பெட்டி பிரிக்கும் சடங்கு ஒன்று திரையில் விரிகிறது. சிறியவர்களும் பெரியவர்களும் அதைச் சுற்றி பரபரப்புடன் நிற்க, தாடிக்கார நடுவயதினர் ஒருவர் பெட்டியிலிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து, வாஞ்சையுடன் ஒவ்வொருவரிடமும் தருகிறார்.
மீசைக்காரத் தைலம், கோடாரி தைலம், இம்பீரியல் லெதர் சோப்பு, சாக்லேட்டுகள், சேலைகள் – ஒவ்வொன்றாக பெட்டியிலிருந்து கைமாறுகின்றன பொருள்கள். Déjà vu தோன்ற, அமைதியாக திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 90களில் மாமாவின் பெட்டி இப்படித்தான் பாட்டி வீட்டின் ஹாலில் பிரிக்கப்படும். தம்மாம் – திருவனந்தபுரம் என்று மாமா அவர் கைப்பட வண்ண ஸ்கெட்ச் கொண்டு எழுதி ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் பெட்டி அது. பாட்டி, அம்மா, சித்தி என்று ஒவ்வொருவராக அவரவர் பொருளை வாங்கிக்கொண்டுவிட, என் முறைக்காக பரபரப்புடன் காத்திருப்பேன். ஐரோப்பாவின் நகரங்களை எனக்கு அறிமுகம் செய்த வியூ மாஸ்டர், மாமா தந்த பரிசுதான். சைனா சில்க் சுடிதார் மெட்டீரியல், லக்ஸ் சோப்பு என்று பால்யத்தில் கண்ட பல ஆச்சரியங்கள் மாமாவின் இளமையைத் தின்ற பணம் கொண்டுவந்தது.
இதைப் புரிந்துகொள்ள எனக்கு இன்னும் 14 ஆண்டுகள் அப்போது தேவைப்பட்டன – எனக்குத் திருமணம் நிச்சயம் ஆகும்வரை. இப்போதும் ஆண்டுக்கு இருமுறை என் வீட்டிற்குப் பெட்டி வருகிறது. ஆனால் பெட்டி பிரிக்கும் சடங்கென்று ஏதுமில்லை. மாதத் தொடக்கத்தில் அவரவர் வங்கிக்கணக்கில் credited செய்தி வரும்போதே முடிந்துபோகிறது உறவாடல். வடிவம் மாறியிருக்கிறதே அன்றி, உழைப்பும் காத்திருப்பும் மாறவேயில்லை.
வெளிநாடுகளிலிருந்து 13.5 பில்லியன் டாலர் பணம் 2024-2025ஆம் ஆண்டு வெளிநாடுவாழ் தமிழர்களால் தமிழ்நாட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளது; இதில் 7.8 பில்லியன் டாலர் பணம், ஆறு வளைகுடா நாடுகளில் இருந்து மட்டுமே அனுப்பப்பட்டிருக்கிறது. இத்தனை பில்லியன் டாலர் பணமும் பல்லாயிரக்கணக்கான ‘வாழும் வாழாவெட்டிகள்’ உழைத்து தமிழ்நாட்டுக்குக் கொட்டிக்கொடுத்த பணம். எத்தனையோ பேரின் கனவுகளை, இளமையை, வாழ்க்கையைத் தின்று செரித்து கிடைக்கும் கழுதைவிட்டை என்றுகூடச் சொல்லலாம். வளைகுடா நாடுகளில் மட்டும் 1.5 – 3 மில்லியன் தமிழர்கள் வளைகுடா நாடுகளில் ‘வசிப்பதாக’ புள்ளி விவரம் சொல்கிறது. இவர்களில் எத்தனைபேர் சிறுபான்மைச் சமூகத்தினர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை; எத்தனைபேர் குடும்பங்களுடன் வசிப்பவர்கள் என்பதும் நமக்குத் தெரியும். நமக்குத் தெரியும், ஆனால் நாம் அதைக் கடந்துபோய்விடுவோம்.
வெறும் புள்ளிவிவரமாக, எண்களாக, இந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் சேர்த்தே பாலைவெளியில் கிடந்து அல்லாடிக்கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கையைக் கடந்துபோகவிடாமல், நம்மைக் கைபற்றி இரண்டரை மணி நேரம் உட்காரவைத்துவிடுகிறது ஹபீபி. இயக்குநர் மீரா கதிரவன் இதுவரை நாம் காணாத இரண்டு தலைமுறை இஸ்லாமிய வாழ்க்கையை, இரண்டரை மணிக்கூறில் கூடவே பயணித்துப் பார்க்கும் அனுபவத்தைத் தந்துவிடுகிறார். தறியை நம்பி வாழும் கண்ணாடி வாப்பா குடும்பம் முன்னேற எடுக்கும் முயற்சிகள் படம் நெடுக வெகு இயல்பாக சொல்லப்படுகின்றன. முகமது யூசுப்பின் குடும்பத்தைக் கரைசேர்க்க தறி உதவாது என்பதை உணர்ந்து, காசெட் வாழ்க்கை வாழத் தலைப்படும் யூசுப்பின் தம்பி, கட்டிய கணவருக்குத் தன்னால் இயன்றதை உடல் உழைப்பாகக் கொடுத்து காலில் சேற்றுப் புண்ணுடன் தவிக்கும் யூசுப்பின் மனைவி மம்மாத்து, வெளிநாடு வாழ் கணவருடன் காசெட்டிலும் பின்பு வீடியோ காலிலும் மட்டுமே வாழும் சாலிஹா, வீட்டின் செல்லப்பிள்ளை அபுதாஹிர், பைரோஜா இவர்களோடு நாமும் அவ்வீட்டின் சுன்னத் கல்யாணத்தில் சிரித்து மகிழ்வதில் தொடங்கி, ஜனாஸா தொழுகைவரையில் ‘வாழ்கிறோம்’.
படம் முழுக்க பெண்களின் இருப்பை எதோ ஒன்று உணர்த்திக்கொண்டே இருக்கிறது – அவர்கள் பேசவில்லை எனினும் அவர்களின் மௌனமே வசனமாக, கவிதையாக காட்சியில் ஊடுபாவாகிறது. ஊர் திரும்பிய கணவருடன் ஊடலை நடத்திக்கொண்டே, மறுபக்கம் தாபத்தை ஜமுக்காளம் விரித்தபடி சாலிஹா பேசும் காட்சி ஒரு கவிதை. கதை சுழலும் காலகட்டத்துக்கு ஏற்ப ஊரையும் கண்முன் கொண்டுவந்திருப்பது அட்டகாசம் எனலாம். 94இல் கதை நடந்தால் மகாநதி போஸ்டர் சுவற்றில் பளிச்சிடுகிறது. கடையநல்லூர் இஸ்லாமிய மக்களின் வட்டார வழக்கு, படத்திற்கு பெரும் பலம். நெல்லைக்காரியாக என்னால் அதை அணுஅணுவாக ரசிக்க முடிந்தது. கனமான பாத்திரங்கள் என்றால் மூக்கை சிந்தியபடிதான் இருக்கவேண்டும் என்பதல்ல. சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் தெளிவு, அதை வெளிப்படுத்தும் சாதுரியம் என அனைத்தும் நிறைந்த பெண்ணாக வரும் பர்வீனின் கதாபாத்திரம் சமீபத்தில் பார்த்த தேர்ந்த வடிவமைப்பு. மனதுக்குப் பிடித்த ஆணின் முகம் பார்க்கவே தயங்கி ஒளியும் நிலவு (நிலோஃபர்) முதல், ‘எனக்கு சிக்கன் மான்சோ சூப் தான் பிடிக்கும்’ என்று தனக்கு ‘வழங்கப்பட்ட’ சூப்பை மறுத்து, தனக்குப் பிடித்த சூப்பை தன் விருப்பத்துக்கு ஆர்டர் செய்யும் பர்வீன் வரை இங்கு பெண்களின் வாழ்க்கையில் நடந்திருக்கும் மாற்றத்தை ஹபீபி சத்தமின்றி பதிவு செய்திருக்கிறது. ஒதுங்கி மருண்டு ஓடும் பெண், ஒரு கட்டத்தில் தன் வாழ்க்கையின் பாதையை சுயமரியாதையுடன் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் இடம் மிக அழகு, கம்பீரம். 1990களுக்குப் பிறகான உலகமயமாக்கலும் அரசியல் சூழலும் இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வியையும், பொருளாதாரத் தற்சார்பையும், தன் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளும் விடுதலையையும் அளித்திருப்பதை ஹபீபி அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
மாயா ஏஞ்சலோ தொடங்கி, அம்பேத்கர், பெரியார், மார்ட்டின் லூதர் கிங் என்று பெருந்தலைவர்களின் வசனங்கள் அங்கங்கே கவனம் ஈர்க்கின்றன; கதையோட்டத்தோடு பொருந்திப் போகின்றன. ஜூஸ் கூஜா தொடங்கி, தறியில் சாரத்தை வெட்டும் கத்திரிக்கோல் வரைக்கும் பயன்பாட்டுப் பொருள்களில் அந்த காலத்தின் பிரதிபலிப்பைக் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கின்றனர்.
மயில்வாகனன் – யூசுப் நட்பு குற்றாலத்து சாரல்போல படம் நெடுக முகம் வருடுகிறது. இப்படித்தானே இருந்தது தமிழ்நாடு? இப்படித்தானே இருந்தது இந்தியா?
80களில் பாகிஸ்தானிய முஸ்லிமை தீவிரவாதியாகக் காட்டிய தமிழ் சினிமா, 90களில் கஷ்மீரி சகோதரர்களை நமக்கு எதிரானவர்கள் என்று கட்டமைத்தது. பாபர் மசூதியை இந்து அடிப்படைவாதம் வீழ்த்தவில்லை, நம் போன்றவர்களின் ‘கண்டும் காணாமல்போகும் விட்டேற்றித்தனம்’ வீழ்த்தியது. காலம் காலமாக சினிமாவில் குண்டு வைப்பவர்களாகக் காட்டப்படும் சிறுபான்மை மக்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை உள்ளிருந்து வரும் குரலாக மீரா பதிவு செய்திருக்கிறார். நேர்மையாக. வெளிப்படைத்தன்மையுடன். இது எவ்வளவு சிரமமானப் பணியாக இருந்திருக்கவேண்டும் என்பதை உணர்ந்தே இதை எழுதுகிறேன்.
வட்டிக்கு விடக்கூடாது, பாவம் செய்யக்கூடாது, தீங்கு நினைக்கக்கூடாது, ஹராமானது எதையும் செய்யவேகூடாது என்று வாழ்பவர்கள் இஸ்லாமியர்கள். இறந்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தும்போது, அவருக்காகக்கூட அவரின் ரத்த உறவு பாவமன்னிப்பு கேட்பது இஸ்லாமிய வழக்கம். நான் அறிந்தவரையில் என்னுடன் பழகிய இஸ்லாமியர்கள் இப்படித்தான். அவர்களின் விழுமியங்கள் இவை. வாழ்க்கைநெறி இது… ஆனால், தொடர்ந்து அவர்களை தீவிரவாதிகளாக, கொடுமையானவர்களாக, பயங்கரவாதிகளாக சித்தரித்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் இயக்குநர்கள், உச்சநடிகர்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்து வெட்கித் தலைகுனியவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி வாட்ஸ்அப் குழு ஒன்றில் மிகச் சாதாரணமாக போகிறபோக்கில் ஒருவன் இஸ்லாமிய நண்பர் ஒருவரை – ‘நீங்க தான் பாம் வச்சு பாம் எடுப்பீங்களே’ என்று சொல்லிவிட்டான். அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த அண்ணன் அதைக் கையாண்டவிதம் என்னை அதைவிட அதிகம் பாதித்தது எனலாம். ‘அமைதியாகக் கடந்து போம்மா’ என்று எனக்கு அவர் அறிவுரை சொன்னார்!
சினிமா மிகவும் ஆற்றல்நிறைந்த தளம். பழைய சினிமாக்கள்தான் இங்கே மக்கள் வரலாறாகிறது. உங்களுக்கு அப்பளம் என்றால் ஜென்டில்மேனும் கல்லிடைக்குறிச்சியும், அக்ரகாரமும் நினைவுக்கு வந்தால், அது அந்தத் திரைப்படத்தின் வெற்றி. ஆனால் உண்மை அதுவல்லவே? கடையநல்லூர் சிங்கம் பிராண்ட் அப்பளம் சாப்பிட்டு வளர்ந்த தலைமுறை நாங்கள் (சிங்கம், ரோஜா என்று இஸ்லாமியர் தங்கள் பொருள்களுக்குப் பெயர் வைப்பதற்கும் அம்பிகா, சீதா என்று பிறர் தங்கள் பொருள்களுக்குப் பெயர்வைப்பதற்குமான வேறுபாட்டைக் கண்டடைய இத்தனை காலம் ஆகியிருக்கிறது). இஸ்லாமியக் குடும்பத்துப் பெண்கள் செய்த அப்பளங்களையும் அக்ரகாரத்து அப்பளங்களையும் பிரித்தறியத் தெரியாதவர்கள் என்றாலும் இரண்டிற்கும் வேறுபாடு ஏதுமில்லை என்று புரிந்தவர்கள். ஆம், எங்கள் இந்தியாவில் அதெல்லாம் சாத்தியமாக இருந்தது. இன்றைய இந்தியா எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்பதை முகத்தில் அறைந்து கேட்கிறது ஹபீபி.
தங்கள் வயிற்றுப்பாட்டைக் கழிக்கவே ஆண்டுக்கணக்கில் குடும்பம், பிள்ளை என்று எல்லாவற்றையும் மூட்டைகட்டிவிட்டு எங்கோ வனாந்திரத்தில் கிடக்கும் ஆண்களின் வாழ்க்கையை இதுவரை இத்தனை தெளிவாக தமிழ் சினிமா பதிவு செய்ததில்லை. அப்படி ஆண்டுக்கணக்கான நரைகூடி கிழப்பருவமெய்தி ஆண்டுக்கொருமுறை வரும் வசந்தத்தைக் காணக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களில் ஒருத்தியாக, இந்தத் திரைப்படத்தை நேர்மையாக எடுக்க விழைந்த, எங்களின் கதைகளை சொல்ல முன்வந்த மீராவுக்கு அன்பும் வாழ்த்தும்.
மற்றவர்களுக்கு: நீங்கள் வாழாத, வாழத் துணியாத வாழ்க்கைகளை ‘வாழும்’, உங்கள் ஊடாக வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களைத் தெரிந்துகொள்ளவேனும் ஹபீபியை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.
அன்பு.
உங்கள் அருகமைந்தத் திரையரங்குகளில்…
படைப்பாளர்
நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர், இணை நிறுவனர் – ஹெர் ஸ்டோரிஸ், பெண்ணிய, சமூக வரலாற்றாளர், தொல்லியல் ஆர்வலர்.


