Site icon Her Stories

கிராண்ட் ஓரியண்டல் விடுதியும் சுதந்திர சதுக்கமும்

கொழும்பு மாநகரின் அழகைத் தேடிய எங்கள் பயணம், அதன் வரலாற்றுப் பெருமையின் நுழைவாயிலாகத் திகழும் ‘கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல்’ (Grand Oriental Hotel) வளாகத்திலிருந்து தொடங்குகிறது. கடலும் வணிகமும் கைகோர்க்கும் துறைமுகத்தின் அருகாமையில், காலத்தின் சுவடுகளைத் தன் மார்பில் ஏந்தி நிற்கிறது இந்த வரலாற்றுப் பெட்டகம்.

இந்தத் தொன்மை வாய்ந்த கட்டிடத்திற்குள் நாங்கள் காலடி எடுத்து வைத்தபோது, எங்களை எதிர்கொண்டது ஒரு காட்சி. அது, மனிதனை மனிதனே தன் தோள் வலிமையால் இழுத்துச் செல்லும் ஒரு பழைய கைரிக்ஷா! கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்ட அந்த ரிக்ஷா, காண்பதற்கு ஒருபுறம் அரும்பொருளாக மிக அழகாகத் தோன்றினாலும், மறுபுறம் மனித உழைப்பின் வலியையும் கடந்த காலத்தின் அடிமைத்தன வடுக்களையும் நினைவூட்டி, உள்ளத்தில் ஒரு நெருடலையும் விதைக்கத் தவறவில்லை.

இதன் சுவர்களில் 1837-ஆம் ஆண்டு வரையிலான பழமையான கதைகள் உறைந்து கிடக்கின்றன. பிணி தீர்க்கும் டச்சு மருத்துவமனையாக உருப்பெற்று, பின்னர் அந்நாட்டு ஆளுநரின் அதிகார மையமாக (இல்லமாக) மாறி, கால ஓட்டத்தில் பிரிட்டிஷ் இராணுவத்தின் பாசறையாகவும் உருமாறிய வரலாற்றுப் பரிணாமத்தை இந்தத் தங்குமிடம் சாட்சியாகக் கொண்டுள்ளது.

காலத்தின் ஓட்டத்தில், 1873 ஆம் ஆண்டு இந்த வரலாற்று வளாகம் ஒரு தங்குமிடமாக (ஹோட்டலாக) தன் புதிய பரிமாணத்தைத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை, உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் பலரின் பாதச் சுவடுகள் இந்தத் தரையில் பதிந்துள்ளன. அவற்றுள் மகுடம் சூட்டியது போல், பிரிட்டனின் எலிசபெத் அரசி இங்கு வந்து தங்கிய வரலாற்றுத் தருணமும் ஒன்று. அவர் தங்கி மகிழ்ந்த ‘அறை எண் 301’ இன் வராண்டா பகுதி, இன்றும்கூட அவரது வருகையையும், அந்தப் பழைய நினைவுகளையும் நிழற்படங்களாகத் தாங்கி, காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

அரச ஆளுமைகள் மட்டுமல்லாமல், இலக்கிய உலகைக் கட்டிப்போட்ட மாமேதைகளும் இந்தச் சுவர்களுக்குள் உத்வேகம் பெற்றுள்ளனர். புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ், 1890 ஆம் ஆண்டில் இந்த விடுதியின் ‘அறை எண் 302’ இல் தங்கியிருந்தார். உலகப் புகழ்பெற்ற தனது ‘குசேவ்’ (Gusev) என்ற சிறுகதையை அவர் இந்த அறையில் வைத்துத்தான் செதுக்கினார். எழுத்துலகின் அந்தப் பேராசான் தங்கியிருந்த அந்த அறை, இன்றுவரை அவரது நினைவிடமாகவே மிகவும் போற்றுதலோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அரசி எலிசபெத்தின் நினைவுகள் மட்டுமன்றி, இந்த விடுதியின் ஒட்டுமொத்த வராண்டாக்களும் கலைக்கூடங்களாகவே காட்சியளிக்கின்றன. 

அதே வராண்டாவின் அடுத்த சுவரில், எங்களைச் சற்றுத் திகைத்து நிற்க வைத்த மற்றொரு வரலாற்றுப் பென்சில் ஓவியம் கண்ணில் பட்டது. அதன் கீழே “The Manner of Extorting their fine” (Robert Knox – 1681) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அது, 17 ஆம் நூற்றாண்டில் கண்டி பேரரசில் கைதியாகக் கைவண்ணம் பெற்ற பிரிட்டிஷ் மாலுமி ராபர்ட் நாக்ஸ் (Robert Knox) எழுதிய வரலாற்று நூலில் இடம்பெற்ற ஒரு பதிவின் நகல் ஓவியம். குற்றமிழைத்த ஒரு எளிய மனிதன், தன் முதுகிலும் தலையிலும் ஒரு பிரம்மாண்டமான பாறாங்கல்லைச் சுமந்தபடி, அரை மண்டியிட்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். அவனுக்கு அருகில், இடுப்பில் வாளுடனும் முகத்தில் எவ்வித சலனமுமின்றியும் நிற்கும் அதிகாரி!

பின்னணியில் வறண்ட நிலமும், தனித்து நிற்கும் ஒரு மரமும் அந்தச் சூழலின் வெறுமையையும், ஒடுக்கப்பட்ட மனிதனின் தனிமையையும் இன்னும் ஆழமாக உணர்த்துகின்றன. வரலாற்றின் பகட்டான பக்கங்களுக்குப் பின்னால், சாமானிய மனிதர்கள் அனுபவித்த இத்தகைய உழைப்புச் சுரண்டல்களும் தண்டனைகளும் நம் மனதிற்குள் ஒரு மெல்லிய பாரத்தையும், கடந்த கால மனிதர்களின் வலி குறித்த சிந்தனையையும் விதைக்கத் தவறவில்லை

இவ்வாறு சுவர்களில் தொங்கும் ஒவ்வொரு அழகிய ஓவியமும் புகழ்பெற்ற நிழற்படமும், கடந்த காலத்தின் ஏதோவொரு பக்கத்தை நமக்குத் திறந்து காட்டுகின்றன.

அப்படி ஒரு வராண்டாவைக் கடக்கும்போது, யானையின் மீது அமர்ந்து ஒரு இளம் வீரன் பயணிக்கும் நிழற்படம் அப்படியே கட்டிப்போட்டது. அந்தப் படம், தமிழ் இலக்கிய உலகின் காவிய நாயகனான ‘பொன்னியின் செல்வனை’ கண்ணில் கொண்டுவந்து நிறுத்தியது. கல்கியின் காவிய பக்கங்களில், இருபது வயதைத் தாண்டாத, துடிப்பும் அழகும் நிறைந்த அருள்மொழி வர்மன் இலங்கை மண்ணில் கால்பதித்து வலம் வந்த காட்சிகள், அந்தப் படத்தைப் பார்த்த கணத்தில் அறியாமலேயே நினைவலைகளாக மோதின. காலம் கடந்த ஒரு இலக்கியப் பிணைப்பை அந்த ஓவியம் ஏற்படுத்தியது.

இலக்கிய நினைவுகளின் தாக்கத்தோடு எங்களின் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, அங்கும் ஒரு பேரதிசயம் எங்களுக்காகக் காத்திருந்தது. அந்த அறையின் சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு நிழற்படம் அப்படியே உருகச்செய்தது.

அது, ‘க, ங…’ என்று தமிழ் எழுத்துக்களை எழுதிப் பழகும் ஒரு அழகான காட்சி! தாய்மொழியின் ஆதிச்சுவடு, கடல்கடந்த அந்த வரலாற்று விடுதியின் அறைக்குள் எங்களை அன்போடு வரவேற்பது போலிருந்தது. மணலில் எழுதிப் பழகிய நம் முன்னோர்களின் மரபையும், தமிழ் மண்ணின் தொன்மையையும் ஈழத்து மண்ணின் பின்னணியில் அந்தப் படம் மிக அமைதியாக, அதேநேரம் ஆழமாகக்  கடத்தியது.

அறையின் சன்னலைத் திறந்து வெளியுலகைப் பார்த்தபோது, கொழும்பு நகரின் இரு வேறு முகங்கள் ஒரே நேர்க்கோட்டில் காட்சியளித்தன. ஒருபுறம் ஆன்மீக அமைதியின் குறியீடாக வானுயர்ந்து நின்ற ஒரு புத்த விகாரம்; மறுபுறம் நவீனத்தின் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்த கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி. அமைதியும் ஆரவாரமும் அருகருகே கைகோர்த்து நின்ற அந்தத் தோற்றம் வியப்பில் ஆழ்த்தியது.

இருப்பினும், அந்த வரலாற்றுப் பெருமைக்குப் பின்னால் சில கசப்பான எதார்த்தங்களும் ஒளிந்திருந்தன. அறைக் கதவைத் திறந்ததும்  மூட்டைப்பூச்சி மருந்து போன்ற ஒரு கடுமையான இரசாயன நெடி எங்கள் நாசிகளைத் தாக்கியது. இந்த அனுபவம் அந்த விடுதியோடு மட்டும் நின்றுவிடவில்லை; கொழும்பு நகரின் பல கடைகளிலும் இதேபோன்றதொரு நெடியை உணர முடிந்தது. பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட மருந்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பது புரிந்தது. ஆனால், பழமையான அந்தக் கட்டிடங்களில் போதிய காற்றோட்ட வசதி இல்லாததால், அந்த நெடி வெளியேற வழியின்றி அறைகளுக்குள்ளேயே தேங்கி, தங்குவோருக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஜன்னல்களுக்குக் கம்பி வலைகள் அமைத்திருந்தால், ACயை அணைத்துவிட்டு, சன்னல்களைத் திறந்து இயற்கைக்காற்றை உள்ளே வரச் செய்திருக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது.

இரசாயன நெடி போதாதென்று, அறையின் குளிர்சாதன வசதியும் (AC) எங்களை வஞ்சிக்கத் தொடங்கியது. அது திடீரென வேலை செய்வதை நிறுத்த, விடுதிப் பணியாளரை அழைத்து முறையிட்டோம். அவரோ, அதை ஒருமுறை அணைத்துவிட்டு (Reset) மீண்டும் இயக்கிவிட்டுச் சென்றார். தற்காலிகமாக அது வேலை செய்வது போல் தோன்றினாலும், மீண்டும் மீண்டும் நிற்கத் தொடங்கியது. அதன் பிறகு, நாங்களே அதனை மாற்றி மாற்றிக் கைமுறையாக அணைத்துப் போட்டுப் போராட வேண்டியதாயிற்று.

இதன் உச்சமாக, நள்ளிரவில் திடீரென ஒரு மணிநேரம் முழுமையாக மின்சாரம் தடைப்பட்டது. சன்னல்களுக்குக் கம்பி வலைகள் இல்லாததால், கொசுக்களுக்கும் பூச்சிகளுக்கும் அஞ்சி எங்களால் சன்னலையும் திறந்து வைக்க முடியவில்லை. அந்தப் புகழ்பெற்ற விடுதியில் மாற்று மின்சாரத்திற்கான ஜெனரேட்டர் வசதி இருக்கிறதா இல்லையா என்பதே எங்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. செய்வதறியாது வரவேற்பறைப் பெண்களிடம் கேட்டபோது, அவர்களும் திகைத்துப்போய் நின்றார்களே தவிர, எந்தத் தீர்வையும் தரவில்லை. அந்த மின்சாரமற்ற ஒரு மணிநேர இருளும் புழுக்கமுமாக எங்களைக் கொன்றெடுத்தது.

கொழும்பு நகரின் இந்த வரலாற்று விடுதியில் தொடங்கிய இந்த ‘ஏசி’ சிக்கல், இங்கோடு முடிந்துவிடவில்லை; நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு ஈழத்தின் வடபகுதியான யாழ்ப்பாணம் சென்றடையும் வரை, விதம் விதமான வடிவங்களில் இந்தத் தொழில்நுட்பச் சிக்கல்கள் எங்களைத் தொடர்ந்து துரத்திக் கொண்டேதான் இருந்தன.

இருப்பினும், எங்கள் உள்ளத்தை ஆற்றுப்படுத்தும் ஒரு அழகிய அனுபவம் அந்த விடுதியின் உயரத்தில் எங்களுக்காகக் காத்திருந்தது. கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலின் நான்காம் தளத்தில் அமைந்திருக்கிறது ‘ஹார்பர் ரூம்’ (Harbour Room) என்னும் புகழ்பெற்ற உணவகம். நவீன மாற்றங்களுக்கு மத்தியிலும், பழங்காலத்து மர மேஜைகள், நாற்காலிகள் மற்றும் பாரம்பரியமான பரிமாறும் முறை ஆகியவற்றை இன்றும் மாறாமல் அப்படியே பாதுகாத்து வருவதுதான் இந்த உணவகத்தின் ஆகச்சிறந்த தனித்துவமாகும்.

விடுதிக்குள் நுழைந்ததும் நாங்கள் அங்குச் சென்று எங்களது உணவை அமர்ந்து ரசித்தோம். உணவின் தரம் நாவிற்குப் பெரும் விருந்தாக அமைந்தது. ஒரு பெரிய நட்சத்திர விடுதிக்கே உரிய விலையைக் கொண்டிருந்தாலும், தரம் மற்றும் உபசரிப்பின் நேர்த்தி காரணமாக அந்த விலை எங்களுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் Tips என அனைத்தும் சேர்த்து மூவாயிரம் (3000) ரூபாய்கள் வரை செலவானது; ஆயினும், அந்தத் தரமான சூழலுக்கு அது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அங்கிருந்த அகன்ற ஜன்னல்களின் வழியே வெளியில் தெரிந்த கொழும்புத் துறைமுகத்தின் எழில்மிகு தோற்றம், பயணக் களைப்பையெல்லாம் போக்கி எங்கள் கண்களுக்கும் மனதிற்கும் ஒரு குளிர்ந்த ஒத்தடமாய் அமைந்தது.

ஒரு புதிய நாட்டிற்குச் செல்லும் பயணிகளுக்கு அந்தந்த ஊரின் உள்ளூர் போக்குவரத்து குறித்த தகவல்கள்தான் வழிகாட்டும் ஒளிவிளக்குகள். ஆனால், இந்த விடுதியின் வரவேற்பறையோ அந்தப் பொறுப்பிலிருந்து முற்றிலும் விலகியே நின்றது. உள்ளூர் ஆட்டோக்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து நாங்கள் எழுப்பிய எந்தவொரு வினாவிற்கும் அங்கிருந்து தெளிவான விளக்கங்கள் கிடைக்கவில்லை. பொதுவாக, ஒரு மணிநேரத்திற்கு 1000 முதல் 1500 ரூபாய்கள் வரை பேசுவதற்கு உடன்பட்டால், பல ஆட்டோ ஓட்டுநர்கள் எங்களை நகரின் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்ற உண்மை, கொழும்புப் பயணம் முடியும் தறுவாயில்தான் எங்களுக்குத் தெரியவந்தது. இந்த எளிய தகவல் மட்டும் எங்களுக்கு முதலிலேயே தெரிந்திருந்தால், எங்களின் பயணம் இன்னும் எளிதாகியிருக்கும்; இன்னும் பல புதிய இடங்களையும் எங்களால் கண்டுகளித்திருக்க முடியும் என்ற ஏக்கம் எஞ்சியே நின்றது.

நாங்கள் கொழும்பிலிருந்து புறப்பட்டுக் கண்டி (Kandy) ரயிலைப் பிடிக்க வேண்டும் என விடியற்காலை புறப்படும் சூழ்நிலை. அதற்கு ஏதேனும் ஆட்டோ ஏற்பாடு செய்துதர இயலுமா?’ என்று வரவேற்பறையில் வினவினோம். அதற்கு அவர்களின் தரப்பிலிருந்து ‘இல்லை’ என்ற ஒற்றைப் பதில்தான் மிஞ்சியது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தினால், விடியற்காலையில் திட்டமிட்ட நேரத்தைவிட அரை மணிநேரத்திற்கு முன்பாகவே நாங்கள் அறையை விட்டுக் கிளம்ப வேண்டியதாயிற்று. ஆனால், எங்களின் வியப்பு என்னவென்றால், நாங்கள் விடுதியின் வாசலுக்கு வந்தபோது அங்கே ஓரிரு ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருக்க, அதன் ஓட்டுநர்கள் அதிலேயே உறங்கிக் கொண்டிருந்தனர். வாசலிலேயே இருக்கும் இந்த எளிய வசதியைக் கூட தங்குவோருக்கு எடுத்துரைக்காத இவர்களின் அலட்சியப்போக்கு ஏமாற்றமளித்தது. தங்களை நாடிவரும் பயணிகளுக்குத் தகவல்களைக் கொடுப்பதில் அவர்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தையும் அக்கறையும் காட்டியிருக்கலாம்.

இந்தத் தருணத்தில், சமீபத்தில் நாங்கள் துபாய் சென்றிருந்தபோது நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் என் நினைவிற்கு வந்தது. அங்கு ஒரு விடுதியின் வரவேற்பறையில் நின்று நாங்கள் டாக்ஸி (Taxi) பிடிப்பது குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அதைத் தற்செயலாகக் கேட்ட அங்கிருந்த உயர் அதிகாரி ஒருவர், உடனடியாகத் தானே விடுதி வாசலுக்கு இறங்கிச் சென்று, சாலையில் சென்ற ஒரு டாக்ஸியைக் கைகாட்டி நிறுத்தி, எங்களுக்காக அதனைப் பிடித்துக் கொடுத்தார். கடமை உணர்வும், விருந்தோம்பலின் பண்பும் ஒரு தங்குமிடத்தில் இப்படித்தான் வெளிப்பட வேண்டும்! அதை விடுத்து, வரலாற்றுப் பெருமைகளை மட்டும் பேசிக்கொண்டு, அடிப்படைச் சேவைகளில் கோட்டை விடுவது சரியா?

பயணத்தை முடித்துத் திரும்பிய பின் இணையப் பக்கங்களை ஆராய்ந்தபோது, ‘கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் முறையான பராமரிப்பு இல்லை’ என்று பலரும் தங்களின் கருத்தைப் பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது. எங்களின் கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, அந்த விமர்சனங்களை எங்களால் முற்றிலும் மறுக்க முடியவில்லை.

இருப்பினும், நாணயத்தின் மறுபக்கத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலை நாடுகளின் அதிநவீன வசதிகளையும் உள்கட்டமைப்புகளையும், பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் ஒரு ஆசிய நாட்டில் அப்படியே எதிர்பார்ப்பது முறையன்று. இந்த வரலாற்று விடுதியின் அறைக்காக நாங்கள் செலுத்தியது வெறும் 25 டாலர்கள் மட்டுமே!

ஒரு நாட்டின் தலைநகரில், அதுவும் துறைமுகத்திற்கு அருகிலுள்ள இத்தகைய முதன்மையான வரலாற்று மையத்தில், இவ்வளவு குறைந்த விலையில் ஒரு அறை கிடைப்பது என்பது வளர்ந்து வரும் நாடுகளில் சாத்தியமே இல்லாத ஒன்று. இதே போன்றதொரு வரலாற்றுப் பின்னணி கொண்ட விடுதி ஒரு மேலை நாட்டிலிருந்தால், இதன் கட்டணம் எளிதாகப் பத்து மடங்கு கூடுதலாக இருந்திருக்கும். எனவே, குறைகளை மட்டும் சாடாமல், அதன் விலையையும் இடத்தின் முக்கியத்துவத்தையும் இணைத்துப் பார்ப்பதே ஒரு உண்மையான பயணியின் முதிர்ந்த பார்வையாக இருக்க முடியும்.

நிர்வாகத்தினர் சற்றே கூடுதல் அக்கறை எடுத்து, இந்தச் சிறிய குறைபாடுகளைக் கவனித்துச் சரிசெய்தால், காலத்தின் சுவடுகளையும் கம்பீரமான வரலாறுகளையும் தன் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த ‘கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல்’, உலகப் பயணிகளின் ஆகச்சிறந்த தேர்வாகத் திகழுமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சுதந்திர சதுக்கம், (Independence Memorial Hall)

கொழும்பு நகரின் வரலாற்றுச் சுவடுகளைத் தொடர்ந்து நாங்கள் அடுத்ததாகக் கால்பதித்தது, கம்பீரமான சுதந்திர சதுக்கம் அமைந்திருக்கும் ‘கறுவாத் தோட்டம்’ (Cinnamon Gardens) என்னும் எழில்மிகு பகுதிக்கு. இன்று கொழும்பு நகரின் மிக உயர்தரப் பகுதியாக விளங்கும் இதற்குப் பின்னால் ஒரு நறுமண வரலாறு ஒளிந்திருக்கிறது. இப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கில் கறுவா மரங்கள் அடர்ந்து காட்சியளித்துள்ளன. வரலாற்றுத் தரவுகளின்படி, கடந்த 1789 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 289 ஏக்கர் பரப்பளவில் நறுமணம் கமழும் கறுவாப் பட்டை மரங்கள் இங்குச் செழித்து வளர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. கால ஓட்டத்தில் அந்த மரங்கள் மறைந்தாலும், இன்று அந்த இடத்தில் நாட்டின் மிக முக்கிய மையங்களான பிரதமர் அலுவலகம், சுதந்திர மண்டபம், கொழும்பு நகர மண்டபம், தேசிய அருங்காட்சியகம், வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் கொழும்பு வானிலை ஆய்வுத் துறை ஆய்வகம் போன்றவை வீற்றிருக்கின்றன.

இந்தப் பகுதியை நோக்கி நாங்கள் பயணித்த பாதை முழுவதும் ஆன்மீகமும் நவீனமும் கைகோர்த்து நின்றன. குழந்தை இயேசு ஆலயம், ஜெபமாலை அன்னை ஆலயம் போன்ற புனிதத் தலங்களும், பழமையின் சான்றாக நிமிர்ந்து நிற்கும் சிவப்பு நிறக் கட்டிடங்களும், பிரம்மாண்டமான விளையாட்டு அரங்குகளும் எங்கள் கண்களுக்கு விருந்தளித்தன.

நாங்கள் பயணித்த அன்று காலை முதலே, வானம் தன் கதவுகளைத் திறந்து கொண்டு, மழை கொட்டோ கொட்டெனக் கொட்டித் தீர்த்தது.. நான் தான் அடாத மழையிலும் விடாது வேடிக்கை பார்ப்பவராயிற்றே! நனைந்தாலும் திரை போடுவதில்லை என உறுதியாக உட்கார்ந்து ஆட்டோவில் பயணம் செய்தேன். மழையில் குளித்திருந்த மரங்கள், செடிகளெல்லாம் ‘பட்டு விரித்தது புல்வெளி; பட்டுத் தெறித்தது விண்ணொளி” எனக் காலை நேரம் கவிதை பாடத் தூண்டியது.

சுதந்திர சதுக்கத்தின் அருகே எங்கள் ஆட்டோ வந்து நின்றபோது, மழையையும் பொருட்படுத்தாமல் அங்கே ஒரு புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்தடுத்து வந்து நின்ற பேருந்துகளிலிருந்து, சீருடை அணிந்த பல மனிதர்கள் கூட்டமாக வந்திறங்கினர். அந்தப் பெருவளாகத்தில் ஏதோவொரு முக்கிய நிகழ்விற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பது அவர்களின் நடமாட்டத்திலிருந்து புரிந்தது.

அந்தச் சூழலில், என் கணவர் அவசரமாகக் கழிவறை செல்ல, அங்கிருந்த ஒரு கட்டிடத்தை நோக்கி விரைந்தார்; நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். என் அவசரத்தை உணர்ந்த அவர், “நீ இங்கேயே இரு, நான் இதோ வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால், அந்நிய தேசத்தில் கையில் தொலைப்பேசி கூட இல்லாத நிலையில், அவரைப் பிரிந்து தனியே நிற்பதற்குத் துணியவில்லை. “என் கையில் தொலைப்பேசி இல்லை; அதனால் நானும் உங்களுடனேயே வருகிறேன்” என்று சொல்லியபடியே அவர் பின்னால் நடந்தேன். ஆனால், கூட்டத்தின் சலசலப்பிலும் அவசரத்திலும் என் கணவர் நான் சொன்னதைக் கவனிக்காமல் முன்னோக்கிச் சென்றுவிட்டார்.

அடுத்த சில நிமிடங்களில், அதுவரை சற்றே ஓய்ந்திருந்த வானம் மீண்டும் மழையை ஊற்றோ ஊற்றென்று ஊற்றத் தொடங்கியது. கணவர் சென்ற கட்டிடம், சிறிய உணவகங்கள் பல வரிசையாக அமைந்திருந்த ஒரு வணிகப் பகுதியாக இருந்தது. நான் ஒரு பாதுகாப்பான நிழற்குடையில் நின்றபடி அவருக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். ஆனால், நான் சொன்னதைக் கேட்காத என் கணவரோ, தன்னை நான் ஆட்டோ நிறுத்திய இடத்திலேயே எதிர்பார்த்துக் காத்திருப்பேன் என்று நினைத்து, என்னை விட்ட இடத்திலேயே தேடி அலைந்து கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியத் தொடங்கியது.

பல நூற்றாண்டுகால வரலாற்றில் கதிரவன் மறையாத மரபுரிமையாகத் திகழ்ந்து கதிரவனைக் காணாத காலனித்துவ அழிவுச்சின்னமாக மாபெரும் கொழும்பினிலே மறைந்து பழமையான இந்த அரும்பெரும் நிர்மாணம் “ மஹிந்த சிந்தனை” மூலம் புத்துயிர் பெற்று தெசத்தின் ஆக்கத்திறனையும் உறுதிப்பாட்டையும் எடுத்தியம்பும் வகையில் படைவீரர் கரங்களினால் புதுவடிவம் பெற்று இலங்கை சனநாயக சோசலிசக் துடியரசின் சனாதிபதி மேன்மைதங்கிய மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் மிளிரும் அருங்கொடையாக தேசத்திடம் ஒப்படைக்கப்பட்டதென்பதை பறைசாற்றுமுகமாக இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்டதென்பதை அனைவரும் அறிவீராக 

இங்ஙனம் 

கோட்டபய ராஜபக்க்ஷ 

செயலாளர்

பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சு 

2014 ஜூலை மாதம் 13 ஆந் திகதி 

இப்படி இருக்கும் அறிவிப்பு பலகை இந்த இடத்தின் சிறப்பைக் கூறுகிறது.

கண்ணைக் கவரும் நேர்த்தியான புல்வெளிகளும், வரிசையாக அமைந்திருந்த அழகிய உணவகங்களும் சூழ்ந்த அந்தப் பகுதி, ‘ஆர்கேட் இன்டிபென்டன்ஸ் ஸ்கொயர்’ (Arcade Independence Square) என்று அழைக்கப்படும் ஒரு உன்னதமான கலை வளாகம்.

அங்கு எங்களை வியப்பில் ஆழ்த்தியபடி கம்பீரமாக நின்றிருந்த தூய வெள்ளை நிறக் கட்டிடங்களுக்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு மறைந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மனநல மருத்துவமனையாக (Asylum)—இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டவை. கால ஓட்டத்தில் ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின், இவை அரசாங்கத்தின் பல்வேறு அலுவலகங்களாகத் தன் முகத்தை மாற்றிக்கொண்டன. அதன் பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த வரலாற்று வளாகம், நவீன வணிக மற்றும் உணவகங்களின் சங்கமமாக ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது.

கடந்த காலத்தின் பாரம்பரிய சுவடுகளும், கட்டிடக் கலை நயமும் சற்றும் சிதைந்துவிடாமல், இன்றைய காலத்தின் நவீன வசதிகளுக்கு ஏற்ப ஒரு பழமையான கட்டிடத்தை எவ்வாறு புதுப்பிக்க வேண்டும் (Renovated Heritage Building) என்பதற்கு இந்த ஆர்கேட் வளாகம் உலகளவிலான ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் நிமிர்ந்து நிற்கிறது.

இந்த ஆர்கேட் வளாகம் முழுவதும் கண்ணைக் கவரும் அழகிய செடிகளாலும், நிழல் தரும் மரங்களாலும் ஒரு நந்தவனத்தைப் போல மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுதந்திர சதுக்கத்தைக் காண வரும் பயணிகள், அப்படியே இந்த வளாகத்திற்குள்ளும் நடைபயின்று இதன் அழகை ரசிக்கலாம். அதோடு, அவசரத் தேவைக்கு இங்குள்ள தூய்மையான கழிவறை வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பொதுமக்களுக்கான ஒரு பொதுக் கழிப்பிடமாகவே செயல்படுகிறது; எனினும், இதனைப் பயன்படுத்துவதற்குக் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலங்கைத் தீவின் பல சுற்றுலாத் தலங்களிலும் பொது இடங்களிலும் இதே போன்ற கட்டணக் கழிப்பிட முறையே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. இருபது, முப்பது அல்லது ஐம்பது ரூபாய் வரை அங்குக் கட்டணமாகப் பெறுகிறார்கள். பயணங்களின் போது கையில் எப்போதும் சில்லறைப் பணத்தை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நடைமுறை எங்களுக்கு நினைவுபடுத்தியது.

பரபரப்பான தவிப்புகளுக்குப் பிறகு, நாங்கள் மீண்டும் சுதந்திர சதுக்கத்தின் நடுப் பகுதிக்கு வந்தடைந்தோம். இந்தத் திடல், வெறும் கற்களால் ஆன கட்டிடம் மட்டுமல்ல; இலங்கை விடுதலை பெற்றதன் நினைவூட்டல்! கடந்த 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள், சுதந்திரத்தையும் மீட்டெடுத்த வரலாற்றுத் தருணத்தைக் கொண்டாடும் பொருட்டே இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. இங்கிலாந்து அரச வம்சத்தைச் சேர்ந்த க்ளோசெஸ்டர் பிரபு, இளவரசர் ஹென்றி (Prince Henry, Duke of Gloucester) இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தைக் கூட்டி, அதிகாரப் பகிர்வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த வரலாற்றுப் பெருமைமிக்க இடம்.

பச்சைப்பசேலென்ற புல்வெளிகள் சூழ்ந்த பரந்து விரிந்த அந்த வளாகத்தின் நடுவே, காண்போரைக் கட்டிப்போடும் கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்டமான மண்டபம் ஒன்று வீற்றிருக்கிறது. இந்தக் கட்டிடத்தின் தனித்துவமான வடிவமைப்பு, இலங்கைத் தீவின் இறுதி சுதேசி அரசான ‘கண்டி பேரரசின்’ (Kandyan Kingdom) புகழ்பெற்ற அரச சபையான ‘மகுல் மதூவா’ (Magul Maduwa) கட்டிடக் கலையின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு செதுக்கப்பட்டதாகும்.

வரலாற்றின் பக்கங்களைச் சற்றுத் திருப்பிப் பார்த்தால், இதே போன்றதொரு கண்டி மண்டபத்தில்தான் கடந்த 1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் நாள், கண்டியின் பிரதானிகளுக்கும் (Radalas) ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘கண்டி ஒப்பந்தம்’ (Kandyan Convention) கையெழுத்தானது. இலங்கைத் தீவின் சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதிய அந்த ஒரேயொரு ஒப்பந்தத்தின் மூலம்தான், கண்டியின் சுதந்திர ஆட்சி முழுமையாக முடிவுக்கு வந்து, ஒட்டுமொத்தத் தீவும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் சென்றது. வீழ்ச்சியைக் குறித்த அதே கண்டிப் பாரம்பரியக் கட்டிடக் கலை, இன்று இலங்கையின் எழுச்சியைக் குறிக்கும் சுதந்திரச் சின்னமாக இங்கு நிமிர்ந்து நிற்பது காலத்தின் ஆகச்சிறந்த நகைமுரண்!

இந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்களை உற்றுநோக்கினால், அவற்றின் ஒவ்வொரு அங்குலத்திலும் இலங்கை மண்ணின் கலை உயிர்த்தெழுந்து காட்சியளிக்கிறது. தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிங்க உருவங்களும், நுட்பமான பூவேலைப்பாடுகளும் இலங்கையின் உன்னதமான பாரம்பரியக் கட்டிடக் கலைக்கு மகுடம் சூட்டுகின்றன. அளவால் இது ஒரு பிரம்மாண்டமான மண்டபம் என்று சொல்ல முடியாவிட்டாலும், இதன் வரலாற்றுச் செறிவும் கலை நயமும் நம்மை மகிழ்விக்கின்றன. 

இந்த மண்டபத்தின் முகப்பில், காலத்தின் சாட்சியாக நிமிர்ந்து நிற்கிறது ஒரு திருவுருவச் சிலை. அவர் வேறு யாருமல்ல; இலங்கையின் ‘தேசியத் தந்தை’ என்று போற்றப்படும் டான் ஸ்டீபன் சேனநாயக்க (Don Stephen Senanayake) ஆவார். கடந்த 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, இலங்கையின் முதலாவது பிரதமராக அரியாசனம் ஏறிய பெருமை இவருக்குரியது. 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி இலங்கை முழுமையான விடுதலை பெற்ற பின்னரும், நாட்டை வழிநடத்தும் முதன்மைப் பொறுப்பில் இவரே தொடர்ந்தார். ஆனால், விதி வேறு விதமாக விளையாடியது; கடந்த 1952 ஆம் ஆண்டு, தனது விருப்பமான குதிரைச் சவாரியின் போது எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்து படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பிறகு, அவரது அரசியல் வாரிசாக அவரது மகன் டட்லி சேனநாயக்க (Dudley Shelton Senanayake) இலங்கையின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்று தந்தையின் வழியில் நாட்டை வழிநடத்தினார்.

இந்தச் சுதந்திரத் திடல் வெறும் அரசியல் வரலாற்றுக்கான தளம் மட்டுமல்ல; கண்ணீரில் நனையவைக்கும் உணர்வுப்பூர்வமான ஒரு இறுதி விடைபெறல் களமாகவும் திகழ்கிறது. நாட்டின் ஆகச்சிறந்த ஆளுமைகளுக்கும் தலைவர்களுக்கும் இறுதி வணக்கத்தைச் செலுத்தும் பெருமைமிக்க இடமாக இந்த வளாகமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

சமீபத்தில்கூட (அவர் இறந்தது மே 24 2025. நாங்கள் சென்றது ஆகஸ்ட் 18 2025), ஈழத்துத் திரை உலகின் தலைசிறந்த தாரகையும், ‘சிங்கள சினிமாவின் ராணி’ என்று போற்றப்பட்டவருமான மறைந்த புகழ்பெற்ற கலைஞர் மாலினி பொன்சேகாவின் (Malini Fonseka) இறுதி அஞ்சலி நிகழ்வு முழு அரசு மரியாதையுடன் இந்தச் சதுக்கத்தில்தான் நடைபெற்றது. அவர் வெள்ளித்திரையைத் தன் அசாத்திய நடிப்பால் ஆசரித்த ஒரு மாபெரும் நடிகை மட்டுமல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவருமாவார். கலை உலகமும் அரசியல் உலகமும் கைகோர்த்து நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய அந்தத் தருணங்களை இந்தச் சதுக்கத்தின் சுவர்கள் இன்றும் தன் நினைவுகளில் ஏந்தி நிற்கின்றன. 

நான்குபுறமும் திறந்தவெளியாகக் காட்சியளிக்கும் இந்த வரலாற்றுத் தூண் மண்டபத்தின் பக்கவாட்டில், வானோக்கி நிமிர்ந்து நிற்கிறது ஒரு கம்பீரமான கொடிமரம். ஆண்டுதோறும் இலங்கையின் விடுதலை நாளின்போது, நாட்டின் ஜனாதிபதியால் கொடி இங்குதான் ஏற்றி வைக்கப்படுகிறது. 

இத்தனை வரலாற்றுச் சிறப்புகளையும், அதிகாரப் பூர்வமான கொண்டாட்டங்களையும், உணர்வுப்பூர்வமான விடைபெறல்களையும் தன்னுள் தாங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சுதந்திர சதுக்கம், எந்தவித ஆடம்பரமுமின்றி இன்றும் மிக எளிமையாகவும் அமைதியாகவும் காட்சி தருவதுதான் எங்களைக் கவர்ந்த ஆகச்சிறந்த அழகியல் முரண்பாடு! பெருமைகள் அமைதியாய் உறங்கும் இடம் இது என்பதை அந்தச் சூழல் நமக்கு உணர்த்துகிறது.

தொடரும்

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார். 

Exit mobile version