Site icon Her Stories

இன்றைய இலங்கையும் 70-80களின் தமிழ்நாடும்!

“கட்டுநாயக்கே பேருந்து நிலையம் 70-80களில் பணகுடி பேருந்து நிலையம் எப்படி இருந்ததோ அதே போன்று உள்ளது” என்று கடந்த பகுதியில் எழுதியதும் பலர் வியப்பாகக் கேட்டார்கள். அதனால் இது குறித்து சிறிது பேசலாம்.

முதலில் நாங்கள் சென்ற இடம் கொழும்பு. பெருநகரமாகவும், பெரும் மக்கள்தொகை கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால் மக்கள் நெருக்கம், போக்குவரத்து நெரிசல் போன்றவை நமது இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களை விடக் குறைவாகவே உள்ளது. 

இரண்டாவது நாங்கள் சென்ற இடம் கண்டி. கொழும்பிலிருந்து கண்டி போகும் பாதையின் சில இடங்கள் மலைகளற்ற வயல்களாக உள்ளன. பெரும்பகுதி வயல்கள், மரங்கள், அவற்றின் பின்னால் தெரியும் மலைகள் என நமது கன்னியாகுமரி மாவட்டத்தை நினைவுபடுத்துகிறது. கண்டி ஊர் நமது கொடைக்கானலை நினைவுபடுத்துகிறது. 

அடுத்துச் சென்ற தம்புள்ள, மா போன்ற மரங்கள் நிறைய நிற்கும், நமது ஆற்றோர ஊர்கள் போன்று உள்ளது. 
பொலனறுவை, காரை போன்ற செடிகளையும் பெருமரங்களையும் கொண்ட காடு. இங்கு எங்கள் முன்னால் யானை கடந்து செல்வதைப் பார்த்தோம். இதே போன்ற காடு, யாழ்ப்பாணத்திலிருந்து மடு கோவில் செல்லும் பாதையிலிருந்தது. அங்கும் யானை நடமாட்டம் உண்டு. அதனால் ஆறு மணிக்குமேல் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. சாலையோரம் யானை சாணி பெருமளவில் கிடந்தது. இது அவை இரவில் பெருமளவில் நடமாடுகின்றன என்பதை உணர்த்துகிறது.

அனுதாரபுரமும் காடுகள் நிறைந்த செழிப்பான இடம் தான். அங்கு, குரங்குகள் மிகுதியாக உள்ளன. நமது களக்காடு, நம்பிமலை பகுதியில் இருக்கும் சிம்ம வால் குரங்குகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. வரைபடம் எனச் சிந்தித்துப் பார்த்தால் அனுராதபுரத்திலிருந்து நேர்கோடு ஒன்று போட்டால் அது இந்தப் பகுதிக்குத் தான் வரும். கிட்டத்தட்ட ஒரே தீர்க்கரேகையில் (Longitude) அமைந்திருக்கின்றன. என்ன ஒரு ஒற்றுமை! 

தலைமன்னார் அப்படியே ராமேஸ்வரம் போன்றும், யாழ்ப்பாணம் அப்படியே வேளாங்கண்ணி போகும் பாதை போன்றும் உள்ளன. நாகப்பட்டினம் அருகிலிருக்கும் முத்துப்பேட்டை  போன்று அலையாத்திக் காடுகள் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ளன. சிந்தித்துப் பார்த்தால் தலைமன்னாருக்கு இந்தப் பக்கம் ராமேஸ்வரமும், யாழ்ப்பாணத்திற்கு இந்தப்பக்கம் நாகப்பட்டினமும் உள்ளன. நான் இலங்கை வரலாற்று நூல் ஒன்று வாங்கிவந்தேன். அது இந்தியாவும் இலங்கையும் ஒன்றாகத்தான் இருந்திருக்கவேண்டும். அதனால் இலங்கை வரலாற்றை இந்தியாவைத் தவிர்த்து எழுத இயலாது என்கிறது. அனுபவமும் அதையே சொல்கிறது. 

யாழ்ப்பாணத்திலிருக்கும் நயினா தீவு எனப்படும் நாகத்தீவு அல்லது மணிபல்லவத்தீவு தூத்துக்குடியிலிருக்கும் முயல்தீவை நினைவுபடுத்தியது. 

70-80 களில் தமிழ்நாடு எப்படி இருந்தது எனப் பார்க்க வேண்டுமென்றால் இலங்கை செல்லலாம். இலங்கை பின்தங்கியிருப்பதாகச் சொல்லவில்லை. மக்கள் நெருக்கம் குறைவு என்பதால் ஊர்கள் பெரும் வளர்ச்சியடையாதது போன்று தெரிகிறது. ஆனால் வசதிகள் இருக்கும் என்பதே என் எண்ணம். சாலைகள் நேர்த்தியாக உள்ளன. குடத்தைத் தூக்கிக்கொண்டு மக்கள் அலைவதைப் பெரும்பாலும் பார்க்க இயலவில்லை. வீடுகள் பலவற்றிலும் கிணறுகளைப் பார்க்க முடிகிறது. தம்புள்ளவில் சிறு குடியிருப்பு போன்று தனியாக இருக்கும் இடத்திலும் தடையற்ற தண்ணீர் வருகிறது. அரசு அதற்கான செயல்களைச் செய்திருக்கிறது. 

70-80 களின் தமிழ்நாடு என்று சொல்வதற்கான காரணம் வேறு. இப்போது தமிழ்நாட்டில், சிறு ஊரைக் கடந்தால் கூட ஆங்காங்கே பெரிய வீடுகள் தென்படும். இடையிடையே வரும் ஊர்களில் கடைகள், வீடுகள் போன்றவற்றைக் காணலாம். ஆனால் இங்கு அப்படியில்லை. சாலை ஓரம் கைகாட்டும் இடங்களில் பேருந்து நிற்கிறது. பார்த்தால் ஊருக்குள்ளிருந்து ஒரு சாலை இணைகிறது. தூரத்தில் சில வீடுகள் தெரிகின்றன. விலக்கு போன்று இருக்குமிடத்தில் கடைகள் சில இருப்பதுமுண்டு. இல்லாமலிருப்பதுமுண்டு. ஊரிலிருந்து சாலை தனியாக இருப்பதை விலக்கு என்பார்கள். சாலைகள் கூடுமிடத்தை சந்திப்பு (Junction) என்பார்கள். தமிழ்நாட்டில் விலக்குகள் பலவற்றிலும் குடியிருப்புகள் உருவாகிவிட்டன. சாலை தனியாக இருந்த நிலை மாறி சந்திப்பு என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் இலங்கையில் இன்றும் விலக்கு என்ற நிலையிலேயே ஊர்கள் உள்ளன. 

வீடுகள் என்று பார்த்தாலும் ஓட்டு வீடுகள் பல உள்ளன. ஆஸ்பஸ்டாஸ் போட்ட வீடுகளும் உண்டு. கான்கிரீட் வீடு என்றாலும் இருப்பதில் மேல் மாடி என்பது ஆஸ்பஸ்டாஸ் கூரையாகத்தான் பெரும்பாலும் உள்ளது. உள்ளே நேர்த்தியாக plywood அடித்திருக்கிறார்கள். ஒரு வீடெல்லாம் கட்டி 18 ஆண்டுகள் ஆகிவிட்டதாகச் சொன்னார்கள். மிகவும் நேர்த்தியாகச் சிறு பூச்சு வெடிப்பு கூட இல்லாமல் புதிய வீடு போல் உள்ளது. நாம் தான் வீணாக் கோடிக்கணக்கில் செலவு செய்து வீடு கட்டுகிறோம்; சரியாகப் பராமரிக்காமலிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது. பெரும்பாலான வீடுகளில் சுற்றுச் சுவர் இல்லை. இருப்பதெல்லாம் ஓலை, மட்டை, தகரம், மரங்கள், முள்வேலி போன்றவை தான்.

அலுவலக வேலை செய்பவர்கள் கூட சைக்கிளில் செல்கிறார்கள். TVS போன்ற இருசக்கர வாகனங்கள் பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. பெரிய இருசக்கர வாகனங்கள் குறைவு. ஆனால் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுகிறார்கள். 50+ வயதான பெண்கள் பலர் இயல்பாகச் சைக்கிளில் செல்கிறார்கள். பள்ளிக்குக் குழந்தைகளைச் சென்று விடும் பெண்கள், கல்லூரி செல்லும் பெண்கள் எனப் பலரும் scootyயில் செல்கிறார்கள். ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் உட்கார்ந்திருக்கும் பெரியவர்களும் ஹெல்மெட் அணிந்து தான் உட்காருகிறார்கள்.  பேருந்துகளில் கூட கையில் ஹெல்மெட் வைத்திருப்பவர்களைப் பார்க்கலாம். அதாவது இறங்கியதும் யாராவது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல வருவார்கள் என்றால் வைத்திருக்கிறார்கள்.

இப்படி எல்லா ஊர்களும் இருந்தால், தலைமன்னார் இன்னமும் மாறுபட்டு உள்ளது. பனைகள் நிற்குமிடத்தை நாம் பனங்காடு என்போம். காடு என்றால் பொதுவாக பராமரிப்பின்றி நிற்கும் மரங்கள் கொண்ட இடம். நாம் பனை மரத்தில் குறைந்த பட்சம் மட்டையாவது கழிக்கிறோம். இங்கு எதுவுமே செய்யாமல் தானாகவே முளைத்து வளர்ந்து நிற்கும் பனைகள் தான் கூடுதல். அதேபோல் எங்கள் ஊரில் கழுதைகளை வீடுகளில் வளர்த்துப் பார்த்திருக்கிறேன். இங்குக் கழுதைகள் தானாகவே காடுகளில் உள்ளன. ஊருக்குள் நடமாடுகின்றன. இப்படியெல்லாம் கழுதைகள் இயல்பாகவே வாழ்ந்து வந்த காலம் என்பது தமிழ்நாட்டில் எந்த காலகட்டத்திலிருந்திருக்கும் என்பது கூட எனக்குத் தெரியவில்லை.

நமது நகர அமைப்பில், நகரம் அதோடு இணைந்த புறநகரம் என இருக்கும் ஊர் யாழ்ப்பாணம். இங்கு வீடுகள் வைத்திருக்கும் பலரும் வெளிநாட்டில் வாழுவதாகவும், பல வீடுகள் ஆளில்லாமலும் இருப்பதாக ஒருவர் சொன்னார். இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இங்கு சாக்கடை நூலகம் முன்பு கூட உள்ளது. காடுகளில் உடை மரங்களில் பல வண்ணங்களில் நெகிழிப் பைகள் தொங்குகின்றன. வேறு ஊர்களில் இவற்றைப் பெருமளவில் பார்க்க இயலவில்லை உண்டு. இந்தியா தூய்மையற்றது; இலங்கை தூய்மையானது என்று சான்றிதழ் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. மக்கள்தொகை குறைவு என்பதால் அவ்வாறு தோற்றமளிக்கிறது.

மொத்தத்தில் 70-80கள் குறித்துத் திரைப்படம் எடுப்பவர்கள் இலங்கை செல்லலாம்.

தொடரும்

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார். 

Exit mobile version