Site icon Her Stories

மகள் எனும் தேவதை

ஜென்னி மார்க்சின் கடிதங்கள் – 5

என் அன்பு மிக்கத் தனித்துவமான கார்ல்,

உன் கடிதம் எனக்குக் கிடைத்த அதே நேரத்தில், தேவாலயத்தின் எல்லா மணிகளும் ஒலிக்க, குண்டுகள் முழங்க, அமைதியான மக்கள் கூட்டம் மந்தைபோல் நுழைந்து, தேவலோகத் தூதரிடம் தங்கள் பூமியைப் பாதுகாத்ததற்கு மகிழ்சியைத் தெரிவித்துக்கொண்டது. ஹெயின்ஸ் கவிதைகளைப் படிக்கும்போது எப்படி வித்தியாசமான உணர்வுகள், மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை நீயே கற்பனை செய்துகொள்.

உன்னால் நம்ப முடியாது என் நேசமிக்க இதயமே, நீ உன் கடிதங்களால் என்னை எவ்வளவு மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாய் என்று! அதுவும் சமீபத்திய ஆறுதல் நிறைந்த கடிதம், என் மனத்தில் மகிழ்ச்சியையும் அமைதியையும் மீண்டும் ஏற்படுத்திவிட்டாய். நிச்சயமாக ஒருவர் கஷ்டத்திலும் கவனிக்கப்படாமலும் இருக்கும்பொழுது, நீண்ட காலத்திற்குப் பிறகு வரும் நன்மைகள் குறித்து எடுத்துரைப்பது வேதனையான, சிறுபிள்ளைத்தனமான விஷயம்தான். நான் இதுபோன்ற சித்திரவதைக்கு உள்ளானபோதெல்லாம் எனக்கு இதை நன்றாகவே உணர முடிந்தது. ஆனால், உற்சாகம் மிகுந்திருந்தாலும் உடல் மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே எப்போதுமே உன் உதவியால்தான் என் மனத்தில் உள்ள தீயப் பேயை விரட்ட முடியும். உன் சமீபத்திய கடிதம் எனக்கு உண்மையான, நான் விரும்பும் ஆறுதலை அளித்தது.

எது எப்படியிருந்தாலும் நான் இந்தக் குளிர் காலத்திற்கு முன்பு வந்துவிடுவேன். இதயம் குளிரும் உன் கடித வரிகளில் என் மேல் உள்ள உன் அன்பு ஜொலிக்கிறதே! நீண்ட காலத்திற்குப் பிறகு உன்னை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

நம் குட்டி உயிரைப் பார்க்க நீ எவ்வளவு ஆவலுடன் இருப்பாய்! எனக்கு நன்றாகத் தெரியும் உன்னால் நம் குழந்தையை அடையாளம் காண முடியாது. அவள் சிறிய விழிகளும் கறுத்த சுருட்டை முடியும் உன்னைப் போலவே இருக்கின்றன. கடந்த சில நாட்களாக மூலிகைகளில் வேகவைத்த உணவைச் சிறிது சாப்பிட ஆரம்பித்திருக்கிறாள். அதை மிகவும் விரும்பவும் செய்கிறாள். குளிக்கும்போது கைகளை நீரில் நனைத்து ஆட்டியபடி அறை முழுவதும் ஈரமாக்கிவிடுகிறாள். நீரில் விரல்களை அமிழ்த்தி அவசரமாக எடுத்துவிடுகிறாள். அவளின் சிறிய கட்டைவிரலை மற்ற விரல்களுக்குள் மடக்கிக்கொள்வதால், அது அசாதாரணமாக மடங்கி, வளையும்படி மாறிவிட்டது. இதைப் பார்த்து யாரும் அதிசயிக்காமல் இருக்க முடியாது! அவள் ஒரு பியானோ வாசிப்பவளாக வர முடியும். அவள் அழும்போது, சுவரில் தொங்கும் படங்களில் உள்ள மலர்களைக் காட்டி கவனத்தைத் திருப்பிவிடுவோம். அவள் அமைதியானாலும் நீண்ட நேரம் கேவல் இருக்கும். கண்களில் நீரும் ததும்பும். நாம் அவளிடம் அதிக நேரம் உரையாடக் கூடாது. அது அவளுக்கு அதிக பளுவைக் கொடுத்துவிடும். அவள் ஒவ்வோர் ஒலியையும் சொல்லி, அதற்கு விடையளிக்க விரும்புகிறாள். ஒவ்வொரு விதமான பார்வைக்கும் சிரிப்பை வெளிப்படுத்துவாள். நான் எப்படி ஒரு சிருஷ்டியை உனக்குக் கொண்டுவருகிறேன் என்பதை நீயே பாரு! ஏதாவது பேச்சு கேட்டால் அந்தத் திசை வழியே தன் பார்வையைத் திருப்பி, கவனிப்பாள்.

உனக்கு இந்தக் குழந்தையின் வளர்ப்பு குறித்து எந்தக் கற்பனையும் செய்ய முடியாது. இரவு முழுவதும் சிறிய விழிகளை மூட மறுத்து, யாராவது அவளை நோக்கினால் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறாள். விளக்கையோ நெருப்பையோ பார்த்தால் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விடுவாள். அவள் பெரிய இடிமின்னலுக்குத்தான் பயப்படுகிறாள். அன்பு கார்ல், எவ்வளவு நாட்களுக்குத்தான் இந்தச் சிறிய பொம்மை தனியாகவே விளையாட முடியும்? அவள் அப்பாவும் அம்மாவும் மீண்டும் சேர்ந்து தனி வீட்டில் வசிக்கும்பொழுதுதான் அவள் சேர்ந்து விளையாடும் வாய்ப்புக் கிடைக்குமோ என்று அஞ்சுகிறேன். வழக்கமாக ஒருவர் வருமானம் குறைவாக இருக்கும்போதுதான் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதைப் பார்க்க முடியும். சமீபத்தில் ஓர் ஏழை தனது பத்துக் குழந்தைகளுடன் வந்து, பர்கோ மாஸ்டர் கோர்ட்ஸிடம் நிவாரணம் கேட்டார். அவருக்கு உதவி வழங்கப்பட்டது.

வெகுநாட்களாக உன் உறவினர்களைப் பார்க்க முடியவில்லை. ஒருவரிடமிருந்து அழைப்பு ஏதுமில்லை என்றால் நாகரீகமாக அவர்களை மறுபடியும் பார்க்காமல் இருப்பதே நல்லது. திருமணம் ஆகஸ்ட் 28. ஞாயிறு அன்று முதல் அறிவிப்பு தேவாலயத்திலிருந்து வர இருக்கிறது. ஜெட்சன்ஸின் உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இருமலும் முனகலும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அவளால் அதிக தூரம் நடப்பதும் சிரமம். அவள் ஏதோ ஆவியைப்போல் நடமாடி வருகிறாள். ஆனால், அவளுக்கு மணம் முடித்தாக வேண்டும். இது தேவையில்லாததாக இருக்கலாம். ஆனால், ரோக்கோல் தன் மருமகனுக்கு ஆதரவாக இருக்கும் என்று நினைக்கிறார். எனக்குத் தெரியவில்லை, இது நல்ல விதமாக முடியுமா என்று. கஷ்டமான கிராமிய வாழ்க்கை. அதுவும் கடுமையான குளிர் காலம் வேறு. என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. எப்படி உன் உறவினர்கள் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டத்துடனும் இருக்கிறார்களோ! ஏதோ மாற்றம் ஏற்பட்டால் தவிர, அவர்கள் சுயநல மகிழ்ச்சியிலிருந்து தப்பிக்க வழியில்லை. என்னால் உன் அம்மாவைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எங்களிடமே ஜெட்ஸனுக்கு டி.பி. இருப்பதாகக் கூறினார். இருந்தும் கல்யாணத்திற்கு அனுமதிக்கிறார். ஜெட்சன்ஸும் இதை விரும்புகிறாள். இது எப்படி முடியப் போகிறதோ என்ற பதற்றம் எனக்கு.

ட்ரையரில் நான் இதுவரை பார்த்திராத குழப்பமும் கூச்சலும் நிலவுகிறது. எல்லா இடங்களிலும் ஏதோ சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. எல்லாக் கடைகளும் நன்றாகப் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் புதிய அறைகளைத் தங்குவதற்காக ஏற்பாடு செய்துவருகிறார்கள். நமக்கும்கூட அறைகள் தயார். ஜெர்மனியின் கோப்லன்ஸ் நகரமே இங்கு வந்து, சமூகத்தின் உயர்குடிமக்கள் எல்லாம் இந்த அணிவகுப்பில் கலந்துகொள்கிறார்கள். எல்லா விடுதிகளுமே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 210 புதிய உணவு விடுதிகள் உருவாகிவிட்டன. மேலும் சர்க்கஸ், மிருகக்காட்சி சாலைகள், நாடகமேடைகள் எல்லாம் வந்துவிட்டன. ட்ரையர் பேரணி ஞாயிறு அன்று துவங்குகிறது. ஒவ்வொருவரும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் 16000 மக்கள். கன்னிமாதாவின் உருவப்படம் ஒவ்வொரு வீட்டிலும் வைக்கப்பட்டுவிட்டது. உன்னால் இங்கு நடக்கும் ஆரவாரங்களைக் கற்பனைகூடச் செய்ய முடியாது. அடுத்த வாரம் லக்ஸம்பர்க் நகரின் பாதி மக்கள் இங்கிருப்பார்கள். மைக்கேல் சித்தப்பாகூட வருவதாகத் தெரிவித்திருக்கிறார். எல்லா மக்களும் பைத்தியம் பிடித்ததுபோல் திரிகிறார்கள். நாம் நம் இலக்கை அடைய நெடுந்தூரம் செல்ல வேண்டுமோ?

உன் கட்டுரை பற்றி அந்த கறுப்புத்தலை (ரூக்) எதுவும் சொன்னாரா? மெளனமாகிவிட்டாரா?ஜங்க் உண்மையிலேயே தவிர்க்க முடியாத அற்புதமான பாத்திரம். நீ மறுபடியும் சிறிது வருமானத்திற்குள் வந்திருப்பது எவ்வளவு நல்ல விஷயம்! எப்போதும் எல்லோருமே, ’நம் பணப்பை நிரம்பியிருக்கும் போது எவ்வளவு விரைவாகக் காலியாகிவிடுகிறது; மறுபடியும் அதை நிரப்புவது எவ்வளவு கடினம்’ என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

என் அன்புக்குரிய நல்லவனான கார்ல், எப்படியெல்லாம் உன்னை விரும்புகிறேன், என் மனம் எப்படியெல்லாம் உனக்காக ஏங்குகிறது தெரியுமா? எட்கர் தன் அழகான மருமகளைக் கவனிப்பதை விரும்புகிறேன். அவன் வக்கீல் மாமாவாக ஆன பிறகுதான், அம்மாவிடம் இங்கிருந்து புறப்படுவது பற்றிப் பேச முடியும். நம் குட்டிபொம்மை இப்பொழுது சூப் சாப்பிடுகிறாள். நீ யோசித்துப் பார், அவள் இப்பொழுதெல்லாம் கீழே படுப்பதை விரும்புவதே இல்லை. நேராக நிமிர்ந்து உட்காரவே விரும்புகிறாள். அப்படி உட்கார்ந்தால் அவளுக்குச் சுற்றியும் பார்ப்பது எளிதாகிவிடுகிறது. என் அன்பு இதயமே, ஏன் கூரியர் பற்றி எதுவுமே குறிப்பிடுவதில்லை? முரண்பாடு ஏற்பட்டுவிட்டதா?

கோலேனிலிருந்து வரும் எதுவுமே கவலைக்குரியதாக இல்லாதது விநோதமாக இருக்கிறது. எல்லாமே நல்லதாகவே நடக்கிறது. நம் நண்பர்கள் எல்லாம் எவ்வளவு நம்பிக்கைக்குரியவர்கள், தாராள மனம் கொண்டவர்கள், அனுசரித்து நடப்பவர்கள், திறமையானவர்கள்! இவர்களிடம் பணம் கேட்பது மனவலியை ஏற்படுத்துவதாக இருந்தாலும், இவர்களின் உதவும் குணம் அந்தக் கவலையை இல்லாமல் செய்துவிடுகிறது. என்னால் தொடர்ந்து எழுத முடியும். ஆனால், இந்தக் குழந்தை என் கவனத்தைத் தொடர்ந்து திசைதிருப்பி, அழகாகப் புன்முறுவலுடன் பேச முனைகிறது. உன்னால் இவளின் அழகு மிகுந்த முன்நெற்றி குறித்தோ, கண்ணாடி போன்ற தோல் குறித்தோ, இனிமையான பிஞ்சுக்கைகள் குறித்தோ கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.

என் இதயத்தின் இனிய இதயமே, விரைவில் மறுபடியும் கடிதம் எழுது. உன் கையெழுத்துகளைப் பார்த்தாலே மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

விடைபெறுகிறேன் என் இதயத்தின் இதயமே,

ஜென்னி

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

சோ.சுத்தானந்தம்

ராமநாதபுரம் மாவட்டம் பூசேரி கிராமத்தில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியலாளராக வாழ்க்கையைத் தொடங்கி, தொழில்முறைப் பயணமாக இந்தியா முழுவதும் சுற்றியவர். பல நிறுவனங்களை உருவாக்கியவர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். எல்.ஐ.சி. முகவர்களுக்கான லிகாய் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இவ்வமைப்பின் முதல் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டவர். அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ்காரராக இருந்து, பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டவர்.

Exit mobile version