ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்
1820, மே 12. ஒரு வசதியான குடும்பத்தில் வில்லியம் நைட்டிங்கேலுக்கும் ஃப்ரான்சஸ் நைட்டிங்கேலுக்கும் இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்தார் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல். இத்தாலியில் உள்ள ஃப்ளாரன்ஸில் பிறந்ததால் ஊர்ப் பெயரையே வைத்துவிட்டனர்.
அடிமை ஒழிப்புப் போராட்டங்களில் பங்கேற்றவர் வில்லியம். நிறையப் படித்தவர். ஃப்ரான்சஸ் பெண்ணுரிமைக் கருத்துகளில் ஆர்வம் கொண்டவர். அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், வில்லியமும் ஃப்ரான்சஸும் தங்கள் இரண்டு பெண் குழந்தைகளையும் மிகவும் முற்போக்காக வளர்த்தனர். கிரேக்கம், இத்தாலி, பிரெஞ்சு, லத்தீன், ஜெர்மன் மொழிகள், வரலாறு, தத்துவம், கணிதம் கற்றுக்கொடுக்கப்பட்டன. ஃப்ளாரன்ஸுக்கு வடிவ கணிதத்தில் தீவிரமான ஈடுபாடு இருந்தது. தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை எல்லாம் அட்டவணைப்படுத்தினார்.
வறுமையும் நோயும் பீடித்திருந்த ஏழை மக்கள் ஃப்ளாரன்ஸின் தோட்டத்துக்கு அருகில் வசித்து வந்தனர். அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார் ஃப்ளாரன்ஸ். தன் அம்மா, அக்காவைப் போல வசதியான குடும்பத்துப் பெண்கள் நடந்துகொள்ளும் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தார் ஃப்ளாரன்ஸ். எளிமை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. 16 வயதானபோது ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்யவே தான் படைக்கப்பட்டிருப்பதாக நம்பினார். தன்னுடைய விருப்பத்தைப் பெற்றோரிடம் தெரிவித்தார்.
அந்தக் காலத்தில் செவிலியர் வேலை மிகவும் மதிப்பு குறைந்ததாகக் கருதப்பட்டது. ஏழைகள் மட்டுமே அந்த வேலைகளைச் செய்துவந்தனர். எனவே பெற்றோர் ஃப்ளாரன்ஸின் விருப்பத்தை எதிர்த்தனர். அவருக்குத் திருமண ஏற்பாட்டையும் செய்தனர். தன்னுடைய லட்சியத்துக்கு திருமணம் தடையாக இருக்கும் என்று நினைத்த ஃப்ளாரன்ஸ், உறுதியாக மறுத்துவிட்டார். செவிலியர் படிப்பில் சேர்ந்தார்.
இங்கிலாந்தில் ஆதரவு அற்றவர்கள் வசிக்கும் இடங்களில் மருத்துவ வசதி வேண்டும் என்றும் வறியோர் பாதுகாப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்றும் போராடினார் ஃப்ளாரன்ஸ்.
1850-ம் ஆண்டு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராகச் சேர்ந்தார். ஃப்ளாரன்ஸின் வேலையையும் நேர்த்தியும் கண்ட நிர்வாகம், ஓராண்டுக்குள் அவரை மருத்துவமனையின் சூப்ரடெண்டண்டாக உயர்த்தியது! மருத்துவமனையில் நிகழ்ந்த காலரா மரணங்களுக்குக் காரணம் சுகாதாரம் இன்மையே என்று கண்டுபிடித்த ஃப்ளோரன்ஸ், பல்வேறு செயல்கள்மூலம் சுகாதாரத்தைக் கொண்டு வந்தார். இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது. கடுமையான உழைப்பு அவரது உடல் நலத்தைக் கெடுத்தது.
ஒருமுறை ஜெர்மனி சென்றபோது, கெய்ஸ்வர்த் மருத்துவமனையில் கொடுக்கப்படும் சிகிச்சையும் பாதுகாப்பும் அவரை வியப்பில் ஆழ்த்தின. 1851-ம் ஆண்டு அந்த மருத்துவமனையில் சேர்ந்து பயிற்சி பெற்றார் ஃப்ளாரன்ஸ்.
அரசியல்வாதியும் போர்ச் செயலராகவும் இருந்த சிட்னி ஹேர்பர்ட் நட்பு ஃப்ளாரன்ஸுக்குக் கிடைத்தது. இவருடைய செயல்களுக்கு எல்லாம் ஆதரவும் ஊக்கமும் கொடுத்து வந்தார் ஹேர்பர்ட்.
1854-ம் ஆண்டு துருக்கியில் உள்ள க்ரீமியன் தீவில் ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்றது. இந்தப் போரில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து வீரர்களின் மருத்துவச் சேவை பிரிவுக்கு சிட்னி ஹேர்பர்ட் தலைவராக இருந்தார். போரில் காயம் அடைந்த வீரர்களுக்குச் சிகிச்சையளிக்க ஆர்வம் காட்டினார் ஃப்ளாரன்ஸ். ஹேர்பர்ட் மூலம் 38 செவிலியர்களை அழைத்துக்கொண்டு துருக்கிக்கு வந்து சேர்ந்தார். அங்கே செவிலியர் பெண்கள் படைக்குத் தலைமை தாங்கினார்.
ஸ்கட்டாரி என்ற இடத்தில் இருந்த மருத்துவமனை ஃப்ளாரன்ஸுக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அங்கே படுக்கைகள் இல்லை. போர்வை இல்லை. காற்றோட்டம்கூட இல்லை. இடப் பற்றாக்குறை மட்டுமே இருந்தது. அந்த இடமும் அசுத்தமாக இருந்தது. நோயாளிகளின் நிலைபற்றிய தகவல்களும் சரியாக இல்லை. இதனால் சிகிச்சையளிப்பதில் பெரும் சிக்கல் நேர்ந்தது.
பெருக்குவது, சுத்தம் செய்வது போன்றவைதாம் செவிலியர்களின் பணியாக இருந்தது அப்போது. நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் செவிலியர்களுக்கு அனுமதி வேண்டும் என்று போராடி, அதில் வெற்றியும் பெற்றார் ஃப்ளாரன்ஸ்.
இறப்பு விவரங்களைப் பதிவு செய்தார். அவர் ஆவணப்படுத்திய இந்தப் புள்ளியியல் விவரங்கள்மூலம் வீரர்களின் இறப்புக்குக் காரணம் சுகாதாரச் சீர்கேடு என்பதைக் கண்டறிந்தார். நோயாளிகளின் விவரங்களை அட்டவணைப்படுத்தினார். இங்கிலாந்துக்கு அறிக்கை அளித்தார். அங்கிருந்து ஒரு குழு வந்து, ஃப்ளோரன்ஸ் வழிகாட்டலில் மருத்துவமனைக்கு வேண்டிய வசதிகளைச் செய்தது. நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொடுக்க, சமையலறையை அமைக்கப்பட்டது. துணிகளைத் துவைத்து பயன்படுத்த வழி செய்யப்பட்டது.
பகல் முழுவதும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்துவிட்டு, இரவில் சற்று நேரம் கூட ஓய்வெடுக்க நினைக்கமாட்டார். கை விளக்கை எடுத்துக்கொண்டு, மருத்துவமனையில் வலம் வருவார் ஃப்ளாரன்ஸ். இதைக் கண்டு, நோயாளிகளின் உள்ளத்தில் நம்பிக்கையும் தைரியமும் வளர்ந்தது.’கை விளக்கு ஏந்திய காரிகை’, ‘க்ரீமியனின் தேவதை’ என்று அவரைக் கொண்டாடினார்கள். விரைவில் இறப்பு விகிதம் மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்தது.
போர் முடிந்ததும் இங்கிலாந்து திரும்பிய ஃப்ளாரன்ஸுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விக்டோரியா ராணிக்கு இணையான புகழ் பரவியிருந்தது. புகழையோ, பிரபல்யத்தையோ விரும்பாத எளிய மனம் கொண்ட ஃப்ளாரன்ஸுக்கு இது சங்கடத்தைத் தந்தது. விக்டோரியா மகாராணி ஃப்ளாரன்ஸின் சேவையைப் பாராட்டி ப்ரூச் நகையை அணிவித்தார். 2,50,000 டாலர் தொகையைப் பரிசாக வழங்கினார்.
விக்டோரியா ராணியின் விருப்பப்படி, படை வீரர்களின் உடல்நலம் குறித்த அரசாங்க ஆணைக்குழுவை அமைப்பதிலும் அந்த ஆணைக்குழுவுக்குத் தேவையான அறிக்கைகளைத் தயார் செய்து வழங்குவதிலும் கவனத்தைச் செலுத்தினார். பெண் என்ற காரணத்தால் இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஃப்ளாரன்ஸ் நியமிக்கப்படவில்லை. சிட்னி ஹேர்பர்ட் தலைமையேற்றிருந்தார். சுகாதாரமின்மை, மருந்துப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து இன்மை போன்ற காரணங்களால் போரில் மடிந்தவர்களைவிட நோய்களில் மடிந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று நிரூபித்தார். ஃப்ளாரன்ஸும் ஹேர்பர்ட்டும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். இதன் விளைவாக மருத்துவப் புள்ளியியல் என்ற புது ஆய்வுப் பிரிவு தொடங்கப்பட்டது. ராணுவத்தில் மருத்துவக் கல்விக்கூடமும் அமைக்கப்பட்டது.
லண்டன் மருத்துவமனைகளில் மருத்துவத் தகவல்களை ஆவணப்படுத்தினார். எல்லா மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியான படிவங்களைப் பயன்படுத்த வழி செய்தார். ஃப்ளாரன்ஸின் செயல்களைக் கண்ட புள்ளியியலாளர் வில்லியம் ஃபர், புள்ளியியல் சொஸைட்டியின் ஆய்வாளராக நியமித்தார். இந்தப் பதவி பெற்ற முதல் பெண் ஃப்ளாரன்ஸ்தான்!
தன்னுடைய அனுபவங்களை வைத்து Notes on Hospitals என்ற நூலை எழுதினார். இந்த நூல் மருத்துவமனைகள், செவிலியர் கல்லூரிகளில் பயன்படுத்தப்பட்டது.
1860-ம் ஆண்டு பரிசாகக் கிடைத்த பணத்தை வைத்து, தூய தாமஸ் மருத்துவமனையில் செவிலியர் பள்ளியை ஆரம்பித்தார் ஃப்ளோரன்ஸ். தான் சேகரித்த புள்ளியியல் தகவல்களோடு, அவற்றை எளிதாகக் கண்டறியும் விதத்தில் வரைபடங்களையும் உருவாக்கினார்.
ஃப்ளாரன்ஸ் விரும்பாவிட்டாலும் புகழ் எங்கும் பரவியது. அவருக்காகவே பாடல்கள் பாடினர். கவிதைகள் எழுதினர். நாடகங்கள் நடத்தப்பட்டன. வசதி படைத்த பெண்கள் செவிலியர் பணிக்கு விருப்பத்தோடு வந்தனர். இங்கிலாந்து மட்டுமில்லாமல் இதர நாடுகளிலும் ஃப்ளாரன்ஸின் வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. இந்தியாவில் உள்ள ராணுவ மருத்துவமனைகளின் தரத்தை ஆய்வு செய்து, சீர்திருத்தங்களைச் சிபாரிசு செய்து கொடுத்தார் ஃப்ளாரன்ஸ்.
1869-ம் ஆண்டு எலிசபெத் பிளாக்வெல்லுடன் சேர்ந்து பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்தார் ஃப்ளோரன்ஸ். அடுத்த பத்தாண்டுகளில் நைட்டிங்கேல் கல்லூரியில் பயின்ற செவிலியர்கள் நாடெங்கும் பரவி, சேவைகளைச் செய்ய ஆரம்பித்தனர்.
மருத்துவமனைகளைத் திட்டமிடுவதிலும் மருத்துவ சேவை முன்னேற்றத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருந்த ஃப்ளோரன்ஸுக்கு, 1883-ம் ஆண்டு விக்டோரியா அரசிடமிருந்து ராயல் செஞ்சிலுவை விருது வழங்கப்பட்டது.
ஓய்வில்லாத வேலையால் 1896-ம் அவர் படுக்கையில் விழுந்தார். ஆனாலும், தன்னால் முயன்ற வேலைகளைத் தொடர்ந்துகொண்டிருந்தார். 1907-ம் ஆண்டு ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்பட்டது. 1910-ம் ஆண்டு, ஆகஸ்ட் 13 அன்று அமைதியான மரணம் அவரை ஆட்கொண்டது.