Site icon Her Stories

கரில்

பொறுப்பு துறப்பு (Disclaimer)

இந்தக் கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் யாவும் கற்பனையே. இதில் வரும் சம்பவங்கள் எந்த ஒரு தனி மனிதரையும், வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டவை அல்ல. அப்படி இருப்பின் அது முற்றிலும் தற்செயலானது.

காட்டுத்தீயெனத் தன்னிச்சையாகப் பற்றியெரிந்து நாசம் விளைவிக்கும் தன்மை கொண்ட நெருப்பைக் கைப்பற்றி, பாதுகாப்பாக உபயோகிக்கத் தேர்ந்து, குளிர்காய்ந்து, வேட்டையாடிய இறைச்சியைப் பதப்படுத்தி உண்ணக் கற்றுக் கொண்டு, வேட்டையாட ஆயுதங்களைக் கண்டறிந்து, விவசாயம் செய்யும் முறையைக் கண்டறிந்து, சக்கரத்தைக் கண்டறிந்து எளிமையாக நீண்ட தூரம் பயணித்து, அவற்றைச் சந்தைப்படுத்தக் கைதேர்ந்தது முதல் இன்றைய செயற்கை நுண்ணறிவு வரை மனித குலத்தின் கண்டுபிடிப்புகள் ஏராளம். இத்தகைய கண்டுபிடிப்புகள் பல நன்மைகளைப் பயற்றாலும், கூடவே தீமைகளையும் அள்ளிக்கொண்டுதான் வந்தன. 

சேப்பியன்ஸ் மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறுநூலில், ‘வேளாண்மை நம்முள் பேராசையைத் தூண்டியது’, ‘அறிவியல் நம்மைப் படுபயங்கரமானவர்களாக ஆக்கியதுஎன்கிறார் யுவால் நோவா ஹராரி. அணு ஆயுதங்களை வைத்து யோசித்தால் அதுதான் உண்மை என்றே தோன்றுகிறது. ஆம், ஒரு பெரு வணிகத்துக்கான ஆரம்பப் புள்ளி வேளாண்மை எனில், மொத்த உலகத்தையும் ஒரே குடைக்குள் கொண்டுவரும் ஒரு மாயக்கருவியே அறிவியலாகிப் போயிருக்கிறது.

பணம் நாம் நம்புவதற்கு ஒன்றைக் கொடுத்ததுஎன அதே நூலில் அவர் குறிப்பிடுகிறார். ஆனால், அந்தப் பணம்தான் வணிகத்தின் ஆணிவேராகிப் போய் இந்த உலகத்தை ஆட்சி செய்கிறது.

மனித குல வளர்ச்சிக்கு அறிவியல் எவ்வளவுக்கு எவ்வளவு துணை போகிறதோ அதேபோல மனித குல வீழ்ச்சிக்கு அது காரணியாகவும் இருக்கிறது.

அறிவியலைத் துணை கொண்டு நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்வதை விட, ஒவ்வோர் அறிவியல் கண்டுபிடிப்பையும் பயன்படுத்தி அதைவிட வேகமாகப் புதிது புதிதான குற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதுதான் மனித மூளையின் ஆற்றல் அறிவியலுக்கு விடும் மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது.

புதிது புதிதாக உருவாகும் கண்டுபிடிப்புகளைக் குற்றச் செயலுக்குத் துணை கொள்ளும் வேகம், அந்தக் குற்றச் செயல்களைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றுவதில் இல்லை என்பதே உண்மை. நூதன குற்றங்களைத் தடுப்பதும் குற்றவாளிகளைத் தண்டனைக்கு உள்ளாக்குவதும் அவ்வளவு சுலபமாக நடந்தேறி விடுவதில்லை. இப்பொழுது இங்கே நடக்கப்போகும் இந்தக் குற்றத்தைக் கடிய போதுமான சட்டங்கள் நம்மிடம் உள்ளதா? இப்போதிருக்கும் சட்டத்தின் துணை கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு நீதியும், குற்றவாளிக்குத் தண்டனையும் பெற்றுக் கொடுக்கப் போவதுதான் யாரோ?

சம்பவம் –

அன்றாட வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு திறன்பேசியும் கையுமாகப் பெரும்பான்மையான கூட்டம் சமூக வலைத்தளங்களை அலச ஆரம்பித்திருக்கும் பிரைம் டைம் 21.00  

அமுதாஸ் எனும் அந்த யூடியூப் சேனலில் லைவ் தொடங்கிய நொடி, அதை சப்ஸ்கிரைப் செய்திருந்தவர்களுக்கெல்லாம் நோட்டிபிகேஷன் பறந்தது. 

பிடித்திருக்கிறதோ இல்லையோ, ஒரு சிலரைத் திட்டிக்கொண்டேனும் அவர்கள் பதிவேற்றும் காணொளிகளைப் பார்ப்பது இங்கே பலருக்கும் பொழுதுபோக்கு. அப்படித்தான் இந்தக் காணொளிக்குள்ளும் பலரும் தலையை நுழைத்தனர். சில நொடிகளுக்குள்ளேயே ஆயிரம் பார்வையாளர்களைத் தொட்டுவிட்டது அந்த நேரலை. 

உணர்ச்சி துடைத்த முகத்துடன் திரையில் தோன்றியவளைப் பார்த்ததும் பலருக்கும் வியப்பு. அமுதா… அவள் ஒரு அட்டென்ஷன் சீகிங் குவீன்‘. லைக்ஸ் கமெண்ட்ஸ் பெறுவதற்காக, மெனக்கெட்டு ஒரே நாளில் நான்கைந்து ஷார்ட்ஸ்களைக்கூடப் பதிவேற்றம் செய்திருக்கிறாள். ஆனால், இப்படி நேரலையில் அவள் வந்ததே இல்லை. 

அவள் இன்னும் பேசக்கூடத் தொடங்கவில்லை. அதற்குள்ளாகவே, ‘ஷார்ட்ஸ்ல காட்டினது போதாதுன்னு இப்ப லைவ்லயும் உன் முலைய  காட்ட வந்துட்டியா?’ எனத் தன் உண்மைப் பெயரைக்கூட வெளிப்படுத்தத் திராணியில்லாத ஒருவன்நான் கெட்டவன்என்கிற புனைபெயரில் பின்னூட்டம் இட்டிருக்கிறான். பிறகு எதற்காக இவள் லைவ் வரப்போகிறாள். 

ஆனால், அதையெல்லாம் தன் மூளைக்குள் கொண்டுபோகும் நிலையில் இப்பொழுது இவள் இல்லை. உண்மையில் இவளுக்குக் கோர்வையாகப் பேசக்கூட வராது. எனவே சொல்ல வேண்டிய விஷயத்தை எப்படித் தெளிவாக, அதன் வீரியம் குறையாமல் சொல்வது என மனதுக்குள் ஒத்திகை பார்த்தபடி இருந்தாள். அதற்குள்ளாகவே பல பின்னூட்டங்கள் அவளை அவசரப்படுத்த, கமெண்ட் செக்ஷனைப் பூட்டிவிட்டு தொண்டையைச் செருமி, பேசத் தொடங்கினாள். 

வெல்கம் டு மை சேனல். என்னோட தர்டி-கே சப்ஸ்க்ரைபர்ஸ்க்கும் வணக்கம். என்ன  உங்களுக்கெல்லாம் என்னைச் சில மாதங்களா தெரியுமா? ஆனா, நான் ஒரு அஞ்சாறு வருஷமா இந்த சோஷியல் மீடியாஸ்லதான் நாள் முழுக்க வாழ்ந்துட்டு இருக்கேன். இது எனக்குப் பொழுதுபோக்கு இல்ல, இதுதான் என் பிழைப்பு. பணம் சம்பாதிக்கத்தான் நான் ஷார்ட்ஸ்  போட ஆரம்பிச்சேன். அதைப் பலருக்கும் கொண்டுபோய் சேர்க்க, பேஸ் புக், இன்ஸ்டா இதுல எல்லாம் அக்கவுண்ட் தொடங்கினேன். ஆனா இன்னைக்கு உங்க முன்னால நான் வந்து பேசிட்டு இருக்கறது, லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, என் வீடியோவ ஷேர் பண்ணுங்கன்னு கெஞ்சிக் கேட்க இல்ல.” 

“ஆணோ பெண்ணோ இங்க ஒரு மனுஷங்கள ஆபாச வார்த்தை கொண்டு அசிங்கமா தூற்றினா, அதைக் கேட்க ஒரு நாதியும் இல்ல. இங்க பொது வெளியில ஒருத்தர் வந்து தன்னோட கருத்த சொன்னா, அதுக்கு ஆதரவாவோ இல்ல எதிர்மறையாவோ நிறைய விமர்சனம் இருக்கும். ஆனா, அதைக் கண்ணியமா வெளிப்படுத்தும் பண்பு இங்க பலருக்கும் இல்ல. இங்க பயன்பாட்டுல இருக்கும் எல்லா ஆபாச வார்த்தைகளுமே பெண்களைக் கொச்சைப்படுத்துறதாதான இருக்கு. அப்படி எல்லா வார்த்தைகளும் எனக்குக் கிடைக்க, என் சேனல் டிரெண்ட் ஆனதும் ஒரு காரணம்.

ஆனா அது தானா நடக்கல. அதுக்குப் பின்னால, ‘கிங் மேக்கர்ஸ்னு ஒரு டெலக்ராம் க்ரூப் வெச்சு, ஒரு பெரிய கூட்டமே வேலை செஞ்சிட்டு இருக்கு.த எம்பயர் டிஜிட்டல் மார்கெடிங்ன்ற பேனர்ல இயங்கிட்டு இருக்கற அந்த கம்பெனிய ஒரு பெரிய நெட்வொர்க்னு சொன்னா நீங்க நம்பித்தான் ஆகணும். சரியா சொல்லணும்னா அது ஒரு ஐ-டி விங் மாதிரின்னு வெச்சுக்கலாம். சும்மா இல்ல, கமிஷனா ஒரு பெரிய அமவுண்ட்ட வாங்கிட்டுதான். பேரம் அதோட முடியல. மன அழுத்தம் அதிகமாகி, தற்கொலை ஒண்ணுதான் தேர்வுன்னு என்னைத் தள்ளிட்டு  வந்துட்டானுங்க. அவனுங்க பேரை இப்ப சொல்லப் போறேன்.

சுவரசியமே இல்லாமல் அக்கறையற்ற மனநிலையில் பார்த்திருந்த பெருங்கூட்டம் ஸ்தம்பித்தது. 

அதுல பர்ஸ்ட் லைன்ன்னு சொன்னா, பேமஸ் யூ டியூபர் ரோஷன். அடுத்ததா யூ டியூபர்ஸ் டிஸ்கோ மணி, ரோஸ்ட் கிங் தங்கராஜ், குணா, பவன், ஸ்டீல் குமரன், ஹெல்த் டிப்ஸ் ரஞ்சனா, குழந்தை வளர்ப்பு பத்தி அளந்து விடுவாங்களே இன்புளுயன்சர் நேஹாஸ் மாம் வனிதா. இவங்களுக்குக் கீழ வேலை செய்யற டீம்ல நூத்துக் கணக்கான ஆளுங்க இருக்காங்க.

கடைசியா, என் வீடியோஸ்ல ஆபாசமா கமென்ட் போடற, இந்த கேடு-கெட்டவன் மாதிரி முகம் தெரியாத எத்தனையோ ஆயிரம் பேர். காரணத்தை விளக்கி சொல்ல எனக்கு இப்ப நேரம் இல்ல. காவல்துறை விசாரணைல எல்லாமே தானா தெரியவரும். நம்ம சமூகமும் சட்டமும் நீதியும் இவங்கள நிச்சயம் தண்டிக்கணும். இதுதான் என் கடைசி ஆசை. எனக்கு வேணா இது ஒரு முடிவா இருக்கலாம். ஆனா நான் இவங்கள அடையாளம் காட்டினது மூலமா பலபேரைக் காப்பாத்தி இருக்கேன்னுதான்  சொல்லணும். நன்றி

பேசிக்கொண்டிருக்கும்போதே அருகில் இருந்த கேனில் நிரம்பியிருந்த திரவ எரிபொருளைத் தன்மீது ஊற்றிக் கொண்டாள். அடுத்த நொடி பக்கென தீ கொழுந்துவிட்டது. அத்துடன் அந்த நேரலை முடிவுற்றது. 

அந்த நொடிவரை, ஏதோ உணர்வுபூர்வமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள் என எண்ணினார்களே தவிர, சத்தியமாக யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. 

இந்தச் சம்பவம் ஊரெங்கும் காட்டுத் தீ போலப் பரவத் தொடங்கியது. அந்தத் தற்கொலை வீடியோ, காவல்துறையினரால் பிளாக் செய்யப்படும் முன்பே ஆயிரக்கணக்கானஷேர்களைக் கடந்து போய்க்கொண்டே இருந்தது. 

தன் வாழ்கையையே பறிகொடுத்து இப்படி ஒரு விபரீதத்தை நடத்தி முடித்திருந்தாலும் தான் நினைத்தது நினைத்தபடி அந்த ஒரே நேரலை காணொளி மூலம் அவள் குறிப்பிட்டிருந்த ரோஷன் தொடங்கி ஒவ்வொருவரையும் தோலுரித்து அவர்களை நெருப்பின் மீது அமரவைத்திருந்தாள் அமுதா.

(தொடரும்) 

படைப்பாளர்



எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.

Exit mobile version