்லை, அவங்க எதுவாக ஆகப் போறாங்களோ அதற்கு அவை எல்லாமேதான் கொண்டு சேர்க்கும்; அவங்களை மோல்ட் பண்ணிக்க அவங்களுக்குத் தெரியும்’ என்று.
பிள்ளைகளுக்குத் தன்னுடைய உள்ளுணர்வைப் பின்பற்றத் தெரிந்தால் போதுமானது; அதைப் பெற்றோர் ஆமோதித்து வளர்த்தாலே போதுமானது.
சில பிள்ளைகள் எதையும் தான் செய்து பார்த்து, முயற்சி செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு எடுத்தவுடனே பக்காவாக பர்ஃபெக்டாகச் செய்ய வேண்டும் என்று நினைத்து, நினைத்து எதையும் செய்து பார்க்க மாட்டார்கள். அப்புறம் யாரும் விமர்சித்துவிடுவார்களோ என்கிற பயம். ஆனால், மனதுள் எல்லாவற்றையுமே நிறைய முறை செய்வார்கள். இவர்களின் தயக்கத்தைப் போக்க, ஒரு பெரிய செயலை, சின்னச் சின்னதாக உடைத்துக் கொடுக்க வேண்டும்.
பத்து வருடம் கழித்து ஓவியராக வேண்டும் என்றால், ஒன்பது வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும், 7இல், 5இல், இப்ப என்று (முன்னோக்கிப் போய்) பின்னோக்கிக் கூட்டிவந்து நிற்க வேண்டும். அவர்களைத் தான் ஆக நினைக்கும் மொத்த கனத்துடன் யோசிக்க விடாமல், சோர்வடைய விடாமல், இப்போது இன்றைக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரிய வைக்க வேண்டும். இரண்டு கைகளாலும் – வட்டம் (க்ளாக்வைஸ், ஆன்டிக்ளாக்வைஸ்), நேர்கோடு (முன்னும்பின்னும்), குறுக்குக்கோடு (மேலும் கீழும்), அலைகள் (இடமிருந்து வலமிருந்து) – இவை எல்லாம் தினமும் சிலமுறை பழகினால் போதும்; மனம் நினைப்பதை, கை வரையும். மேலும் இடது கை வரையப் பழகுவது, வேடிக்கையாக + மூளை வளர்ச்சியை மேம்படுத்துவதாக இருக்கும்.
ஆனால், இந்த இத்தனையும், எல்லாப் பிரச்னைகளும் பதின்பருவத்தில் வந்துபோவது நலம். எப்படி ஐந்து வயதுப் பிள்ளைக்கு எல்லா நோயும் வந்து போனால், நீடுழி வாழ்வார்கள் என்று சொல்கிறார்களோ, அப்படி. பிரச்னை வரவரத்தான் வாழ்க்கை சுவாரஸ்யம். பிறகான வாழ்வில் எப்படியான நிலையையும் நின்று, நிதானித்து, தாங்கி, தாண்டி பிரமாதப்படுத்துவார்கள்.
சில பிள்ளைகளுக்கு வளர்ந்த பெரியவர்களுடன் கம்பேரிஸன் வந்துவிடும். தான் அவர்களளவு நேர்த்தியாகச் செய்ய முடியவில்லையே என்று, செயலற்று ஆகிவிடுவார்கள். அவர்கள் தன்னை இப்போதைய பெரியவர்களுடன் கம்பேர் பண்ணாமல், பெரியவர்களுடைய அதே வயதில் வைத்துப் பார்க்கக் கற்றுத் தர வேண்டும். வளர்ந்த பெரிய தலைவர்கள், சாதனையாளர்கள், சிந்தனைவாதிகள் – தனது பதின் பருவத்தில் என்ன செய்துகொண்டிருந்தார்கள்; என்னவாக இருந்தார்கள் என்று, அவர்களது வாழ்க்கை வரலாறுகளை வாசிக்கும்போது இது புரிபட்டுவிடும்.
நமக்கு நமது பதின்பருவத்தில் என்னவெல்லாம் பிரச்னைகள் வந்தது என்று பிள்ளைகளோடு பேச வேண்டும். அது எளிதல்ல. கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய வேண்டும். அது பெரிய ப்ராஸஸ்.
மூன்று பதின்பருவங்களிலும் மற்றும் குழந்தை பிறந்ததிலிருந்தே கண்ணாடி என்பது மிக முக்கியமாகப் பயன்படுத்த வேண்டிய ஒன்று. மனிதர் கண்டுபிடித்ததிலேயே நெருப்பு, சக்கரத்திற்கு இணையாகக் கண்ணாடியும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.
முதலில் பிள்ளைகளின் பாத்ரூமில் அவர்கள் தன் உடம்பைப் பார்க்க, நேசிக்க, அறிய, உணர பெரிய கண்ணாடி இருக்க வேண்டும். அதைப் பற்றி எல்லாம் நம்மோடு பேசும்படியான, பகிரும்படியான நமக்கேயான பொழுதுகள் வேண்டும். அதனுள் வேறு யாருக்குமே அனுமதி கிடையாது.
ஆனால், இவை எல்லாம் தாண்டி ஓரிடம் இருக்கிறது; பிள்ளைகள் நமது நண்பர்களுக்கும் மேலான நண்பர்களாக நம்மைத் தாங்கும் இடம். நம் உடம்பிலிருந்து வந்த உயிர், இந்த உலகின் யாரையும்விட நம்மைப் புரிந்துகொள்வார்கள். அப்படியான பொழுதுகள் அவ்வளவு அருமையாக இருக்கும், வேறென்ன வேண்டும் இந்த உலகத்தில் நமக்கென்று தோன்றும்.
எதையும் கேள்வி கேள்
படைப்பாளர்
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.